
திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. இதன் பிரகாரம் நான்கு அமைப்புக்களின் இணைவான ஈழத் தேசிய விடுதலை முன்னணி (நுNடுகு) தொடர்பில் பிரபாகரனுக்குள் ஆரம்பத்தில் இருந்த வெறுப்பு வெளியில் வருவதற்கான சந்தர்ப்பம் வாய்த்தது.
இந்த இணைவு உருவாக்கப்பட்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் அதன் கூட்டங்களில் கலந்து கொண்ட பிரபாகரன் பின்னர் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்து வந்தார்.
தனது சார்பில் இக்கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இரண்டாம் நிலை பிரதிநிதி ஒருவரை அனுப்பி வைத்திருந்தார். சிலகாலம் கழித்து அந்தப் பிரதிநிதியை விட குறைந்த மட்டத்திலான உறுப்பினர் ஒருவரை அனுப்பி வைத்தார். இவ்வாறு படிப்படியாக புலிகள் இயக்கம் அந்த இணைவில் இருந்து விலகிக் கொண்டதுடன் சகோதர இயக்கங்களுக்கிடையிலான மோதல்களையும் ஆரம்பித்தது.
தமிழ் போராட்ட அமைப்புகள் ஆரம்பமாவதற்கு முன்பு தொட்டே இவ்வாறான மோதல்கள் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க இயலும். புலிகள் இயக்கத்தை எடுத்துக் கொண்டால் அதன் ஆரம்பகால தலைவரான உமா மகேஸ்வரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் 1978 களிலேயே மோதல் நிலை உருவாகியிருந்தது.
இக்கால கட்டத்தில் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களே ஆகியிருந்தன. இதன் பிரகாரம் 1979ல் உமா மகேஸ்வரனை புலிகள் அமைப்பில் இருந்து பிரபாகரன் விலக்கி வைத்தாhர்.
பின்னர் உமா மகேஸ்வரன் வேறொரு இயக்கத்தை உருவாக்கிக் கொண்டார். இந்தப் புதிய இயக்கம் ‘ப்ளொட்’ என அழைக்கப்பட்டது.
1982ம் வருடம் பிரபாகரனுக்கும் உமா மகேஸ்வரனுக்கும் இடையில் இந்தியாவில் வைத்து துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்வாறு உள் மோதல்கள் படிப்படியாக வளர்ந்து 1986ம் வருடமாகும் போது அது உச்ச வடிவத்தை எடுத்திருந்தது.
1986ம் வருடமாகும் போது சிறி சபாரட்ணத்தின் ‘ரெலோ’ அமைப்புக்கும் பிரபாகரனின் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன.

இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டன. சபாரட்ணம் எப்போதுமே இந்திய மத்திய அரசுடன் நெருக்கமாக இருந்து செயற்பட்டவர். அதேபோன்று அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார்.
இந்த நிலையில் பிரபாகரன் எம்.ஜி. ராமச்சந்திரன் (ஆபுசு) போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தார். எம்.ஜி. ராமச்சந்திரன் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம் பெற்ற நடிகராகத் திகழ்ந்தவர். இலங்கையில் கண்டிப் பகுதியில் பிறந்துள்ள இவர் பின்னர் இந்தியாவுக்குச் சென்றார்.
தமிழக மக்களின் இதயம் கவர்ந்த திரைப்பட ஹீரோவாகப் புகழ்பெற்றிருந்த இவர் தென்னிந்திய அரசியலில் கவர்ச்சிமிக்க பலமானதொரு சக்தியாகத் திகழ்ந்தார்.
திரைப்படங்களின் மூலம் கட்டி எழுப்பப்பட்டிருந்த ஆளுமையானது எம்.ஜி.ஆரின் அரசியல் பிரபலத்திற்கு பெரிதும் காரணமாக அமைந்தது. தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்த இவர் பின்னர் அதிலிருந்து விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைத்துக் கொண்டார்.
கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக எம்.ஜி.ஆர். தி.மு.கவிலிருந்து வெளியேறி அ.தி.மு.க.வை ஸ்தாபித்துக் கொண்டார்.

பின்னர் 1977ம் வருடம் தமிழ் நாட்டின் முதலமைச்சராக நியமனம் பெற்ற இவர், கருணாநிதியின் முக்கிய அரசியல் எதிரியாக மாறினார். இதனால், கருணாநிதியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்களை எம்.ஜி.ஆர். ஒருபோதும் தன்னிடம் நெருங்க விடவில்லை.
இதனை அறிந்து கொண்டிருந்த பிரபாகரன் எப்போதுமே எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். கருணாநிதியுடன் தொடர்பு கொள்வதற்குரிய தேவைகள் தனக்கு இருப்பதாகக் கூட வெளியில் காட்டிக் கொள்ள பிரபாகரன் ஒருபோதும் விரும்பியதில்லை.
இந்த நிலையில் ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரட்ணம் கருணாநிதியுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தார். இதனால் பிரபாகரன் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான நபராக மாறியிருந்தார்.
ஒருமுறை எம்.ஜி.ஆர். பிரபாகரனுக்கு பாரியதொரு தொகையை வழங்கியிருந்தார். இத்தொகையைக் கண்ட பிரபாகரன் உண்மையிலேயே திகைத்துப் போய்விட்டார்.
புலிகள் அமைப்பிற்குள் நிதிப் பிரச்சினை நிலவுவதாகவும் இவ்விடயம் தொடர்பில் எம்.ஜி.ஆருடன் கலந்துரையாட வேண்டும் என்றும் அன்ரன் பாலசிங்கம் கூறியிருந்தார்.
இதன் பிரகாரம் எம்.ஜி.ஆரைச் சந்திக்கும் வாய்ப்பு அன்ரன் பாலசிங்கத்திற்குக் கிடைத்தது. இச்சந்திப்பு நடைபெற்ற சமயம் எம்.ஜி.ஆர். பெரிதும் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தார்.
எம்.ஜி.ஆரிடம் இருந்து கிடைக்கக் கூடிய ஏதாவது ஒரு தொகையை வாங்கிக் கொண்டு போகலாம் என்ற நோக்கத்துடன் பாலசிங்கம் இந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தார். இந்நிலையில் எம்.ஜி.ஆர். தனது கைவிரல்கள் இரண்டை ஏ எழுத்து வடிவத்தில் தூக்கிக் காட்டி “போதுமா?” என பாலசிங்கத்திடம் கேட்டிருக்கிறார்.
இரண்டு இலட்சம் ரூபா பணம் கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பில் பாலசிங்கம் “போதும்” என பதிலளித்திருந்தார்.
இறுதியில் எம்.ஜி.ஆர். இரண்டு கோடி ரூபா நிதியை வழங்கியதும் புலிகள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
இவ்வாறு எம்.ஜி.ஆரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டதால் பிரபாகரன் மென்மேலும் எம்.ஜி.ஆரின் பக்கமாக நெருங்கி வந்திருந்தார். அதாவது “எனது மகன்” என எம்.ஜி.ஆர். பிரபாகரனை அழைக்கும் அளவிற்கு இந்த நெருக்கம் உறுதியாக்கப்பட்டிருந்தது.
1985ம் வருடம் யாழ்ப்பாணத்தின் முக்கிய அரசியல் தலைவர்களாக விளங்கிய எம். ஆலாலசுந்தரம் மற்றும் வீ. தர்மலிங்கம் ஆகியோர் ரெலோ உறுப்பினர்களால் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் செப்டெம்பர் மாதம் நடந்தது. சிறி சபாரட்ணத்தின் பணிப்பின் பேரிலேயே இவர்கள் கொல்லப்பட்டனர் எனக் கூறப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்த இந்த அரசியல் தலைவர்களின் கொலைகள் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் மீதே குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

இச்சம்பவத்திற்கு முன்பதாக ஒருதடவை புலிகள் ஆலாலசுந்தரம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். எனவே இம்முறை ஆலாலசுந்தரம் கொல்லப்பட்டதும் அக்கொலையை புலிகளே செய்திருப்பர் என நம்பப்பட்டது.
தர்மலிங்கம் தொடர்பில் கூறுவதானால் அவரது மகனான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரபாகரனின் எதிரியான ப்ளொட் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் கொல்லப்பட பிரபாகரனே காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டதில் தவறில்லை.
இதே நேரம் இந்த இரு கொலைகளையும் சபாரட்ணம் கண்டித்திருந்தார்.
பிரபாகரனுக்கும் சபாரட்ணத்துக்கும் இடையில் எதிர்ப்பு உச்சநிலையை அடைவதற்கு இதுவும் ஒரு காரணம் எனக் கூறப்பட்டது.
இதனிடையே ரெலோ அமைப்பிற்குள் மோதல்கள் உருவாகி இருந்தன. ரெலோ அமைப்பில் சிறந்த போராளிகளுள் ஒருவராக இருந்த தாஸ் என்பவருக்கும் பொபி என்பவருக்கும் இடையில் மோதல்கள் நிலவின.
இந்த மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சபாரட்ணம் முயற்சித்தார். சபாரட்ணம் பொபி மீது அதிக அக்கறை செலுத்தி வந்தவர். அதே நேரம் தாஸ_டன் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். தாஸ_க்கும் பொபிக்கும் இடையில் இம்மோதல் நிலை உச்ச கட்டத்தை அடைந்திருந்த போது சபாரட்ணம் சென்னையில் இருந்தார்.
இந்த மோதலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலரது ஆலோசனைகளுக்கமைய சபாரட்ணம் யாழ்ப்பாணம் வந்து கல்வியங்காடு பகுதியில் தங்கி இருந்து நிலைமைகளை ஆராய்ந்து பார்த்தார்.

இந்த நிலையில் தாஸ் தன்னை மீறிச் செயற்படுவதை உணர்ந்து கொண்ட சபாரட்ணம் தாஸை கொலை செய்யத் தீர்மானித்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு பொபி மூலம் தாஸை அழைத்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டது.
இதன் பிரகாரம் 1986ம் வருடம் மார்ச் மாதம் 11ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு முல்லைத்தீவு மோகன், பருத்தித்துறை காளி, திருகோணமலை கிசான், வதிரி பீற்றர் ஆகியோரின் பாதுகாப்புடன் வந்த தாஸ் குழுவினர் மீது பொபி தலைமையில் காத்து நின்ற சபாரட்ணத்தின் குழுவினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது தாஸ் உட்பட அவருடன் வந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் கிருபாகரன் எனும் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் கொல்லப்பட்டார். இவர் வேலைணையை வாசியாவார். இச்சம்பவத்தை கண்டித்து மறுநாள் (மார்ச் 12) மாணவர்களும் பொதுமக்களும் ஊர்வலமொன்றை நடத்தினர். இந்த ஊர்வலத்தை நோக்கி ரெலோ அமைப்பினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒரு சிறுமியும் ஒரு வயோதிபரும் கொல்லப்பட்டு பலர் காயமடைந்தனர்.
தாஸின் கொலைக்குப் பின்னர் தாஸின் ஆதரவாளர்கள் ரெலோ அமைப்பிலிருந்து பிரிந்துச் சென்றனர். தாஸ் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் வடமராட்சி மக்கள் ரெலே அமைப்பின் மீது ஆத்திர முற்றிருந்தனர்.
இந்த நிலையில் சபாரட்ணம் தனது அமைப்பிற்குள்ளும் வெளியில் புலிகள் இயக்கத்துடனும் மோதல்களில் சிக்கிக் கொண்டிருந்தார்.
இதனிடையே 1986ம் வருடம் ஏப்ரல் மாதம் சுவரொட்டிகள் ஒட்டுவது தொடர்பான ஒரு சம்பவத்தின் போது ஏற்பட்ட பிரச்சினையால் புலிகள் இயக்க உறுப்பினர்கள் இருவர் ரெலோ அமைப்பினரால் தாக்கப்பட்டனர்.
இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் புலிகள் அமைப்பு, பிரபாகரனின் மெய் பாதுகாவலர்களில் ஒருவராக இருந்த லிங்கம் என்பவரை ரெலோ அமைப்புடன் கலந்துரையாடுவதற்கு அனுப்பி வைத்தது. இதன் போது ரெலோ உறுப்பினர்களால் லிங்கம் கொல்லப்பட்டார்.
இதன் பிரகாரம் 1986ம் வருடம் 29ம் திகதி காலை 11.00 மணி முதல் இலங்கையின் வட பகுதியில் இருந்த ரெலோ அமைப்பின் முகாம்கள் மீது புலிகள் பாரிய தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். 24 முகாம்கள் இதன் போது தாக்கப்பட்டன. அளவெட்டி, அரியாலை, கட்டுவன், வட்டுக்கோட்டை, மானிப்பாய், மயிலிட்டி, நாவாந்துறை, மிருசுவில் பகுதிகளில் இருந்த முகாம்கள் இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.
மிலேச்சத்தனமான முறையில் ரெலோ உறுப்பிர்கள் புலிகளால் கொல்லப்பட்டனர். மானிப்பாய் முகாமில் 12 ரெலோ உறுப்பினர்கள் நித்திரையில் இருந்த சமயம் கொல்லப்பட்டனர்.
திருநெல்வேலி, மல்லாகம், தெல்லிப்பளை, போன்ற இடங்களில் சுட்டுக் கொல்லப்பட்ட ரெலோ அமைப்பின் உறுப்பினர்கள் பின்னர் எரிக்கப்பட்டனர். யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இருந்து வந்திருந்த ரெலோ உறுப்பினர்கள் இந்நிலை கண்டு குலைநடுங்கினர்.

அவர்கள் அங்குமிங்குமாக ஓடினர். இவ்வாறு ரெலோ முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதுடன் ரெலோ உறுப்பினர்கள் காணாமற்போக ஆரம்பித்தனர். ஒருசிலர் புலிகளிடம் சரணடைந்தனர். சரணடைந்த ரெலோ உறுப்பினர்களைக் கூட சுட்டுக் கொல்லும் அளவிற்கு புலிகள் இயக்க உறுப்பினர்கள் குரூரமான மனநிலை கொண்டிருந்தனர்.
இதனிடையே ரெலோ அமைப்பின் தலைவர் சிறி சபாரட்ணம் கைது செய்யப்பட வேண்டிய நபர் என்றும் அவர் தேடப்பட்டு வருகிறார் என்றும் புலிகள் கூறிவந்தனர்.
இந்நிலையில் கல்வியங்காடு, நீர்வேலி, கோப்பாய் போன்ற பகுதிகளில் மறைந்திருந்த சபாரட்ணம் கோண்டாவில் பகுதிக்கு வந்திருந்தார். புலிகளின் செயற்பாடுகளை உணர்ந்த நிலையில் இவர் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவிற்கு தன்னைக் காப்பாற்றுமாறு தகவல் அனுப்பி இருந்தார்.
மிகவும் உருக்கமான இத்தகவலை ஏற்ற பத்மநாபா, வயர்லஸ் மூலம் ரோ இயக்க உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, புலிகள் இயக்கத்திற்கு அழுத்தம் கொடுத்து சபாரட்ணத்தைக் காப்பாற்ற உதவுமாறு கேட்டுக் கொண்டார். எனினும் ‘ரோ’ அமைப்பிடம் இருந்து சாதகமான பதில் கிட்டாத நிலையில் சபாரட்ணத்தைக் காப்பாற்றுவதற்கு பத்மநாபா ஒரு திட்டத்தைத் தீட்டினார்.
இதன் பிரகாரம் சபாரட்ணத்தை இரகசியமான முறையில் தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மோட்டார் படகொன்றைப் பயன்படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், மறைந்திருக்கும் இடத்திலிருந்து மோட்டார் படகு இருக்கும் இடத்திற்கு சபாரட்ணத்தைக் கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. பின்னர் இதற்கென ட்ரக் வண்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. புகையிலை ஏற்றப்பட்டிருந்த இந்த ட்ரக் வண்டியில் புகையிலைக் கட்டுகளுக்கிடையில் சபாரட்ணத்தை மறைத்து கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தின் பிரகாரம் சபாரட்ணத்தை நீண்ட தூரம் கொண்டு செல்ல இயலாமற் போய்விட்டது. சபாரட்ணத்தைத் தேடி அலைந்து கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் ட்ரக் வண்டி அகப்பட்டுக் கொண்டது.
புகையிலைக் கட்டுகளுக்கிடையில் மறைந்திருந்த சபாரட்ணத்தை புலிகள் இயக்க உறுப்பினர்கள் கண்டு கொண்டனர். தனது உயிரைக் காப்பாற்றுமாறு சபாரட்ணம் புலிகள் இயக்க உறுப்பினர்களிடம் கேட்டுள்ளார்.
எனினும் உடனடியாக செயற்பட்ட கிட்டுவின் அ-16 ரைபிள் 28 தோட்டாக்களைப் பாய்ச்சி சிறி சபாரட்ணத்தை மௌனமாக்கிவிட்டது. 28 தோட்டாக்களால் துளைக்கப்பட்டிருந்த சபாரட்ணத்தின் உடலை பஸ் நிலையத்தில் காட்சிக்கு வைக்க புலிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதன் பிரகாரம் 1986ம் வருடம் மே மாதம் 7ம் திகதி ரெலோ தலைவர் சிறி சபாரட்ணத்தைக் கொலை செய்த புலிகள் யாழ்ப்பாணத்தில் போராட்டக் குழுக்களிடையேயான ஆதிக்கத்தை தம்வசம் எடுத்திருந்தனர்.
இதன் பின்னர் பத்மநாபா தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பு பிரபாகரனின் அடுத்த இலக்காக மாறியது. ஈரோஸ் அமைப்பு தனது கொள்கைகளை மறந்து புலிகளின் காலில் விழுந்து விட்டது.
புலிகளால் ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போது பத்மநாபாவினால் ரெலோ இயக்க உறுப்பினர்கள் பலர் காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் பின்னர் சபாரட்ணம் உட்பட ரெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்டமையை நியாயப்படுத்துவதற்கு புலிகள் பிரச்சாரமொன்றைக் கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
இதன் போது புலிகள் இரு முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.
ஒன்று – ரெலோ அமைப்பு மக்களைத் துன்புறுத்தி வந்ததுடன் மக்களது சொத்துக்களை கொள்ளையிட்டுள்ளது.
இரண்டாவது – ரெலோ அமைப்பு இந்திய சர்வாதிகார அரசின் முகவராக செயற்படுகின்றது.
இந்த இரு விடயங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல புலிகள் முயற்சித்தனர்.
இதன் போது முதலாவது விடயத்தை உறுதிப்படுத்துவதற்கும் தங்களது பரிசுத்தத் தன்மையை வெளிப்படுத்துவதற்குமாகப் புலிகள், ரெலோ அமைப்பினரால் கொள்ளையிடப்பட்ட பொருட்களை புலிகள் இயக்கம் பொதுமக்களுக்குத் திரும்பித் தரும் என்றொரு பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.
எனினும் உபயோகிக்கப்பட்ட பழைய வாகனங்கள் சிலதையும், சில மின் உபகரணங்களையும் மாத்திரம் மக்களிடையே பகிர்ந்து கொடுத்த புலிகள் தங்க நகைகள் எதனையும் அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கவில்லை.
இதனால் புலிகள் மக்களுக்கு நெருக்கமானவர்கள் அல்ல என்ற விடயம் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்காக தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மாத்திரம் புலிகளால் இரகசியமான முறையில் கோவிலிற்கு வழங்கப்பட்டன.
அதே நேரம் புலிகளால் ரெலோ அமைப்பு தொடர்பில் கூறப்பட்டிருந்த இரண்டாவது விடயமும் பொய்யென்பதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.
ஏனெனில் ரெலோ அமைப்பு மட்டுமல்லாது தமிழ் போராட்ட அமைப்புகள் பலவும் அக்காலகட்டத்தில் இந்தியாவுடன் ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு வைத்துக் கொண்டே இருந்தன.
சிறி சபாரட்ணம் கொல்லப்பட்டது இன்னுமொரு தமிழ் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களால் அன்றி வேறு எதிரிகளால் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிரபாகரனின் தலைமை தொடர்பிலான வெறியே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
இதே அடிப்படையில் பிரபாகரன் தமிழீழ விடுதலை படையின் தலைவர் ஒபரோய் தேவன் மற்றும் தமிழீழ புரட்சிகர மக்கள் விடுதலைப் படையின் உருவாக்கத்திற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த மனோ மாஸ்டர் போன்றவர்களை இதற்கு முன்பே கொலை செய்திருந்தமையும் குறி;பபிடத்தக்கது.
இப்னு அசூமத்
நன்றி: வெளிச்சம் இணையம்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக