ஞாயிறு, 1 ஜூன், 2014

புலுடா ராமசாமிகளும் புண்ணாக்குத் தமிழர்களும்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்குப் போகமாட்டோம் எண்டு சில நாட்களுக்கு முதல் செல்வம் அடைக்கலநாதன் சொன்னதைப் பற்றி இந்தப் பக்கத்தில எழுதினதைப் பார்த்திட்டுச் சில தேசியவாதிகள், 'செல்வத்தார் சொன்னதில என்ன பிழை? தெரிவுக்குழுவைப் புறக்கணிக்கிற கூட்டமைப்பின்ரை முடிவை நாங்கள் ஆதரிக்கிறம். ஏமாற்றுகிற நோக்கத்தோட இருக்கிற அரசாங்கத்தை அம்பலப்படுத்த வேணுமே தவிர, அதைப் பாதுகாக்கேலாது' எண்டு என்னோட சண்டைக்கே வந்திட்டினம்.



போதாக்குறைக்கு அதில ஒரு ஒண்ணாம் நம்பர் தேசியவாதி சொன்னார், 'வெண்ணை திரண்டு வாற நேரத்தில இந்த மாதிரியெல்லாம் எழுதி தாழியை உடைக்காதையுங்கோ' எண்டு கொஞ்சம் காட்டமாகவும் சொன்னார்.

எனக்கெண்டால் திகைப்பு ஒரு பக்கம். சிரிப்பு ஒரு பக்கம். கவலை ஒரு பக்கம் எண்டு ஒரு மசாலா உணர்ச்சி வந்து என்ன செய்யிறது எண்டே தெரியேல்ல.

எனக்கு மட்டுமில்ல, விசயம் விளங்கின ஆருக்கும் இந்தக் கதைகளைக் கேட்க இந்த மாதிரி மசாலா உணர்ச்சி வந்துதான் தீரும்.

'சரி, தெரிவுக்குழுவுக்குப் போகவேண்டாம், தெரிவுக்குழுவுக்கு வெளியில நிண்டு கொண்டு அப்பிடி ஒரு தீர்வு யோசினையை வைக்கலாமே! அப்பிடி ஒரு யோசினையை வைச்சுத் தெரிவுக்குழுவை மடக்கலாமல்லோ! அப்பிடி வைக்கக்கூடிய 'தில்' கூட்;டமைப்பிட்ட இருக்கா?' எண்டு கேட்டன்.

அப்பிடியே இன்னொண்டையும் கேட்டேன், 'வெண்ணை திரண்டு வாற நேரம் எண்டு சொல்லிறியள். அப்பிடியெண்டால் என்ன தீர்வு வரப்போகுதெண்டா சொல்லிறியள்? இல்லாட்டி கூரையைப் பிய்ச்சுக் கொண்டு ஆரோ எல்லாத்தையும் கொண்டு வந்து கொட்டப்போறாங்களா? இப்பிடித்தானே எப்ப பார்த்தாலும் இந்தியா வருது, அமெரிக்கா வருது, ஐ.நா வருது, சர்வதேச சமூகம், நவநீதம்பிள்ளை அம்மா வாறா, அப்பு வாறார் எண்டு இந்த வெண்ணை திரண்டு வாற கதையைச்சொல்லிக் கொண்டேயிருக்கிறியள்' எண்டு.

ஆட்கள் வாய் திறக்கவேயில்லை.

இந்தப் புலுடா ராமசாமிகள் எங்களை என்னெண்டுதான் நினைக்கிறாங்கள்?

கொஞ்சம் மரியாதை குடுத்துப் பேசாமல் இருந்தால், தலையில எண்ணையை விட்டு திரியைப்போட்டுக் கொழுத்தியும் விடுவாங்கள்.
இப்படித் தாங்களும் ஏமாந்து சனங்களையும் ஏமாளிகளாக்கியே கூட்டமைப்பின்ரை ஆதரவாளர்கள் பேயத்தனமான கனவுகளை எல்லாம் கண்டு கொண்டிருக்கிறார்கள்.

சனங்களின்ரை காதில பூ வைக்கிறதுக்கெண்டு இவங்களுக்கு எப்பிடியே சரக்குக் கிடைச்சிடும்.

கொஞ்ச நாளைக்கு ஜெனிவா... பிறகு கொஞ்ச நாளைக்கு... மே 18..... பிறகு கார்த்திகை 26, 27 மாவீரர் நாள்...

இதைப்பற்றி சோக்கான ஒரு கட்டுரையை 'சீசன் போராளிகள்' எண்டு போஸ் நிஹாலே எண்டொருத்தல் எழுதியிருக்கிறார். படிச்சுப் பாருங்கோ. தேசிய நடிகர்களுக்கு நல்லதொரு விளாசல்.

இந்த மாதிரி தமிழர்களைத் தமிழர்களே ஏமாத்திறதைக் கண்டு பொறுக்கேலாமத்தானே இயக்கப்பெடியள் அந்த நாளையில தமிழ்த்தலைவர்களையும் போட்டுத்தள்ளினவங்கள்!

ரட்டைக்குழல் துவக்கால போட்டுத்தள்ளிற மாதிரி ஒரு குழலால தமிழ்த்தலைகளையும் இன்னொண்டால சிங்களத் தலைகளையும் உருட்டினாங்கள்.

அப்பாவிச் சனங்களை ஏமாத்தினால் அதில தமிழ் - சிங்களம் - முஸ்லிம் - வெள்ளை – கறுப்பு எண்டெல்லாம் வித்தியாசம் கிடையாது.

ஆரெல்லாம் சனத்தை ஏமாத்திச் சுத்து மாத்துச் செய்யிறானோ அவனெல்லாம் துரோகியே எண்டுதான் வரலாறு சொல்லுது.

தமிழ்ச் சனத்தை ஏமாத்து ஏமாத்தெண்டு ஏமாத்துகிற இந்தத் தமிழ்த்தலைமைகளில இருந்து கடவுள்தான் காப்பாற்ற வேணும் எண்டு அப்பவே தமிழரசுக் கட்சியின்ரை தலைவர் செல்வநாயகமே சொல்லீட்டார்.

அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

தமிழர்களைத் தமிழர்களிடமிருந்துதான் முதல்ல காப்பாற்ற வேணும். ஏனெண்டால் தமிழர்களைத் தமிழர்கள்தான் கடுமையாக ஏமாத்துகிறார்கள்.

சொந்தச் சனத்துக்கே பொய்யும் புரட்டும் சொல்லி ஏமாத்துகிற தலைவர்கள் எப்பிடியான ஆட்கள் எண்டால், பெத்த பிள்ளைக்கே பொய்சொல்லிற அப்பன்மாரை - அம்மாமாரைப் போன்றவர்கள்.

அப்படியான தந்தையர்களும் தாயர்களும் உருப்பட்டதில்லை. அவர்களின் வளர்ப்பில் வளரும் பிள்ளைகளும் உருப்பட்டதாக இருக்காது.

ஆனால், தமிழ் மக்கள் எப்பவும் பொய்யர்களையும் ஏமாத்துக்காரரையும் சுயநலமிகளையுமே தங்களின் தலைவர்களாகவும் தங்கள் தலைவிதியை எழுதுகிறவர்களாகவும் தெரிவு செய்து கொண்டிருக்கினம்.

இப்படியே செய்த கொண்டிருந்தால் 'இந்தச் சமூகம் உருப்பட்ட மாதிரித்தான்.

செல்வம் அண்ணை மட்டுமல்ல, அவரோட கூட இருக்கிற அத்தினை பேருக்கும் சொல்லிறன், இந்தப் பேய்ச்சனங்கள் இருக்குமட்டும் உங்கட காட்டில மழைதான் அண்ணை...

 -வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல