சர்ச்சைக்குரிய ஆதர்ஸ் குடியிருப்பு
இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பையில் சொத்துக்கள் அதிக விலைபோகும் ஒரு வட்டாரத்தில் அமைந்துள்ள ஆதர்ஸ் வீட்டு வசதி சங்கத்தின் தொடர்மாடி வீட்டுத்தொகுதியை மூன்று மாதங்களுக்குள் இடித்து தகர்த்துவிடுமாறு இந்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சு அதன் உரிமையாளர்களை கோரியுள்ளது. இந்த உயர் கட்டட நிர்மாணம் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டவிதிகளை மீறியுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவின் முன்னணி அரசியல்வாதிகள் பலரும் இராணுவ அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ள முறைகேடுகளுடன் தொடர்புடைய பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக ஆதர்ஸ் வீட்டுவசதி சங்கக் கட்டடம் தற்போது இருந்துவருகின்றது.
போரில் உயிரிழந்த படைவீரர்களின் மனைவிமாருக்காக அமைக்கப்பட்ட இந்த தொடர்மாடி வீட்டுத்தொகுதி, அமைச்சர்கள், ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல்கள் உள்ளிட்ட அதிகாரம் படைத்தவர்களுக்கு மும்பையின் மிகுந்த விலையுயர்ந்த அயல் புறங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சந்தை விலையில் விற்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
ஆரம்பத்தில் ஆறு மாடிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்த போதிலும், 31 மாடிகள் வரை அமைக்கப்பட்டு குடியிருப்புகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மும்பை அமைந்துள்ள மஹராஸ்ட்ரா மாநிலத்தின் முதலமைச்சர் கூட இந்த சர்ச்சையில் சிக்கியே கடந்த நவம்பரில் பதவியை இராஜினாமா செய்ய நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், சுற்றுச்சூழல் அமைச்சின் உத்தரவினை எதிர்த்து நீதிமன்றத்தில் கேள்விக்குட்படுத்தப் போவதாக குடியிருப்புத் தொகுதியின் உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்குரைஞர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக