உலகளாவிய ரீதியில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமாக உள்ளன. சிறுவர் துஷ்பிரயோகத்தின் அதிகரித்த தன்மையானது ஒழுக்கமுள்ள சமூக உருவாக்கத்துக்கு சவாலாக விளங்குகின்றமையும் தெரிந்த விடயமாகும். சிறுவர் உரிமைகளை பேணும் பொருட்டு பல்வேறு ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதும் அவை அனைத்தும் ஏட்டளவில் முடங்கிக் கிடப்பதனையே பெரும்பாலும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளின் வலுவற்ற போக்குகள் சிறுவர் துஷ்பிரயோகங்களை உக்கிரப்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டுகளும் இல்லாமலில்லை.
ஆசியாவில் சுமார் பத்து இலட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பாலியல் வர்த்தகத்துக்கு பலியாகும் நிலை உருவாகி வருவதாக 2010ஆம் ஆண்டில் வெளியான தகவல் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துடன் அதிகமான ஆண்களே தொடர்புபட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 1996க்கும் 2000க்கும் இடையில் நியூஸிலாந்து நாட்டில் தீர்ப்பு பெற்ற 99 சதவீதமான சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோக வழக்குகளில் ஆண்களே குற்றவாளிகளாக இருந்துள்ளனர். உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களில் 3இல் 1பங்கு 18 வயதுக்கும் குறைந்தவர்களாலேயே புரியப்படுகின்றது என்பது அன்டேர்ஸ் நைமான் என்பவரின் கருத்தாக உள்ளது. சிறுவர் பாலியல் துஷ்பிரயோக விடயத்தில் பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இலகுவானதல்ல என்பதே உண்மையாகும்.
வறுமை சிறுவர் துஷ்பிரயோகத்தை மேலும் அதிகரிக்கச் செய்கின்றது. சுற்றுலாப் பயணிகள்கூட வறுமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு குற்றமிழைப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. யுத்தம் சிறுவர்களின் வாழ்க்கையையும் சுதந்திரமாக சுற்றித்திரியும் நிலைமைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது. உலகில் சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் போர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யுத்தம் பல சிறுவர்களை விசேட தேவை கொண்டவர்களாக மாற்றியமைத்துள்ளது. யுத்தத்தின் காரணமாக அவயவங்களை இழந்தும், உளக் குறைபாடுகளுடன் பல சிறுவர்கள் வாழ்க்கையை கொண்டு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர். உலக நாடுகளில் இடம்பெறும் போர்களே பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் உயிரிழப்பதற்கு உந்துசக்தியாகியுள்ளது. சிரியாவில் மூன்று வருட காலமாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரும் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது. லண்டனை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் ஒக்ஸ்போர்ட் ஆய்வுக் குழுவால் வெளியிடப்பட்ட களவாடப்பட்ட எதிர்காலங்கள்! சிரியாவில் சிறுவர் படுகொலைகளில் மறைந்துள்ள தொகை என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவர்களில் அநேகர் தமது அயற்புறங்களில் வெடித்த குண்டுகள், ஷெல்களாலேயே கொல்லப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரில் பலியானவர்களில் 11 ஆயிரத்து 420 பேர் 17க்கும் அதற்கு கீழ்ப்பட்டதுமான வயதுடையவர்களாவர். இவர்களில் 389 பேர் சினைப்பர் தாக்குதலில் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 764 பேர் உடனடியாக கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட சிறுவர்களில் 13க்கும் 17வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களே அதிகமாக உள்ளனர். இரண்டாயிரத்து 223 சிறுவர்கள் அலெப்போ நகரில் கொல்லப்பட்டுள்ளனர். இந்நகரில் கடந்த மாதம் நவம்பர் 23ஆம் திகதி நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 40 சிறுவர்கள் ஒரே நாளில் பலியாகினர்.
சிறுவர்கள் காணாமற்போகும் அல்லது கடத்தப்படும் நிலைமைகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. பணம், பாலியல் உள்ளிட்ட பல தேவைகளுக்காக சிறுவர் கடத்தப்படுகின்றனர். இன்னும் சில உலக நாடுகளில் பலி கொடுக்கும் நோக்கத்துக்காகவும் சிறுவர்கள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் பல்லாயிரக்கணக்கான சிறுமியர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடத்தல் கும்பலால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் பழங்குடி இனத்து மக்கள் வசிக்கும் மாவட்டங்களில் ஆட்கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் இந்த சம்பவங்களை மாநில அரசாங்கமும் பொலிஸும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளதாகவும் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியா கவலை தெரிவித்திருக்கின்றார். இதை சாதாரண சம்பவங்களாக எடுத்துக்கொண்டுள்ள மாநில அரசு சம்பவங்களை கட்டுப்படுத்த தவறியுள்ளதாகவும் தமது நிலைப்பாட்டை பூரியா தெளிவுபடுத்துகிறார்.
சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பில் உலகளாவிய ரீதியில் 348 பேர் அண்மை யில் கைது செய்யப்பட்டிருந்தனர். சிறுவர்களது நிர்வாணப் படங்களைக் கொண்ட வீடியோக்கள் மற்றும் இறுவட்டுக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரொரண்டோவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமொன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. நிறுவனத்தின் வீடியோ காட்சிகள் 94 நாடுகளில் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சிறுவர் ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் கனடாவில் 108 பேரும், அமெரிக்காவில் 76 பேரும், ஏனைய பல நாடுகளில் 164 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆபாச வீடியோ படங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா, ஸ்பெயின், மெக்சிக்கோ, தென் ஆபிரிக்கா, நோர்வே, கிறீஸ், அயர்லாந்து குடியரசு ஆகிய நாடுகளிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
உலகில் ஒரு மில்லியன் சிறுமிகளுக்கு பிறப்புறுப்பு சிதைக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சிறுவர் நிதியமானது அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் தெரிந்த விடயமாகும். இச்செயலுக்கு உலக நாடுகள் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்ற போதும் இச்செயல் இன்னும் நடைமுறையில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும். மதச்சடங்காக மேற்கொள்ளப்படும் இச்செயலை தடுத்து நிறுத்த சட்டம் மட்டுமே போதுமானதல்ல என்பதையும் புத்திஜீவிகள் வலியுறுத்தி வருகின்றனர். புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றமை சிறுவர் துஷ்பிரயோகத்தின் உச்சக்கட்டமாக உள்ளது.
உலக நாடுகளில் சிறுவர் பிரச்சினைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பன கணிசமாக அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கையிலும் இதன் எதிரொலியினைக் கேட்கக்கூடியதாக உள்ளது. இலங்கையில் உள்ள சிறுவர்களும் பலதரப்பட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இலங்கையில் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் சுமார் இருபத்தேழாயிரத்து மூன்று சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் 2007 இல் இரண்டாயிரத்து 624 சிறுவர்களும் 2008 இல் மூவாயிரத்து 196 சிறுவர்களும் 2009இல் இரண்டாயிரத்து 954 சிறுவர்களும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 2000க்கும் 2006க்கும் இடைப்பட்ட காலத்தில் 14 ஆயிரத்து 200 சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகவுள்ளது.
இதேவேளை, 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையிலும் 18 ஆயிரத்து 777 சிறுவர், சிறுமியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். முன்னதாக கேள்வியெழுப்பிய ரோசி சேனநாயக்க எம்.பி.க்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கரலியத்த இவ்விபரங்களை வெளியிட்டிருந்தார். தாய் அல்லது தந்தை வெளிநாடு சென்றதால் பல சிறுமியர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கட்டாயக் கல்வி சட்டத்தை மீறிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
2011 மற்றும் 2012ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் இலங்கை சிறுவர்கள் தத்தெடுக்கப்படுவது தொடர்பிலும் அதிருப்திகள் தெரிவிக்கப்படுகின்றன. வருடந்தோறும் சுமார் ஆயிரத்து நூறு சிறுவர்கள் உள்நாட்டவர்களாலும் வெளிநாட்டவர்களாலும் தத்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.
தத்தெடுக்கப்படும் பொறிமுறையினை ஒழுங்காக ஒரு பொறிமுறையின் கீழ் கொண்டு வருவதற்கு புதிய கொள்கை ஒன்றை முன்வைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் சிறுவர்கள் என்போர் மிகப்பெரும் சொத்துக்களாவர். நாட்டில் எதிர்கால சிற்பிகள் இவர்களே. இந்த வகையில் சிறுவர் உரிமைகளை பேணுவதற்கும் அவர்களின் சுதந்திரத்தை பறிக்காதிருப்பதற்கும் சகலரும் உறுதி பூண வேண்டும்.
சிறுவர்களின் மேன்மை தொடர்பில் உலக நாடுகள் உரிய நடைமுறை சாத்தியமான திட்டங்களை வகுத்து செயற்படல் வேண்டும். சிறுவர்களை புறந்தள்ளுவோர் பல்வேறு பாதக விளைவுகளை சந்திக்க நேரிடும்.
- துரைசாமி நடராஜா -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக