வெள்ளி, 9 ஏப்ரல், 2010

மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் தந்துள்ள தேர்தல் முடிவுகள்

ஏழாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் நாடு முழுவதிலும், நேற்று முன்தினம் நடை பெற்ற தேர்தல்களில் வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதி கூடிய வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியீட்டியுள்ளது.  இதேவேளை ஐக்கிய தேசிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணி என்பன பாரிய பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன. அதேபோன்று வடக்குகிழக்கை மையமாகக் கொண்டு போட்டியிட்ட தமிழரசுக் கட்சி தனது நிலையை ஓரளவுக்கு தக்க வைத்துக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலில் வெற்றிவாகை சூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கோரியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை வேட்பு மனு தாக்கல் செய்த தினத்திலிருந்து ஐக்கிய தேசிய முன்னணி எதிர்நோக்கிய சவால்கள் அதன் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியை பிரதானமாகக் கொண்ட ஜனநாயக தேசிய கூட்டணிக்கும் எதிர்பார்த்த வெற்றி கிட்டாமல் போனது. கடந்த காலங்களில் கடும் போக்கை கொண் டிருந்த மக்கள் விடுதலை முன்னணி பின்னர் தனது போக்கில் நெகிழ்வு தன்மையை கடைப்பிடித்த போதிலும், கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் அதன் தொடர்ச்சியான தோல்விகளுக்கு வழி வகுத்தது என்று கூறலாம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து செயற்பட்ட மக்கள் விடுதலை முன்னணி நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.க.வுடன் ஓர் உடன்பாட்டை மேற்கொள்ள முடியாது போனது. இரு கட்சிகளும் தங்கள் தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டன. இருந்த போதிலும், தேர்த லில் கணிசமான அளவு ஆசனங்கள் பெறமுடியாது போனது இரு கட்சிகளுக்கும் ஓர் பின்னடைவாகவே அமைந்து விட்டது எனலாம்.

இதேவேளை நடந்து முடிந்த தேர்தலை பார்க்குமிடத்து மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதும் ஏனோ தானோ என்ற போக்கிலேயே அவர்கள் இருந்து விட்டதும் புலனாகின்றது. அந்த வகையில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல் வேறு பகுதிகளிலும், வாக்களிப்பு வீதம் மிகவும் குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 74.5 சத வீத மக்கள் வாக்களித்திருந்த நிலையில் பொதுத் தேர்தலில் 50க்கும் 55 க்கும் குறைவான மக்களே தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 76 வீதமான மக்கள் வாக்களித் துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மக்கள் வாக்களிக்கும் தங்கள் ஜனநாயக உரிமையை பயன்படுத்தாமல் போனது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இதற்கு பல்வேறு காரணங்களும் கூறப்படுகின்றன. குறிப்பாக அதிகரித்துள்ள வன்முறைகள் நம்பிக்கையீனங்கள் வேட்பாளர்கள் தொடர்பான அதிருப்தி, மற்றும் தேர்தலில் அக்கறை இன்மை போன்ற விடயங்கள் பிரதானமாக கூறப்படுகின்றன. எவ்வாறு இருந்த போதிலும், தேர்தலைப் புறக்கணிப்பதோ அன்றேல் வாக்களிப்பை தவிர்ப்பதோ இவ்வாறான நிலைமைகளை இல்லாது செய்து விடும் என்று எவரும் எதிர்பார்க்கக் கூடாது.
மறுபுறம் அவற்றுக்கு மேலும் வாய்ப்புக்களை அளிப்பதாகவே “அமைந்து விடும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

இதேவேளை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அங்கு இடம் பெற்றதாக கூறப்படும் தேர்தல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் வரை இப்பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் 15 பேர் கைது செய்யப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

நாவலப்பிட்டித் தேர்தல் தொகுதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களின் வாக்காளர் அட்டைகள் மாற்றுத் தரப்பு வாக்களர்களின் ஆதரவாளர்களால் அபகரித்து செல்லப்பட்டதாகவும், இவ்வாறு அபகரித்த வாக்குகளின் எண்ணிக்கை 15 ஆயிரம் வரை இருப்பதாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். திருகோணமலை வடக்கு பிரதேசத்தில் உள்ள சலப்பை ஆற்றுப்பகுதியில் இடம் பெயர்ந்த மக்கள் வாக்களிக்கச் சென்றபோது அவர்களின் வாக்குச் சீட்டுக்குள் கிழித்தெறியப்பட்டதாக தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தேர்தல் தினத்தில் மாத்திரம் 176க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்புக்குழு அமைப்புக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
இருந்த போதிலும் தேர்தல் வாக்களிப்புகள் அனைத்தும் அமைதியாக முடிவுக்கு வந்ததாகவும், அவை சுட்டிக்காட்டியுள்ளன.

தேர்தல் முடிவுகள் ஒரு பிரிவினருக்கு மகிழ்ச்சியையும் ஒரு பிரினருக்கு அதிர்ச்சியையும் தோற்றுவித்திருக்கலாம். எவ்வாறு இருந்த போதிலும், மக்களுக்கு சேவை செய்யப் போவதாக கூறி புறப்பட்டவர்களுக்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்கியுள்ளனர். அதனை அவர்கள் அடுத்த ஆறு ஆண்டுகாலம் நிரூபித்துக் காட்டுவதன் மூலமே மக்கள் மனதில் நிரந்தர இடத்தை வகிக்கக் கூடியதாக இருக்கும் என்பதை எடுத்துக் கூற விரும்புகின்றோம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல