யானைக்கால் நோய் தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவருக்கு ஏற்பட்ட பாதிப்பை அவரது உடலில் பிசாசு தொற்றிக் கொண்டுள்ளதாகக் கருதி உறவினர்கள் சிகிச்சையளிக்க மறுத்ததால், அவரது கால் வீங்கி 70 இறாத்தல் நிறையுடைய இராட்சத தோற்றத்தையடைந்த விபரீத சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றுள்ளது.
இரு பிள்ளைகளின் தாயாரான சாடியா அப்டினுர் (35 வயது) என்ற மேற்படி பெண், 2006 ஆம் ஆண்டு யானைக்கால் நோய்க்கு உள்ளாகி சுகவீனமடைந்தார்.
இதனையடுத்து அவரது கால் வீங்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அவரது உறவினர்களும் நண்பர்களும் அவரது உடலில் பிசாசு குடிபுகுந்துள்ளதாக தெரிவித்து அவர் மருத்துவ சிகிச்சையை பெறவிடாது தடுத்துள்ளனர்.
தொடர்ந்து சாடியா அப்டினுரின் கால் வீங்க ஆரம்பித்து அவர் நகர்ந்து திரிய முடியாத அளவுக்கு இராட்சத உருவை அடைந்துள்ளது.
இந்நிலையில் அயன் (9 வயது), அயுப் (7 வயது) ஆகிய இரு பிள்ளைகளையும் பராமரிக்க பிச்சையெடுக்க வேண்டிய நிலைக்கு சாடியா தள்ளப்பட்டுள்ளார்.
இதனையடுத்து உள்நாட்டு மருத்துவமனையை சாடியா அணுகிய போது, அவருக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கான அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்களோ, வசதிகளோ இல்லாததால் அவருக்கு சிகிச்சையளிக்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
அவரது துயரக் கதையை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பிரித்தானிய முன்னணி சத்திரசிகிச்சை நிபுணரான நிக்கல் பிரான்ட்பீல்ட் அவருக்கு 10 மணி நேர இலவச அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு அவரது காலில் ஏற்பட்டுள்ள இராட்சத வளர்ச்சியை அகற்ற இணக்கம் தெரிவித்துள்ளார்.
சாடியாவுக்கு ஏற்பட்ட நோய் பாதிப்புக்கு சிகிச்சையளிக்கத் தவறினால் அவர் உயிரிழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சார்டியா சிகிச்சை பெறுவதற்காக பிரித்தானியா செல்வதற்கான நிதியை சேகரிக்க போராடி வருகிறார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக