டைரக்டர் பாரதிராஜாவின் ``கிழக்கே போகும் ரெயில்'' தமிழ் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் சுதாகர். இவர் ``சுவர் இல்லாத சித்திரங்கள்'', ```ஆயிரம் வாசல் இதயம்'', ``எதிர்வீட்டு ஜன்னல்'', ``எங்கள் வீட்டு ராஜாத்தி'' உள்பட ஏராளமான தமிழ் சினிமா படங்களில் நடித்து இருக்கிறார்.
தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் சிரிப்பு நடிகராக நடித்து வருகிறார். 500-க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்து இருக்கிறார். சில இந்திப் படங்களிலும் நடித்து உள்ளார்.
54 வயதான சுதாகர் உடல் நலம் சமீபத்தில் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவர் சினிமாவில் நடிப்பது குறைந்தது.
இந்த நிலையில் கடந்த ஜுன் 29-ந்தேதி அவர் ஐதராபாத்தில் உள்ள ``கேர்'' ஆஸ்பத்திரியில், தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது அவர் சுயநினைவு இன்றி ``கோமா'' நிலையில் இருக்கிறார். சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
நடிகர் சுதாகரின் உடல் நிலை பற்றி டாக்டர்கள் கூறும்போது, ``சுதாகர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். இன்னும் 48 மணி நேரம் கடந்தால்தான் எதுவும் உறுதியாக கூற முடியும்'' என்று தெரிவித்தனர்.
``நந்தி'' விருதை இரு முறை இவர் பெற்று இருக்கிறார். திருமணம் ஆன இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக