கொலையாளிகள் அங்கிருந்து சென்றதன் பின்னர், கடை உரிமையாளரான அந்தப் பெண், “அவர்கள் சென்று விட்டார்கள்……. வெளியில் வாருங்கோ” என அங்கு மறைந்திருந்த யோகநாதனுக்குக் கூறினார்.
யோகநாதன் வெளியில் வந்த போது “தண்ணி…தண்ணி..”என உடைந்த வார்த்தைகளைக் கூறியவாறு தண்ணீர்க் கேட்டு துடிதுடித்துக் கொண்டிருந்த யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பாவைக் கண்டார்..
அந்த இடத்திற்கு ஓடோடிச் சென்ற யோகநாதன் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தரையில் கிடந்த துரையப்பாவின் தலையை ஏந்தி தனது மடியில் வைத்துக் கொண்டார்.
துரையப்பாவின் வாயில் சற்று தண்ணீரை ஊற்றினார்.கஷ்டப்பட்டவாறே தனது வாயை நனைத்துக் கொண்ட துரையப்பா யோகநாதனின் மடியிலேயே தனது மூச்சை நிறுத்தினார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் முதலாவது மனித வேட்டையாக யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா தனது சகாவின் மடி மீது இவ்வாறு உயிர் துறந்தார்.
கொலையுறும் போது 48 வயதைக் கொண்டிருந்த அல்பிரட் துரையப்பா யாழ்.மக்களது ஆதரவை மிகப் பெற்ற ஒரு தலைவராகத் திகழ்ந்தார்.
முதன் முதலில் யாழ்.மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற இவர் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலுமாக வெற்றியையீட்டியவராவார். ஊர் மக்களின் ஆதரவு இவருக்கு தொடர்ந்து கிடைத்து வந்ததால் பல தடவைகள் இவர் யாழ்.மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அனைத்துப் தரப்பினருடனும் நட்பாகப் பழகும் குணம்தான் இவரது இந்த வெற்றியின் ரகசியமாகும். வாக்காளர்கள் அனைவருமே தனிப்பட்ட வகையில் துரையப்பாவை நன்கு அறிந்து வைத்திருந்தனர். தனது குடும்ப உறுப்பினர்களைப் போன்றே அனைவரையும் கவனித்து வந்தார்.
வெளியில் எங்கு சென்றாலும் காண்போரிடமெல்லாம் நின்று உரையாடி மகிழ்வதில் இவர் ஒருபோதும் பின் வாங்குபவரல்லர்.அவர்களது துன்ப, துயரங்கள் குறித்து எப்போதும் கேட்டறிந்து கொள்வார். யாழ்.நகரத்திலும் மக்களது வாழ்க்கையிலும் சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு போன்ற வசதிகளை ஏற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.
நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் குறைகளைப் போன்றே மக்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் குறித்தும் இவர் மிகுந்த கவனஞ் செலுத்தி வந்தார்.
துரையப்பா சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் தனது உறவுகளை வளர்த்துக் கொண்டவர். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பராக இருந்தவர்.
இவரது வாக்கு வங்கியை நோக்கும் போது அதில் சிங்கள. முஸ்லிம் மக்களும் நகர்ப்புற வறிய மக்களும் இவரை எந்தளவிற்கு நேசித்தார்கள் என்பது தெரிய வருகிறது.
இந்தவகையில் ஒரு பக்கத்தில் மக்களுக்கும் மறுபக்கத்தில் ஆளும் தரப்பினருக்கும் நெருக்கமான வகையில் அல்பிரட் துரையப்பா தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். இவர் பெற்றிருந்த இவ்வாறானதொரு நிலையில் தமிழரசுக் கட்சி உட்பட ஏனைய தமிழ் கட்சிகளுக்கு இவர் ஒரு சவாலாகவே விளங்கினார்.
இவ்வாறானதொரு பின்னணியில்தான் 1970 ம் வருடம்
பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் தோல்வியடைந்தனர். கட்சியின் செயலாளர் எஸ்.ஜே.வி நாகநாதனைத் தோற்கடித்து தமிழ் காங்கிரஸின் சி.அருளம்பலம் நல்லூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அ.அமிர்தலிங்கத்தைத் தோற்கடித்து வட்டுக்கோட்டைத் தொகுதியில் ஏ.தியாகராஜா வெற்றி பெற்றார். கிளிநொச்சி தொகுதியில் தமிழரசுக் கட்சியால் போட்டியிட்ட ஆலாலசுந்தரத்தை தமிழ் காங்கிரஸின் ஆனந்தசங்கரி தோற்கடித்தார்.
இவ்வாறு தமிழரசுக் கட்சி அத் தேர்தலில் தோல்விகண்டது..
அதன் பின்னர் கட்சியின் எதிர்கால முன்னேற்றம் குறித்து எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கென 1971,பெப்ரவரி மாதம் 7ம் திகதி யாழ்ப்பாணத்தில் செயற்பட்டு வந்த அனைத்துத் தமிழ் கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்கு தமிழரசுக் கட்சி தீர்மானித்தது. அ
தன்படி அக் கூட்டம் நடாத்தப்பட்டது.
இதனது இரண்டாவது கூட்டம் 1972, மே மாதம் 14 ம் திகதி திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் அகில இலங்கை தமிழர் சங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி அமைப்பு என்பன கலந்து கொண்டன.
இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கின. ஆக இக்கூட்டணியின் அப்போதைய நோக்கம் யாதெனில் 1972, மே மாதம் 22 ம் திகதி கூட்டு முன்னணி அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பிற்குள் சில விடயங்களை உட்படுத்துவதாகும். இருந்த போதிலும் இவர்களின் மேற்படி விடயங்களை அந்த அரசியலமைப்பிற்குள் உட்படுத்த கூடடு முன்னணி அர
சு இணங்கவில்லை.
இதன் பிரகாரம் அரசியலமைப்பினை நிறைவேற்றும் முகமாக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது அதற்கெதிராக வாக்களிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற
உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டது.
இந்தக் கோரிக்கைக்கு சிலர் இணங்கினர். இன்னொரு சாரார் கோரிக்கையை நிராகரித்தனர்.
மேற்படி அரசியலமைப்பை எதிர்த்தவர்களுள் ஆனந்தசங்கரியும் ஒருவர். இச் சந்தர்ப்பத்தில் சி.அருளம்பலமும், ஏ.தியாகராஜாவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர். இதன் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெற்ற போது ஏ.தியாகராஜா, குமாரசூரியர், சி.அரு
ளம்பலம், சீ.எக்ஸ்.மார்ட்டின், ராஜன் செல்வநாயகம், சுப்பிரமணியம் ஆகியோர் புதிய அரசியலமைப்பிற்கு சார்பாக வாக்களித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து அரசியலமைப்பிற்கு சார்பாக வாக்களித்தவர்கள் தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் என தமிழரசுக் கட்சியினரால் கருதப்பட்டனர்.
நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பிற்கு எதிராக தமிழ
ர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினரான காசி ஆனந்தன் 1972 மே மாதம் 24 ம் திகதி
“தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்துள்ள ஆறு உறுப்பினர்களுக்கு இயற்கை மரணங்கள் கூட கிடைக்கக் கூடாது என பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
அத்துடன்“இவர்களுக்கு என்ன நேர வேண்டும் என்பதை தமிழ் இளைஞர்கள் தீர்மானிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயுதமேந்தியப் போராட்டத்திற்கான ஒர் அழைப்பைப் போன்ற இக் கூற்றின் பின்னர் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் எழுந்திருந்தன.
ஒரு சாராரைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல்களும் துப்பாக்கிப் பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பி.ராஜசுந்தரம்,சம சமாஜக் கட்சியைச் சேர்ந்த ஈ.சிவனேசக்குமார் குலசிங்கம், ஏ.தியாகராஜா, போன்ற மக்கள் பிரதிநிதிகள் மீது தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டன.
அது போன்றே தமிழர் விடுதலைக் கூட்டணியானது அல்பிரட் துரையப்பாவுக்கு எதிராகவும் பயங்கரத் தாக்குதல்களை மேற் கொண்டிருந்தது.
1971 ம் வருடம் ஜனவரி மாதம் 3 ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெற்ற அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாடானது அல்பிரட் துரையப்பாவின் அரசியல் பயணத்தை சிதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முக்கிய சாதகமாக அமைந்தது.
9 ம் திகதி இம் மாநாடு நிறைவடைய இருந்த போதிலும் 10 ம் திகதி வரையில் இதனை நீடிக்க வேண்டி ஏற்பட்டது. இம் மாநாடு யாழ்.வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்று வந்தது.
இம் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பொலிசாருக்கும் கலந்து கொண்டிருந்தவர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றலாமாயிற்று.
இறுதியில் 10 ம் திகதியன்று பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது மின் கம்பி ஒன்று அறுந்து வீழ்ந்து கூடியிருந்த மக்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவத்துடன் யாழ்.மேயர் எந்தவகையிலும் சம்பந்தப்பட்டவர் என்பதற்கு எதுவித ஆதாரங்களும் இருக்கவில்லை எனக் கூறப்பட்டது. எனினும் அரசாங்கத்துடன் உறவு வைத்திருந்தார் என்ற காரணத்தால் மேயர் குற்றவாளி என தமிழர் விடுதலைக் கூட்டணியால் இனங்காட்டப்பட்டார்.
மேற்படி மாநாட்டுக்கு அவர் இணக்கம் தெரிவிக்கவோ, எதிர்ப்புத் தெரிவிக்கவோ இல்லை. இதனால் மிகச் சுலபமாகவே தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் இக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
எவ்விதப் பொறுப்பும் இன்றி மேயர் மீதான வெறுப்பை இளைஞர்களிடையே ஏற்படுத்துவதற்கு மேற்படி கட்சி தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.
இதனால் தூண்டப்பட்ட பிரபாகரன் உட்பட்ட சிலர் துரையப்பாவைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டனர்.
துரையப்பாவைக் கொலை செய்வதற்கு பிரபாகரன் தூண்டப்பட்டமைக்கு இன்னுமொரு காரணமிருந்தது.
சிவகுமாரன் என்ற இளைஞரின் செயற்பாடுகள் பிரபாகரனைத் தூண்டச் செய்திருந்தது. 70 களின் ஆரம்பத்தில் யாழ்.இளைஞர்கள் மத்தியில் கைத் துப்பாக்கி வைத்திருந்த ஒரே ஒரு இளைஞர் சிவகுமாரன் மட்டுமே ஆவார் எனக் கூறப்படுகிறது.
இவர் 1971 ம் வருடம் மார்ச் மாதம் துரையப்பாவைக் கொலை செய்வதற்காக குண்டு வைத்தவர். பின்னர் கோப்பாய் பகுதியிலிருந்த சிறிய வங்கியொன்றில் கொள்ளையிடச் சென்ற போது பொலிசாரினால் பிடிக்கப்பட்ட நிலையில் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இலங்கைத் தமிழர்களது ஆயுதப் போராட்டத்தின் முதலாவது தற்கொலைப் போராளி இவரேயாவார்.
இக் காலகட்டத்தில் பிரபாகரன் தனது வன்முறைச் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்தார். இருப்பினும் துரையப்பா கொலை செய்யப்படும் வரை பிரபாகரனைப் பரவலாக எவருக்குமே தெரியாதிருந்தது.வல்வெட்டித்துறை தொண்டமானாற்றில் மட்டும் ஒரு சிலர் இவரை அறிந்திருந்தனர்.தொண்டமானாற்றில் இடம்பெற்ற ஒரு குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் பிரபாகரன், தங்கத்துரை, பெரியசோதி போன்றவர்கள் பொலிசாரினால் தேடப்பட்டு வந்தனர். இவர்கள் தமிழ் மாணவர் பேரவையின் வன்முறைகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
இக் கால கட்டத்தில் ஏனைய யாழ்ப்பாணத்து இளைஞர்களைப் போல் பிரபாகரனும் தனது மானசீக வீரராக சிவகுமாரனையே கொண்டிருந்தார்.
எனவே, பிரபாகரனின் வீரரான சிவகுமாரன் துரையப்பாவைக் கொலை செய்வதற்கு ஏற்கனவே முயற்சி செய்திருந்தமையானது பிரபாகரனையும் அக் கொலைக்குத் தூண்டி விட்டது எனக் கூறவும் இயலும்.
பேருந்து ஒன்றைக் கொளுத்தியும்,கொள்ளைகளில் ஈடுபட்டும் மேலும் சில குற்றங்களைப் புரிந்தும் பிரபாகரன் தனது வன்முறைகளை ஆரம்பித்திருந்த சமயம் சில இளைஞர்களைத் திரட்டி 1972 ல் தமிழ் புதிய புலிகள்(வுNவு) என்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்.
1975 ம் வருடம் ஜூலை மாதம் 26 ம் திகதி பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்த தனது நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்றார்.இவரிடம் இரண்டு ரிவோல்வர்களும் ஒரு தீப்பெட்டி பார்சலும், இராசயணப் பொருட்கள் சிலவும் இருந்தன.
தனது நண்பரின் வீட்டிலிருந்தே பிரபாகரன் தன்னிடமிருந்த இராசயனப் பொருட்களையும் தீப்பெட்டியில் இருந்த வெடி மருந்துகளையும் ஒன்றாகக் கலக்க ஆரம்பித்தார்.
“இவற்றைக் கொண்டு உன்னால் சுட முடியுமா?” நண்பர் கேட்டார்.
“வாயை மூடிக் கொண்டு இரு” எனக் கூறிய பிரபாகரன் ரிவோல்வரை தனது தேவைக்கேற்ற வகையில் தயார் செய்து கொண்டிருந்தார்.
மறுநாள் உதயமாயிற்று. பிரபாகரன் தனது ரி.என்.ரி உறுப்பினர்களான கலாபதி, பத்மராஜா, செட்டி ஆகியோருடன் பொன்னாலையிலுள்ள வரதராஜப் பெருமாள் கோவிலடிக்குச் சென்றார்.
அல்பிரட் துரையப்பா வரும் வரை கற்படிகளில் இந்நால்வரும் காத்திருந்தனர்.
பகல் நேரம். யாழ்.மேயர் அல்பிரட் துரையப்பா தனது நண்பர்களான யோகநாதன் மற்றும் ராஜரட்ணம் ஆகியோருடன் காரில் வந்து கோவில் வாசலில் இறங்கினார்.
“சுடு….சுடு… எனக் கத்திக் கொண்டே ஓருவர் ரிவோல்வரை எடுத்தவாறு அல்பிரட் துரையப்பாவை நோக்கி வரலானார்.
அச்சமடைந்த யோகநாதன் அருகிலிருந்த கடை ஒன்றுக்குள் சென்று மறைந்து கொண்டார். உடனடியாக செயற்பட்ட பிரபாகரனும், சகாக்களும் அல்பிரட் துரையப்பா மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான துரையப்பா கைகளை அங்கிங்கு ஆட்டியவாறே தரையில் விழுந்தார்.
கொலையாளிகள் துரையப்பாவின் வாகனத்திலேயே தப்பி ஓடினர். கீரீமலையை அண்மிக்கும் போது எதிரே பொலிஸ் ஜீப்பைக் கண்டு, காரிலிருந்து இறங்கி தப்பி ஒடி சித்தங்கேணியை அடைந்து பின்னர் அங்கிருந்து சுன்னாகம் வந்து 769 ம் இலக்க பேரூந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்து பின்னர் தத்தமது வீடுகளுக்குச் சென்றனர்.
தப்பிப் போகும் போது துரையப்பாவின் காரைச் செலுத்திய நபர் பின்நாளில் பிரபாகரனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் சுதுமலையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
துரையப்பாவின் கொலையின் பின்னர் இவர்கள் காங்கேசன்துறைப் பகுதியில் மறைந்திருந்த போது மேற்படி நபரின் சகோதரி ஒருவர் இவர்களது செலவிற்காக தனது கழுத்துச் சங்;கிலியை விற்கும்படி கூறி கொடுத்து அனுப்பியதாகவும் இச் சங்கிலி கஸ்தூரியார் வீதியில் இருந்த நகைக்கடை ஒன்றில் 700 ரூபாவிற்கு விற்கப்பட்டு அப் பணத்தின் பெரும்பகுதி பிரபாகரனிடம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இக்குழுவினருக்குக் கிடைத்த முதலாவது பண உதவி இதுவென்றும் தெரியவருகிறது. இவ்வாறு பண உதவி செய்தவரின் தம்பியைத் தான் பின்நாளில் பிரபாகரன் சுட்டுக் கொன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-இப்னு அசூமத்
நன்றி: வெளிச்சம் இணையம்
சனி, 23 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக