திங்கள், 12 ஏப்ரல், 2010

குளக்கரை அம்மன்

அவர் துயில் கலைந்து எழுந்தபோது பொழுது இன்னமும் முழுமையாகப் புலரவில்லை. ஒரு கொட்டாவியுடன் பாயைச் சுருட்டி ஒரு மூலைக்குள் வைத்து விட்டுக் கூடாரத்தை விட்டு வெளியே வந்தார்.

அவரின் மனைவி கெளரி இரு கூடாரங்களுக்குமிடையேயிருந்து சட்டி பானை கழுவிக்கொண்டிருந்தாள். அவரின் இரு பெண் பிள்ளைகளும் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை.

அவரும் அவர்களை எழுப்புவதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யவில்லை. அவர்கள் எழுந்துதான் என்ன செய்வது.

அவசர அவசரமாக மரக்கறிகளைப் பிடுங்கி சந்தைக்குக் கொண்டு செல்வதற்காகப் பசளைப் பையில் கட்டுவதற்கோ, அல்லது மணியடிப்பதற்கு முன்பாகப் பாடசாலைக்குப் போக வேண்டும் என்றோ எந்த ஒரு தேவையும் அவர்களுக்கு இருக்கவில்லை.

கஷ்டப்படுவதிலும், கஷ்டப்படுவதால் கிடைக்கும் பலன்களிலும் ஒரு விதமான இன்பத்தை அனுபவித்த அந்தக் குடும்பம் சோம்பேறித் தனத்தின் ஒவ்வாமைக்குள் சிக்கிச் கலிப்படைந்து போயிருந்தது.

கூடார வாசலில் நின்று சுற்றும் முற்றும் பார்த்த செல்வராசாக தனது காதுகள் ஒரு விதமான வெறுமையை அனுபவிப்பதை உணர்ந்துகொண்டார். அங்குமிங்கும் ஒலிக்கும் பறவைகளின் அதிகாலைக் கலகலப்பையோ காதில் வந்து மோதும் கோவில் மணியோசையையோ அவரால் கேட்க முடியவில்லை.

அவர் திருவையாற்றில் இருக்கும்போது கனகாம்பிகை அம்மன் கோவிலின் அதிகாலை பூசைக்கான ஆயத்தமணி கேட்டுத் தான் நித்திரை கலைந்து எழுவதுண்டு.

எத்தனையோ மைல்கள் தொலைவில் வந்த பிறகும் மணியோசையை எதிர்பார்க்கும் தன் மடமையை எண்ணி ஒரு பெருமூச்சை வெளியே விட்டார்.

இப்போ அந்த மணியை ஒலிக்க வைக்க எவருமே இருக்கமாட்டார்கள் என்பதும் அவரின் மனதில் வந்து போனது.

அன்று வெள்ளிக்கிழமை என்பதை வெகு சிரமப்பட்டுக் கணக்குப் போட்டே கண்டு பிடித்தார். இப்போதெல்லாம் கிழமை பற்றியோ திகதி பற்றியோ நினைத்துப் பார்ப்பதில்லை. எல் லாமே குழப்பமாகப் போய்விட்ட அந்த நாட்களில் அவை மட்டும் எப்படித் தெளிவாக இருக்க முடியும்.

வழமையாக அவர் வெள்ளிக்கிழமைகளின் காலையில் தோட்ட வேலைகளை முடிந்து விட்டு தலை குனிந்து அம்மன் கோவிலுக்குப் போய் மதியப் பூசை கண்டுவிட்டு வந்தே தேநீர் கூட அருந்துவார். அதன் பிறகு தான் மதிய உணவு.

இப்போ அவர் சென்று வணங்க இரணைமடுக் குளக்கரை அம்மனும் அவரருகில் இல்லை. வெள்ளிக்கிழமை விரத பழக்கமும் அவரிடம் இல்லை.

குளிப்பதே ஒரு பெரும் பிரச்சினையாகி விட்ட பிறகு விரதத்தை மட்டும் எப்படிக் கடைப்பிடிக்க முடியும்? அன்றும் இப்படித்தான் ஒரு வெள்ளிக்கிழமையில் மதியப் பூசை கண்டு விட்டு வீட்டுக்குப் புறப்படத் தயாரான போதுதான் குருக்களின் அழைப்பு அவரின் புறப்படுகையை நிறுத்தியது.

அன்று வழிபாட்டில் அவரின் மனம் லயிக்கவேயில்லை. அம்மன் பூசை காண்பது இதுவே கடைசித்தரமாக இருக்குமோ எனற எண்ணம் அடிக்கடி தோன்றி அவரின் மனதை உந்திக்கொண்டிருந்தது.

சோமசுந்தரக் குருக்கள் அவரின் அருகில் வந்தார். ‘என்ன செல்வராசர்- என்ன முடிவெடுத்திருக்கிறியள்..’ செல்வராசாவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

‘வெளிக்கிடலாம் எண்டு பார்க்கிறம்.. மேலும் வீட்டின்ரை கூரை மரம் தடி, யன்னல் கதவு எல்லாம் கழட்டினம்... பின்னேரம் வட்டக்கச்சிப் பக்கம் ஏத்துவம் எண்டு யோசிக்கிறம்.

ஐயர் சோர் வுடன் கேட்டார் வயலுகள் குடலையும் கதிரு மாய்க் கிடக்குது அதுகளையெல்லாம் விட்டிட் டுப் போகப் போறியளே?’

இன்னும் ஓரிரு மாத ங்களில் அரிவி வெட்டிச் சூடடி தொடங்கி விடும். இது முடிய கனகாம்பிகை அம்மனின் ஊர்வலம் ஆரம்பமாகி விடும்.

இரணைமடு விலிருந்து புறப்படும் அம்மன் அக்குளத்தின் நீர் பாயும் ஊர்களுக்கெல்லாம் ஊர்வலமாகப் போய் வரும். விவசாயிகள் நெல்லு, தேங்காய் என அள்ளியள்ளிக் கொடுப்பார்கள்.

ஊர்வலம் முடிய வாரத்திற்கு மேலாகிவிடும். பின்பு சில நாட்கள் கழிந்து வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகும். அந்தப் பந்து நாட்களும் இரணைமடுச் சுற்றாடல் பெரும் விழாக்கோலம் பூண்டு விடும். தேரோட்டத்திலன்று முழுக் கிளிநொச்சி மாவட்டமுமே அங்கு திரண்டுவிடும்.

ஊர்வல நாட்களில் செல்வராசாவும் அம்மனுடன் புறப்பட்டு விடுவார். அவரின் உழவு யந்திரத்திலேயே அம்மனை ஏற்றுவார்கள். அவரும் அந்த நாட்களில் வீட்டுக்கு வருவதில்லை.

அம்மன் தங்கும் கோவில்களிலேயே அவரும் தங்குவார். அங்கு கொடுக்கப்படும் அன்னதானமே அவரின் உணவு. ஐயரின் கேள்வி அவரைச் சில வினாடிகள் மெளனிக்க வைத்தது.

சிறிய தயக்கத்தின் பின்பு, ‘என்னய்யா செய்யுறது? உயிரையாவது காப்பாத்த வேணுமே... இரவும் இரண்டு செல்லுகள் வீடுகளைக் கடந்துபோய் வயலுக்கை விழுந்திருச்சே. நல்ல காலம் குடிமனையளுக்கை விழேல்லை.. இனி விழாது எண்டு என்ன நம்பிக்கை என்றார் செல்வராசா!

மூலஸ்தானத்தில் வீற்றிருந்த அம்மனை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு ஐயர் ஒரு பெருமூச்சுடன் சொன்னார், எல்லாச் சனமும் வெளிக்கிடுது..

நான் என்னண்டு அம்மனை விட்டிட்டு வாறது? எல்லோரும் கடவுள் தான் துணை என்று நம்பி வழிபட ஐயர் மட்டும் அம்மனுக்குத் துணையாகத் தான் இருக்க வேண்டும் என நினைப்பதை எண்ணி அவரின் மனம் நெகிழ்ந்து கொண்டது.

செல்வராசா ஐயரை ஒரு முறை அன்பு கலத்த ஒரு மரியாதையுடன் நோக்கிவிட்டு, ‘ஐயா.. நாங்கள் சில விஷயங்களிலையிருந்து படிக்க வேணும்..

சும்மா படிச்சுக்கொண்டு திரிஞ்ச குஞ்சு குமரெல்லாத்தையும் குலைநிலையாய்ப் பலி குடுக்கிறது தான் கண்ட பலன். எதுக்கும் வெளியேறுறது தான் நல்லது என்றார் செல்வராசா.

குருக்கள் சொல்வதில் ஒரு நியாயபூர்வமான ஆழம் இருப்பதாகவே செல்வராசாவுக்குட்பட்டது.

சம்பூரிலிருந்து ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து அந்தந்த இடத்து மக்களையும் அள்ளிக்கொண்டு வாகரைக்குள் போய் முடங்கியதும், கடைசியில் இராணுவம் அந்த மக்களைச் சுற்றி வளைத்து முற்றுகையிட்டு மீட்டெடுத்ததும் அவரின் நினைவுக்கு வந்து போனது, சம்பூரில் இடம்பெயர ஆரம்பித்ததிலிருந்து வாகரையில் மீட்பு இடம்பெறும் வரை ஏற்பட்ட உயிரிழப்புகளும் மக்கள் சந்தித்த அவலங்களைu நினைத்தபோது அவரின் நெஞ்சு ஒருமுறை அளவிட முடியாத பயத்தில் குலுங்கியது.

அப்ப என்னய்யா செய்வம்?

செல்வராசா நீங்கள் இடம் பெயருறது எண்டு முடிவு செய்திட்டியள். ஊரோடை ஒத்தோடுங்கோ... நான் அம்மனை விட்டிட்டுப் போறேல்லை எண்டு முடிவு செய்திட்டன்.

நான் எங்கையும் போகேல்லை இரண்டு பேரின்ரை முடிவிலையும் எது சரி எண்டு முடிவெடுக்கிற சக்தி எங்கள் எவரிலையுமில்லை என்று கூறிய ஐயர் சற்று நிறுத்தி விட்டு மீண்டும் ஒரு பெருமூச்சுடன் சொன்னார். உயிருடன் இருந்தால் ஒரு காலம் சந்திப்பம்.

இப்போது அவரின் கண்கள் இலேசாகக் கலங்கியிருந்தன. ஐய சொல்லியதைப் போலவே வட்டக்கச்சி, கண்டாவளை, தர்மபுரம், புன்னைநீராவி இருட்டுமடு, தேவிபுரம், இரணைப்பாலை என ஒவ்வொரு இடமாக வரிசையாக இடம் பெயர்ந்து மாத்தளனிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான ஒரு சிறு இடத்திற்குள் முடங்கியாகிவிட்டது.

அடுத்து எங்கே போவது என்ற கேள்வியே எழ முடியாத நிலை. எந்த நேரம் உயிர் பறிபோகுமோ என்ற அச்சத்துடன் கூடிய வாழ்வு. பசியும் பட்டினியும் மனிதர்களைக் குருவிச்சையாக உறுஞ்சிக்கொண்டிருந்தன.

ஐயர் கோவிலில் தான் இருக்கிறாரா அல்லது அவரும் கடைசியில் இடம் பெயர்ந்து விட்டாரா என்பதைச் செல்வராசாவால் அறியமுடியவில்லை.

சட்டிபானை கழுவி, முடிந்த அவரின் மனைவி, ‘என்னப்பாபடுக்கையாலை எழும்பி வந்து ஆகாசத்தைப் பார்த்து யோசிச்சுக்கொண்டு நிற்கிறார். எனக் கேட்டாள்.

அவர் விரக்தி கலந்த சிரிப்புடன், கனகாம்பிகை அம்மனை ஊர்வலம் கொண்டு போக வேணும் ..... ட்றக்ரரை இருட்டுமடுவிலை விட்டிவிட்டு வந்திட்டன். அது தான் என்ன செய்யலாம் எண்டு யோசிக்கிறன் என்றார்.

அவள் கண்கள் மெல்லக் கலங்கின.

அந்த நாள் வராமலே போகும். அம்மன் வழியுண்டாக்குவ என்று விட்டு உள்ளே சென்றாள் அவள். அந்த நாளுக்கான ஏக்கம் அவரின் மனதிலும் எழத்தான் செய்தது. ஏனோ நம்பிக்கை மட்டும் வர மறுத்தது.

அவர் கடற்கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பெரும்பாலான மக்களின் காலைக்கடன் மையமாகக் கடற்கரை மாறி விட்டிருந்தது.

கடற்கரையிலிருந்து அவர் திரும்பிக்கொண்டிருந்தபோது தான் எதிர்பாராத விதமாக அந்த அதிசயம் நடந்தது. சோமசுந்தரக் குருக்களின் மூத்த மகன் வைத்தீஸ்வரன் வந்துகொண்டிருந்தார். அவர் கையில் ஒரு பூக்கூடையும் கெவர் தடியும் இருந்தன. ஆனால் கூடை வெறுமனேயே இருந்தது.

செல்வராசா ஆச்சரியத்துடன் கேட்டார். ‘ஐயா.. எங்கை இஞ்சை இருக்கிறியள்?’ அவர் அமைதியாகப் பதில் சொன்னார். ‘வலைஞர்’ மடத்திலை இருக்கிறம். இண்டைக்கு வெள்ளி அம்மனின்ரை படத்துக்கெண்டாலும் பூ போடுவம் என்று பூ தேடுறன்.. கிடைக்குதில்லை?

‘பெரியய்யா என்ன செய்யிறார்’. ஆவலுடன் கேட்டார், செல்வராசா

‘அப்பா...’என்று விட்டு இடைநிறுத்திய வைத்தீஸ்வரன்.. ‘என்னையும் அம்மா தங்கச்சியவையும் வில்லங்கப்படுத்தி அனுப்பிப் போட்டு அவர் அங்கேயே நிண்டிட்டார். எவ்வவோ கெஞ்சியும் வரமாட்டன் எண்டிட்டார்’ என்றார். அவரின் குரல் தளதளத்தது. செல்வராசா மலைத்தே போய்விட்டார்.

‘அப்படியெண்டால்...’ என இழுத்தார் செல்வராசா.

‘கிளிநொச்சியிலை வராமல் நிண்ட பதி னைஞ்சு இருபது சனத்தை ஆமி வவுனியா வுக்கு எந்திக்கொண்டு போனவங்கள் எண்டு சனம் கதைச்சுது. இவரும் அப்பிடிப் போனாரோ இல்லாட்டில் அதற்கு மேல் எதுவும் பேசமுடியவில்லை. குரல் அடைப் பட்டு விட்டது போலவே தோன்றியது.

அவர் ஆமியோடை தான் போயிருப்பர்’ என வைத்தீஸ்வரனைச் சமாளித்தார் செல் வராசா. அந்த வார்த்தைகளால் அவரும் சற்று ஆறுதல் அடைந்தது போலவே தோன் றியது.

கடைசியாகச் செல்வராசா சோம சுந்தரக் குருக்களை கடைசியாகச் சந்தித்த போது அவர் கூறிய வார்த்தைகள் மீண்டும் செல்வராசாவின் காதில் ஒலித்தன. ‘நான் என்னண்டு அம்மனை விட்டிட்டு வாறது?’

விஷ்ணு புத்திரன்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல