உயிருடன் பிறந்த பெண் குழந்தையை குழி தோண்டிப் புதைத்து விட்டு கூடி நின்று கும்மாளமடித்த காட்டு அறபிகள் கூட்டத்தினரின் வாரிசுகள் இன்னமும் இருப்பதைத்தான் சாட்சி பகர்கிறது ஆரியவதிக்கு இழைக்கப்பட்ட கொடுமை.
அருள் நிறைந்த இந்தப் புனிதமான ரமழான் காலத்தில் உலக முஸ்லிம்களின் முகத்தில் கரி பூசும்படியாக அமைந்து விட்டது. சவூதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண்ணான ஆரியவதிக்கு அரபி எஜமானனாலும் எஜமானியாலும் இழைக்கப்பட்ட சித்தரவதை மனித நாகரீகம் வெட்கித் தலைகுனியுமளவிற்கு இட்டுச் செல்கிறது.
தென் பகுதியின் ஒரு ஒதுக்குப்புறக் கிராமமான மாத்தறை திஹகொடவில் ஒரு களிமண் குடிசையில் வசித்து வருபவர்தான் 48 வயதான எல். ஆரியவதி.
நான்கு பிள்ளைகளுக்கு தாயாக ஒழுகிக் கரையும் களிமண் குடிசைக்குள் வாழ்பவருக்கு எப்படியாவது சீமெந்து பூசப்பட்ட தரையில் ஒழுக்கில்லாமல் கால் நீட்டி நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்ற சின்னதான ஓர் கனவு. அந்தக் கற்பனையில் மிதந்தவருக்கு வந்த யோசனையின் வெளிப்பாடுதான் சவூதிக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகப் போகலாம் எனும் உத்தேசம்.
பிள்ளைகளும் கூலி வேலை செய்யும் கணவனும் எதிர்த்த போதிலும் கால் நீட்டித் தூங்க ஓரிடமும் மூன்று வேளையும் வயிறார உண்ண வேண்டும் என்ற ஆசையும் ஆரியவதியை உந்தித் தள்ளியதால் சவூதிக்கு எப்பாடுபட்டும் போய்த்தான் ஆக வேண்டும் என்று ஒரே முடிவுக்கு வந்தாள்.
இவ்வருடம் மார்ச் 25ஆம் திகதி சவூதி சென்றடைந்தார். ஆண்டவனின் அருள் நிறைந்து வளம் கொழிக்கும் பூமியாக இருந்த போதும் ஆரியவதி போய்ச் சேர்ந்த வீடுதான் அவளுக்கு நரகமாக மாறியது.
மூன்று மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் அடுப்பங்கரை வேலையிலிருந்து கார் கழுவுவது வரையிலும் ஆரியவதிதான் செய்து வந்தார். ஆரியவதிக்கு முதல் வாரம் ஒருவாறு கழிந்தது. ஆனால் அதன் பிறகுதான் சித்திரவதைகள் தலைகாட்டத் தொடங்கின.
ஒரு நாள் தேநீர்க் கோப்பைத் தட்டு (சோஸர்) கையிலிருந்து தவறிக் கீழே விழுந்து நொருங்கிவிட்டது. ஆத்திரப்பட்ட எஜமானும் எஜமானியும் அன்றிலிருந்தே ஆணியைச் சூடாக்கி ஆரியவதியின் அங்கங்களில் செலுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.
"முதல் சம்பவத்தன்று எனது எஜமான் கடும் கோபமடைந்து 5 இரும்பாணிகளைச் சூடேற்றி எனது கைகளில் செலுத்தினான். நான் வேதனை தாங்க முடியாமல் கூச்சலிட்டபொழுது எஜமானி கத்தியை கழுத்தில் வைத்துக் கொலை செய்வதாக மிரட்டினாள்.
இதன் பிறகு அந்த ஆணிகள் என்னுடலில் இருக்கத்தக்கதாக கடுமையாக வேலை வாங்கினார்கள். நான் வேதனையால் துடித்தேன். ஆயினும் அவ்வப்போது என்னுடலில் உள்ளங்கால், பாதம், முழங்கால், மணிக்கட்டிலிருந்து முழங்கை வரையான பகுதி, தலை, நெற்றி என எல்லா இடங்களிலும் ஆணிகளையும் ஊசிகளையும் சூடாக்கி ஏற்றினார்கள்.
வலி தாங்க முடியாமல் அழுதேன். காய்ச்சலால் வீழ்ந்து கிடந்த போதும் எழுந்து வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். நாட்கள் செல்லச் செல்ல ஆணியேற்றப்பட்ட என் காயங்களிலிருந்து சீழ் வடிய ஆரம்பித்தது. அப்பொழுதும் அதனைத் துடைத்து விட்டு வேலை செய்தேன். அடிக்காதீர்கள் என்று கெஞ்சினேன். கத்தியைக் காட்டிக் கொலை செய்வோம் என்று மிரட்டினார்கள்" என்று உடற் காயங்களால் உண்டான வடுக்களை விவரித்தார் ஆரியவதி.
குறித்த நாள் ஆரியவதி வேதனையில் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் அவளை ஆயத்தமாகச் சொல்லி அழைத்து வந்து விமான நிலையத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள். பணியாற்றிய 5 மாத சம்பளத்தில் மூன்று மாதக் கொடுப்பனவை விமானச் சீட்டுக்காகக் கழித்துவிட்டு மிகுதி இரண்டு மாதக் கூலியைத்தான் ஆரியவதிக்கு கொடுத்திருக்கிறார்கள்.
சவூதி விமான நிலையத்தில் ஆரியவதியை சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாகத் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
உடம்பெங்கும் ஆணிகளோடு வந்த ஒரு நோயாளி எப்படி விமான நிலையத்தைக் கடக்க முடியும் என்ற கேள்வி இந்த இடத்தில் எழுகிறது. விமான நிலைய அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால்தான் இது சாத்தியப்பட்டிருக்கக்கூடும்.
எது எவ்வாறிருப்பினும் ஆகஸ்ட் 21ஆம் திகதி நாட்டுக்கு வந்து சேர்ந்த ஆரியவதி வீட்டாரிடம் எதனையும் சொல்லாத போதிலும் அவர் வலியால் பட்ட வேதனைகளும் உடலிலுள்ள காயங்களும் காட்டிக் கொடுத்து விட்டன. வலியால் அவஸ்தைப்பட்ட அவரை வீட்டார் ஆகஸ்ட் 22ஆம் திகதி கம்புறுப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்தார்கள்.
அங்கு எக்ஸ்ரே பரிசோதனைக்குட்படுத்திய வைத்தியர்கள் இவரது உடம்பில் ஆணிகள் ஏற்றப்பட்டிருப்பதை அவதானித்தார்கள்.
வைத்தியர்களான கமல் வீரதுங்க மற்றும் பிரபாத் கஜதீர தலைமையிலான 5 வைத்தியர்களைக் கொண்ட குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்ட சத்திர சிகிச்சையின் பயனாக ஆரியவதியின் அங்கங்களிலிருந்த 18 ஆணிகள் அகற்றப்பட்டன.
வெறும் ஐந்தே மாதங்களில் சுகதேகியாகச் சென்று நோயாளியாக மாற்றப்பட்டு மனக்காயங்களோடும் உடற் காயங்களோடும் நாடு திரும்பிய ஆரியவதியின் சம்பவம் கவலைக்கிடமானதே.
வருடாந்தம் சுமார் 15 இலட்சம் இலங்கைப் பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக செல்கிறார்கள். இலங்கைக்கு அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டித் தருவதில் இந்தப் பணிப் பெண்கள் முக்கிய இடத்தை வகிக்கிறார்கள்.
இவ்வாறு பணியாற்றும் பெண்களில் பலர் சொல்லொணாத் துயரங்களைச் சுமந்த வண்ணம் இந்த அந்நியச் செலாவணியை இலங்கைக்கு ஈட்டித் தருகிறார்கள்.
ஆயினும் அந்நிய மண்ணில் அவர்கள் படும் துயரங்களும் சித்திரவதைகளும் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்து வருகின்றன.
தொழிலாளர் சட்டங்கள், தொழில் பாதுகாப்பு ஒப்பந்தம், மனித உரிமைகள் பிரகடனம் என்பவை புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே அங்கு பணி புரியும் பணிப்பெண்கள் மீதான மனிதக் கொடுமைகள் நடந்து வருகின்றன.
இங்கிருந்து சுகதேகிகளாகச் செல்லும் ஏழைகள் சவப் பெட்டிகளில் தமது தாய்நாடு திரும்புவதும் உண்டு. 2007ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் வரையான எட்டு மாத காலப் பகுதியில் 277 பேர் சடலமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
அந்நியச் செலாவணி அள்ளி வருகின்றது என்று அகமகிழும் நாம் அந்த நாடுகளில் நமது பெண்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளையும் ஆற அமரச் சிந்திக்க வேண்டும்.
இதர மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் இலங்கைப் பணிப் பெண்கள் தாம் அனுபவிக்கும் சித்திரவதைகளை வெளியில் சொல்ல முடியாமலும் பாதுகாப்புப் பெற முடியாத நிலையிலும் சிக்கித் தவிக்கிறார்கள். பணியாற்றும் வீட்டிலிருந்து தப்பியோடி அங்குள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது இலங்கை முகவரிடமோ சரணடைந்தால் பெரும்பாலும் அவர்கள் மீண்டும் முன்னைய எஜமானர்களிடமே திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இவர்களை முதலில் மீட்டெடுக்க வேண்டும். இன்று ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டுப் பணிப் பெண் வேலை வாய்ப்பு எனும் பதத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய சூழ்நிலை தோன்றியுள்ளது.
அத்தோடு, ஆரியவதிக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் விழைந்த அவமானத்தைப் போக்க நாட்டிலுள்ள முஸ்லிம் பரோபகாரிகள் முன்வந்து அவருக்கும் உதவ வேண்டும்.
ஏ.எச்.ஏ. ஹுசைன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக