சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு ஒன்றே இது குறித்த எச்சரிக்கையைச் செய்திருந்தது.
இந்தியாவின் புனே நகரில் பேக்கரி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் சூத்திரதாரி இந்தச் சர்ச்சை மீளவும் ஏற்படுவதற்குக் காரணமானார். அந்த நபர் தனக்கு இலங்கையிலேயே குண்டை வெடிக்க வைப்பது தொடர்பாக கடந்த 2008ஆம் ஆண்டில் 15 திகதி பயிற்சி அளிக்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.அதி உயர் தகவல் களஞ்சியம்
இந்தத் தகவல் வெளியானதுமே பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அதை முற்றாக நிராகரித்தார். இலங்கையில் எந்தவொரு தீவிரவாத அமைப்புக்குமே இடம் இல்லை இங்கு அப்படி எந்த அமைப்பும் இயங்கவில்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் அதற்கிடையில் அமெரிக்கா மீளவும் ஒரு எச்சரிக்கையை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
சுமார் 200 லஷ்கர் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் காத்திருக்கிறார்கள் என்கிறது அமெரிக்காவின் அறிக்கை.
அமெரிக்கா இந்த எச்சரிக்கையை முறைப்படி இந்தியாவிடம் கையளித்ததாகவும், அதுபோலவே இலங்கைக்கும் அறிவித்தாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் அப்படியான எந்த அறிக்கையும் அரசாங்கத்துக்கு கிடைத்ததா இல்லையா என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியிருந்தார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அரசாங்க பாதுகாப்பு விவகார பேச்சாளராகவும் இருப்பவர்.
அரசதரப்பின் எந்தப் பிரச்சினைக்கும் வாயைத் திறப்பவர்.
இந்த விடயத்தில் மட்டும் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவிட்டு மௌனமாக இருந்து விட்டார்.
இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் கவனமாகவே செயற்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதனால் தான் அவர் இப்படி நடந்துகொண்டிருக்கலாம்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இலங்கையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இயங்கவில்லை என்று தெரிவித்துள்ள போதிலும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தாமல் இருந்திருக்க மாட்டார்.
லஷ்கர்ஈதொய்பா என்ற தீவிரவாத அமைப்பு தெற்காசியாவில் வலுமிக்க இஸ்லாமிய இயக்கங்களில் ஒன்று.
அது பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்று.
இப்படிப்பட்ட அமைப்புக்கு இலங்கையில் தான் பயிற்சி பெற வேண்டும் என்ற தேவை இல்லை.
இந்த அமைப்புக்கு பயிற்சியளிக்க பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தாராளமான வசதிகள் உள்ளன.
இப்படியிருக்க இலங்கையில் பயிற்சி பெற்றதாக புனே குண்டுவெடிப்பின் சூத்திரதாரி கூறியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கதொன்றே.
அதேவேளை இந்த அமைப்புக்கு இந்தியா தான் குறியாக இருக்கிறதே தவிர இலங்கை அல்ல.
இந்தியாவில் தாக்குதல்களை நடத்தி உள்நாட்டுக் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு இந்த அமைப்பு முயற்சிக்கிறது. அதற்கு பாகிஸ்தானின் பின்புல ஆதரவு இருக்காமல் போகாது.
இந்தியாவுக்குள் நுழைவதற்கான வழியாகவே அவர்கள் இலங்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இலங்கை சுமார் 70 இற்கும் அதிகமான நாடுகளின் குடிமக்களுக்கு விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் விஸா வழங்கும் நடைமுறையைப் பின்பற்றி வருகிறது.
இது அவர்களுக்கு வசதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்து விடுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கவே விமான நிலையங்களில் விஸா வழங்கும் முறையை நிறுத்த பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்தது.
ஆனால் அது சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கும் என்று எழுந்த சர்ச்சையை அடுத்து அந்த முடிவு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வழியாகவே லஷ்கர் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதாக சந்தேகிக்கிறது அமெரிக்கா.
புனே குண்டுவெடிப்பு சூத்திரதாரி இலங்கையிலேயே தாம் பயிற்சி பெற்றதாகக் கூறியபோது இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தது. அதி உயர் தகவல் களஞ்சியம்.ஆனால் அமெரிக்காவின் இப்போதைய அறிக்கைக்கு இலங்கையிடம் இருந்து தெளிவான எந்த மறுப்பும் வெளியாகவில்லை.
லஷ்கர் தீவிரவாதிகள் இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விவகாரத்தில் அதிகம் கவலைப்பட வேண்டியது இந்தியா தான். ஆனால் இந்தியாவிடம் இருந்தும் அத்தகைய பாரதூரமான எந்தப் பிரதிபலிப்பையும் காணமுடியவில்லை.
இலங்கை அரசுடன் இந்த விடயத்தில் இந்தியா முட்டி மோத விரும்பவில்லையோ தெரியவில்லை.
ஏனென்றால் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பாகிஸ்தான், சீனா போன்ற இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் நெருக்கமான நட்புறவைப் பேணி வருகிறது.
அதைவிட இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசும் ஈரான், லிபியா போன்ற நாடுகளும் இலங்கைக்கு நெருங்கிய நட்புநாடுகள்தான்.
அந்த வகையில் இஸ்லாமிய அமைப்புகளின் ஊடுருவல்களை இலங்கை கண்டும் காணாமல் விட்டு விடுகிறதா என்ற கவலை இந்தியாவுக்கு இருக்காமல்போகாது.
அதேவேளை இந்த விவகாரத்தில் இந்தியா அவசரப்பட்டு இலங்கையுடன் வம்பை வளர்த்துக் கொள்வதால் ஆகப் போவதும் ஒன்றுமில்லை.
அதனால் தான் இந்தியா அதிகபட்ச பொறுமையை காக்கிறது போலுள்ளது.
அதேவேளை லஷ்கர் போன்ற அமைப்புகள் இலங்கையில் இயங்குவதை இலங்கை அரசும் வெளிப்படையாக ஏற்காது. ஏனென்றால் இந்த அமைப்பு மேற்கு நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பல இடங்களில் குறி வைத்திருக்கிறது.
இலங்கை 30 வருடப் போருக்குப் பிறகு இப்போது தான் சுற்றுலாத்துறையில் சற்று நிமிர்வு கொள்ளத் தொடங்கியுள்ளது.
அதுபோல புலிகள் விவகாரத்தைக் கையாண்ட விதத்தினால் சர்வதேச ரிதியாக ஏற்பட்ட கசப்புணர்வுகள் இன்னம் நீங்கிப் போகவில்லை.
இந்தக் கட்டத்தில் புதியதொரு தீவிரவாத அமைப்பின் நெருக்கடியை சந்திக்க நிச்சயமாக இலங்கை அரசு விரும்பாது.
அது இன்னொரு போருக்குள் நாட்டைத் தள்ளி விடும் என்பது அரசுக்கு நன்கு தெரியும்.
ஆனாலும் இந்த விடயத்தில் இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது எடுக்கப் போகிறது என்பதை வெளிப்படுத்த விரும்பாது.
அது தனது ஏதாவதொரு நட்பு நாட்டின் உறவைக் கெடுத்து விடும் என்று இலங்கை கருதலாம்.
அதேவேளை, இந்தக் கட்டத்தில் இலங்கை அரசு வெளிப்படைத் தன்மையுடன் இந்தியாவுக்கு ஒத்துழைக்க மறுத்தால் அது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிசலை ஏற்படுத்தி விடும்.
புலிகள் விவகாரத்தில் ஒருமித்த கருத்துடன் செயற்பட்ட இந்த இரு நாடுகளும் லஷ்கர் தீவிரவாத அமைப்புக்கு எதிராக அதேபோன்று ஒன்றிணைந்து செயற்படுமா என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்.
சத்திரியன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக