தென் ஆபிரிக்காவில் ஆங்கிலேயரின் அநியாய ஆட்சிக்கு எதிராக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தோன்றிய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நெல்சன் மண்டேலா அரசியலில் ஈடுபட்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பொதுச் செயலாளரானார். புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபட்டார். அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. 46 ஆவது வயதில் சிறைசென்ற அவர் 27 ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். ஆபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக அவர் கடுமையான சிறைவாசம் அனுபவித்தார்.
வன்முறைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்ட மண்டேலா மனம்மாறி காந்தியடிகளின் அகிம்சைப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டார். 1994 ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மண்டேலா குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். கறுப்பர் இனம் விடுதலை பெற்றது.
ஒடுக்கப்பட்டோர்களான கறுப்பினத்தின் மீட்சி நாயகரான தென்னாபிரிக்க விடுதலை வேங்கை நெல்சன் மண்டேலாவின் வரலாறு ஒரு வீர காவியம். அவர் நீந்தியது நெருப்பாறு. அவரது வாழ்க்கை வரலாறு மயிர்க்கூச்செறியச் செய்யும் மகத்தான இலக்கிய ஓவியம் ஆகும்.
இன்றைய கதாநாயகன் நெல்சன் மண்டேலா ஆபிரிக்காவிலுள்ள வெஸோ கிராமத்தில் 1918 ஆம் ஆண்டு, ஜுலை மாதம், 18 ஆம் திகதி பிறந்தார். அவரின் தந்தையாரின் பெயர் காட்லா என்பதாகும். அவர் தெம்பு இன மக்களின் தலைவராக இருந்தார். தெம்பு இன அரசர் அவரை வெஸோவின் தலைவராக நியமித்திருந்தார். நியமனம் செய்த அரசர் பிரிட்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
மரியாதைக்குரிய பதவி, செல்வாக்குள்ள மனிதர் தன் இன மக்களோடு நெருக்கமான உறவு கொண்டிருந்த தலைவர் என்றாலும் பிரிட்டிஷாருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலைமையிலேயே அவர் இருந்தார்.
மண்டேலாவுக்கு அவர் தந்தை வைத்த பெயர் ‘ரோலிலாவா’ என்பதாகும். இதன் பொருள் ‘தொல்லை தருபவன்’ என்பதாகும்.
பிற்காலத்தில் தனது தந்தையை நினைவு கூரும்போதும் மண்டேலா நன்கு சிந்தித்துத்தான் எனது தந்தையார் எனக்கு இப்பெயரைச் சூட்டினார் போலும் என நகைச்சுவையாகக் கூறுவதுண்டு.
கிராமத்தலைவர் என்ற பதவியில் தெம்பு. மன்னருக்கும் ஆங்கில நீதிபதிக்கும் கட்டுப்பட்டவர் மண்டேலாவின் தந்தை காட்லா. ஒருநாள் ஒரு விவசாயி தன் காளை மாடு காணாமல் போனதாக நீதிபதியிடம் புகார் கொடுத்தார். நீதிபதி வழக்கை விசாரிக்க காட்லாவை தன் முன் ஆஜராகும்படி பணித்தார். காட்லாவே பதிலுக்கு “இந்த வழக்கை நானே விசாரிக்க வேண்டியவன். நான் நீதிபதி முன் ஆஜராக மாட்டேன்” என்று பதில் அனுப்பினார். நீதிபதி காட்லாவை பதவியிலிருந்து நீக்கிவிட்டார்.
இதனால் பட்டம், பதவி மட்டுமின்றி நிலம், கால்நடைகள், வரி, வருமானம் ஆகிய அனைத்தும் காட்லா இழந்துவிட்டார். தன்மானமே பெரிதென எண்ணிய காட்லா இதனால் உறுதி குலையவில்லை. பதவி பறிக்கப்பட்ட பின் இம் வேஸா கிராமத்தை விட்டு அங்கிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள ‘குனு’ என்று அழைக்கப்படும் சிற்றூருக்கு காட்லா குடிபெயர்ந்தார். மண்டேலாவுக்கு ஒன்பது வயது ஆனபோது தந்தை காச நோயால் பாதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்.
தந்தையின் மரணம் சிறுவன் மண்டேலாவின் வாழ்க்கைப் பாதையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஒரு நாள் மண்டேலாவின் தாயார் நாம் குனு கிராமத்திலிருந்து வேறொர் ஊருக்குப் போகிறோம். நீ தயாராய் இரு என்று சொன்னார். தன் தாயின் கரத்தைப் பற்றிக் கொண்டு தந்தையை இழந்த துயர நினைவுகளுடன் கொளுத்தும் வெயிலில் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் சிறுவன் மண்டேலா நடந்தான். கையில் கொண்டு வந்திருந்த உணவை இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து உண்டனர். பல சிற்றூர்களைக் கடந்து மண்டேலா களைத்துப் போன சமயம் மாலை நேரத்தில் தெம்பு நாட்டின் தலைநகரான மெக்கெஸ்வெனி வந்து சேர்ந்தனர்.
தெம்புவின் அரசப் பிரதிநிதியாக ஆண்டு வந்த ஜோங்கிந்தர்பாவின் அரண்மனைக்குள் நுழைந்தார்கள். தன் கணவர் இறந்துபோன துயரச் செய்தியை மண்டேலாவின் தாயார் ஜோங்கிந்தர்பாவிடம் தெரிவித்தார். இதைக் கேட்டு அரசப்பிரதிநிதி துயரத்தில் ஆழ்ந்தார். தன்னை அரசப்பிரதிநிதியாக்கிய காட்லாவுக்கு தான் மிக்க நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
தந்தையை இழந்த சிறுவனுக்கு தானே வளர்ப்புத் தந்தையாக இருந்து பராமரிப்பேன் என்று நெஞ்சு நெகிழ உறுதி கூறினார். தன் ஒரே மகனை அரண்மனையில் விட்டுப் பிரிகின்ற நேரத்தில் தாய்க்கு ஆழ்ந்த துயரம் இருந்தபோதும் அதை வெளிப்படுத்தாமல் சிறுவனைக் கட்டிப்பிடித்து கண்ணீர் விடவில்லை. போய் வருகிறேன் என்று மட்டும் மகனிடம் கூறிவிட்டு பிரியாவிடை பெற்று குனுவுக்கே மீண்டும் தனியே திரும்பிவிட்டார். குடிசையிலிருந்து அரண்மனைக்கு வந்த மண்டேலா விரைவில் தன்னைப் புதிய சூழ்நிலைக்கு தயார்ப்படுத்திக்கொண்டார்.
அரண்மனைக்கு அடுத்த கட்டடத்திலேயே பாடசாலை இருந்தது. இப்பள்ளியில் தான் மன்னரின் மகன் ஜஸ்டிஸ், மகள் ரொமாஃபு ஆகிய இருவருடன் இணைந்து மண்டேலா படிக்கத் தொடங்கினார். மண்டேலா கல்வியில் ஆழ்ந்த அக்கறை காட்டினார். ஆங்கிலம், கோசா மொழி, வரலாறு, புவியியல் ஆகியவை கற்பிக்கப்பட்டன.
மண்டேலாவுக்கு ஏட்டுக் கல்வியுடன் இன்னொரு பயிற்சியும் கிட்டியது. தெம்பு அரண்மனையில் பழங்குடி இனப் பெரியவர்கள் அவ்வப்போது கூடி பொதுப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பது மரபு. விவாதங்கள் ஒரு சிறிய சட்ட மன்ற விவாதங்கள் போலவே நடைபெறும்.
1942 ஆம் ஆண்டு பி.ஏ. பட்டத் தேர்வில் மண்டேலா முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார். கல்வி மட்டுமே வாழ்க்கையில் வெற்றி அடைய ஒரே வழி அல்ல என்பதை கவுர் போன்ற அவரது நல்ல நண்பர்கள் விளக்கினார்கள். ஆபிரிக்கரின் அடிமைத்தனம் அகல வேண்டுமானால் 1912 இல் தொடங்கப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்து விடுதலைக்கு பாடுபடுவதுதான் ஒரே ஒரு வழி என கவுர் வற்புறுத்தி வந்தார்.
அந்தக் காலகட்டத்தில் தென்னாபிரிக்காவில் இருக்கும் ஆபிரிக்கனுக்கு பிறப்பு என்பதே அரசியல்தான். பிறந்த அந்த நொடியிலிருந்து அவன் அரசியலாக்கப்படுகிறான். அவன் இதை ஒப்புக்கொண்டாலும் சரி மறுத்தாலும் சரி இதுதான் அந்த நேரத்து நிதர்சனமான உண்மை.
ஒரு ஆபிரிக்கன் ஆபிரிக்கர்களுக்கு மட்டுமேயான மருத்துவமனையில் பிறக்கிறான். ஆபிரிக்கர்களுக்கு மட்டுமேயான பேருந்தில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். ஆபிரிக்கர்கள் வாழும் பகுதியில் மட்டுமே அவனும் வாழ்கிறான். ஒருவேளை அவன் கல்வி கற்பதாக இருந்தால் ஆபிரிக்கர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் பள்ளியில் படிக்கிறான்.
வளர்ந்த பிறகு அவன் ஆபிரிக்கர்கள் பணியாற்றும் அலுவலகத்தில் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகின்றான். ஆபிரிக்கர்கள் மட்டுமே வாழும் குடியிருப்பில் வாடகைக்கு இருக்கின்றான். சீவிக்கிறான். இரவிலோ, பகலிலோ எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் அவன் தடுத்து நிறுத்தப்படலாம். கடவுச் சீட்டை காட்டச் சொல்லி கேட்கப்படலாம். காட்டாவிட்டால் சிறையில் தள்ளப்படலாம்!
இதுதான் அப்போதைய யதார்த்தம்! தென்ஆபிரிக்க கறுப்பர்கள் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையே வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையே யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையே மிருகத்தனத்திற்கும் ஒடுக்கு முறைக்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருந்தார்கள்.
22 வயது இளைஞராக இருந்த மண்டேலா இவற்றைக் கண்டு பொங்கி எழுந்தார். அரசியலில் ஈடுபட வேண்டும் என முடிவெடுத்து ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் தம்மை இணைத்துக்கொண்டார்.
பல எதிர்ப்புகளின் மத்தியில் 1944 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் மன்றம் நிறுவப்படுகிறது. இதன் நிர்வாகக்குழு உறுப்பினராக மண்டேலா ஏகமனதாக தெரிவு செய்யப்படுகிறார். அதே ஆண்டில் எவலின் என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறார்.
1948ஆம் ஆண்டு மண்டேலா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் இளைஞர் மன்றத்தின் பொதுச் செயலாளராக மண்டேலா தெரிவு செய்யப்படுகிறார்.
அதே ஆண்டு பொதுத்தேர்தலில் தேசியக் கட்சி வெற்றி பெற்று இன ஒதுக்கலை அமுல்படுத்துகிறது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் மண்டேலா தலைமையில் போராட்டத்தை விரிவுபடுத்துகிறது.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் மன்றத்தின் தீவிர செயற்பாடுகளால் அதன் செயற்றிட்டங்களை 1949 ஆம் ஆண்டு தேசிய காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது.
1956ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க சதி செய்ததாகவும் வன்முறைகளைத் தூண்டிவிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு மண்டேலாவுடன் சேர்ந்து 155 பேர் கைது செய்யப்படுகிறார்கள். 5 ஆண்டுகள் நீடித்த விசாரணையின் பின் அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.
இதற்கிடையே 1957 ஆம் ஆண்டு தமது மனைவி எவிலினை விவாகரத்து செய்த மண்டேலா 1958 ஆம் ஆண்டு வின்னி என்பவரைத் திருமணம் செய்கிறார்.
1960ஆம் ஆண்டு ஷார்ப்வில் ஏற்பட்ட சம்பவத்தில் 69 போராட்ட வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி தடை செய்யப்படுகிறது. மண்டேலா தலைமறைவாகிறார். ஆபிரிக்காவின் ஈட்டி (எம்.கே.) என்னும் தீவிரவாத கிளை இயக்கத்தை ஆரம்பிக்கிறார்.
பதினேழு மாத கால தலைமறைவு வாழ்க்கைக்குப் பின்னர் 1962 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், 5 ஆம் திகதி கைது செய்யப்பட்டு ஜொகன்னர்ஸ்பர்க் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வாசிக்கப்பட்ட தீர்ப்பில் முதலில் மண்டேலாவுக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனையே கிடைத்தது.
தொடர்ந்து இராஜதுரோக குற்றம் சுமத்தப்பட்டு 1964 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி 18 ஆண்டுகள் சிறை வைக்க உத்தரவிடப்படுகிறது.
சிறைச்சாலையில் மண்டேலா இறந்துவிடுவார் என்று எண்ணம் கொண்டார்கள் ஆட்சியாளர்கள். ஆனால், 27 ஆண்டு சிறைவாசத்தின் பின் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி நெல்சன் மண்டேலா விடுதலையாகிறார்.
இதற்கிடையில் சொவேட்பி, ஷார்ப் பகுதிகளில் நடைபெற்ற மாணவர் எழுச்சியில் 600 பேர் கொல்லப்படுகிறார்கள். இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ஸ்டீவ் பிகோ என்பவர் காவல் துறையினரால் தாக்கப்பட்டு மரணமடைகிறார்.
தொடர்ந்து தென்னாபிரிக்கா சர்வதேச பொருளாதாரத் தடைக்கு ஆளாகிறது. ஆடிப்போகிறது. தென்னாபிரிக்கா அரசு!
1990 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலா விடுவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் டி.கிளார்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தடையை நீக்கி ஜனநாயக அமைப்பைத் தோற்றுவிக்கும் முயற்சியில் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முற்படுகிறார்.
1991 ஆம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர் பதவியை நெல்சன் மண்டேலா விரும்பி ஏற்றுக்கொள்கிறார். அதே ஆண்டு சர்வதேச ஒலிம்பிக்கமிட்டி கடந்த இருபத்தொரு ஆண்டுகளாக விதித்திருந்த தடையை நீக்கிக் கொள்கிறது.
1993 ஆம் ஆண்டு நெல்சன் மண்டேலாவுக்கு இன்னுமொரு குறிப்பிடத்தக்க ஆண்டு. 35 ஆண்டு காதல் மனைவி வின்னியை விவாகரத்து செய்கிறார். அதே ஆண்டு அவருக்கும் பிரதமர் டி.கிளார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கிறது.
1994 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 26 ஆம் திகதி நடந்த பொதுத்தேர்தலில் தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்கள் வாக்களிக்கிறார்கள். நெல்சன் மண்டேலாவின் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. அதே ஆண்டு மே மாதம் அன்னார் தென்னாபிரிக்காவின் முதல் கறுப்பின முதல்வராகப் பதவியேற்கிறார்.
சொன்ன சொல் தவறாமல் 5 ஆண்டு கால ஆட்சியின் பின் 1999 ஆம் ஆண்டு பதவி துறக்கிறார், நெல்சன் மண்டேலா. தபோ ம்பெகி என்பவர் பிரதமராகிறார்.
2000 ஆம் ஆண்டு புருண்டியில் நடைபெற்ற சிவில் யுத்தத்தில் அமைதித் தூதுவராகவும் 2003 ஆம் ஆண்டிலிருந்து எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் தமது எண்பத்தைந்தாவது வயதில் தாம் பொது வாழ்விலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார். எனினும், உலக மக்கள் அவரை விடவில்லை.
அதே ஆண்டு ஜூலை மாதம் ஜொகன்னர்ஸ்பர்க்கின் உயர்ந்த விருதான ‘நகரின் சுதந்திர விருது’ (Freedom of the City) வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டிலிருந்து மூத்த உலகத் தலைவர்களுடன் ஒன்றிணைந்து முதியோர் இயக்கம் (the elders) என்ற ஒரு இயக்கத்தை ஆரம்பித்தார்.
இத்தனை சாதனைகள் புரிந்து நெல்சன் மண்டேலா மறைந்த பின்னர் அன்னாரின் விடுதலையை நோக்கி நீண்ட பயணம் என்ற சுயசரிதையின் இறுதிப் பகுதிகளுடன் இக்கட்டுரையை நிறைவு செய்வது சாலப்பொருத்தமாக அமையும்.
நான் சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் ஒரு பெரும் பொறுப்பு என்னை எதிர்நோக்கி இருந்தது. அடக்கு முறைக்கு ஆட்பட்டவரையும் அடக்கி ஆண்டவரையும் நான் விடுவிக்க வேண்டும். உண்மை என்னவென்றால் நாம் இன்னமும் முழு விடுதலை பெறவில்லை. நாம் இப்போதுதான் சுதந்திரமாக வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றுள்ளோம். நாம் கரடுமுரடான பாதையில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம்.
நான் நீண்ட விடுதலைப் பாதையில் நடந்து வந்துள்ளேன். நான் தடுக்கி விழாமல் நடக்க முயற்சி செய்கின்றேன். பாதையில் சில நேரங்களில் வழி தவறி இருக்கின்றேன். நான் ஒரு உண்மையை அறிந்து கொண்டேன். ஒரு மலை உச்சியை அடைந்தபோது அதைப் போல பல மலைகளை ஏறிக் கடக்க வேண்டும் என்று அறிந்து கொண்டேன். நான் சிறிது நேரம் இங்கு ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறேன். என்னைச் சுற்றியுள்ள அழகான காட்சிகளைக் காண்கிறேன். நான் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கிறேன். ஆனால், ஒரு சில விநாடிகள்தான் நான் ஓய்வு எடுத்துக்கொள்ள முடியும். சுதந்திரம் வந்தவுடன் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் காத்திருக்கின்றன. நான் தாமதிக்க நேரமில்லை. வளமான வாழ்வை நோக்கிய எனது நீண்ட பயணம் இன்றும் முடியவில்லை!
எத்தனை உண்மையான நிதர்சனமான வார்த்தைகள்!
இணுவையூர் ஆ.இரகுபதிபாலஸ்ரீதரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக