தலைநகர் கொழும்பிலும் அதன் புறநகர்ப்பகுதிகளிலும் கடந்த இரு மாதங்களில் பத்து பிச்சைக்காரர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இக்கொலைகள் வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு, மருதானை, ஆமர் வீதி, பேலியகொடை மற்றும் கல்கிசை பகுதிகளிலேயே இடம்பெற்றிருக்கின்றன. சகல சம்பவங்களிலுமே பிச்சைக்காரர்கள் மழுங்கலான பொருட்களினாலேயே தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இச்சம்பவங்களுக்கு ஒருவர் தான் பொறுப்பாக இருந்து வந்திருக்கின்றாரா அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூட்டாக இக்கொலைகளைச் செய்கிறார்களா என்பது பற்றி இதுவரை எந்தத் தடயமுமே இல்லை. கொலைகாரரோ அல்லது கொலைகாரர்களோ நித்திரையில் ஆழ்ந்திருந்த பிச்சைக்காரர்களின் மண்டைகளை நொருக்குவதற்குச் செங்கல் துண்டுகளை அல்லது பெருங்கற்களையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கும் ஒரே பாணியிலான இக்கொலைகள் பிச்சைக்காரர்கள் சமூகத்தின் மத்தியில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களைப் பாதுகாப்பதற்காகப் பிச்சைக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. வீதிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு மேடைகள் மற்றும் நன்கு வெளிச்சமாக உள்ள பகுதிகளிலேயே பிச்சைக்காரர்கள் தற்போது தூங்குகிறார்கள். பெரும்பாலும் தனியாகப் படுப்பதைத் தவிர்த்து பலர் சேர்ந்து கூட்டாக ஓரிடத்தில் நித்திரை செய்யும் போது ஒரு பிச்சைக்காரர் காவல் காக்கும் நடைமுறையும் கூட அவர்களினால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. இந்த மர்மக் கொலைகள் தொடர்பில் பொலிஸாரினால் இதுவரை சந்தேகத்தின் பேரில் ஒருவரை மாத்திரமே கைது செய்யக்கூடியதாக இருந்திருக்கிறது. பிச்சைக்காரர்கள் இரந்து தேடி வைத்திருக்கும் சொற்பப் பணத்தைப் பறிப்பதற்காகவே மர்ம நபர்கள் இக்கொலைகளைச் செய்திருக்கக் கூடும் என்பதே பொலிஸாரின் சந்தேகமாக இருக்கிறது.
களவுக்காக அலைந்து திரியும் ஒருவரா அல்லது திட்டமிட்ட ஒரு குழுவா இக்கொலைகளின் பின்னணியில் இருக்கிறது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகப் பொலிஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். கொலைகளின் தொடரில் பிந்திய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை கல்கிசையில் இடம்பெற்றிருக்கிறது. முச்சக்கர வண்டியில் நடமாடி லொத்தர் சீட்டுகள் விற்பனை செய்து வாழ்க்கையை ஓட்டும் ஊனப்பிறவியான நடுத்தர வயது ஆண் ஒருவரே இதில் கொல்லப்பட்டிருக்கிறார். கொலைகாரனோ அல்லது கொலைகாரர்களோ அடுத்த தாக்குதலை நடத்துவதற்கு முன்னதாக இத்தொடர் கொலைகள் குறித்த விசாரணைகளில் முன்னேற்றத்தைக் கண்டுவிட முடியுமென்ற நம்பிக்கை இருப்பதாகப் பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரஷாந்த ஜெயக்கொடி ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கிறார்.
தென்னிலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யினர் ஆயுதக் கிளர்ச்சியை முன்னெடுத்த காலகட்டங்களிலும் வடக்கு,கிழக்கில் உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலகட்டத்திலும் இளைஞர்கள் வீதியோரங்களில் ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டும் சுட்டுக்கொலை செய்யப்பட்டும் பெரும் எண்ணிக்கையில் சடலங்களாக் கிடந்த யுகமொன்று இருந்தது. இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய சகல கிளர்ச்சிகளுமே முறியடிக்கப்பட்டு கடந்த வருட நடுப்பகுதியில் உள்நாட்டுப் போரும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதன் பின்னர் முழு உலகிற்குமே முன்னுதாரணமான முறையில் அமைதியை நிலைநாட்டியிருப்பதாக அரசாங்கம் பெருமை பேசுகின்ற சூழ்நிலையில் எவருமே எதிர்பாத்திராத ஒரு பிரிவினர் அதுவும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த தலைநகரிலும் சுற்றுப்புறங்களிலும் கொலை செய்யப்பட்டு வருகின்ற ஒரு பரிதாபகரமான நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கிறது. தங்களது அன்றாட உணவுக்காகக் கையேந்திப் பிச்சை எடுப்பவர்கள் கொலை செய்யப்படுவதென்பது உலகின் வேறு எந்தப் பகுதியிலுமே ஒரே பாணியில் இடம் பெற்றதாக நாம் இதுவரையில் கேள்விப்பட்டதில்லை.
உள்நாட்டுப் போர்க் கால கட்டத்தில் இலங்கையில் இடம் பெற்றிருக்கக் கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச அமைப்புகளும் உலகநாடுகளும் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டு வந்திருக்கின்றன. போரின் இறுதிக்கட்டத்தில் இடம் பெற்றிருக்கக் கூடிய உரிமை மீறல்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கிமூன் இருவாரங்களுக்கு முன்னர் நிபுணர் குழுவொன்றை நியமித்த விவகாரம் இலங்கைக்கும் ஐ.நா.வுக்கும் இடையே பாரிய இராஜதந்திரச் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. இதனிடையே பிச்சைக்காரர்கள் கொலை தொடர்பாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று அதன் விசனத்தை வெளியிட்டிருக்கிறது. பிச்சைக்காரர்களின் வேடத்தில் விடுதலைபுலிகள் தலைநகருக்குள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று அரசாங்கம் விடுத்த அறிவிப்பு தொடர்ச்சியாகப் பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்படுகின்ற விபரிதமான சூழ்நிலையைத் தோற்றுவித்திருகக் கூடுமென்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறது. தகவல்களைத் திரட்டுவதற்காக நாடு பூராவுமுள்ள நகரங்களில் பிச்சைக்காரர்கள் போன்று விடுதலைப் புலிகள் திரிகிறார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பயிற்சி அளிக்கப்பட்ட இந்த பிச்சைக்காரர்கள் என்று சொல்லப்படுவோரை அரசாங்கப் புலனாய்வு அமைப்புக்கள் அடையாளம் கண்டிருக்கின்றன என்று பிரதமர் டி.எம்.ஜெயரத்ன தெரிவித்ததாகக் கூறப்படும் கூற்றொன்றை ஆசியமனித உரிமைகள் ஆணைக்குழு அதன் அறிக்கையில் மேற்கோள் காட்டியிருக்கிறது.
கடந்தமாதம் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவுக்கு முன்னதாக நகரை அழகுபடுத்துவதற்காக வீதிகளில் இருந்து பிச்சைக்காரர்கள் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தலைநகரில் திடீரென்று பிச்சைக்காரர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படும் சம்பவங்களையும் அரசாங்கத்தரப்பினால் பிச்சைக்காரர்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளையும் இணைத்துப் பார்க்காமல் விடுவதென்பது சிக்கலானதாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. உண்மையிலேயே பிச்சைக்காரர்களிடம் இருக்கக்கூடிய அற்ப தொகைப் பணத்துக்காக அவர்களைக் கொலை செய்வதற்கு ஒரு "கொள்ளை கோஷ்டி%27 இறங்கியிருக்கிறது என்று நம்புவது கஷ்டமானதேயாகும். அவ்வாறு ஒரு கோஷ்டி திட்டமிட்டமுறையில் இறங்கியிருக்குமென்று வைத்துக் கொண்டால் உலகிலேயே கூடுதலாக பணக்காரப்பிச்சைக்காரர்களைக் கொண்ட நாடு என்று இலங்கைக்கு மேலதிகமாக ஒரு "பெருமை" வந்து சேர்ந்துவிடப்போகிறதல்லவா? இந்தத் கொலைகளின் மர்மத்தை விரைவில் பொலிஸாரினால் துலக்க முடியாமல் போகும் பட்சத்தில், பிச்சைக்காரர்களை நகரங்களில் இருந்து அகற்றுவதற்கு அந்தரங்கமாகத் தீட்டப்பட்ட ஒரு திட்டத்தின் விளைவே இச்சம்பவங்கள் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவடைந்து விடக்கூடும் என்பது எமது அபிப்பிராயமாகும்!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக