3000 பிரிட்டிஷ் பவுண்டுகளை பிணைத் தொகையாகக் கோரும் திட்டத்தை பிரிட்டன் அரசு கைவிடுகிறது
வீசா விதிமுறைகளை அதிகளவில் மீறும் அபாயத்திற்குரிய நாட்டவர்கள் என்று வகைப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்கு வருவதாக இருந்தால் அவர்களிடமிருந்து பிணைத் தொகை ஒன்றை செலுத்துமாறு கோருவதற்கு பிரிட்டன் குடிவரவுத்துறை அதிகாரிகள் போட்டிருந்தத் திட்டத்தை கைவிடவுள்ளாக பிரிட்டனின் அரச தலைமைச் செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மூவாயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகள், அதாவது இன்றைய பெறுமதியில் இந்திய ரூபாயில் சுமார் மூன்று லட்சத்தையும் இலங்கை ரூபாயில் சுமார் 6 லட்சத்தையும் பிணைத் தொகையாக அறிவிடுவது தான் பிரிட்டன் அரசின் திட்டமாக இருந்தது. பிரிட்டனுக்குள் வருபவர்கள் உரிய காலத்திற்குள் திரும்பாவிட்டால் அந்த மூவாயிரம் பவுண்டுகள் பணத்தையும் இந்தத் திட்டத்தின் கீழ் பறிகொடுக்க நேரிடும்.
இந்தக் கொள்கை முன்னெடுக்கப்பட்டால் அதனைத் தடுக்கப் போவதாக துணைப் பிரதமர் நிக் கிளெக் அச்சுறுத்தி இருந்த நிலையிலேயே அரசாங்கத்தின் இந்த முடிவு வந்திருக்கிறது.
வீசா அனுமதி காலத்தைக் கடந்தும் பிரிட்டனில் வசிப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது தான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று கூறப்பட்டது.
குறிப்பாக, அதிகளவான சுற்றுலா வீசா விண்ணப்பங்கள் அதிகளவில் வருகின்ற மற்றும் வீசா விதிமுறைகள் பெருமளவில் மீறப்படுகின்ற நாடுகள் என்று அடையாளம் காணப்பட்ட இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், இலங்கை, நைஜீரியா, கானா உள்ளிட்ட நாடுகளில் தான் முதற்கட்டதாக இந்தத் திட்டம் இந்த நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வர இருந்தது.
ஆளும் கூட்டணிக்குள் முரண்பாடு
வழமையான நடைமுறையில் வீசா மறுக்கப்பட்டவர்களிடம் மட்டும் பிணைத் தொகை கோரலாம் என்பதுதான் நிக் கிளெக்கின் திட்டமாக இருந்தது
இந்த பணையத் தொகை திட்டத்தை துணைப் பிரதமர் நிக் கிளெக் தான் முதலில் பிரேரித்தார். ஆனால், இந்திய துணைக்கண்டத்திலிருந்து வழமையான நடைமுறையில் வீசா அனுமதி கிடைக்காத குறித்த அபாயகரமான நாட்டவர்களிடமிருந்து மட்டுமே பணையத் தொகை வாங்கப்பட வேண்டும் என்பது தான் அவரது திட்டம்.
இதற்கிடையில், பிரிட்டனுக்குள் வரும் எல்லோரிடமிருந்தும் பணையத் தொகையை அறிவிட வேண்டும் என்பதாகவும் அரசாங்கத்துக்குள் கருத்துக்கள் வந்தன. அந்த திட்டத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
இந்த நிலையிலேயே ஆளும் பழமைவாதக் கட்சி தலைமையிலான கூட்டணியைச் சேர்ந்த தாராளவாத- ஜனநாயகக் கட்சியின் தலைவரான துணைப் பிரதமர் நிக் கிளக், அந்தத் திட்டத்தை எதிர்ப்பதாக பின்னர் அறிவித்தார்.
இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குள் முதலீடு செய்ய விரும்புவோர் இந்த புதிய கொள்கையால் இங்கு வர தயக்கம் காட்டுகிறார்கள் என்று எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் விமர்சிக்கத் தொடங்கியது.
'கோ ஹோம்'
இரண்டு வாரங்களுக்கு முன்னர்வரை லண்டன் வீதிகளில் உலா வந்த ஹோம் ஆபிஸ் வாகனம்
பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியிருப்போரை எச்சரிக்கும் விதமாக, "go home or face arrest" அதாவது பிரிட்டனை விட்டு வெளியேறுங்கள் அல்லது கைதுசெய்யப்படுவீர்கள் என்ற போஸ்டர்களைத் தாங்கிய வேன்களை தொடர்ந்தும் வீதிகளில் உலாவச் செய்யும் திட்டமும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரத்துசெய்யப்பட்டுவிட்டது.
இந்தச் சூழ்நிலையிலேயே இந்த பணையத் தொகை திட்டமும் பிரிட்டன் அரசால் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
BBC Tamil




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக