சனி, 21 ஏப்ரல், 2012

போர் விமானங்கள் பின்தொடர, கடலில் இறங்கிய மர்ம விமானம் !

அமெரிக்க விமானப்படையின் இரு F-15 போர் விமானங்கள் பின்தொடர்ந்த நிலையில், சிறிய தனியார் விமானம் ஒன்று புளோரிடா அருகே கடலில் வீழ்ந்துள்ளது. இந்த விமானம் ஏன் அந்தப் பகுதியில் பறந்தது என்பதும், அதை செலுத்திய நபர் யார் என்பதும், இன்னமும் மர்மமாகவே உள்ளது. அமெரிக்க விமானப் படையின் எக்லின் விமான தளத்துக்கு (Eglin air force base) நெருக்கமாக சிறிய விமானம் பறந்த காரணத்தாலேயே இந்த விபத்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு போர் விமானங்களை அனுப்பி, இந்த விமானத்தை தொடருமாறு உத்தரவிடப்பட்ட காரணமும், விமானப்படை தளத்தின் ராடாரில் இந்த விமானம் தென்பட்டதுதான். கடலில் வீழ்ந்துள்ள விமானம், சிறிய, செஸ்னா (Cessna 421C) ரகத்தைச் சேர்ந்தது. காலை 8.45 மணிக்கு, இரு F-15 போர் விமானங்கள் மேலே பறக்க, இந்த விமானம் குறைந்த உயரத்தில், கல்ஃப் ஆஃப் மெக்சிகோ கடலின் மேலே பறந்தது.


போர் விமானத்தின் விமானிகள், இந்த விமானத்தின் விமானியுடன் தொடர்புகளை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஏதும் பலிக்கவில்லை. வானத்தில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட அதே நேரத்தில், தரையில், இந்த இடத்துக்கு அருகாமையில் ஜேக்சன்வில்லில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையம் (Jacksonville air traffic control center) செஸ்னா விமானத்தின் விமானியை தொடர்புகொள்ள மேற்கொண்ட ரேடியோ தொடர்புகளுக்கும், பதில் ஏதும் கிடைக்கவில்லை. போர் விமான விமானிகள் டைவ் அடித்து, இந்த செஸ்னா விமானத்துக்கு அருகே பறந்து உள்ளே பார்க்க முயன்றிருக்கிறார்கள். அப்போது செஸ்னா விமானத்தின் வின்ட்ஷீல்டு முழுவதும் ஐஸ் படிந்து காணப்பட்டிருக்கிறது. உள்ளே இருந்தது யார் என்று தெரியவில்லை. செஸ்னா விமானம், 25,000 அடியில் இருந்து 35,000 அடி உயரத்துக்கு மெலும் கீழுமாக சென்று கொண்டிருந்தது. பொதுவாக செஸ்னா விமானங்களை, கடல் மேல் பறத்தலின்போது 35,000 அடி உயரத்துக்கு கொண்டுபோக வேண்டிய அவசியம் ஏற்படாது.

அது அவ்வளவு பாதுகாப்பானதும் அல்ல. காலை 8.45 மணிக்கு துவங்கிய இந்த மர்மம், இறுதிவரை தீரவில்லை. மதியம், 12.10க்கு செஸ்னா விமானம் உயரம் குறந்து கடலில் வீழ்வதை போர் விமானத்தின் விமானிகள், வானத்தில் இருந்து பார்த்தார்கள். புளோரிடாவின் டாம்பா கடற்கரையில் இருந்து 120 மைல் மேற்கே, கடலில் வீழ்ந்தது செஸ்னா விமானம்.இதைச் செலுத்திய விமானி யார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் விமானத்தின் வேகத்தையும், உயரத்தையும் படிப்படியாக குறைத்து, விமானத்தை கடலில் வீழ்த்தியதை, மேலே பறந்து கொண்டிருந்த F-15 போர் விமானங்களின் விமானிகள் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இப்படியான நடைமுறையில் விமானத்தை கீழே கொண்டு சென்றதால், விமானம் கடலில் கிராஷ் லேன்டிங் செய்வது போல இறங்கியது. அதாவது கடலில் செய்யப்பட்ட சாஃப்ட் லேன்டிங்! அதன்பின் தண்ணிரில் மிதந்தது. கைதேர்ந்த விமானியாக இருந்தால் உயிர் தப்பியிருக்க சான்ஸ் அதிகம். விமானி பிளேனில் இருந்து வெளியேறினாரா இல்லையா என்பதை, மேலே பறக்கும் போர் விமான விமானிகளால் தெளிவாக பார்த்திருக்க முடியாது.

அமெரிக்க விமானப்படைக்கு, இந்த விமானம் ஏன் வீழ்ந்தது என்பதைவிட, விமானம் ஏன் தமது தளத்துக்கு நெருக்கமாக பறந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் இருப்பதில் ஆச்சரியமில்லை. அதன் விமானி இறுதிவரை தமது அடையாளத்தை வெளிப்படுத்தாமலேயே விமானத்தை கடலில் விழ வைத்துவிட்டார். மீட்பு நடவடிக்கைக்காக கரையோரப் பாதுகாப்பு ஹெலிகாப்டர்கள் அழைக்கப்பட்டும் விமானியை கண்டுபிடிக்க முடியவில்லை. FAA (Federal aviation administration) பதிவுகளின்படி குறிப்பிட்ட செஸ்னா விமானம், லூசியானாவிலுள்ள ஸ்லிடெல்லில் (Slidell, Louisiana) இருந்து, புளோரிடாவின் சரசோடாவுக்கு (Sarasota, Florida) செல்வதற்கு அனுமதி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. Lee H Aviation என்ற பெயரில் இயங்கும் தனியார் நிறுவம் ஒன்றின் பெயரில் விமானம் வாங்கப்பட்டுள்து.

இந்த நிறுவனம், விமானங்களை வாடகைக்கு விடும் டெலாவார் நிறுவனம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல