வியாழன், 29 மே, 2014

இலங்கை விவகாரங்களுக்கு சிறப்பு பிரதிநிதி - பிரதமர் நரேந்திர மோடி முடிவு?

இலங்கை விவகாரங்களைக் கவனிக்க சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்ய இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை பிரச்சனையில் கடந்த 25 ஆண்டுகாலத்துக்கும் மேலாக தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக வெளியுறவுத் துறை அதிகாரிகள், ரா மற்றும் ஐ.பி. அதிகாரிகளே இருந்து வருகின்றனர்.

இதனால் எத்தகைய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட போதும் பிரதமர்கள் மாறிய போதும் இந்தியாவின் இலங்கை கொள்கை என்பது அந்நாடுடன் அனுசரித்துப் போகின்ற கொள்கையாக இருந்து வருகிறது. இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் எழும் எந்த குரலையும் மத்திய அரசு கேட்பதாகவே இருந்ததே இல்லை.

அதே நேரத்தில் தற்போதைய மோடி அரசாங்கம் பதவியேற்கும் போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டது. அதுவரை மோடி அரசுடன் நல்லுறவை பேணுவதாக கூறி வந்த தமிழக அரசும் கூட ராஜபக்சே வருகையை கடுமையாகவே கண்டித்து எதிர்ப்பும் தெரிவித்தது. பாரதிய ஜனதாவின் கூட்டணிக் கட்சியான மதிமுகவும் கூட டெல்லியில் போராட்டம் நடத்தியது மோடிக்கு பெரும் நெருக்கடியாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில் டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம், நரேந்திர மோடி சற்று காட்டமாகவே இந்தியத் தரப்பின் கருத்துகளை முன்வைத்ததாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையில் கால் பதித்த உடனேயே இந்தியா தொடர்புடைய சம்பூர் அனல்மின் நிலைய திட்டத்தை உடனே செயல்படுத்த மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டார்.

இதனிடையே இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்காக தமது நேரடி சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்க பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமது ஆட்சிக்காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு மட்டும் ஜி. பாரத்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளியுறவு அமைச்சர், செயலர், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் மேலானவராக செயல்படக் கூடும் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல