வியாழன், 19 டிசம்பர், 2013

இந்திய துணை தூதர் தேவயானி விவகாரம்: டில்லி நியூயார்க்கில் ஏட்டிக்கு போட்டி அதிரடி!

அமெரிக்கா நியூயார்க்கில் கைது செய்யப்பட்டு, கால் மில்லியன் டாலர் பிணையில் விடப்பட்டுள்ள இந்திய ராஜதந்திரி தேவயானி கொப்ராகேட் விவகாரத்தில் அடுத்த திருப்பம். அமெரிக்காவில் அவருக்கு பூரண ராஜதந்திர பாதுகாப்பு (diplomatic immunity) கொடுப்பதற்காக அவருக்கு திடீர் பதவி உயர்வு கொடுத்துள்ள இந்திய மத்திய அரசு, தேவயானியை ஐ.நா.வுக்கான நிரந்தர தூதரகப் பணிக்கு மாற்றியுள்ளது.

ஒரு நபர், நியூயார்க்கில் இந்திய தூதரக அதிகாரியாக இருந்து, அமெரிக்காவில் கிரிமினல் குற்றச்சாட்டில் சிக்கினால், ராஜதந்திர பாதுகாப்பு ரத்தாகிவிடும். ஆனால் அதே நபர், அதே நியூயார்க்கில் ஐ.நா.வுக்கான நிரந்தர தூதரகப் பணியில் இருந்தால்,ராஜதந்திரப் பாதுகாப்பு ரத்தாகாது!

தேவயானி மீண்டும் கைது செய்யப்படலாம், அல்லது அவர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்படலாம் என்ற நிலை நேற்றுவரை இருந்தது. நேற்றிரவு, தேவயானியை இந்த புதிய பதவிக்கு மாற்றும் உத்தரவை பிறப்பித்துள்ளது மத்திய அரசு.

ஆனால், இந்த அதிரடி நடவடிக்கையிலும், சிறியதாக கம்ப்ளிகேஷன் ஒன்று உள்ளது.

நியூயார்க்கில் தங்கி இருந்தபடியே, ஒரு வெளிநாட்டு ராஜதந்திர பதவியில் இருந்து மற்றொரு ராஜதந்திர பதவிக்கு மாறும்போது, புதிய பதவிக்காக புதிய ராஜதந்திர அடையாள அட்டை (fresh diplomatic card) பெறப்பட வேண்டும். இந்த புதிய டிப்ளமேட்டிக் கார்ட் ஐ.நா.வால் வழங்கப்படும் என்றாலும், இதற்கும் அமெரிக்க ராஜாங்க அமைச்சின் கிளியரன்ஸ் தேவை.

தேவயானி மீது அமெரிக்காவில் கிரிமினல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ள நிலையில், அமெரிக்க ராஜாங்க அமைச்சு கிளியரன்ஸ் கொடுக்கலாம், அல்லது, கொடுக்க மறுக்கலாம்.

ஒருவேளை அமெரிக்க ராஜாங்க அமைச்சு கிளியரன்ஸ் கொடுக்க மறுத்தால், மத்திய அரசால் வழங்கப்பட்ட பதவியில் ‘ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நபராக’ தேவயானி கருதப்படுவார். அதன்பின் அமெரிக்காவில் சட்டரீதியான ராஜதந்திர பாதுகாப்பு எதுவும் அவருக்கு இல்லாது போகலாம்.

அமெரிக்க ராஜாங்க அமைச்சு, இந்த கிளியரன்ஸை கொடுக்குமா?

மில்லியன் டாலர் கேள்வி அது. காரணம், இந்த விவகாரத்தில் டில்லி ஏற்கனவே அமெரிக்காவுக்கு எதிரான சில கடும் நடவடிக்கைகளை இந்தியாவில் எடுத்துள்ளது என்று நேற்று விறுவிறுப்பு.காமில் செய்தி வெளியிட்டிருந்தோம். (அதை தவற விட்டிருந்தால் இங்கே கிளிக் செய்யவும்)

அந்த அதிரடி நடவடிக்கைகள் அனைத்துமே சுற்றிச் சுற்றி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளன என்பதை, நேற்றைய எமது செய்தியில் வெளியான பட்டியலில் கவனியுங்கள். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவரும், அமெரிக்க ராஜாங்க அமைச்சின் நிர்வாக அலகில் பணிபுரியும் ஊழியர்கள்.

இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை எடுத்த பின்னரும், அமெரிக்க ராஜாங்க அமைச்சு, தேவயானிக்கு கிளியரன்ஸ் கொடுக்குமா என்பது சரியாக தெரியவிலலை.

ஒருவேளை, இந்த விவகாரத்தை இழுத்துச் செல்ல அமெரிக்க அரசு விரும்பாவிட்டால், தேவயானிக்கு கிளியரன்ஸ் கொடுக்கும். அதற்கு அமெரிக்க செனட் பச்சைக்கொடி காட்ட வேண்டும்.

தற்போது அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 5 பேர் இந்திய சுற்றுப் பயணத்தில் உள்ளார்கள். அதிலும் ஒரு சிக்கல்.

தேவயானி அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட காரணத்தால், இந்தியா வந்துள்ள இந்த 5 அமெரிக்க செனட் உறுப்பினர்களும் டில்லியில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் இந்திய அதிகார வர்க்கத்தின் சந்திப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சபாநாயகர் மீராகுமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே ஆகியோர், இந்த அமெரிக்க குழுவை சந்திக்க மறுத்துள்ளனர். அத்துடன், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், தேவயானி கைது செய்யப்பட்டதை காரணம் காட்டி அமெரிக்க தூதுக்குழுவை சந்திக்க மறுத்துவிட்டார்.

இப்படி அவமானப்படுத்தப்பட்டுள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள் 5 பேரும், அமெரிக்க செனட்டின் மற்றைய உறுப்பினர்களிடம் என்ன மாதிரியான லாபி செய்வார்களோ தெரியாது.

அமெரிக்க செனட் கடின முகம் காட்டினால், ராஜாங்க அமைச்சால் தேவயானிக்கு கிளியரன்ஸ் கொடுக்க முடியாது போகலாம்.

மற்றொரு சாத்தியம், தேவயானியை அமெரிக்காவை விட்டு வெளியேற்றி இந்தியா அழைத்துவருவது.

ஏற்கனவே அவர்மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. Vienna Convention on Consular Relations மூலமாக கிடைக்கும் ராஜதந்திர பாதுகாப்பும் இல்லை. இந்த நிலையில், அமெரிக்காவை விட்டு வெளியேற முயலும்போது தேவயானி கைது செய்யப்படவும் சான்ஸ் உள்ளது.

அப்படி நடந்தால், விவகாரம் மேலும் சிக்கலாகி விடும்.

இதற்கிடையே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “தேவயானியை மீட்காமல் மீண்டும் நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்” என சபதம் போட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் தமக்கு பணிபுரிய இந்திய பணியாளரை நியமிப்பதில் விசா முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய துணைத் தூதர் தேவயானி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து நேற்று இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “தேவயானி கைது செய்யப்பட்டதில் அமெரிக்காவின் சதி அடங்கி உள்ளது. பெண் தூதரக அதிகாரி அப்பாவி; எமது தூதரின் கவுரவத்திற்கு பங்கம் வராமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு எடுக்கும்.

அவரை இந்தியா அழைத்து வர வேண்டியது எனது பொறுப்பு; முதலில் அவரை கைது நடவடிக்கையில் இருந்து வெளியே கொண்டு வந்து விட்டு, பின்னர் அமெரிக்கா மீது இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். தேவயானியை மீட்காமல் மீண்டும் நாடாளுமன்றத்தில் கால் வைக்க மாட்டேன்” என்று சபதமிட்டார்.

அடேங்கப்பா! எப்படி மாறிவிட்டது இந்த விவகாரம்!! 39 வயது தேவயானியும், அவரது நியூயார்க் வீட்டில் பணிபுரிய இந்தியாவில் இருந்து சென்ற சங்கீதாவும், இந்திய ராஜதந்திர சரித்திரத்தில் இடம்பெறுகிறார்கள்!


விறுவிறுப்பு.காம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல