சனி, 7 டிசம்பர், 2013

போராளித் தலைவன் நெல்சன் மண்டேலாவுக்கு உலக பிரபலங்களின் 'ட்வீட்டாஞ்சலி'

உலகம் போற்றும் உன்னத போராளியான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு சமூக வலைதளமான ட்விட்டரும் தமது அஞ்சலியை செலுத்திவருகிறது. அதில் உலக தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் அடிமை இருள் அகற்ற பிறந்த ஒளிநட்சத்திரம் சுயநலம் பாராது இனநலம் கருதி தன்னையே ஒப்படைத்துக் கொண்ட பெருந்தலைவன் நெல்சன் மண்டேலா.

விடுதலை கோரி போராடும் இனங்களுக்கு காஸ்ட்ரோவும் சேகுவேராவும் முன்மாதிரிகளோ அதே போல் நெல்சன் மண்டேலாவும் ஒரு விடுதலை யுத்த குறியீடு என்பதில் மிகையேதும் இல்லை. மாபெரும் அந்த போராளிக்கு உலக நாடுகள் அஞ்சலி செலுத்துகின்றன. சமூக வலைதளமான ட்விட்டரும் தம் பங்குக்கு அஞ்சலி செலுத்துகிறது

ட்வீட்டாஞ்சலி

என்ற பெயரில் ட்விட்டரில் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் உலக தலைவர்களுடன் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். ஒரு நிமிடத்துக்குள் அப்படி குவிந்துகொண்டே இருக்கின்றன இரங்கல் குறிப்புகள். இப்போது ட்விட்டரில் இதுதான் ஹாட் டாபிக்.

உலகத் தலைவர்களில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் மண்டேலா மறைவு தொடர்பான தமது இரங்கலை முதல் நபராக பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, மண்டேலா எனும் மனிதர் வாழ்ந்தார் எனும் தகவலுக்கே நன்றி தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டார். இப் பதிவு 3,000 முறைகளுக்கு மேல் ரீ ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது.

கனடா பிரதமர் ஹார்பர், ஒட்டுமொத்த கனடாவும் மண்டேலா குடும்பம் மற்றும் தென்னாப்பிரிக்க மக்களுடன் இணைந்து துக்கம் அனுஷ்டிக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.

மனிதர்களின் மகத்தானவர் மறைந்துவிட்டார். இது தென்னாப்பிரிக்கா போலவே இந்தியாவுக்கும் இழப்பு தான். உண்மையான காந்தியவாதி அவர் என்று நமது பிரதமர் மன்மோகன் சிங் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். இப்பதிவு 800 முறைக்கு மேல் ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னியா ஆளுநருமான அர்னால்டு, நடிகை சார்லைஸ் தீரான் ஆகியோரும் பதிவ்ட்டிருக்கின்றனர்.

கால்பந்து வீரர் ரொனால்டோ, மண்டேலா உங்கள் வாழ்க்கை மற்றும் முன்னுதாரணத்துக்கு நன்றி. நீங்கள் எப்போதும் எங்களுடன் இருப்பீர்கள் எனப் பதிவு செய்திருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா, விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி இருக்கிறது எனும் மண்டேலா மொழியை குறிப்பிட்டிருக்கிறார்.

மண்டேலாவின் தென்னாப்பிரிக்க வீராரான டிவில்லியர்ஸ், முன் எப்போதையும் விட ஒரு தேசமாக இப்போது ஒன்று பட்டு நிற்போம். அவருக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம். மண்டேலா உங்களை இழந்து தவிக்கிறோம் என்று உருகியிருக்கிறார்.

ட்விட்டரும் தன் பங்கிறகு மண்டேலா சிறையில் இருந்து வெளியானபோது கை முஷ்டியை உயர்த்தியிருந்த கருப்பு வெள்ளை புகைப்படத்தை வெளியிட்டு அந்த போராளித் தலைவனுகு அஞ்சலி செலுத்தியுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல