சனி, 23 ஜனவரி, 2010

பஸ்தியாம் பிள்ளையினதும், 13 இராணுவத்தினரதும் கொலைச் சம்பவங்கள்!


1977 ம் வருடம் ஜூலை மாதம் 21ம் திகதி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 140 தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியைப் பெற்று வரலாற்றில் பெரும்பாண்மை அங்கத்தவர்களைக் கொண்டு ஆட்சிபீடமேறியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு 7 ஆசனங்கள் மட்டுமே கிடைக்க தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 18 ஆசனங்கள் கிடைத்தன. இதன் மூலம் இலங்கை வரலாற்றில் ஒரு தமிழர் எதிர்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இதனால் தமிழ்பேசும் மக்களிடையே பெரிதும் மகிழ்ச்சி காணப்பட்டது.

எழுபதுகளின் ஆரம்பந்தொட்டே எழுச்சிகண்டு வந்த ஆயுதமேந்திய செயற்பாடுகள் முடிவுக்கு வந்து ஜனநாயக நீரோட்டத்தில் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இளைய தலைமுறையினர் முன்வரக் கூடும் என மக்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு காணப்பட்டது.

எனினும் இத் தேர்தலின் பின்பும் ஆயுத மேந்தியக் குழுக்களின் செயற்பாடுகள் நிறுத்தப்படவில்லை.

1978 ம் வருடம் ஜனவரி மாதம் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து எம்.கணகரத்தினம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்தார். பின்னர் இவர் கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் காரணமானவர்கள் என பாதுகாப்புத் தரப்பு தெரிவித்திருந்தது. இக் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டவர் பொலிஸ் அத்தியட்சகர் பஸ்தியாம்பிள்ளை ஆவார்.

இதன் பிரகாரம் இரகசியமாகச் கிடைத்த தகவல்களின் படி 1978 ம் வருடம் ஏப்ரல் மாதம் 7 ம் திகதி பொலிஸ் அத்தியட்சகர் பஸ்தியாம்பிள்ளை, உப பொலிஸ் காண்ஸ்டபிள் பாலசிங்கம், சாரதி சிறிவர்தன ஆகியோர் முருங்கன் காட்டுப் பகுதியில் மடுமாதா கோவிலுக்கு அண்மித்து அமைந்திருந்த புலிகளின் முகாமுக்குச் சென்றனர்.

மேற்படி பொலிஸ் குழுவினரது சுற்றி வளைப்பில் கொட்டில் ஒன்றில் இருந்த செல்லக்கிளி, ஞானம், ராகவன் எனும் சிவகுமார், ரவி கிறிஸ்டோபர் எனும் கறுப்பி ஆகியோர் அகப்பட்டுக் கொண்டனர்.


இன்னுமொரு கொட்டிலில் ( காவல் ) நித்திரையில் இருந்த உமா மகேஸ்வரன், நாகராஜா, ஐயர் ஆகிய மூவரையும் இந்த பொலிஸ் கோஷ்டியினர் காணவில்லை. இதேநேரம் காவல் கொட்டிலில் இருந்தவர்கள் புதிதாக வந்த நபர்களைக் கண்டு விட்டனர். இதில் நாகராஜா ஏற்கனவே பஸ்தியாம்பிள்ளையைக் கண்டறிந்தவர் என்பதால் வந்திருப்பது பொலிசார் என உறுதி செய்து மறைந்து நின்றவாறே நடப்பவைகளை அவதானித்தனர்.

பொலிஸ் குழுவிடம் அகப்பட்டவர்களை நோக்கி தத்தமது தனித்துவங்களை நிரூபிக்குமாறு பஸ்தியாம்பிள்ளைக் கேட்டுக் கொண்டார்.

“நாங்கள் பண்ணையில் கூலி வேலை செய்பவர்கள்” என ஒருவர் கூறினார். பின்னர் ஏனையோரும் அவ்வாறே கூறினர்.


“இந்த ஐயாமாருக்கு குடிக்கத் தண்ணி கொடுங்கோவன்” அவர்களில் ஒருவர் கூற, இங்கிருப்பவர்கள் உண்மையிலேயே பண்ணை தொழிலாளர்கள்தான் என எண்ணிய பஸ்தியாம்பிள்ளை தன்னிடம் இருந்த துப்பாக்கியை ஒரு பக்கம் வைத்துவிட்டு தண்ணீர் அருந்த முற்பட்டார்.

இச் சந்தர்ப்பத்தில் உடனடியாக செயற்பட்ட செல்லக்கிளி, பஸ்தியாம்பிள்ளையின் துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுடத் தொடங்கினார். பஸ்தியாம்பிள்ளையும் சிப்பாயும் நடப்பதென்ன என யூகிக்கும் முன்பே கொல்லப்பட்டு தரையில் வீழ்ந்தனர். உப பொலிஸ் அத்தியட்சகர் அருகில் இருந்த கிணற்றுக்குள் வீழ்ந்து விட்டார். இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சாரதி செய்வதறியாது திகைத்துப் போயிருந்தார். அவரையும் சுட்டுக் கொன்றனர்.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இக்குழுவினருக்கு நடந்தது என்ன என்பது பற்றி சில காலமாக எவருக்குமே தகவல்கள் கிட்டவில்லை. விறகு வெட்டச் சென்ற ஒருவர் மூலமே இத் தகவல்கள் அம்பலமாகின.


இவ்வாறு வன்முறைச் செயற்பாடுகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தன.


இதே வருடத்தில் கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தில் எவ்ரோ ரக விமானமொன்று வெடிக்க வைக்கப்பட்டது. இதுவும் பயங்கரவாதிகளின் செயல் என அப்போது கூறப்பட்டது. இதேநேரம் யாழ்ப்பாணத்தில் வங்கிக் கொள்ளைகளும் இடம்பெற்றிருந்தன.


இவ்வாறு வன்முறைச் செயற்பாடுகள் படிப்படியாக வளர்ச்சி பெற்று வருவதைப் புரிந்து கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன, 1979 ம் வருடம் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணத்திற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்தார். இந்த இராணுவப் பாதுகாப்பு நடவடிக்கைக்குத் தலைமையேற்றிருந்தவர் பிரிகேடியர் திஸ்ஸ வீரதுங்க ஆவார்.

திஸ்ஸ வீரதுங்க யாழ்.கட்டளைத் தளபதியாக நியமிக்கப்படும் போது வன்முறையாளர்கள் எனக் கூறப்பட்டு சுமார் 15 பேர் வரையில் பாதுகாப்புத் தரப்பினரால் கொல்லப்பட்டிருந்தனர்.

எனினும் திஸ்ஸ வீரதுங்கவின் கீழ் 1980 ம் வருடம் எந்தவொரு மனிதக் கொலையும் இடம்பெறவில்லை என்றே கூறப்பட்டது.

1981 ம் வருடம் மாவட்ட சபைகளை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுமென போராளிகள் தெரிவித்திருந்தனர்.

இதனால் யாழ்ப்பாணத்தில் மீண்டும் பதற்றநிலை உருவாகியிருந்தது. இவ்வாறானதொரு நிலைமையிலும் மேற்படித் தேர்தலில் போட்டியிடுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி கூறியிருந்தது.

தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பதாக அதாவது மே மாதம் 24 ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான தங்கராஜா ஆயுத மேந்தியவர்களால் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதேநேரம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர்க்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றின் போது கொல்லப்பட்டனர். இக் கொலையானது உமா மகேஸ்வரன் உட்பட்ட புதிய பாதை குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதென பின்னர் தகவல்கள் வெளியாகின.

நிலைமை வரவர மோசமடைவதை உணர்ந்த அரசாங்கம் யாழ்ப்பாணத்திற்கு மேலதிக பொலிசாரையும், இராணுவத்தினரையும் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தது. இதற்கென விஷேட பயிற்சி பெற்ற 300 பொலிசார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

அவ்வாறு இருந்தும் நிலைமை மேலும் மேலும் உக்கிரமடைந்ததே தவிர தனிவதாக இருக்கவில்லை.

இதனிடையே யாழ்ப்பாணத்தில் சுமார் 150 க்கும் அதிகமான கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டன. வீடுகள் பல தீக்கிரையாகின. இவ்வாறான நிலை உச்சமடைந்து யாழ்.நூலகமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது வரலாற்றுக் கறைபடிந்த சம்பவமாகும். இதனால் பெறுமதிமிக்க, அரிதான 90,000 க்கும் மேற்பட்ட நூல்கள் அழிந்தன.

இந்த அக்கிரமங்களுக்கு முன்னாள் விஞ்ஞான, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சரான சிறில் எமத்தியூவும், காணி அபிவிருத்தி, மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமினி திசாநாயக்காவும் பொறுப்பு கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பின்பொருமுறை கூறியிருந்தார். இந்த மூவரும் இப்போது உயிருடன் இல்லை. காமினி திசாநாயக்கவும், பிரேமதாசவும் புலிகளால் கொல்லப்பட்டனர். சிறில் பெத்தியூ இயற்கை மரணமடைந்தார்.

இவ்வாறான அனர்தங்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி மாவட்ட அபிவிருத்திச் சபைக்கான தேர்தல் 1981 ம் வருடம் ஜூன் மாதம் 4 ம் திகதி நடைபெற்றது என்பது வேறு கதை.

1982 ம் வருடம் ஒக்ரோபர் மாம் 27 ம் திகதி சார்ள்ஸ் அன்டனி எனும் சீலன் உட்பட்ட குழுவினரால் யாழ்.பொலிஸ் நிலையம் தாக்கப்பட்டது. இக்கால கட்டத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ்நாட்டில் இருந்தார். இதனால் சீலனின் தலைமையிலேயே புலிகளின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

முதலில் பேரூந்து ஒன்றைக் கடத்திச் சென்ற சீலனின் குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவாறே யாழ்.பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தனர். தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் எதிர்த் தாக்குதலில் சீலனின் முழங்காலில் பாரிய காயம் ஏற்பட்டது. பின்னர் ஏனைய புலிகள் இயக்க உறுப்பினர்கள் சீலனையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் சீலனும் செல்லக்கிளியும் இருந்தனர். எனவே இவர்கள் இருவரையும் கைது செய்ய பாதுகாப்புத் தரப்பினர் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

ஒருநாள் சீலன் இருக்கும் இடம் குறித்து பாதுகாப்புத் தரப்பினருக்குத் தகவலொன்று கிடைத்தது.

இதன்படி 1983 ம் வருடம் ஜூலை மாதம் 15 ம் திகதி பாதுகாப்புத் தரப்பினர் சீலனை சுற்றிவளைத்தனர். பாதுகாப்புத் தரப்பினர் தன்னைத் தேடிவரும் போது சீலன் அருணா என்பவருடன் இருந்தார். இராணுவத்தினரைக் கண்டதும் இவ்விருவரும் தப்பியோட முனைந்தனர். யாழ்.பொலிஸ் நிலையத் தாக்குதலின் போது காலில் காயமடைந்திருந்ததால் சீலனால் இலகுவாக ஓட முடியவில்லை. ஆக தன்னிலை உணர்ந்த சீலன் இராணுவத்தினரிடம் சிக்காமல் தற்கொலை செய்து கொண்டார்.

சீலனின் மரணம் பிரபாகரனுக்கு பெரும் பாதிப்பாக அமைந்து விட்டது. எனவே சீலனின் மரணத்திற்கு எதிராக எதிர்த்தாக்குதல் ஒன்றை நடாத்துவதென பிரபாகரன் தீர்மானித்தார்.

1983 ம் வருடம் ஜூலை 23 ம் திகதி மேற்படித் தாக்குதலுக்கென புலிகள் திருநெல்வேலி, பலாலி வீதியில் அமைந்துள்ள தபால்பெட்டியடி எனும் இடத்தைத் தெரிவு செய்தனர். இது யாழ். பல்கலைக்கழகத்திற்கு அண்மித்த இடமாகும்.

இத் தாக்குதலில் பிரபாகரன், கிட்டு. செல்லக்கிளி, அப்பையா, பொன்னம்பலம், விக்ரர், ரஞ்சன், கணேஸ், சந்தோஷம் பசீர்காக்கா, புலேந்திரன் ஆகியோர் பங்குபற்றினர்.

முதலில் நடு வீதியில் குழி தோண்டி அதில் நிலக்கண்ணி வைத்து இராணுவ வண்டி வரும் வரை காத்திருந்தனர்.

இச் சமயத்தில் யாழ். நகர வீதிகளைச் சோதனையிட்டுக் கொண்டிருந்த ‘கழரச கழரச டிசயஎழ ’ எனும் இராணுப் படையணியினர் யாழ்.பல்கலைக் கழகம் அமைந்திருந்த பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

லுத்தினன் வாஸ் குணவர்தனவுடன் 15 பேரடங்கிய இவர்கள் ட்ரக் மற்றும் ஜீப் வண்டிகளில் வந்து கொண்டிருந்தனர்.

முதாலவதாக வந்த ஜீப் வண்டி நிலக்கண்ணி புதைக்கப்பட்டிருந்த இடத்தைத் தாண்டிச் செல்லும் போது பலத்த சத்தத்துடன் குண்டு வெடிக்கப்பட்டது.

அத்துடன் மறைந்திருந்த புலிகள் ஜீப் மற்றும் ட்ரக் வண்டிகளை நோக்கி கைக்குண்டுகளை எறியத் தொடங்கினர். ஒரு சிலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இராணுவத்தினரும் எதிர்த்தாக்குதல்களை மேற்கொண்டனர். இதில் செல்லக்கிளி கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும் செல்லக்கிளிக்கும் பிரபாகரனுக்கும் இடையில் தோன்றியிருந்த முரண்பாடுகள் காரணமாக பிரபாகரனால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதலின் இறுதியில் லுத்தினன் வாஸ் குணவர்தன உட்பட 13 இராணுவ வீரர்களான சிப்பாய் எஸ்.ஐ. திலகரட்ன, கோப்ரல் ஆர். பெரேரா, லான்ஸ்கோப்ரல் டி.ஜி. பெரேரா, சிப்பாய் ஏ.டி. மானப்பிட்டிய, சிப்பாய் எம்.டி. சுனில், சிப்பாய் ஏ.ஜே. விஜயசிறி, சிப்பாய் கே.ஜி. கருணாரத்ன, சிப்பாய் பி.ஜி. ரன்திலக்க, சிப்பாய் எஸ்.எஸ். அமரசிறி, சிப்பாய். ஜி. ரொபேட், சிப்பாய் ஜே.ஆர். பெர்னாந்து ஆகியோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பின்பும் இராணுவத்தினர் மீது தொடர்ந்து துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இத்தாக்குதலின்போது காயமடைந்த லான்ஸ் கோப்ரல் ஐ.எம். சுமதிபாலவும் கோப்ரல் ஆர்.ஏ.யூ. பெரேராவும் மிகுந்த சிரமங்களுக்குப் பின்னர் உயிர்த்தப்பினர்.

இவ்வாறு 1983ம் வருடம் ஜூலை மாதம் 23ம் திகதி நள்ளிரவு புலிகளால் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளால் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் ஒரே இடத்தில் வைதது கொல்லப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.

தாக்குதலால் பாரிய சேததங்களுக்கு உள்ளாகியிருந்த இராணுவத்தினரின் சடலங்கள் ஜூலை 24ம் திகதி கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டன.

அன்று மாலையே அச்சடலங்களை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

மாலையாகும்போது கொழும்பு மக்களிடையே பதற்றநிலை தோன்ற ஆரம்பித்திருந்தது. சிங்களக் காடையர்கள் தமிழர்களைத் தாக்கவும் ஆரம்பித்தனர். அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குள் எல்லாமே நடந்து முடிந்து விட்டன.

இக் கலவரம் காரணமாக 471 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. 3769 பேர் காயமடைந்ததாகவும் கூறியது. 3835 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் சுமார் ஒரு இலட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டனர்.

1983 ம் வருடம் ஜூலை மாதம் 24 ம் திகதி இரவு கொழும்பு, பொரளைச் சந்தியிலிருந்த தமிழர் ஒருவரது உணவு விடுதியொன்றைத் தாக்கி ஆரம்பிக்கப்பட்ட இந்த ஜூலை கலவரத்தைக் கொண்டு தமிழ் ஆயுதமேந்தியப் போராளிகள் பல்வேறு சாதகங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இலங்கையில் தோன்றியுள்ள நிலைமையை எடுத்துக் கூறி இந்தியா இதில் தலையிட வேண்டுமென பலர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் கேட்டுக் கொண்டனர்.

ஜனாதிபதி ஜேஆருடன் பேசி நிலைமையை இயல்புக்குக் கொண்டு வரும்படியும் பலர் அன்னை இந்திராவிடம் கோரினர்.

இதன் பின்னர் தமிழ் போராளிகள் தமிழ் நாட்டில் அதிகளவில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற ஆரம்பித்தனர். தமிழ் நாட்டில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதை அறிந்து பல இளைஞாகள் படகுகளின் மூலம் அங்கு சென்றனர்.


கறுப்பு ஜூலையும் அதனுடனான சமகால பின்னணிகளும் புலிகள் இயக்கத்தையும் பலப்படுத்தின என்றே கூறவேண்டும்.

இருந்த போதிலும் சைக்கிளில் சென்று தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கைகளை எடுப்பவராக மறைவு வாழ்க்கையை பிரபாகரன் மேற்கொண்டிருந்தார்.

1972 ம் வருடம் நான்கு பேருடன் ஆரம்பிக்கப்பட்ட பிரபாகரனின் இயக்கம் 1983 ம் வருடமாகும் போது சுமார் 40 பேரினைக் கொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் ஓர்; உறுப்பினருக்கு ஒரு துப்பாக்கி வீதம் கூட இருக்கவில்லை. இந்தளவு வறிய நிலையில் இருந்த பிரபாகரனை உயர் நிலைக்குக் கொண்டு வந்ததில் கறுப்பு ஜூலைக்கும் பங்குண்டு.

இப்னு அசூமத்

நன்றி: வெளிச்சம் இணையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல