செவ்வாய், 30 ஜூலை, 2013

அரசியல் முதிர்ச்சியும் தலைமைத்துவ ஆளுமையும் கொண்ட சம்பந்தன்

சம்பந்தனால் மேற்கொள்ளப்பட்ட 'சதுரங்க காய்நகர்த்தலானது', கூட்டமைப்பின் தலைவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் மிகச் சிறந்தவர் என்பதை மட்டுமல்லாது, அரசியல் அரங்கில் 'ஒரு கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்தக் கூடிய' 'குறிதவறாத சூட்டாளன்' என்பதையும் நிரூபணமாக்கியுள்ளது.

நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளையும் ஒன்றிணைத்து ஏகமனதாக உயர் நீதிமன்றின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரனைத் தேர்ந்தெடுத்ததன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இராஜவரோதயம் சம்பந்தன் தனது அரசியல் முதிர்ச்சியையும் தனது தலைமைத்துவ ஆளுமையையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மும்மொழித் தேர்ச்சியுள்ள சம்பந்தனின் பெயரானது, தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவரும், 7ஆம் நூற்றாண்டில், திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தமிழில் 10 பாசுரங்களை எழுதியவருமான சமயக் குரவர் திருஞானசம்பந்தரின் பெயரிலிருந்து சூட்டப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அல்லது சம்பந்தனின் சொந்தக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சம்பந்தனை தமது தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளமை சாதாரணமானதாகும். ஆனால் சம்பந்தனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள அதிகாரிகள் கூட இவருடன் மதிப்புடனும் மரியாதையுடனும் நடக்கின்றனர். இவரைப் பாதுகாப்பதற்காக இவர்கள் தமது வாழ்வை அர்ப்பணிக்க வேண்டியேற்பட்டால் அதனையும் செய்வார்கள். 80 வயதான முதிர்ச்சியான தமிழ் அரசியல்வாதியான சம்பந்தன் சிங்களத்தில் சரளமாக பேசுவார். இவர் தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களுடன் அன்பாகப் பழகுவார்.

1977இல் அரசியலில் நுழைவதற்கு முன்னர், திருகோணமலையில் குற்றவியல் சட்டவாளராகப் பணியாற்றிய சம்பந்தன் தனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மறைந்த பி.நேமிநாதனைத் தொடர்ந்து சம்பந்தன் அரசியலில் நுழைந்து கொண்டார். அரசியலில் ஈடுபடுவதற்கு முதலில் தயக்கம் காண்பித்த போதிலும் சம்பந்தன் பின்னர் தனது அரசியல் செயற்பாட்டைத் தொடர்ந்தார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முன்னை நாள் தலைவர் மறைந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உந்துதலின் பேரில் 1977இல் அரசியலுக்குள் நுழைந்து கொண்ட சம்பந்தன் அதன்பின்னர், தமிழ் அரசியல் வரலாற்றில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மிகவும் பெயர் போன, தோற்கடிக்கப்பட முடியாத அரசியற் தலைவராக நிலைத்து நிற்கிறார்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினரான செல்லையா இராசதுரைக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆசை வார்த்தை வழங்கினார். இந்த முயற்சியின் பயனாக இராசதுரை அப்போது ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டார். அப்போது அவருக்கு இந்து கலாசார விவகார அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

இதேபோன்று சம்பந்தனையும் தனது கட்சிக்கு வருமாறும் இதன்மூலம் தான் அமைச்சுப் பதவி ஒன்றை சம்பந்தனுக்கு வழங்குவேன் எனவும் ஜெயவர்த்தனா உறுதியளித்த போது சம்பந்தன் அதனை மறுத்து, தனது கட்சிக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் போன்றவற்றுக்கு தமது ஆதரவை வழங்கிய தமிழ் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலப்பகுதியில் கூட சம்பந்தன் தனது கட்சியின் கொள்கைக்கு விசுவாசமாக நடந்து கொண்டார்.

இதன்பின்னர், 2002இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது இக்கூட்டமைப்பின் தலைமைப் பதவி சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நிலவிய சமாதான காலத்தில் நோர்வே அனுசரணையாளராகச் செயற்பட்ட போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புலிகள் அமைப்புடன் மிக நெருங்கிய தொடர்பைப் பேணியது. புலிகள் அமைப்பு தனக்கான குழியைத் தானே தோண்டிக் கொண்டதால் நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்தது கெட்டவாய்ப்பாக அல்லது நல்லவாய்ப்பாக இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் 2012இல் கூட்டாக மேற்கொள்ளப்பட்ட மே தின ஊர்வலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சம்பந்தன் மேடையில் தோன்றியதுடன் சிங்கக் கொடியையும் கையில் ஏந்தியவாறு நின்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மிகத் தீவிர விமர்சனத்திற்கு உள்ளானார்.

சம்பந்தனின் இந்த நடவடிக்கையை முதன் முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலருமான மாவை எஸ்.சேனாதிராஜா விமர்சித்திருந்தார். எனினும் தானாக விரும்பி சிங்கக் கொடியை ஏந்தவில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க பலவந்தமாக தனது கையில் சிங்கக் கொடியை வைத்ததாகவும் கூறி சம்பந்தன் தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விமர்சனத்திலிருந்து தப்பித்துக் கொண்டார்.

இதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் சில முரண்பாடுகள் எழுந்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியற் கட்சியாகப் பதிவு செய்யுமாறு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்க ஒரு முரண்பாடாக காணப்படுகிறது. கூட்டமைப்பை அரசியற் கட்சியாகப் பதிவு செய்வதன் மூலம் சம்பந்தனின் இலங்கை தமிழரசுக் கட்சியானது கூட்டமைப்பை கட்டுப்படுத்துவது தடுக்கப்படும் என்பதை நோக்காகக் கொண்டே இவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சில வாரங்களின் முன்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் அடிகளார் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியிருந்தார். கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இதன் முக்கிய நோக்காகும். இதில் தமிழ் அரசியல்வாதிகள் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

மன்னாரில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது காலை தொடக்கம் மாலை வரை இரு அமர்வுகளாக இடம்பெற்ற போதிலும் கூட்டமைப்புக்குள் ஒற்றுமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் எவ்வித பயனுள்ள தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் மன்னார் ஆயர் மீண்டும் இரண்டாவது தடவையாகவும் இந்த முரண்பாடுகளைக் களைவது தொடர்பில் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டியிருந்தது.

எனினும், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பாக முதலமைச்சர் பதவிக்கு யாரைத் தெரிவு செய்வது என்பது தொடர்பில் மீண்டும் இழுபறி ஏற்பட்டது. மாவை சேனாதிராஜா மற்றும் ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகிய இருவரில் யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது ஏகமனதாக சி.வி.விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதென தீர்மானித்துக் கொண்டது. இத்தீர்மானம் தொடர்பில் மாவை சேனாதிராஜாவை ஒப்புதல் பெறவைப்பதோடு மட்டுமல்லாது, விக்கினேஸ்வரனுடன் இணைந்து பணியாற்ற வைப்பதற்கான கலந்துரையாடல்களையும் சம்பந்தன் மேற்கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இத்தீர்மானத்தை அடுத்து கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை அன்று வவுனியாவில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிறப்புக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் மாவை சேனாதிராஜா தானாகவே வேட்பாளாராகப் போட்டியிடுவதிலிருந்து விலகுவதாக கூறியதுடன், விக்கினேஸ்வரன் போட்டியிட வேண்டும் என விரும்புவதாகவும் அறிவிக்கப்பட்டது.

தற்போதைய அரசியற் சூழ்நிலை மற்றும் வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவர் மிகச் சிறந்த சட்ட அறிவைப் பெற்றவராக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதையும் காரணம் காட்டி முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் நிறுத்தப்படுவதே மிகச் சிறந்த தெரிவு எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

சட்டப் பின்னணி கொண்ட ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவதன் மூலம் தற்போது வடக்கில் நிலவும் நிலப் பிரச்சினை மற்றும் இராணுவப் பிரசன்னம் போன்றவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கான ஏதுநிலை தோன்றும் எனவும் தமிழரசுக் கட்சி ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.

இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ள தமது நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்காக 5000 இற்கும் மேற்பட்ட உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் நீதிமன்றை அணுகியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நிலங்களைப் பறிகொடுத்த மக்களின் சார்பாக கடந்த வாரம் யாழ். மறைமாவட்ட ஆயர் வணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் அடிகளார் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசியலில் நுழைபவர்கள் அரசியலுக்குப் பொருத்தமற்றவர்களாகவும் போதிய கல்வி மற்றும் அரசியல் பின்னணிகளைக் கொண்டவர்களாக காணப்படவில்லை எனவும் யாழ்ப்பாண மற்றும் ஏனைய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.

இலங்கையில் தொடரப்பட்ட முப்பதாண்டு கால யுத்தத்தின் விளைவாக இவ்வாறான அரசியல் மற்றும் கல்விப் பின்னணிகளைக் கொண்டவர்கள் அரசியல் வேட்பாளர்களாக இல்லாதிருந்தால் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை முன்வைக்க முடியாது என இவர்கள் கருதுகின்றனர்.

தமது உறவுகள் மற்றும் சொத்துக்களை இழந்து தவிக்கும் வடக்கு மாகாண மக்களின் கௌரவம், மதிப்பு மற்றும் ஒற்றுமை போன்றவை, தமிழர்களின் அரசியல் மற்றும் மனிதாபிமான தேவைகளை முக்கியத்துவப்படுத்துவதோடு மட்டுமல்லாது பிராந்தியத்தில் தொடரப்பட்ட யுத்தத்தின் வடுக்களை ஆற்றுவதற்கான ஒரு பயனுள்ள உறுதியான அரசியற் செயற் திட்டங்களை மேற்கொள்ளக் கூடிய இயலுமையுள்ள முதலமைச்சர் ஒருவரின் ஊடாக பிரதிபலிக்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில், நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்கி னேஸ்வரனை தெரிவு செய்வதற்காக சம்பந்தனால் மேற்கொள்ளப்பட்ட 'சதுரங்க காய்நகர்த்தலானது', கூட்டமைப்பின் தலைவர் பிரச்சினையைத் தீர்ப்பதில் மிகச் சிறந்தவர் என்பதை மட்டுமல்லாது, அரசியல் அரங்கில் 'ஒரு கல்லில் இரண்டு பறவைகளை வீழ்த்தக் கூடிய' 'குறிதவறாத சூட்டாளன்' என்பதையும் நிரூபணமாக்கியுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல