சனி, 23 ஜனவரி, 2010

யாழ் தேவி மீதான தாக்குதல்!


பிரகாசமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்த வானம், மெல்ல… மெல்ல… செந்நிறமாக மாறிக் கொண்டிருந்தது.

சூரிய வெப்பத்தால் சூடேறி தகதகத்துக் கொண்டிருந்த பூமி, சற்று ஆறுதல் அடைந்து காணப்பட்டது.


இதனிடையே புகையிரமொன்று புறப்படும் ஓசையும் கேட்டது. புகையிரத்தின் சாரதி பச்சை நிறக் கொடியை அசைத்து பயணத்திற்குத் தான் தயார் என்பதை அறிவித்தார்.

சில நொடிகளில் புகையிரதத்தின் இயந்திரம் கறுப்பு நிறப் புகையை திடீரென வானத்தை நோக்கி எழுப்பியது.


ஆமாம் - 1985ம் வருடம் ஜனவரி மாதம் 19ம் திகதி மாலை நேரம், யாழ்தேவி புகையிரதம் ஆனையிறவு புகையிரத நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தது.

இப்புகையிரதத்தில் பல பயணிகளும், பாதுகாப்புப் படையினரும் நிரம்பியிருந்தனர்.

மறுநாள் கொழும்பைச் சென்றடைகின்ற இந்த நீண்ட பயணமானது புகையிரதத்தில் பயணம் செய்த பலருக்கு புதியதொரு அனுபவமல்ல. அதாவது பலரும் வட பகுதியிலிருந்து தென்பகுதிக்குச் செல்வதற்கும் தென்பகுதியிலிருந்து வடபகுதிக்கு வருவதற்கும் அதிகளவில் புகையிரதத்தையே பயன்படுத்தி வந்தனர்.


அக்காலகட்டத்தில் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நாட்டின் தென்பகுதியுடன் இணைப்பதற்கு இவ்வாறான புகையிரத சேவைகளால் இயலுமாக இருந்தது.

இதில் வடக்கிற்கும் தெற்கிற்குமான புகையிரத பாதையின் ஒருபகுதி 1902ம் வருடம் முதன் முதலில் ஆளுநர் ஜே.டபிள்யூ. ரிஜ்வே அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. புகையிரதப் பாதை ஆரம்பிக்கப்பட்டமையால் மக்களுக்குக் கிட்டுகின்ற வசதிகள் குறித்து இவர் அக்காலகட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

“காங்கேசன்துறையில் இருந்து சாவகச்சேரி வரையிலான 21 மைல்களைக் கொண்ட புகையிரதப் பாதை 1902ம் வருடம் என்னால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் பயனாக அமைக்கப்பட்ட வடக்கிற்கான புகையிரதப் பாதையானது அதன் நீளத்தையும் அதற்காக செலவிடப்பட்ட தொகையையும் வைத்துப் பார்க்கும்போது மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. இதில் சாவகச்சேரியில் இருந்து பளை வரையிலான பகுதியின் நீளம் 15 மைல்களாகும். இது 1902ம் வருடம் செப்டெம்பர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் அதிகாலையில் புகையிரதத்தில் ஏறுகின்ற ஒருவர் அன்றைய தினம் மாலையே கொழும்பை வந்தடைய முடியும்.”

யாழ்தேவி புகையிரத சேவையை ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுமார் நூறு வருடங்களுக்கும் முன்பதாக அக்காலகட்டத்தில் இருந்த ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

என்ற போதிலும் இந்நாட்டில் யாழ்தேவி என்ற பெயரில் இனங்காட்டப்பட்ட முழுமையான பயணிகள் போக்குவரத்து சேவை 1956ம் வருடமே ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்தேவி புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்நாட்டின் பிரதமர்களில் ஒருராகிய டபிள்யூ தகநாயக்கவும் தந்தை எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் இப்புகையிரதத்தின் மூலம் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணஞ் செய்ய விருப்பங் கொண்டிருந்தனர்.

இவ்வாறு நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் யாழ்தேவி புகையிரதம் 1985ம் வருடம் ஜனவரி மாதம் 19ம் திகதி மேற்கொண்டிருந்த இப்பயணமானது மோசமானதொரு பயணமாக இருந்தது.



அன்றைய தினம் இரவு 7.30 மணியளவில் புகையிரதம் முறிகண்டி புகையிரத நிலையத்திற்கும் மாங்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் பயணத்தை மேற்கொண்டிருந்த போது ஆயுதமேந்தியவர்களின் தாக்குலுக்கு உட்பட்டது.

யாழ்தேவி புகையிரதத்தின் பயணத்தைத் துண்டித்துவிட வேண்டும் என ஆயுததாரிகள் நீண்ட காலமாக முயற்சித்து வந்தனர்.

இதனால் கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணிக்கும் யாழ் தேவியின் பயணம் பளை வரையில் வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்தில் பளை வரையிலும் கூட புகையிரதம் பயணித்திருக்கவில்லை.

ஆயுததாரிகள் புகையிரதப் பாதையை அதிகளவில் சேதப்படுத்தி இருந்தமையே இதற்குக் காரணமாகும். இதனால் ஆனையிறவுடன் புகையிரதத்தின் பயணத்தை முடித்துக் கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

ஆக, ஆனையிறவில் இருந்து கொழும்பிற்கான பயணத்தை ஆரம்பித்ததன் பின்னரே யாழ்தேவி முறிகண்டிக்கும் மாங்குளத்திற்கும் இடையில் தாக்குதலுக்கு உள்ளானது.

முதலில் புகையிரதப் பாதையில் அமைந்திருந்த பாலமொன்றிற்குள் குண்டொன்றைப் பொருத்தியிருந்த ஆயுததாரிகள், புகையிரதம் அந்த இடத்தை அடையும் தருவாயில் அக்குண்டை வெடிக்க வைத்தனர். அத்துடன் புகையிரதப் பாதையின் இருபுறங்களில் அமைந்திருந்த காட்டுப் பகுதிகளில் மறைந்திருந்தவாறே துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டனர்.

இத்தாக்குதல் காரணமாக புகையிரதப் பாதை 1750 அடி அளவில் தேசமாக்கப்பட்டது. 13 பெட்டிகளைக் கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதத்தின் 9 பெட்டிகள் இத்தாக்குதலால் சேதமாக்கப்பட்டிருந்தன.

இதில் 3 பெட்டிகள் முற்று முழுதாக சேதமாக்கப்பட்டிருந்தன.

அக்காலகட்டத்தில் சுமார் நான்கு கோடி ரூபா இதனால் நட்டமேற்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இத்தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர். இதில் 28 பேர் பாதுகாப்புத் தரப்பினராவர். 11 பேர் அப்பாவித் தமிழ் மக்களாவர்.

இறுதியாக, காட்டுப் பகுதிகளில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்த ஆயுததாரிகள் ‘ரெலோ… ரெலோ…’ எனக் கத்தியவாறே காட்டிற்குள் மறைந்தனர்.




1984ம் வருடமாகும் போது ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருந்த வகையிலும் ஆளணிப் பலத்தைப் பெற்றிருந்த வகையிலும் ரெலோ அமைப்பினர் தமது தாக்குதல்களை அதிகரித்திருந்தனர்.

இதன் பிரகாரம் 1984ம் வருட இறுதியில் யாழ் பொலிஸ் நிலையம் அமைந்திருந்த இருமாடிக் கட்டிடத்தின் மீது தாக்குதலொன்றை நடத்தி 24 பொலிஸாரைக் கொலை செய்தனர்.

ஆக, யாழ்தேவி மீதான இத்தாக்குதலானது ரெலோ அமைப்பின் செயற்பாடாகும் என அக்காலகட்டத்திலேயே நம்பப்பட்டது.

அக்காலகட்டத்தில் இலங்கையில் முக்கிய ஆயுதமேந்திய இயக்கங்கள் பல இனங்காணப்பட்டிருந்தன. தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (வுநுடுழு) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) ஈழப் புரட்சி மாணவர் அமைப்பு (நுசுழுளு), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு, ஈழ விடுதலை புலிகள் அமைப்பு (டுவுவுநு) போன்ற அமைப்புக்கள் இவற்றுள் குறிப்பிடத்தக்கன.

இந்த அமைப்புக்கள் அனைத்தும் 1983ன் கறுப்பு ஜூலைக்குப் பின் - அதனூடாக தமிழ் நாட்டில் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றிருந்த அமைப்புகளாகும். இக்கால கட்டத்தில் குறிப்பாக ரெலோ அமைப்பும் புலிகள் அமைப்பும் ஆயுத பலத்தில் முன்னணியில் இருந்த அமைப்புகளாகக் காணப்பட்டன.

1984, மார்ச் மாதம் 30ம் திகதியைக் கொண்ட ‘இந்தியா டுடே’ சஞ்சிகையின் குறிப்பொன்று பின்வருமாறு:

“கும்பகோணம் அருகில் உள்ள முகாமும் மீனம்பாக்கம் முகாமும். தமிழ் நாட்டில் தூரக் காடுகளில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் பயங்கரவாதிகளின் முகாம்களில் இரு முகாம்களாகும். இங்கு பயங்கரவாத தத்துவாசிரியர்களின் தத்துவங்களையும் கருத்துக்களையும் போன்றே ஆயுதப் பயிற்சிகள் தொடர்பான அடிப்படைப் பாடங்களையும் அவர்கள் (இலங்கை தமிழர் – தொண்டர்கள்) கற்றுக் கொள்கின்றனர். அடிப்படைப் பயிற்சிகளின் பின்னர் இவர்கள் மேலதிகப் பயிற்சிகளுக்காக சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு கடலோரப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு சுமார் 2000 பேர் வரையில் யுத்தத்திற்குத் தயாராகியுள்ளனர். மேலும் 2000 – 3000 பேர் பயிற்சிகளை முடித்துள்ளனர்.

இந்தியாவில் ஆயுதப் பயிற்சியை முடித்துக் கொண்டவர்களை பெரும்பாலாகக் கொண்ட அமைப்பாக ரெலோ இயக்கம் காணப்பட்டது. அதே நேரம் இந்தியாவில் பயிற்சி பெற்ற முதலாவது இயக்கமும் ரெலோ இயக்கமாகும்.

ரெலோ இயக்க உறுப்பினர்களை ஆயுதப் பயிற்சிகளுக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட போது குறிப்பிட்ட நோக்கங்களை அவர்கள் கொண்டிருக்கவில்லை. அதிகளவில் ஆட்களைத் திரட்டிக் கொள்வதே இவர்களது தேவைகளாக இருந்தது. அதனடிப்படையிலேயே அவர்கள் செயற்பட்டனர்.

எனினும் புலிகள் அமைப்பின் தலைவர் வேறு ஒரு வகையிலேயே செயற்பட்டார். அமைப்பின் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவர் எப்போதும் தனது அமைப்பிற்கான உறுப்பினர்களை இணைத்துக் கொண்டார். அந்த நிபந்தனைகளை தளர்த்த அவர் அசைந்தும் கொடுக்கவில்லை.

“எண்ணிக்கையில் கூடி, ஆனால் பயணில்லாத நபர்கள் 500 பேர் இருப்பதைவிட திறமையான 50 பேர் தன்னுடன் இருந்தால் தன்னால் வெற்றிகரமான செயல்களை செய்ய முடியும்” என அவர் அக்கால கட்டத்தில் தனது சகாக்களை அமைப்பில் இணைத்துக் கொள்ளும் போது கூடியிருந்தார். எனினும் பிரபாகரனால் தனது அமைப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களை பிரபாகரனே மீறிய சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை.

எனினும் ரெலோ தலைவர் பிரபாகரனைப் போல் தந்திரமானவர் அல்லர். ஸ்ரீ சபாரட்ணம் எனும் ரெலோ தலைவர் எப்போதுமே ஏனையவர்களை நம்பினார்.

இவ்வாறான குறைபாடுகளை கொண்டிருந்த சபாரட்ணம், குட்டிமணி, தங்கத்துரை போன்றவர்களின் மறைவுக்குப் பின் ரெலோ அமைப்பின் தலைவரானார்.

1970ம் தசாப்தத்தில் இலங்கையில் தமிழ் ஆயுதக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் மிகவும் பாரிய பங்களிப்பினை நல்கியவர்களாக குட்டி மணியையும் தங்கத்துரையையும் குறிப்பிட இயலும்.

வல்வெட்டித்துறைப் பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்ட குட்டிமணி தமிழ் ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ஆரம்ப காலத்தில் தேவைப்பட்ட நிதியை சேகரித்துக் கொடுத்தவர்களில் முக்கியமானவர்.



இவரது ஊர்ப் பகுதியின் பின்னணியானது இதற்குப் பெரிதும் துணையாக அமைந்திருந்தது. 1979ம் வருடம் புலிகள் இயக்கத்தில் இருந்து உமா மகேஸ்வரன் விளக்கப்பட்டதன் பின்னர் பிரபாகரனும் கூட சில சந்தர்ப்பங்களில் ரெலோ உறுப்பினர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தார் எனவும் கூறப்படுகிறது.

ஊர்மிளா என்ற இயக்கப் பெண் உறுப்பினருக்கும் உமாமகேஸ்வரனுக்கும் இடையில் நெருக்கமான உறவு இருந்ததன் காரணமாகவே உமாமகேஸ்வரன் புலிகள் அமைப்பில் இருந்து விளக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் புலிகளின் தலைவர் பின்னர் மதிவதணி மீது காதல் கொண்டதும், அவரைத் திருமணம் செய்ததும் வேறு கதை.

இந்த இரு விடயங்களும் முரண்பாடுகளைக் கொண்டவையாகும்.

அடேல் பாலசிங்கம் எழுதியுள்ள ‘சுதந்திர வேட்கை’ எனும் புத்தகத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. ‘உமாமகேஸ்வரனையும் ஊர்மிளாவையும் உடலுறவு நிலையில் தாங்கள் கண்டதாக”…
(பக்கம் 51)

இதனால் உமாமகேஸ்வரனை அமைப்பிலிருந்து விலக்கிய பிரபாகரன் பின்னர் மதிவதணியைத் திருமணம் செய்து கொண்டமை குறித்து அடேல் பாலசிங்கம் அதே புத்தகத்தில்,

“எமது கருத்துப்படி இயற்கை தனது போக்கிலே சென்று ஆண், பெண் இருபாலாருக்கும் இடையில் உறவுகளைத் தோற்றுவிக்கும் என்று நம்பினோம்” (பக்கம் 105)
- எனக் கூறி இதனை நியாயப்படுத்துவதையும் அவதானிக்க முடிகிறது.

1980ம் வருடம் மார்ச் மாதம் ரெலோ அமைப்பினர் மக்கள் வங்கிக்கு சொந்தமான வாகனமொன்றைத் தாக்கி 708 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்தனர்.

இதன்போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் கொல்லப்பட்டனர்.

கொள்ளையிடப்பட்ட பணத்துடன் ரெலோ உறுப்பினர்கள் 1980, ஏப்ரல் மாதம் 05ம்திகதி தமிழ்நாடு செல்ல தயாராக இருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் குட்டிமணியும் தங்கத்துரையும் அடங்கினர். இதன் பின்னர் ஸ்ரீ சபாரட்ணம் ரெலோ அமைப்பின் தலைவராக்கப்பட்டார்.

1983ல் கொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் பி 3ம் பிரிவில் சிறைவைக்கப்பட்டிருந்த குட்டிமணியும் தங்கத்துரையும் 1983, ஜூலை மாதம் 25ம் திகதி ஏற்பட்டிருந்த இனக்கலவர கால கட்டத்தில் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டனர். இதன் பின்னர் ஸ்ரீ சபாரட்ணமே ரெலோ அமைப்பின் தலைவராகத் தொடர்ந்து செயற்பட்டார்.

ரெலோ அமைப்பின் வன்முறைச் செயற்பாடுகள் உச்ச நிலையில் இருந்;த போது இவர்கள் பல்வேறு மிலேச்சத்தனமான கொலைகளையும் புரிந்தனர். இதற்கொரு உதாரணமாக ரஜனிகாந்த் என்பவரது கொலையைக் குறிப்பிட இயலும். கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த ரஜனிகாந்த் என்பவர் இரும்புப் பட்டறைத் தொழிலில் ஈடுபட்டு வந்தவர். இதே நேரம் ரெலோ அமைப்பிற்கும் உதவி வந்தார்.

ஒரு நாள் ரெலோ உறுப்பினர் சிலர் தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தைக் கண்ணுற்ற ரஜனிகாந்த் அவர்களைக் கண்டித்துள்ளார்.

இச்சம்பவம் நடந்து சில தினங்களில் ரெலோ உறுப்பினர்கள் சிலரால் ரஜனிகாந்த் கடத்தப்பட்டார்.

அதன் பின்னர் நெல்லியடி பகுதியில் மேடை ஒன்று அமைக்கப்பட்டு அதில் ரஜனிகாந்தை ஏற்றினர். பின்னர் நாடகமொன்றை அரங்கேற்றும் பாணியில் அவரைக் கொலை செய்தனர்.

இந்த நாடகத்தின் அடிப்படையில் பெண் வேடமிட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவர் ரஜனிகாந்த் தன்னைக் கற்பழித்ததாக முறையிடுகின்றார்.

அதன் பின்னர் இன்னொரு ரெலோ உறுப்பினர் “உனக்கு நடந்த கதிக்கு தகுந்த தண்டனையை வழங்கு” எனக் கூறி பெண் வேடம் தரித்திருந்தவர் கையில் கத்தியொன்றை கொடுக்கிறார். கத்தியை கையிலெடுக்கும் நபர் நூற்றுக் கணக்கான மக்கள் மேடையைப் பார்த்திருக்க, மிகவும் குரூரமான முறையில் ரஜனிகாந்த் மீது கத்தியால் குத்துகிறார்.

மேற்படி யாழ்தேவி தாக்குதலுக்குப் பின்னா ஆயுதாரிகள் தொடர்ந்தும் யாழ்தேவி மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்குதல்களைத் தொடுத்தனர்.

இதன் பிரகாரம் 1986ம் வருடம் மே மாதம் 31ம் திகதி வெயாங்கொடைப் பகுதியில் வைத்து குண்டு வெடிக்கப்பட்டு யாழ்தேவி பயணிகளில் 13 பேர் கொல்லப்பட்டனர்.





அதன் பின்னர் யாழ்தேவி புகையிரதம் சில மாதங்களாக செயற்படவில்லை.

அதன் பின்னர் 1986 ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி யாழ்தேவி தனது பயணத்தை ஆரம்பித்தது.

அன்றைய தினமே வவுனியாவுக்கு அப்பால் செல்ல இயலாத வகையில் இரு பாலங்கள் தகர்க்கப்பட்டிருந்தன.

அதாவது காலை 9.30 மணியளவில் வவுனியாவில் இருந்து இரு மைல்கள் தூரத்தில் வடக்கே அமையப் பெற்றுள்ள தாண்டிக்குளம் பகுதியில் ஒரு பாலமும் பின்னர் 10.45 மணியளவில் 159வது கட்டை அருகில் இருந்த சுமர்ர் 20 அடி நீளமான பாலமும் தகர்க்கப்பட்டிருந்தன.


இப்னு அசூமத்

நன்றி: வெளிச்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல