“அல்லோபதி தெரியும், அல்லேலோபதி என்பது புதிதாயிருக்கிறதே, டைப் அடித்தவர் ஏதாவது கோளாறு பண்ணி விட்டாரோ’ என்றெல்லாம் குழம்ப வேண்டாம். தாவரவியலில் “அல்லேலோபதி’ என்று ஒரு பிரிவு நிஜமாகவே இருக்கிறது. ஒரு தாவரம் வெளியிடுகிற பல்வேறு ரசாயனங்கள் அக்கம்பக்கத்திலுள்ள தாவரங்களில் தாக்கங்களை ஏற்படுத்துகிறதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றைப் பற்றி ஆராய்வதுதான் அல்லேலோபதி.
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பயிர்களை வளர்த்து வருகிறார்கள். அவ்வாறு பயிர் செய்த அனுபவத்தில், சில தாவரங்கள் வேறு சில தாவர இனங்களை வளர விடாமல் தடுப்பதும், இன்னும் சில வகைத் தாவரங்களின் வளர்ச்சிக்கு உதவுவதும் தெரிய வந்திருக்கிறது. “கூஸ்ஃபுட்’ என்ற செடிக்கு அருகில் “லூசர்ன்’ என்ற செடியை நட்டால் அது பிழைக்காது.
முள்ளங்கி, முட்டைக்கோஸ், லாரஸ் ஆகியவற்றின் அருகில் திராட்சைக்கொடிகள் வளராது.
இத்தகைய சம்பவங்களை அறிந்த விவசாயிகள் சில தாவரங்கள் வேறு சில தாவரங்களிடம் விரோதம் பாராட்டுகின்றன என்பதையும், சில தாவரங்களிடம் நட்பு பாராட்டி ஒன்றோடொன்று உதவிகள் செய்து கூட்டுறவுடன் வாழ்கின்றன என்பதையும் புரிந்துகொண்டு அதற்கேற்றபடி தமது பயிரிடும் உத்திகளை வகுத்துக் கொள்கிறார்கள்.
“ஃபிளாக்ஸ்’ என்ற பயிரை அறுவடை செய்தபின் அந்த நிலத்தில் கோதுமையைப் பயிரிட்டால் நல்ல விளைச்சல் கிடைப்பதில்லை. ஆனால், அந்த நிலத்தில் உருளைக்கிழங்கைப் பயிரிட்டால் அமோகமாக விளைகிறது. ஃபிளாக்சுக்கும் கோதுமைக்குமிடையில் விரோதமும் ஃபிளாக்சுக்கும் உருளைக்குமிடையில் நட்பும் நிலவுவதாகத் தோன்றுகிறது.
மற்ற உயிரினங்களுக்கு இருப்பதைப்போலவே தாவரங்களுக்கும் தீங்கு செய்யும் விரோதிகள் உண்டு. ஆனால், புலியைக் கண்டதும் மான்கள் ஓடி விடுவதைப்போலத் தம் எதிரிகள் தாக்க வரும்போது தாவரங்களால் எழுந்து ஓடிப்போக முடியாது. எனவே அவை இருந்த இடத்திலிருந்தவாறே எதிரிகளின் தாக்குதலை எதிர்கொள்கிறவாறு பரிணாம முறையில் “வேதி ஆயுதங்களை’ உண்டாக்கி வைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மலர்களும் இலைகளும் வேர்களும் பலவிதமான வேதிகளை ஆவிகளாகவும், திரவங்களாகவும், திடப்பொருள்களாகவும் சுரக்கின்றன. ஒவ்வொரு தாவரமும் தன்னைச் சுற்றிலும் ஒரு தனித்தன்மையான வேதிச்சூழலைக் “கவசம்போல’ அமைத்துக் கொள்கிறது. சாதாரணமான புல்லிலிருந்து மாபெரும் மரங்கள் வரையான எல்லாத் தாவரங்களும் இவ்வாறு செய்கின்றன.
இவ்வாறு தாவரங்கள் சுரக்கும் வேதிகளில் வைட்டமின்கள், நொதிகள், ஹார்மோன்கள், சத்தெண்ணெய்கள், நுண்ணுயிர்க் கொல்லிகள், களைக்கொல்லிகள் எனப் பல பொருள்கள் உள்ளன. அவற்றில் சில உயிரிச் செயல்பாடுகளுக்கு நன்மையும் செய்யும். வேறு சில மற்ற உயிரினங்களுக்குத் தீங்கும் விளைவிக்கும்.
உலகிலுள்ள அத்தனை தாவரங்களும் ஓராண்டில் கிட்டத்தட்ட 175 மில்லியன் டன்கள் அளவுக்கு வளிமண்டலத்தில் தமது வேதி ஆவிகளைப் பரப்புகின்றன. காலை வேளைகளில் புல்வெளிகளிலும் வனங்களிலும் நடை பயில்வோருக்கு அந்த வேதிகளின் நறுமணம் புலனாகும். அந்த வேதிகள் பலவிதமான பணிகளை ஆற்றுகின்றன.
பல்வேறு நோய்களைப் பரப்பும் கிருமிகளிடமிருந்து அந்த வேதிகள் தாவரங்களைப் பாதுகாக்கின்றன. பூண்டிலிருந்து வெளிப்படும் வேதிகள் “பைலோப்தோரா’ என்ற பூஞ்சையைச் சில நிமிடங்களுக்குள் கொன்றழித்து விடும். தாவரங்கள் வெளிவிடும் ஆவி வடிவ மற்றும் திரவ வடிவச் சுரப்புகள், பூச்சிகள் தாக்காமல் தடுக்கின்றன. நாளாக நாளாகப் பல பூச்சிகள் அந்த வேதிகளுக்கு எதிர்ப்புத் திறனை உண்டாக்கிக் கொள்வதுமுண்டு. ஆனாலும் ஆரோக்கியமும் வீரியமும் உள்ள தாவரங்களின் பாதுகாப்புக் கவசம் அதிக வலுவுடனிருக்கும். பூச்சிகள் அவற்றை விட்டுவிட்டுப் பலவீனமான அல்லது நோயுற்ற அல்லது காயம்பட்ட தாவரங்களை மட்டுமே தாக்கும்.
ஓர் இனத் தாவரம் தம்மருகில் வேறு இனத் தாவரங்கள் வளராமல் தடுக்கவும் வேதிகளைப் பயன்படுத்துகின்றன. “வாழ்வதற்கான போராட்டம்’ என்பது விலங்குகளில் மட்டுமின்றித் தாவரங்களிலும் நிகழ்கிறது. “வோர்ம்வுட்’ என்ற தாவரத்தின் இலைகளிலிருந்தும் வேர்களிலிருந்தும் வெளிப்படுகிற “அப்சிந்தின்’ எனும் வேதி அந்தத் தாவரத்தினருகில் வேறு வகைப் புல் எதுவும் வளர்ந்துவிடாமல் தடுக்கிறது. “கோதுமைப் புல்’ என்கிற களை மிகவும் அபாயகரமானது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் அது பல நூறு கிலோமீட்டர்கள் நீளத்துக்குத் தன் வேர்களை வளர்த்துப் பரப்பிவிடும். அவற்றிலிருந்து வெளிப்படும் “அக்ரோபைரின்’ என்ற வேதி, விவசாயப் பயிர்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.
தாவரங்கள் மட்டுமே சூரிய ஒளியைப் பயன்படுத்தித் தமக்குத் தேவையான உணவைத் தாமே தயாரித்துக் கொள்கின்றன. நுண்கிருமிகள் முதல் மனிதன் வரையான மற்றெல்லா உயிரினங்களும் உணவுக்குத் தாவரங்களையே நம்பியிருக்கின்றன. அவற்றுக்கு இரையாகாமல் தவிர்க்க, தாவரங்கள் முள்கள், செதில்கள் போன்ற உடலுறுப்புகளையும் நச்சுகளையும் உருவாக்கிக் கொள்கின்றன. அரளி, மிசில்டோ போன்றவை “பைட்டோடாக்சின்’ என்ற வகை நச்சுகளை உற்பத்தி செய்கின்றன. அவற்றின் இலைகளையோ, வேர்களையோ, பழங்களையோ தின்றால் மரணம் உறுதி.
புகையிலையிலுள்ள நிக்கோட்டினின் வாசனை பட்டாலே வண்டுகள் செயலிழந்து போகும். ஓக், பைன் போன்ற மரங்களின் இலைகளில் டானின் மற்றும் டான்னிக் அமிலம் பிராணிகளின் வயிற்றுக்குள் போனதும் ஜீரண மண்டலத்தையே குலைத்துவிடும். சில தாவரங்களின் நச்சு, பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் தாக்கிச் செயலிழக்க வைக்கும்.
ஆப்பிள், ஆப்ரிக்காட், பீச் போன்றவற்றின் கனிகள் சுவையானவை. ஆனால் அவற்றின் விதைகளில் சயனைடு எனும் நச்சு உள்ளது. விதைகள் ஓடுகளாலும் பாதுகாக்கப்படுகின்றன. கனிகளை உண்ணும் பிராணிகளின் வயிற்றில் விதைகள் மட்டும் ஜீரணமாகாமல் மலத்துடன் வெளியேறிவிடும். மண்ணில் விழும் விதைகளுக்கு அந்த மலமே உரமாகும். கிருமிகளும் பூஞ்சைகளும் தாக்காமலிருக்க விதைகளின் சயனைடு உதவும். பீச், ஆப்பிள், சிட்ரஸ் வகை மரங்கள் தமது வேர் மண்டலத்தில் தீவிரமான வேதிகளைப் பரப்பி வைத்து தமது பகுதியில் சொந்த இனத்துச் செடிகள் கூட வளராமல் தடுத்து விடுகின்றன.
“அல்லேலோபதி’ கண்டுபிடித்துள்ள பல விஷயங்கள் செயல்முறையில் பயனளிப்பவை. நெருக்கமாக அமைந்திருக்கிற தாவரங்கள் தமக்குள் ஏராளமான சுரப்புகளைப் பரிமாறிக் கொள்கின்றன. திராட்சைச் செடிகளைச் சுற்றி நறுமணம் பரப்பும் தாவரங்களை வளர்த்தால் திராட்சைகளின் சுவையும் அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒயினின் சுவை, மணம், குணம் ஆகியவையும் மேம்படுகின்றன.
ஒன்றுக்கொன்று ஒத்துப்போகும் தாவரங்கள் குறைவான மனித உழைப்பிலேயே செழித்து வளரும். விவசாயிகளுக்கு அத்தகைய தாவரங்களைப் பற்றி அறிவூட்டிப் பண்ணைப் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கவும், செயற்கைக் களைக்கொல்லிகளுக்கு மாற்றாகத் தாவரங்களின்
சொந்த வேதிகளைப் பயன்படுத்தவும் பயிற்றுவிக்க முடியும்.
ரஷியாவின் டான் நதிக்கரையிலுள்ள சதுப்பு நிலங்களில் நாணல் மண்டிக் கிடந்தது. அவற்றிலுள்ள நீரை வடித்துவிட்டு நாணல்களையும் நீக்கிவிட்டுக் காய்கறிப் பண்ணைகளை ஏற்படுத்த விவசாயிகள் முயன்றனர். ஆனால், நாணல்கள் விடாப்பிடியாக வளர்ந்து காய்கறிச் செடிகளுக்கு இடையூறு செய்தன. ஓர் உழவியல் அறிஞர் இரண்டாண்டுகளுக்கு அந்த நிலங்களில் கோதுமையைப் பயிரிடுமாறு யோசனை கூறினார். வியப்பூட்டும் வகையில் இரண்டே ஆண்டுகளில் கோதுமைப் பயிர், நாணல்களை முறியடித்துத் தலையெடுக்காமல் செய்துவிட்டது.
ஒரு நண்பர் தனது தோட்டத்தில் இருந்த ஒரு செம்பருத்திச் செடிக்கும் ஒற்றை நந்தியாவட்டைச் செடிக்கும் நடுவில் ஒரு மல்லிகைக் கொடியை நட்டார். அது வெகுவேகமாக வளர்ந்து இரு செடிகளையும் தழுவிப் பரவியது.
ஒரே வருஷத்தில் அந்த இரண்டு செடிகளும் பூப்பதை நிறுத்திவிட்டன. விஷயம் புரிந்ததும் மல்லிகைக் கொடியைப் பறித்தெறிந்த பிறகே அவை மீண்டும் பூக்கத் தொடங்கின.
சிவப்பு ஆல்டர், வில்லோ போன்ற மரங்களைப் புழுக்கள் தாக்குமானால் அவை சில எச்சரிக்கை வேதிகளைப் பரப்புகின்றன. உடனே சுற்று வட்டாரத்திலுள்ள மற்ற ஆல்டர் மரங்களும், வில்லோ மரங்களும் தமது இலைககளில் கூடுதலாக டான்னின் நச்சுகளை நிரப்பிக்கொண்டு கம்பளிப் பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் அவற்றின் இலைகளைக் கண்டாலே வெறுப்பு ஏற்படும்படி செய்கின்றன.
தாவரங்கள் தமது பாதுகாப்புக்காக உருவாக்கிக் கொள்ளும் வேதிகளை அல்லேலோபதி அறிஞர்கள் பகுப்பாய்வு செய்து மனிதர்களுக்குப் பயன்படக்கூடிய கிருமிக் கொல்லிகளையும் பூஞ்சைக்கொல்லிகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். தாவரங்களுக்கு இருப்பதாகத் தெரிகிற மருத்துவக் குணங்களுக்கு அடிப்படையான பல மூலக்கூறுகள் அவர்களால் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன!
கே.என். ராமசந்திரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக