
அரச மரத்து இலைகளால் வானம் மறைக்கப்பட்டிருந்தது. காலை நேரச் சூரியன் அரச மர இலைகளினூடாக பூமியை நோக்கி வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தான்.
சில்லென்ற காற்று அங்கிருக்த பக்தர்களின் மேனிகளை வருடிச் சென்றது. அந்த ஸ்பரிசம் பக்தர்களுக்கு மிகவும் இதமாக இருந்தது. பக்தர்கள் பௌத்த தர்ம சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர். எங்கு பார்த்தாலும் வெள்ளை உடைகளில் காட்சி தந்த பக்தர்களின் பக்தி பரவசமான நிலையில் அப்பகுதி மெய்மறந்திருந்தது.
1985ம் வருடம் மே மாதம் 14ம் திகதி காலை சுமார் 8.00 மணி இருக்கும். அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா பௌத்த ஸ்தலம் இவ்வாறு பக்தியுடன் கலந்திருக்கும்போது சற்று தூரத்தே ஏதோவொரு கலவரம் நிகழ்வதைப் போன்ற சூழ்நிலை தென்பட்டது.
ஹொலிவுட் கவ்போய் ரகத் திரைப்படங்களில் வருகின்ற காட்சியைப் போன்ற இந்த சம்பவத்தை நிராயுத பாணிகளால் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க முடிந்ததேயன்றி அவர்களால் வேறு எதையும் செய்ய முடியவில்லை.
சூரியன் உதிப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருந்த வேலையில்தான் இந்த சம்பவத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இலங்கை இராணுவத்தினரின் சீருடையை ஒத்த உடையணிந்த ஆயுதமேந்திய நபர்கள் சிலர் புத்தளம் நகரில் வைத்து புத்தளம் பஸ் டிப்போவிற்குச் சொந்தமான ஒரு பஸ்ஸில் ஏறினர்.
அந்த பஸ்ஸை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆயுததாரிகள், அந்த பஸ்ஸின் சாரதியான சிங்கள நபரை முதலில் கொலை செய்துவிட்டு இரண்டாவதாக பஸ்ஸின் நடத்துநரான முஸ்லிம் நபரையும் கொலை செய்தனர்.
தங்களது ஆரம்ப இலக்குகளை இவ்வாறு வெற்றி கொண்ட ஆயுததாரிகள் சுமார் 20 பேர் அந்த வண்டியை அனுராதபுரம் நோக்கிச் செலுத்தத் தொடங்கினர்.
பஸ்வண்டி அனுராதபுரம் நகரின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்தது.
நேரம் - காலை 8.00 மணி இருக்கும். பாடசாலை மாணவர்கள். அரச ஊழியர்கள், பக்தர்கள் என அனுராதபுரம் நகரம் களைகட்டியிருந்தது.
இவர்கள் மத்தியில் வந்த ஆயுததாரிகள் பஸ் வண்டியில் இருந்தவாறே தாறு மாறாகத் துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இதன் பின்னர் இந்த ஆயுததாரிகள் அனுராதபுரம் புனித பூமிக்குள் பிரவேசித்தனர். ஸ்ரீ மஹா போதியின் முன்பாக பக்தர்கள் தங்களது வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
இந்த பக்தர்கள் ஆயுததாரிகளின் இலக்காகக் கொள்ளப்பட்டனர். பக்தர்கள் மீதும் புனித பூமிப் பகுதியில் பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீதும் பஸ்ஸில் இருந்தவாறே ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
சற்று நேரத்திற்கு முன்பதாக பக்தியில் திளைத்திருந்த பக்தர்களின் உடல்கள் ஸ்ரீ மஹா போதியின் முன்பாக இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தன. இவை அனைத்தும் நடந்து முடிய சுமார் இருபது நிமிடங்களே கழிந்திருக்கும்.
ஆயுததாரிகளின் இத்தாக்குதல் காரணமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலை முடித்துக் கொண்ட ஆயுததாரிகள் அந்தப் புனித பூமியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோசா ரக வேன் ஒன்றில் ஏறி நொச்சியாகம பகுதி நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர். இடையில் காணப்பட்ட பொலிஸ் நிலையமொன்றையும் தாக்கிய ஆயுததாரிகள் இறுதியாக வில்பத்து தேசிய வனப் பூங்கா பகுதிக்குச் சென்று விட்டனர்.
வில்பத்து தாக்குதல்
ஆயுததாரிகளின் மேற்படித் தாக்குதலின் இரண்டாம் கட்டம் இதிலிருந்து ஆரம்பித்தது.
நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசாதாரணச் சூழ்நிலை காரணமாக இந்த காலகட்டத்தில் வில்பத்து தேசிய சரணாலயத்திற்கு வருகை தருகின்ற உல்லாசப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி நிலை காணப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் வில்பத்து தேசிய சரணாலயத்தின் பதில் நிர்வாகியாகக் கடமையாற்றிக் கொண்டிருந்த ஏப்பிரகம் என்பவர் தனக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய காட்சியொன்றைக் கண்ணுற்றார்.
அதாவது –
உல்லாசப் பயணிகள் நிரம்பிய ரோசா ரக பஸ் வண்டியொன்று உனுவில்லகம எனும் அந்த சரணாலயத்தின் வாயில் அமைந்திருந்த பகுதியை நோக்கி வருவதைக் கண்ணுற்றார்.
பஸ் வண்டி தனது அலுவலகத்தின் முன்பாக வருமுன்னர் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்ட அவர், வருகின்ற உல்லாசப் பயணிகளுக்கு வழிகாட்டி ஒருவரை வழங்குவதற்காக பணியாளர்கள் பணிக்காக வருகை தரும் போது கையொப்பமிடும் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தார்.
அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஏப்ரகம் தனது முகத்தைத் திருப்புவதற்கு முன்பாகவே ஏ.கே. 47 ரகத் துப்பாக்கி ஒன்று அவரது முகத்துடன் வைத்து அழுத்தப்பட்டது.
இங்கு என்ன நடக்கிறது? என்பதை அறிந்து கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த ஏப்ரகம், க~;டப்பட்டு தனது விழிகளை கழற்றி அங்குமிங்குமாக பார்வையை சுழல விட்டார்.
முகம் நிறைய தாடி வளர்த்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஓர் இளைஞர் அவர் முன்பாக நின்று கொண்டிருந்தான்.
அந்த இளைஞனைக் கண்டதுமே ஏப்ரகமின் உடல் தீப்பற்றி எரிவதைப் போல் உணர்ந்தார். எதுவுமே செய்ய இயலாத நிலை. இந்த இளைஞனுடன் மேலும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதையும் அவர் கண்ணுற்றார்.
சிலநொடிகள் கழிந்திருக்கும், ஆயுததாரிகள் சத்தம் போட்டவாறே வன இலாக்கா ஊழியர்களை ஓர் வரிசையில் நிறுத்தினர்.
இதனிடையே ஆயுததாரிகள் ஒரு சிலர் வன இலாக்கா அதிகாரிகளின் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர் வன இலாக்காவிற்குச் சொந்தமான வாகனங்களை செயற்படுத்தும் முயற்சிகளில் இறங்கினர்.
இந்தக் காலகட்டத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக வன இலாக்கா அதிகாரிகள் வாகனங்களை உடனடியாக செயற்படுத்த இயலாத வகையில் செய்து வைத்திருந்தனர்.
ஆயுததாரிகளின் தேவை நிறைவேறா விட்டால் தாங்கள் அனைவரும் கொல்லப்படுவோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் உணர்ந்து கொண்ட சுபசிங்க எனும் பணியாளர், ஒரு வாகனத்தை செயற்படுத்திக் கொடுத்துள்ளார்.
முதற் கட்டத்தில், வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த பணியாளர்களில் 6 பேரினைச் சுட்டுச் சரித்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஆயுததாரிகளுக்கு வாகனமொன்றைச் செயற்படுத்திக் கொடுத்த சுபசிங்க என்ற பணியாளரும் அடங்கி இருந்தார்.

அடுத்த கட்டமாக எஞ்சி இருந்தவர்களில் 18 பேர் வரிசையாக நின்ற போதே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதன் பின்னர் இந்த ஆயுததாரிகள் புன்குலம பகுதி நோக்கிச் செல்லத் தயாரானார்கள். தங்களது இந்தப் பயணத்திற்கு வழிகாட்டியாக ஏப்ரகமைத் தெரிவு செய்தனர். வில்பத்து வன பூங்காவில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டவர்களில் ஏப்ரகம் மாத்திரமே உயிருடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரகமை லேண்ட்ரோவர் ஜீப் வண்டியில் ஏற்றிக் கொண்ட ஆயுததாரிகள் புன்குலம பகுதி நோக்கிப் புறப்பட்டனர்.
ஆயுததாரிகள் இவ்வாறு பயணித்துக் கொண்டிருக்கும் தருவாயில், பாதுகாப்புப் படையினர் அனுராதபுரம் தாக்குதல்களை மேற்கொண்ட இவர்களைத் தேடி வலை வீசிக் கொண்டிருந்தனர்.
இதனிடையே ஏப்ரகமின் வழிகாட்டலில் ஆயுததாரிகளை ஏற்றிய லேண்ட் ரோவர் ஜீப் வண்டி மரதன்மடு பகுதியை அடைந்திருந்தது.
இந்த நேரம் பார்த்து ஆகாயத்தில் ஹெலிகொப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்ததை ஆயுததாரிகள் கண்டனர்.
ஹெலிகொப்டரில் பாதுகாப்புத் தரப்பினர் தங்களைத் தேடி வருகிறார்கள் என்பதை புரிந்து கொண்ட ஆயுததாரிகள் தங்களிடையே கலர்ச்சட்டைகளை அணிந்தவர்களைப் பார்த்து அச்சட்டைகளைக் கழற்றி எறியுமாறு கூறினர். பின்னர் தரையில் சாய்ந்து கொன்றுமாறு கட்டளையிட்டனர்.
இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்போது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இதுதான் உரிய சந்தர்ப்பம் என்பதை ஏப்ரகம் புரிந்து கொண்டான். உடனடியாக செயற்பட்ட ஏப்ரகம் அங்கிருந்து பாய்ந்தோடினான். எனினும் அவனது துரதி~;டம் சற்று தூரம் ஓடிய அவன் மரதன்மடு குளத்தில் தவறி விழுந்துவிட்டான்.
பின்னர் ஒருவாறு சுதாகரித்துக் கொண்ட அவன் தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு புதர்களுக்குள் மறைந்து கொள்ள முயற்சித்தபோது தூரத்தில் இயந்திரத் துப்பாக்கிகளின் வேட்டோசைகளும் வாகனத்தின் ஓசையும் கேட்டன.
இந்த ஓசைகளைக் கேட்ட ஏப்ரகம் லுனுவில கிராமத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
இப்படித்தான் அவன் - அந்த பயங்கரமான நிகழ்வில் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு தனது குடும்பத்தாரிடம் வந்து சேர்ந்தான்.
1984ம் வருடம் மே மாதம் 14ம் திகதி அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்ட ஆயுததாரிகளது இத்தாக்குதலானது பகல் 12.00 மணிவரை நீடித்திருந்தது.
காலை 8.00 மணியளவில் அனுராதபுரம் நகரிலும் புனித பூமிப் பகுதியிலுமாக 120 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் வில்பத்து தேசிய சரணாலய பணியாளர்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்.
ஏற்கனவே புத்தளத்தில் வைத்து கொல்லப்பட்ட பஸ் சாரதி மற்றும் நடத்துநருடன் சேர்த்து கொல்லப்பட்டவர்களது எண்ணிக்கை 146 ஆக இருந்தது.
மேற்படி தாக்குதல் சம்பவமானது மனித நேயமிக்க தமிழர்கள் அனைவருக்கும் பெரும் தலைகுனிவை ஏற்படுத்திவிட்டது.
புலிகள் இயக்கம் உட்பட அனைத்து இயக்கங்களும் இத்தாக்குதலுக்கும் தங்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை என்றே ஆரம்பத்தில் கூறிவந்தன.
ஆனால், இத்தாக்குதலை புலிகளே மேற்கொண்டனர் என்ற விடயம் நாளடைவில் எல்லோருக்கும் தெரிய வந்தது.
1985ம் வருடம் மே மாதம் 9ம் திகதி வல்வெட்டித்துறைப் பகுதியில் இளைஞர்கள் சிலர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கைகள் பின்னே கட்டிய நிலையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பழி வாங்கும் முகமாகவே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது.
இக்கால கட்டத்தில் போராட்ட இயக்கங்களிடையே இணக்கப்பாடுகள் சில எட்டப்பட்டிருந்தமை விN~ட அம்சமாகும். 1985 ஏப்ரல் மாதத்தில் புலிகள், ஈரோஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். போன்ற அமைப்புக்கள் இணைந்து ஈழமக்கள் விடுதலை அமைப்பை (நுNடுகு) அமைத்திருந்தன.
1982களில் போராட்ட இயக்கங்களிடையே குறிப்பிடத்தக்க பலமேதும் காணப்படவில்லை. இக்காலகட்டத்தில் அனைத்து போராளிகளினதும் இணக்கம் தேவை எனப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார்.
எனினும் ஈழமக்கள் விடுதலை அமைப்பை உருவாக்கிச் செயற்பட பிரபாகரன் விருப்பங் கொண்டிருக்கவில்லை.
இக்கால கட்டத்தில் புலிகள் இயக்கமும் ரெலோ இயக்கமும் சற்று பலம்வாய்ந்திருந்தன.
எனவே ஏனைய அமைப்புகள் ஓர் அமைப்பாக ஒன்றிணைவதன் ஊடாக புலிகள் போன்ற இயக்கங்களுக்கு பாதிப்பேற்படும் என பிரபாகரன் நம்பினார்.
இதனால் அவர் ஈழமக்கள் விடுதலை அமைப்பை விரும்பவில்லை. இருப்பினும் தனது விருப்பின்மையை பகிரங்கப்படுத்த அவர் முன்வரவில்லை. இந்த புதிய அமைப்பின் கூட்டங்களுக்கும் அவர் விருப்பமின்றியே சென்று வந்தார்.
தமிழர் விடுதலை அமைப்புக்களிடையே வெளித்தோற்றத்திற்குத் தெரிந்த இந்த இணக்கம் கண்டு தமிழ் மக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
இந்த நிலையில் இப்புதிய அமைப்பு உருவானதன் பின்னர் போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் உக்கிரமடைந்திருந்தன என்றே கூற வேண்டும். இவை அநேகமாக அப்பாவி பொதுமக்களை பெரும்பாலும் இலக்காகக் கொண்ட தாக்குதல்களாகவே அமைந்திருந்தன.
இப்னு அசூமத்
நன்றி: வெளிச்சம் இணையம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக