வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அமெரிக்காவுக்கு புதிய தலையிடியை ஏற்படுத்தியுள்ள `விகிலீக்ஸ்' இணையத்தளம்

அண்மையில் `விகிலீக்ஸ்' என்ற இணைய உளவு அறிக்கையிடல் நிறுவனம் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய 90000 இற்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டது. இவ் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசிய தகவல்கள் கசிவுறுவதென்பது மிகவும் அரிதானதும் சாத்தியமற்றதுமாகும். இந்நிலையில் `விகி லீக்ஸ்' இணைய தளத்தினால் வெளியிட ப்பட்ட தகவல் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ தகவல்களின் இரகசியத் தன்மைக்கு ஏற்பட்ட பாரிய இழுக்கு என்றே கருதப்பட வேண்டும்.

அண்மையில் நடைபெற்ற லண்டன் செய்தியாளர் மாநாட்டில் விமர்சகர்களால் `உலகின் மிகவும் அபாயகரமான மனிதர்களில் ஒருவர்' என வர்ணிக்கப்படும் `விகிலீக்ஸ்' இன் தாபகர் ஜூலியன் அஸ்ஸேன்ஜ் கலந்துகொண்டார். இவரின் ஆதரவாளர்கள் இவரை ஒரு வீரனாகவே நோக்குகின்றனர்.

அமெரிக்க அதிகாரிகள் இவ் இராணுவ இரகசிய தகவல் கசிவு தொடர்பில் அஸ்ஸேன்ஜ் உடன் பேசுவதற்கு விரும்புவதாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் எப்போதும் இவ்வாறு பேச்சுகள் நடத்துவதற்கு விரும்புவதில்லை எனவும் இவற்றிலிருந்து நழுவித் தப்பித்துக் கொள்ளக் கூடியவர் எனவும் அவுஸ்திரேலிய பத்திரிகையாளர் அன்ரு கபௌலர் தெரிவத்துள்ளார்.

இவ் இரகசிய ஆவணங்கள் தொடர்பி லான பல்வேறு உண்மைகள் விரைவில் வெளிவரலாம். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை இத்தகைய அதி இரகசியத் தன்மை வாய்ந்த இராணுவ தகவல்கள் எவ்வாறு `விகிலீக்ஸ்' இற்கு பரிமாறப்பட்டன என்பது முக்கிய வினாவாக அமைந்துள்ளதாக அல்ஜெஸீரா தெரிவித்துள்ளது. அரசாங்கங்களும் வர்த்தக நிறுவனங்களும் தமது உள்ளார்ந்த செயற்பாடுகள் தொடர்பான இரகசிய தகவல்களை கசிவுறாமல் பாதுகாப்ப தென்பது அவற்றின் மிகப் பிரதான நடவடிக்கையாகும்.

ஆனால் `விகிலீக்ஸ்' இணையத் தளமானது, "மக்கள் தாம் தாபித்த அரசாங்கங்கள் முடிவுகளை மேற்கொள்ளும்போது அல்லது அத்தகைய முடிவுகள் அவர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும்போது மக்கள் அத்தகைய முடிவுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள் (Right to know). அந்தவகையிலேயே எமது நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் சர்வதேச அளவிலான உண்மைத் தகவல் வலையமைப்பு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளது.

பல்வேறு நாடுகளில் கணினி வலையமைப்புக்களை நிறுவி தகவல் சுதந்திர வலயம் (Information Freedom Zone) ஒன்றை உருவாக்கும் இலக்குடன் செயற்பட்ட, எப்போதும் மிகவும் அமைதியாகப் பேசக்கூடியவரான விகிலீக்ஸின் தாபகர் ஜூலியன் அஸ்ஸென்ஜ் இன்று வித்தியாசமான செயற்பாடுகள் தொடர்பில் உலகம் பூராவும் பேசப்படக் கூடியவராக உருவெடுத்துள்ளார் என அல்ஜெஸீராவின் செய்தி அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.

விகிலீக்ஸ் இணையத்தளம், அமெரிக்காவின் ஹெலிகொப்டர் ஒன்று பக்தாத்தில் குண்டு மழை பொழிந்து ஊடகவியலாளர்கள் உட்பட நூற்றுக் கணக்கான பொதுமக்களை கொன்று குவித்த போது பதிவு செய்யப்பட்ட ஒளிநாடாவை இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்டபோதே சர்வதேச ரீதியாக பிரபல்யம் அடைந்தது.

இவ் ஒளிநாடாவை அம்பலப்படுத்தியவர்களை வெளிப்படுத்தும் இலத்திரனியல் கைரேகைகள் நீக்கப்பட்டு "Collateral Murder' என்ற பெயரில் விகிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த அசட்டுத் துணிவான அபாயக ரமான செயற்பாடு ஊடக செயற்பாடாக அமைய முடியாதென விமர்சனங்களும் எழுந்திருந்தன. ஆனால் உண்மையில் விகிலீக்ஸ் உலகின் பிரதான ஊடகங்களால் வெளிச்சத்திற்கு கொண்டுவரத் தவறிய தகவல்களையே மக்கள் மத்தியில் முன்வைத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மையாகும். அஸ்ஸேன்ஜ் இன்று அமெரிக்க அரசாங்கத்தின் எதிரியாகக் கருதப்படுகின்றார்.

இணைய உளவறிக்கையிடல் நிறுவ னமான விகிலீக்ஸ், அரசாங்கங்களின் இரகசிய தகவல்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தி யிலும் உலகம் பூராவுள்ள அரசாங்கங்கள் தொடர்பில் மேலும் பல இரகசிய தகவல்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பென்டகன் மற்றும் அமெரிக்க அரச திணைக்களங்களின் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என்ற விக்கிலீக்ஸின் கூற்றானது, இவ்விரகசிய அரச ஆவண ங்கள் அம்பலப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அமெரிக்க அரசு சட்டரீதியாக அல்லது இராணுவ ரீதியாக என்ன செய்யும் அல்லது என்ன செய்ய முடியும் போன்ற முக்கியமான வினாக்களை எழுப்பியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஏ.பி செய்திச் சேவைக்கு அளித்த செவ்வியில் தனது அடையாளத்தை டேனியல் சிமிட் என வெளிப்படுத்திக்கொண்ட விகிலீக்ஸின் பேச்சாளர்களில் ஒருவர், அமெரிக்காவின் இரகசிய தகவல்கள் தொடர்ந்தும் வெளியிடப்படும் என்றும் இது அரசுகள் மக்களுக் காக தீர்மானங்களை மேற்கொள்ளும் போது வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் மக்களின் தகவல் பெறும் உரிமையை உரிதிப்படுத்து வதற்காக மேற்கொள்ளப்படும் பணி இது என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் வெளியிடப் படவுள்ள தகவல்கள் தொடர்பில் எதனையும் குறிப்பிட முடியாதென தெரிவித்த விகிலீக்ஸின் பேச்சாளர், ஆப்கானில் அமெரிக்கா மேற்கொண்ட யுத்தம் தொடர்பில் தமது இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட மறைக்கப் பட்ட தகவல்கள் இந்த யுத்தம் தொடர்பில் மக்கள் உண்மையை புரிந்து கொள்வதில் நேரடிப் பங்களிப்புச் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ் இரகசிய தகவல்களை வெளியிடுவது அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதற்கிடையில் அண்மையில் ஆப்கான் யுத்தம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் 76,900 இற்கும் மேற் பட்ட புலனாய்வு அறிக்கைகள், இரகசிய இராணுவ தகவல்கள் மற்றும் அமெரிக்கா வால் மறைக்கப்பட்ட பல்வேறு அசிர்ச்சிய ளிக்கும் உண்மைகள் உள்ளடங்கிய ஆவணங்களை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவுக்கு இவ்விரகசிய தகவல்கள் எவ்வாறு கசிவுற்றன என்பது தொடர்பில் பெரும் தலையிடியை ஏற்படுத் தியுள்ளதுடன் இவ்விரகசிய தகவல்கள் வெளியிடப்படுவதை வெள்ளை மாளிகை கடுமையான முறையில் கண்டித்துள் ளதுடன் இது ஆப்கானிலுள்ள அமெரிக்க துருப்புக்களை ஆபத்தில் தள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

இவ்விரகசிய தகவல்கள் எவ்வாறு விகிலீக்சுக்கு கிடைக்கப்பெறுகின்றன என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கின்ற அதேவேளை இந் நிறுவனத்தில் அதன் தாபகரும் பிரதம ஆசிரியருமான ஜூலியன் அஸ்ஸேன்ஜ் உட்பட 800 தொடக்கம் 1000 வரையான ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை விகிலீக்ஸ் பல்வேறு நாடுகளில் தனது வலையமைப்பை கொண்டு செயற்படுவதாக தெரிவிக்கப்படுவதுடன் இதன் செயற்பாடுகள் ஊடக வரலாற்றில் ஒரு புரட்சியையே உருவாக்கியுள்ளன என்று சர்வதேச ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல