இந்த நிலையிலேயே ரிஷானாவை மரணதண்டனையிலிருந்தும் காப்பாற்றுவதற்கு ஏதேனும் மார்க்கம் உண்டா என்ற ஏக்கம் அனைவர் மத்தியிலும் குடிகொண்டுள்ளதை காணமுடிகின்றது. கிண்ணியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ரிஷானா மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தனது குடும்ப வறுமையைப் போக்கவும், பெற்றோரின் துயரைத் துடைக்கவுமே தனது சிறிய வயதில் சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக கடமையாற்றும் வகையில் புறப்பட்டார்.
2005 மே 4 ஆம் திகதி ரியாத்தில் ரிஷானா காலடி வைத்த போது அவருக்கு வயது 16 மாத்திரமே. 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி அவர் பிறந்திருந்த போதிலும், வேலைவாய்ப்பை பெறும் நோக்கில் 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி பிறந்ததாகவே அவரது அனைத்து ஆவணங்களிலும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ரிஷானா பணிப்பெண்ணாக சேர்த்துக் கொள்ளப்ட்ட வீட்டில் சம்பவதினம் எஜமானியின் 4 மாதக்குழந்தைக்கு புட்டிப்பால் கொடுக்குமாறு பணிக்கப்பட்டாள். அதேவேளை பால் அருந்திய குழந்தை மரணித்து விட்டதன் எதிரொலியாக ரிஷானா மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டது. அதனடிப்படையில் 2005 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி ரிஷானா கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ரிஷானா மீது வழக்குத் தொடரப்பட்டதுடன் ரிஷானாவை குற்ற வாளியாக அடையாளம் கண்ட தவாமி நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனையும் வழங்கியது. இந்த நிலையில் தான் அந்தக் குழந்தையை கொலை செய்யவில்லையெனவும் பாலூட்டிய வேளையில் மூச்சுத்திண றியே குழந்தை மரணித்ததாகவும் அவரும் அவரது சார்பில் மனித உரிமை அமைப்புக்களும் சுட்டிக்காட்டின.
அதுமாத்திரமன்றி பாலூட்டலில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தினாலும், உண்மையிலேயே அவர் ஓர் சிறுமியாகக் காணப்படுவதனாலும், அவரை விடுதலை செய்ய வேண்டுமெனக் கோரப்பட்டது. அத்துடன் தவாமி மேல் நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனை தொடர்பில் மேன்முறையீட்டு மனுவொன்றும் ரியாத் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இதேவேளை, பல்வேறு மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் என்பன இது தொடர்பில் குரல் எழுப்பி வந்தன. இந்நிலையில் சுமார் 3வருடங்களாக ரியாத் உயர் நீதிமன்றில் நீடித்த வழக்குத் தொடர்பான தீர்ப்பு ஞாயிற்றுக்கிழமை எழுதப்பட்டது. அதனடிப்படையில் தவாமி நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பை ரியாத் உயர் நீதிமன்றம் அங்கீகரித்து அதனை உறுதி செய்தது.
ரிஷானாவின் தாயாரான அபூபக்கர் ரஷினா தனது மகளின் பரிதாப நிலைகண்டு கண்ணீர் வடிப்பதுடன் தனது மகள் அப்பாவி என்றும் குழந்தையின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு அவள் இரக்க மில்லாதவள் அல்ல என்று கூறியுள்ளதுடன் ஐந்து வருடங்களுக்கு மேலாக சிறைத்தண்டனையை அனுபவித்துள்ள தனது மகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டு மெனவும் மன்றாடியுள்ளார்.
அத்துடன் இஸ்லாமிய கொள்கைகளைப் பின்பற்றும் சவூதி மன்னரோ அல்லது அந்த எஜமானரோ எனது பிள்ளைக்கு பொது மன்னிப்பொன்றை வழங்கி மறுவாழ்வு அளிக்கவேண்டும். நாங்கள் வேறு எதனையுமே கேட்கவில்லை. எனது பிள்ளையை உயிருடன் மீட்டுத் தாருங்கள், உங்களுக்கு கோடிபுண்ணியம் கிடைக்கும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை சவூதி அரேபிய உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரிஷானாவுக்கு கருணை காட்டு மாறுகோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
சட்டதியாக ரிஷானா விவகாரத்தில் மேன்றையீடு செய்ய வாய்ப்புக்கள் இல்லாது போயுள்ள நிலையில் நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி கருணை காட்டுமாறு கோரும் பட்சத்திலோ அன்றேல் பாதிப்புக்குள்ளான குடும்பம் மன்னிப்பு வழங்க முன்வரும் பட்சத்திலோ ரிஷானாவுக்கு மறு ஜென்மம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியும்.
இந்நிலையில் ரிஷானாவின் விதி எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அடுத்து வரும் சிலநாட்கள் தீர்மானிக்கப் போகின்றன. இவ்விடயத்தில் சவூதி மன்னர் மன்னித்தருளவேண்டு மென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக