திங்கள், 27 செப்டம்பர், 2010

ஆணைக்குழு விசாரணையில் கிளிநொச்சியில் வெடித்துச் சிதறியவை........

“கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு'வின் விசாரணை அமர்வுகள் அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்றன. அங்கு அளிக்கப்பட்ட சாட்சியங்களைத் தொகுப்பாக இங்கு தருகிறோம்.

போரின் இறுதியில் மக்கள்மீது இராணுவத்தினர் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர்


போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். இவ்வாறு மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தியோகத்தர் ந.சுந்தரமூர்த்தி நல்லிணக்க ஆணைக் குழுவிடம் விவரித்தார்.

அவர் வழங்கிய சாட்சியம்:

போரின் இறுதிக்கட்டத்தில் புதுமாத்தளன் பகுதியில் புலிகள் மீது வீசுவதாக நினைத்து, அப்பாவி மக்கள் மீதும் இலங்கை இராணுவத்தினர் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர்), பொஸ்பரஸ் குண்டுகளையும் வீசினர். அதன் மூலம் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நாளொன்றுக்கு 400 முதல் 600 பேர் வரையில் இதில் சிக்கி பலியாகினர், 1,000 பேர் வரையில் காயமடையவும் நேரிட்டது.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் இருந்து படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்ல முயற்சித்தபோது நாம் வெளியேறுவதைத் தடுப்பதற்காகப் புலிகள் பச்சை மட்டைகளால் அடித்தனர்.

அச்சுறுத்துவதற்காக வானத்தை நோக்கிச் சுட்டனர்.

இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்புகளாலும் மக்கள் அனுபவித்த அவலங்களை பூநகரி வாசியான கமநல உத்தியோகத்தர் ந.சுந்தரமூர்த்தி விவரித்தார்.

தொடர்ந்து தெரிவித்ததாவது: மனித நேய இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் மன்னாரில் இருந்து கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங் களை நோக்கி நகர்ந்தது. யுத்தம் இடைவிடாது நிகழ்ந்ததால் மக்களும் தொடர்ச்சியாக இடம்பெயர்ந்துகொண்டே இருந்தனர். மன்னாரில் இடம்பெயரத் தொடங்கிய மக்கள் முள்ளிவாய்க்கால் வரை நகரவேண்டியிருந்தது.

அதன்போது மக்கள் சந்தித்த அவலங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த அவலங்களுக்கு போரில் ஈடுபட்ட இருதரப்புக்களுமே காரணமாக இருந்திருந்தன.

பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் மக்களை ஓரிடத்தில் தஞ்சம் அடைய வைத்த தன் மூலம் புலிகள் தமது ஆளணியை இலகுவாகத் திரட்டவும் ஆயுதங்களை வைத்து இயக்குவதற்கு தளங்களை அமைக்கவும் அரசே வழிசமைத்துக் கொடுத்தது. அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தாவிட்டால் எமக்குரிய பாதுகாப்பான இடங்களை நாமே தேர்ந்தெடுத்து அழிவுகளை ஓரளவுக்கு குறைத்திருப்போம்.

பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்தபோது உயிர் இழப்புக்களையும் அழிவுகளையும் நாம் சந்திக்க நேர்ந்தது. மக்களை அரணாக வைத்து படையினர் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தி விட்டு புலிகள் நகர்ந்ததும் அவ்விடத்தில் படையினரின் சரமாரியான எறிகணை வீச்சும் விமானக் குண்டுத்தாக்குதலும் நிகழும்.

இதனால் தினம் 200பேர் வரையில் பொதுமக்களை இழக்கவேண்டியிருந்தது.

இதனால் பல தடவைகள் பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி படையினரின் கட்டுப்பாட்டுக்குப் பகுதிக்கு செல்ல முயற்சித்தோம். இதன்போது வெளியேற விடாது பச்சைமட்டைகளால் புலிகள் எங்களைத் தாக்கினர். எம்மை எச்சரிப்பதற்காக வானத்தை நோக்கிச் சுடவும் செய்தனர்.

அதேவேளை, தமது கட்டுப்பாட்டு பகுதி நோக்கி வரும் மக்கள் மீது படையினரும் துப்பாக்கி சூட்டை நடத்தினர். அதனால் தொடர்ந்தும் நாம் பாதுகாப்பு வலயத்துக் குள்ளேயே முடங்க வேண்டி ஏற்பட்டது.

புதுமாத்தளன், சுதந்திரபுரம், அம்பலவன் பொக்கணை, வலைப்பாடு, வலைஞர்மடம் போன்ற பகுதிகளுக்குள்லேயே தொடர்ந்தும் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு முறை பாதுகாப்பு வலயத்துக்குள் படையினர் நடத்திய எறிகணை வீச்சில் 17 பெண்களும் 6 குழந்தைகளும் அவ்விடத்திலேயே உயிர் இழந்தனர்.

தேங்காய் முதலான பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவியதால் ஒருசிலர் அயலில் உள்ள பகுதிகளுக்குச் சென்று தேங்காய் பிடுங்கி வருவார்கள். அவ்வாறு செல்பவர்கள் படையினரின் ஆழ ஊடுருவும் படையணியால் கொல்லப்பட்டார்கள்.

ஒருமுறை நாங்கள் தறப்பாளால் கட்டியிருந்த கூடாரத்தைச் சுற்றி விடியற் காலையில் சிறுகுழிகளில் உயிர் இழந்தவர்களின் சடலங்கள் புதைந்து கிடந்தன. அவர்கள் புலிகளின் தாக்குதலிலோ அல்லது படையினரின் எறிகணை வீச்சிலோ தான் கொல்லப் பட்டிருக்க வேண்டும். அங்கு பரவலாகக் காணப்பட்ட குழிகள் படையினரின் எறிகணை வீச்சிலேயே அவர்கள் பலியாகி இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தின.

பாதுகாப்பு வலயங்களில் தாக்குதலில் ஈடுபடும் விமானங்கள் மீது புலிகளும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதற்கும் பதிலடியாகப் புலிகள் மீது தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் (கிளஸ்ரர் குண்டுகள்) பொஸ்பரசு குண்டுகளையும் படையினர் வீசினர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பேரழிவு ஏற்பட்டது.

ஏறக்குறைய தினம் 400 தொடக்கம் 600 பேர் வரை பலியாகவும் ஆயிரம் பேர் வரை காயமடையும் அளவுக்கு நிலைமை மோசமாகிப் போனது. அதன்பின்னர் மிகுந்த கஷ்டத்தின் மத்தியில் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்தோம்.

இங்கேயும் நீண்டகாலம் நலன்பு நிலை யங்களில் தடுத்து வைக்கப்பட்டும் தற்போது தான் மீளக்குடியேறியுள்ளோம். ஆனாலும் எங்கள் வீடுகளிலுள்ள எல்லாப் பொருட்க ளுமே சூறையாடப்பட்டுவிட்டன. நாங்கள் வந்தபோது இருந்த பல பொருட்கள் கூட அடுத்தநாள் சென்று பார்க்கும்போது மாயமாகிவிட்டன. மக்களின் வீடுகளில் இருந்த ஓடுகள் எல்லாம் இப்போது படை யினரின் காவலரண்களில் இருக்கின்றன.

நடந்த கொடுமைகள் தொலைந்து இனியாவது மக்களுக்கு நன்மையே நடக்க வேண்டும். இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எதுவுமே ஆக்கபூர்வமான நிலையை ஏற்படுத்தவில்லை. அவ்வாறில்லாமல் இந்த ஆணைக் குழு மூலமாவது மக்களுக்கு விடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.

இதன்போது மேலும் சிலரும் வாய்மொழி மூல சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

காணா மற்போனோரின் உறவினர்கள் பலரும் கடிதங்களையும் ஆணைக்குழுவினரிடம் சமர்ப் பித்திருந்தனர்.

புதுவை இரத்தினதுரை, யோகி உட்பட்ட போராளிகளுடன் 16 பஸ்களில் ஏற்றப்பட்ட எனது பிள்ளைகளின் கதி என்ன?: தாயொருவர் சாட்சியம்

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான புதுவை இரத்தினதுரை, யோகி உட்பட்ட முன்னாள் போராளிகளுடன் சேர்த்து 16 பஸ்களில் அனுப்பப்பட்ட தனது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இருப்பதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தாய் ஒருவர் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

தமது சாட்சியத்தில் அப்பெண் மேலும் கூறியதாவது என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜி னோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவத்தினடம் சரணடைந்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து முல்லைத்தீவு வீதியால் பதினாறு பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன். இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது. சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன்.

எங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

கிருஷ்ணபாலன் ஜெயபாரதி

தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டு கோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத்தெரியாதெனவும் கூறினார்.

இதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள், புதுவை, யோகி இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர்.

இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க, இலங்கை வரலாற்றில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம் எனவும், இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு என்றும், எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

கண்டாவளை கிராம மக்கள்

ஒவ்வொரு காலப்பகுதியிலும் இன ரிதியிலான முரண்பாடுகளின் அடிப்படையில் தமிழ் சமூகத்தின் மீதான கலவரங்கள், வன்முறைச் சம்பவங்கள் நடந்தேறியிருக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் தீர்வு தேடும் வகையில் தமிழ் மக்களின் போராட்டம் நடைபெற்றது. எனினும் அந்தப் போராட்டம் இன்று முற்றுப்பெற்ற நிலையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும்.

மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர். ஆயினும் முன்னர் போன்று சுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பியிருக்கவில்லை.

காணிப் பிரச்சினைகள், போனால் இறந்துபோன, காணாமல் போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகள் இன்று வரை கவனிக் கப்படாமல் இருக்கின்றன.

எனவே காணாமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் தொடர்பில் என்ன நிலைப் பாட்டை அரசு கொண்டுள்ள தென்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா?

என்பதையாவது கூறவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை

நாங்கள் 2009 ஆம் ஆண்டு மாசி மாதம் இராணுவத்தினரிடம் சரணடைந்த போது எங்களுடைய வீடுகளும் வாகனங்களும் ழுமையாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருந்தது. ஆனால் இப்போது வாகனங்கள் எங்கேயென்று தெரியாது. வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.

இதற்கு யார் பொறுப்பாளிகள் என்பது தெளிவுபடுத்தப்பட்டு எமக்கான நஷ்ட ஈடுகள் கொடுக்கப் படவேண்டும் என்றார்.

தொடர்ந்து நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது புலிகள் உங்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தினார்களா? என ஆணைக்குழு கேட்டதற்குப் புலிகள் மக்களைப் பின் நிறுத்திவிட்டு முன்னால் நின்று சண்டை யிட்டுக் கொண்டிருந்தார்கள் என்றார்.

சுதந்திரபுரம் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட போதும் அப்பகுதியில் தொடர்ந்தும் மக்கள் மீது ஷெல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்ததாகச் சொன்னார். அதனைத் தொடர்ந்து சுமார் 75 ஆயிரம் மக்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் என்றார்.

தேவரூபன் சுசீலாதேவி

2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் கட்டாய ஆட்சேர்ப்பு என்ற பெயரில் என்னுடைய 19 வயது மகனைப் புலிகள் பிடித்துச் சென்றனர். இரண்டு முறை அவர் புலிகளிடம் இருந்து தப்பி வந்து வீட்டில் நின்ற போதும் 3 ஆம் முறை பிடித்துச் சென்று ஆனந்தபுரம் சண்டையில் விட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.

இன்று என்னுடைய மகன் எங்கே இருக்கிறார், அவருக்கு என்ன ஆனது என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெரியாத நிலையில் நான் இருக்கிறேன். என்னுடைய பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று அவர் கேட் டுக்கொண்டார்.

இதேவேளை கடந்த காலத்தில் இத்தகைய அழிவுகள், அவலங்களுக்கு என்ன காரணம்?

எதிர்காலத்தில் இவ்வாறான அழிவுகள், அவலங்கள் ஏற்படாத வகையில் எவ்வாறு தடுக்கலாம்? என ஆணைக்குழு மக்களிடம் வினவிய போது பதிலளித்த மக்கள், இனி ஒருபோதும் ஆயுத வழியிலான போராட்டத்திற்குத் தாம் தயார் இல்லை எனவும் எமது அடிப்படை வசதிகள் முதற் கொண்டு இனப்பிரச்சினை வரை சகலவற் றுக்குமான ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

கடந்த காலத்தைப் போல் மக்களை அரசி யல் பகடைக்காய்களாகப் பாவிக்காது பெருந் தன்மையோடு இவ்விடயத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.

இந்தச் சந்திப்பில் காணாமல்போனோர், தடுத்து வைக்கப்பட்டோர் மற்றும் விதவைகள் தொடர்பான விடயங்களை, மீள்குடியேற்றம் தொடர்பான சமகால நிலைமைகள் தொடர்பாக மக்களுடைய கடிதங்களை ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.

உடுத்த துணியுடன் முகாமுக்குச் சென்ற நிலையிலேயே இப்போதும் நாங்கள் வாழ்கிறோம்.

கிளிநொச்சி மக்கள் கடந்த காலத்தில் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு அவலங்கள் நடந்து முடிந்து விட்டன. அவை தொடர்பாக உண்மை நிலைமைகளை யாரும் அறியாமல் இருக்க முடியாது. எனவே கசப்பான கடந்த காலச் சம்பவங்களை மறந்துவிட்டு ஆறு மாதம், ஒரு வருடம் எனக் கொடுக்கப்பட்ட நம்பிக்கை வார்த்தைகளை மீறி தடுத்து வைக்கப்பட்டுள்ள எங்கள் பிள்ளைகளின் விடுதலை துரிதமாக்கப் படவேண்டும், யுத்த காலத்திலும் அதற்கு முன்னரும் காணாமல்போன சொந்தங்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தவேண்டும்.

எனவும் அவர்கள் இருக்கிறார்களா, இல்லையா என்பது போன்ற தகவல்கள் எதுவுமே தெயாத நிலையில் இன்னமும் வெறும் நம்பிக்கையோடு மட்டும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மீளக்குடியமர்ந்துள்ள எமக்கு எந்தவிதமான வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. இடம் பெயர்ந்து உடுக்க உடைகூட இல்லாமல் முகாம்களுக்குச் சென்ற நிலைமையிலேயே இங்கே மீளவும் வந்துள்ளோம்.

இதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள்.

எல்லோருக்கும் இந்த விடயம் நன்றாகத் தெரியும்.இருந்தும் கவனிப்பால்லாமல் நாங்கள் விடப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்தனர்.

பிள்ளைக்கு பால்மா வாங்கப் பணம் இல்லை

ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த விவேகானந்த நகரைச்சேர்ந்த மதிவண்ணன் மதுஷா என்ற தாய் சாட்சியமளிக்கையில் “எனது கணவர் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இரு வருடங்கள் புலிகளின் தொழில் நிறுவன மொன்றில் சம்பளத்திற்கு வேலைபார்த்தார்.

முகாமில் சிலர் சொல்லிக் கொடுத்து அவரை பிடித்துக்கொண்டு போய்விட்டனர். நடந்தவை எல்லாம் தெளிவாகவும் கூறப்பட்டுவிட்டன.

தற்போது அவர் ஓமந்தை காமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

வாழ்வதற்கு எந்த உதவியும் கிடையாது.

பிள்ளைக்கு பால்மா வாங்குவதற்கும் கூட பணமில்லாமல் கஷ்டப்படுகின்றேன்.எனது கணவரை மீட்டுத்தாருங்கள் எனக் கண்ணீருடன் கேட்டுக்கொண்டார்.

இதற்கான உரிய நடவடிக்கைகளைத் தாம் மேற்கொள்வதாகக் கூறிய ஆணைக்குழு இறுதிப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் அல்லது பாதுகாப்பான இடங்களிற்குச் செல்வதற்கு யாராவது தடை விதித்தார்களா?

என வினாவினர். அதற்குப் பதிலளித்த பெண் “புலிகள் தடுத்தனர். என்னுடைய பிள்ளை தலை நிமிர்த்த முடியாத எலும்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தது.அதைக் கூறியபோதும் எங்களை விடவில்லை.மருத்துவச் சான்றிதழ்களைக் கிழித்தெறிந்தனர் என்றார்.

மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாகூகு

மலையாளபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஐயாகூகு என்ற தியவர் சாட்சியமளிக் கையில் “எனக்கு மூன்று பிள்ளைகள். ஒரு பிள்ளை 17,18 வயதிலேயே புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டு விட்டார். மற்ற ஒரு பிள்ளையை பிடித்துக் கொண்டு போய் விட்டார்கள்.மிஞ்சியிருந்த பிள்ளை திருமணமாகி 18 ஆவது நாள் மனைவியோடு சேர்த்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள். மூத்த பிள்ளையும் இறந்து விட்டது .மற்றப் பிள்ளையைக் காணவில்லை.எனக்கும் என் மனைவிக்கும் வருத்தம்.எங்கள் பிள்ளை இருக்கிறதா இல்லையா என்ற விவரத் தையாவது வெளிப்படுத்த வேண்டும்.

உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ள நிலங்களில் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பாக பொன்நகர் கிராமம் யாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது என்றே தெரியா நிலையில் உள்ளதை மக்கள் சுட்டிக் காட்டினர்.இது தொடர்பாக விளக்கத்தை கேட்ட ஆணைக்குழு புலிகளால் அல்லது புலிகள் சார்ந்த நிறுவனங்களால் வழங்கப்பட்ட காணிகளில் மக்கள் சென்று வாழவோ உமை கோரவோ முடியாது. காரணம் காணிகளை வழங் கும் உரிமை புலிகளுக்கு இல்லை என ஆணைக்குழு கூறியது.

எனவே,பொன்நகர் மக்களுக்கு வருட இறுதிக்குள் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் புதிய இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு கூறியது. மேலும் தடுப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிப்பதாகக் கூறி புலனாய்வுத்துறை என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்த சிலர் தம்மிடம் பல இலட்சம் ரூபா பணத்தை வாங்கிக் கொண்டு சென்றதாகவும் ஆனால் அவர்கள் இதுவரை விடுவிக்கப்படவில்லை எனவும் மக்கள் கூறினர். தொடர்ந்து இவ்வாறு பணம் கேட்போர் தொடர்பாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், அவர்கள் தமக்குத் தெரியாது எனவும் பணம் கேட்டவர்களைக் காட்டித்தருமாறும் கேட்டுக்கொண்டனர்.

தடுப்பு காமில் உள்ளவர்களைப்பார்ப் பதற்கான நேரம் தற்போது முக்கால் மணி நேரத்திலிருந்து கால்மணி நேரமாக்கப்பட்டுள்ளதாக கூறிய மக்கள் தடுப்பில் உள்ளவர் களைச் சென்றுபார்த்துவர முடியாத நிலையில் தாம் இருப்பதையும் எடுத்துக்கூறினர்.

இதனோடு மருதமடு வேரியகுளம் பகுதியிலுள்ள தடுப்பு முகாமில் முத்திரைகள் ஒட்டப்பட்ட நான்கு விண்ணப்பப் படிவங்களில் கையெழுத்து வாங்கப்படுகின்றது.அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்களை விடுவிப்பதற்கான விண்ணப்பப்படிவம் எனப் போடப்பட்டுள்ளது.கையெழுத்து போடப்பட்டவர்களுடைய பிள்ளைகள் கூட இன்னமும் விடுவிக்கப்படவில்லை என மக்கள் கூறினர்.

பொதுவாக மக்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் விடுதலை மற்றும் காணாமல் போனோரின் பிரச்சினைகள் தொடர்பாகவே கேட்டுக்கொண்டனர்.இங்கு ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டீ.சில்வா ஒரே நாட்டில் மக்கள் அனைவரும் சரிசமமானவர்கள் என்ற அடிப்படையில் உங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் கடந்த காலத்தில் நடந்த அநீதிகள் தொடர்பாக கண்டறிந்து இன,மத,சமூக ரண்பாடுகளைத் தீர்ப்பதே எமது இலட்சியம்.எனவே மக்களுடைய பிரச்சினைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பிரச்சினைகள் முக்கியமாகிறது.இது தொடர்பாக விசேடமாக ஒதுக்கப்பட்ட ஒருநாளில் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் பேசவுள்ளோம்.எனவே உரிய தீர்வு கிடைக்கும் என்றார்.இந்தச் சந்திப்பில் காணாமல் போனோர், தடுப்பில் உள்ளோர் மற்றும் விதவைகள் பற்றிய விவரங்களும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் மக்கள் தம் கைப்பட எழுதிய மகஜர்களை ஆணைக்குழு பெற்றுக்கொண்டது.

சரணடைந்த எனது கணவர் குறித்து எந்த தகவலும் இல்லை : புலிகளின் பொறுப்பாளர் எழிலனின் மனைவி

விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார்.

அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களை யும் தனது கணவரையும் இந்த குழு கண்டு பிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட் டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு முல்லைத்தீவில் இராணுவத்தினரிடம் விசார ணைகளை மேற்கொண்டது.

புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்தபோது தம்மை இராணுவத்தினர் தாக்கியதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

எனவே பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவத்தினன் விளக்கத்தை அறிந்துகொள்ளும் முகமாக முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஆரியசிங்க தலைமையிலான அதிகாரிகளிடம் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி.சில்வா தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

தாம் தப்பி வர முயன்ற போது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதேநேரம், இராணுவத்தினர் புலிகள் மீது நடத்திய பதில் தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாகவும் கிளிநொச்சி, கண்டாவளை, பூநகரி ஆகிய இடங்களில் நடைபெற்ற விசாரணைகளின் போது பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவத்தினரின் நிலைப்பாட்டை கேட்டுத் தெந்துகொண்ட ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா, தற்போது இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளைப் பாராட்டியதுடன், நேரில் வந்ததால் உண்மையைப் புரிந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆணைக் குழுவின் தலைவரது கேள்விகளுக்குப் பதில் அளித்த கேணல் ஆரியசிங்க, “பொதுமக்களின் நிலைகளைத் தெரிந்துகொள்வதற்காக ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல் இலக்குகளைத் தெரிவு செய்தோம். ஆனால், யார் யார் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்வது கடினமானது.

பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக கனரக ஆயுதங்களைப் பயன் படுத்துவதை நிறுத்தியதால் இராணுவத் தினருக்குப் பலத்தசேதம் ஏற்பட்டது. நாம் ஜனவரி மாதம் முல்லைத்தீவைக் கைப்பற்றினோம். அப்போது 72 ஆயிரத்து 407 பொதுமக்கள் வந்தார்கள் நால்வர் உயிரிழந்தார்கள். பொதுமக்கள் மத்தியில் இருந்த புலிகள் நடமாடும் குண்டுத் தொழிற்சாலையை வைத்திருந்தார்கள்' என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் சொத்துக்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதாக சுமத்தும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதில் அளித்த 59ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி, எந்தவொரு தனியார் சொத்தையும் இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார். முன்பு முகாமில் இருந்து மீளக்குடியமர வந்தவர்கள் மற்றுமொரு முகாமில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோதிலும் தற்போது அவர்கள் நேரடியாகத் தமது சொந்த வாழ்விடத்திற்கு வருகை தருவதாகத் தெரிவித்தார்

மீனவர்களை ஓர் அமைப்பாக செயற்படுத்த வழியேற்படுத்தும் வகையில் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் உள்ளூர் மீனவர்களுக்கு மட்டுமே தற்போது முன்னுமை அளிக்கப்படுகிறது.

இந்தப் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம், காலப்போக்கில் சந்தை வாய்ப்பு சீரானதும், ஏனையவர்களும் போட்டிபோட மீனவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல