வெள்ளி, 21 ஜனவரி, 2011

யாழ். கொள்ளைகளின் சூத்திரதாரி ஆட்டோ சங்கர்?

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் மர்மக் கொள்ளைகளின் பின்ணணியில் ஆயுதக்குழு ஒன்றுடன் தொடர்புடைய ஆட்டோ சங்கர் என்பவர் செயற்பட்டு வந்துள்ளதாகவும், கொள்ளைகளுடன் தொடப்புடைய மேலும் பல சந்தேக நபர்களின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் யாழ். பொலீஸ் நிலையத்துக்குக் கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழில் அண்மைக் காலமாக இடம்பெற்ற பல நகைக் கொள்ளைகளுடன் தொடர்புபட்டிருந்தார் என்ற சந்தேகத்தில் ஆட்டோ சங்கரைத் தேடி பொலீஸார் வலை விரித்திருந்தனர். யாழ். நாயன்மார்க்கட்டுப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ சங்கருடைய புகைப் படத்தையும் பல இடங்களில் காட்டி பொலீஸ் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

அண்மையில் யாழ். அரியாலை பகுதியில் இடம்பெற்ற பாரிய நகைக்கொள்ளைச் சம்பவம் ஒன்றினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலீஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தைக் காட்டிய போது வீட்டிலிருந்தவர்களால் மர்ம நபர் ஆட்டோ சங்கர் தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை -

ஆட்டோ சங்கர் எனக்குறிப்பிடப்படும் சங்கர் சுமார் மூன்று மாத காலத்துக்கு மேலாக தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும், இவர் ஆயுதக்குழு ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் எனவும் நாயன்மார்கட்டு பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

கொக்குவிலிலும் கொள்ளைக்கூட்டம் மாட்டியுள்ளது

நேற்று பட்டப் பகலில் யாழ்.கொக்குவில் - சம்பியன் ஒழுங்கைப்பகுதியில் தனியாக வந்த வயதான தம்பதிகளை வழிமறுத்த மூன்று கொள்ளைக்காரர்கள் பெண்மணியின் கழுத்திலிருந்த தாலிக்கொடியை அறுக்க முற்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளிலிருந்து பிரஸ்தாப பெண் கீழே விழுந்ததனால் அறுபட்ட தாலிக்கொடியும் கீழே விழுந்துள்ளது.

கீழே அறுபட்டு விழுந்த தாலிக் கொடியைக் கைப்பற்றுவதற்காக திருடர்களில் ஒருவன் கீழே குனிந்த போது அவனது கைத்தொலைபேசியும் கீழே விழுந்து விட்டது. இந் நிலையில் அவ் வீதியில் கூட்டம் கூடியதனால் திருடர்கள் கைத்தொலைபேசி விழுந்ததைத் கூட அறியாமல் அவ் விடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர்.

கைத்தொலைபேசியைக்கைப்பற்றிய அவ்வூர் இளைஞர்கள் உடனடியாகவே செயலில் இறங்கியுள்ளனர். அப் பகுதியில் நிலை கொண்டுள்ள படையினரின் உதவியுடன் திருடர்களுடன் தொடர்புடைய பலரை தாவடிப் பகுதிக்கு அழைத்து, விசாரித்திருக்கின்றனர்.

இவ்விசாரணைகளின் போது சந்தேகத்துக்கிடமான சிலரைக் கைது செய்து பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவுர்களுக்கும் கொள்ளைக்கூட்டத்துக்கும் உள்ள தொடர்புகள் தெரியவந்துள்ளதாகவும், சூத்திரதாரிகள் அனைவரையும் மடக்கிப்பிடிக்கும் வரை தகவல்களை இரகசியமாகவே பேணமுடியும் எனவும் யாழ்.பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இத்தகைய சம்பவங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உதவ வேண்டும் எனவும் பொலீஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல