திங்கள், 17 ஜனவரி, 2011

மனைவியை அடித்து உதைத்த இந்திய தூதரக அதிகாரி

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தன் மனைவியை அடித்து உதைத்ததால் அவர் உயிருக்கு பயந்து தலைமறைவு ஆனார். இந்தநிலையில், அந்த அதிகாரியை இந்திய அரசாங்கம் திரும்ப அழைத்துக்கொண்டது.

போலீசில் புகார்

இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 3-வது பெரிய அதிகாரியாக இருப்பவர் அனில் வர்மா. இவர் மேற்குவங்காள மாநில கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஆவார். இவரது மனைவி பரோமிதா. இவர் தன் மனைவியை அடித்து உதைத்ததாக சில நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் கூறப்பட்டது.

அவர் தூதரக அதிகாரி என்பதால் அவர் மீது வழக்கு தொடர தடை இருப்பதால் இதுதொடர்பாக இங்கிலாந்து வெளிநாட்டு அமைச்சரகத்திடம் போலீசார் இந்த புகார் குறித்து தகவல் கொடுத்தனர். அவர்கள் இந்த புகார் குறித்து இந்திய தூதருக்கு தகவல் கொடுத்தனர். இந்தியத்தூதர் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்தார்.

தலைமறைவு

இந்த நிலையில் பரோமிதா தன் 5 வயது மகனையும் அழைத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். தூதரக அதிகாரியை விட்டு பிரிந்து லண்டனில் தனியாக வசித்த பரோமிதா அங்கு பீதியுடன் இருந்தார். மனிதாபிமான அடிப்படையில் லண்டனிலேயே வசிக்க அனுமதிக்கும்படி அவர் இங்கிலாந்து அரசுக்கு விண்ணப்பித்தார். தன்னை கட்டாயப்படுத்தி இந்தியாவுக்கு அழைத்துச்சென்று விடுவார்கள் என்று அவர் பயந்தார்.

அவர் வசிக்குமிடம் பற்றிய விவரம் தன் கணவருக்கு தெரியும் என்பதால் அவர் தன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று பயந்தார். அதனால்தான் அவர் தலைமறைவாகி விட்டார் என்று அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

மிரட்டினார்

"தூதரக அதிகாரி என்பதால் போலீசார் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று சொல்லியே பரோமிதாவை அவர் மிரட்டி வந்தார். எத்தனை முறை வேண்டுமானாலும் போலீசுக்கு போ, அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் மிரட்டினார்.

அவர் உத்தியோக முறையில் தனக்கு கிடைத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். சம்பவத்தன்று பரோமிதாவின் குடும்பத்தினர் கொடுத்த கிறிஸ்துமஸ் மரத்தை அவர் கோபத்தில் சேதப்படுத்தினார். அதை அவர் தடுக்க முயன்றபோது பரோமிதாவின் கன்னத்தில் அறைந்தார். இதனால் பரோமிதா நிலை தடுமாறி கீழே விழுந்தார். கணவர் அறைந்ததில் அவர் மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

பக்கத்து வீட்டுக்காரர்கள்

அப்போது அங்கு இருந்த பரோமிதாவின் தாயாரையும் அனில் திட்டினார். அப்போது முன்வாசல் கதவு திறந்து கிடந்ததால் பரோமிதா அதன் வழியாக வீட்டை விட்டு வெளியே ஓடினார். அப்போது அதை பார்த்த அவரது அண்டைவீட்டுக்காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

பக்கத்து வீட்டுக்காரர்கள்தான் பரோமிதாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்று ஆறுதல் கூறியதோடு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்தனர்.''

இவ்வாறு அவரது குடும்ப உறவினர் தெரிவித்தார்.

இந்தநிலையில், புகாருக்கு உள்ளான அதிகாரி அனில் வர்மாவை இந்திய அரசாங்கம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு திரும்ப அழைத்துக்கொண்டது. இதற்கான உத்தரவை வெளிநாட்டு இலாகா அமைச்சரகம் பிறப்பித்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல