ஞாயிறு, 1 ஜூன், 2014

மார்பிலே பாயும் வளர்த்த கடாக்கள்தான் இனியுமா?

வகைதொகையில்லாமல் பிறகும் பெடியள் பிடிபடுகிற ஒரு காலம் பிறந்திருக்கு....

இது எங்க போய் முடியப்போகுதோ... எங்க கொண்டுபோய் விடப்போகுதோ.... அந்தோனியாரே...

பிடிக்கிற பெடியளை நாலாம் மாடிக்கோ... பூசாவுக்கோ... தடுப்புக்கோ இப்ப கொண்டு போகலாம்.

அங்க விசாரணை செய்யலாம். விசாரணையின்ரை முடிவைப்பொறுத்துத் தண்டனையோ... தடுப்போ... குடுக்கலாம்.
ஆனால், இதெல்லாம் முடிஞ்சு வந்த பிறகு..?

இப்பிடித்தானே முந்தியும் நடந்தது?

ஏனெண்டால் ஒரு பிரச்சினையை தீர்க்காமல் வைச்சுக்கொண்டிருந்தால் இல்லாட்டிக்கு அதைத்தீர்க்காமல் இழுத்துக் கொண்டிருந்தால் இந்த மாதிரித்தான் நடக்கும்.

இதில ஆரில பிழை? ஆரில சரி எண்டு சொல்ல முடியாத அளவுக்கு அவர் இவரைக் குற்றம் சொல்லுவார். இவர் அவரைக்குற்றம் சொல்லுவார்.

இப்பிடியே ஆளையாள் மாறி மாறிக் குற்றம் சாட்டச் சாட்டக் குற்றங்கள்தான் பெருகுமே தவிர உருப்படியான நல்ல காரியங்கள் ஒண்டும் நடக்காது.

குற்றங்கள் பெருகினால், நாடு எப்பிடியிருக்கும் எண்டு நான் சொல்லத்தேவையில்லை.

இப்ப அரசாங்கம் சொல்லுது புலிகள் மீண்டும் தலையெடுக்க முயற்சிக்கிறார்கள் எண்டு. இதால நாட்டுக்கும் பாதுகாப்புக்கும் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கு எண்டும் சொல்லப்படுது.

இதுக்கு வெளிநாடுகளில இருக்கிற கொஞ்சப்பேர் உஷார் ரொனிக்கைக் குடுக்கிறதாகவும் கேள்வி.

புலம்பெயர்ந்துபோய் வெளிநாடுகளில இருக்கிற ஆட்களுக்கு எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்.

அவைக்கு கரும்புலியாகிப்போய் வெடிச்சாலும் விளையாட்டுத்தான். அகதி முகாமுக்குள்ள சனங்கள் கிடந்து வெந்து வெதும்பினாலும் விளையாட்டுத்தான்.

அடிக்கிற பியருக்கும் விஸ்கிக்கும் வேற எப்பிடியிருக்கும்?

இனப்பற்று, மொழிப்பற்று, தேசப்பற்று எண்டதெல்லாம் நாட்டை விட்டுத் தூரப்போகப்போகத்தான் சும்மா பீறிட்டுக்கொண்டு வருது.... எல்லாருக்கும்.

இந்தப் பற்றுகள் பீறிடப் பீறிட சும்மா இருக்க முடியுமா? கையில காசிருக்கு. விளையாடிப் பாக்கிறதுக்கு நாட்டில கொஞ்ச உஷார் மடையர்களும் இருந்தால் பிறகென்ன...?

சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுக்கிற மாதிரி ஏதாவது ஏடாகூடமாகச் செய்ய வேண்டியதுதான்.

அப்பிடித்தான் ஏதோ எல்லாம் செய்து, கொஞ்சக் காலமாக சிவனே.... எண்டிருந்த நாட்டையும் சனங்களையும் குழப்பி வைச்சிருக்கினம்...
இதால, இப்ப பேந்தும் றோட்டிலயும் வீட்டிலயும் விசாரிக்கிற வேலைகள் தொடங்கியிருக்கு...

குட்டையைக் குழப்பினால் ஆருக்கு லாபம் எண்டதைச் சொல்லித்தான் தெரிய வேணும் எண்டில்லை...

நாடு மீண்டும் யுத்தத்தில சிக்கிறதோ மீண்டும் கொந்தளிக்கிற ஒரு காலத்துக்குள்ள போய் விழுகிறதோ நல்லதில்லை எண்டதும் எல்லாருக்கும் தெரிஞ்சதே...

இதுவரையும் பட்டதெல்லாம் போதுமடா ராமசாமி... எண்டு சும்மா சோலியொண்டும் வேண்டாம் எண்டிருக்கிற சனங்களைப் போட்டுலைக்கிற ஆட்களை ஆரெண்டும் பாக்காமல் சனங்களாகிய நாங்கள்தான் வழிப்பண்ண வேணும்.

இல்லையெண்டால்... ஏட்டிக்குப்போட்டி... பழிக்குப் பழி எண்ட மாதிரி அவனவன் தங்கட கைவரிசையைக் காட்டத்தொடங்கினால்...?!

இப்படியானதையெல்லாம் முந்தி கேட்காமல், பார்க்காமல் விட்டதால நாங்கள் பட்ட பாட்டை மறக்கக் கூடாது.

எண்டபடியால்தான் சொல்லிறன்... இந்த மாதிரியான நிலைமைகளை நாங்கள் வளராமல், வளர்க்காமல் பார்த்துக் கொள்ள வேணும் எண்டு.

நமக்கேன் சோலி எண்டு, இப்ப கையைக் கட்டி, வாயையும் பொத்திக் கொண்டிருந்தம் எண்டால் பிறகு நாங்கள் வாயையே திறக்க முடியாமல் இருக்க வேணும்.

நாங்கள் கட்டிவைத்திருந்த கையை நாங்கள் மட்டுமில்ல வேற ஆருமே அவிழ்க்கவும் முடியாமல் போயிடும்.

ஆனால், நாலு செய்தி சூடாக வரோணும் எண்டால்... தங்கட லாபத்தைக் கூட்ட வேணும் எண்டால்... கண்டபாட்டுக்குப் பொறுப்பில்லாமல் எழுதி, எரியிற வீட்டுக்கு எண்ணெய் ஊத்திற காரியத்தைத்தான் பாப்பாங்கள்.

இந்த மாதிரியான நெருப்பை வைச்சே தங்கட சுருட்டைப் பத்த வைக்கிற அரசியல்வாதிகளும் இதையெல்லாம் கவனமாகத் தங்கட கையில எடுப்பினம்.

நாங்கள்தான் இதைப்பற்றிக் கவனமாக இருக்க வேணும்.
ஏனெண்டால்... இது எங்கட தலையைப்பற்றின – தலையெழுத்தைப்பற்றின விசயம்...

இதுக்கெல்லாம் ஒரு தீர்வு....இந்த எரியிற இனப்பிரச்சினையை எப்பிடியாவது ஒரு முடிவுக்குக் கொண்டு வாறதுதான்.

இதை வளர்க்கிறதில்லை. அப்பிடி இதை வளர்த்தால்... வளர்த்த ஆடு மார்பில்தான் பாயும்.

-வடபுலத்தான்

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல