வெள்ளி, 21 ஜனவரி, 2011

சபரிமலை மகர ஜோதி இயற்கையா அல்லது செயற்கையா????

சபரிமலையில் மகர ஜோதி மனிதரால் ஏற்றப்படுகிறதா?
விளக்கம் கேட்கிறது, கேரள ஐகோர்ட்டு

சபரிமலையில் ஆண்டு தோறும் காணப்படும் `மகரஜோதி'யை மனிதர்கள் யாராவது தீபம் போல ஏற்றுகின்றனரா? என்பது குறித்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டிடம் கேரள ஐகோர்ட்டு விளக்கம் கேட்டது. எனினும், இது குறித்து விசாரிக்கப்போவதில்லை என முதல்-மந்திரி அச்சுதானந்தன் அறிவித்தார்.

மகர ஜோதி தரிசனம்

சபரிமலையில் ஆண்டு தோறும் மகரஜோதி தரிசனம் காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து செல்கின்றனர். இந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்தை தரிசித்து விட்டு திரும்பும் போது கடந்த 14-ந் தேதி நள்ளிரவில் புல்மேடு என்ற இடத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில், 102 அய்யப்ப பக்தர்கள் பலியாகினர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்த வழக்கு கேரள ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவை குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில போலீஸ், வனத்துறை, சபரிமலை கோவிலை நிர்வாகம் செய்யும் திருவாங்கூர் தேவசம் போர்டு ஆகியவற்றுக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, அந்த மூன்று துறையினரும் விளக்கம் அளித்தனர்.

நீதிபதிகள் கேள்வி

அதன் தொடர்ச்சியாக, நேற்றும் வழக்கு விசாரணை தொடர்ந்தது. நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடந்தது. திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பாக மூத்த வக்கீல் பரனேஸ்வர்நாயர் ஆஜரானார்.

அப்போது, வக்கீல் பரனேஸ்வரிடம் உத்தரவாக அல்லாமல் வாய் வார்த்தையாக, "மகரஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா?'' என நீதிபதிகள் கேட்டனர். மேலும், "என்ன நடக்கிறது என்பதை மக்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்றும் மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவசம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றும் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த தேவசம் போர்டு வக்கீல் பரனேஸ்வர், "வானத்தில் தோன்றும் புனிதமான தெய்வீக நட்சத்திரங்களில் ஒன்றாக `மகரஜோதி' கருதப்படுகிறது. அது புனிதமானது என்பது போன்ற எந்த விதமான விளம்பரத்தையும் தேவசம் போர்டு செய்வது கிடையாது'' என்றார்.

தேவசம் போர்டு முடிவு

அதே நேரத்தில், மகர ஜோதி குறித்து கேரள ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியதால் திருவாங்கூர் தேவசம் போர்டு புதிய முடிவை எடுத்துள்ளது.

இது பற்றி தேவசம் போர்டு செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``ஐகோர்ட்டு எழுப்பியுள்ள கேள்வியை தொடர்ந்து உயர்மட்ட பூசாரிகள், மத வல்லுனர்கள், கோவிலின் பழக்க வழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்களுக்கு பொறுப்புடையவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

முதல்-மந்திரி மறுப்பு

இதற்கிடையே, மகர ஜோதி குறித்து கேரள ஐகோர்ட்டு எழுப்பியுள்ள கேள்வி குறித்து விளக்கம் அளித்த முதல்-மந்திரி அச்சுதானந்தன், "மகரஜோதியின் உண்மை தன்மை குறித்து கேரள அரசு விசாரணை நடத்தாது'' என்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், "மகர ஜோதியின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்வதற்காக ஜோÖதிடர்களிடமோ அல்லது வானியல் ஆராய்ச்சி அறிஞர்களிடமோ அரசு ஆலோசனை நடத்தாது. சபரிமலையின் கிழக்கே உள்ள பொன்னம்பல மேடு பகுதி முழுவதும் வானில் தெரியும் `மகர ஜோதி'யை புனிதமான நட்சத்திரமாக லட்சக்கணக்கான பக்தர்கள் கருதுகின்றனர். மக்களின் நம்பிக்கையில் தலையிடுவது தேவையற்றது'' என்றார்.

வேறுபாடு என்ன?

சபரிமலையில் பூஜை பணிகளை மேற்கொள்ளும் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்த கண்டராரு மகேஸ்வரரு கூறுகையில், ``மகர விளக்கு மற்றும் மகர ஜோதி இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. ஜோதி என்பது புனித நட்சத்திரம். மகர விளக்கு என்பது மனிதர்கள் ஏற்றி வைப்பது. இந்த விஷயத்தில் சர்ச்சை கிளம்பி இருப்பது துரதிர்ஷ்டவசமானது. தேவையற்றது'' என்றார்.

இழப்பீடு வழங்க தனி குழு

சபரிமலை நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு கேரள அரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் சேர்ந்து தலா ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை அறிவித்துள்ளன. இதுபோல, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு சார்பாகவும் தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறது. விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

எனவே, பலியானவர்களின் குடும்பங்களை சரியாக கண்டறிந்து மொத்த இழப்பீடு தொகையான தலா ரூ.6 லட்சத்தை விரைவாக வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று பேட்டியளித்த முதல்-மந்திரி அச்சுதானந்தன் இந்த தகவலை தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல