புதன், 27 அக்டோபர், 2010

அப்பாவியான எனது மகள் அனுபவித்த கொடுமைகள் போதும் மனிதாபிமானத்தின் பேரால் பொது மன்னிப்பு வழங்குங்கள்

எனது மகள் அப்பாவி. குடும்பத்தின் பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே அவளை சவூதிக்கு அனுப்பவேண்டிய துரதிஷ்ட நிலை ஏற்பட்டது. பச்சிளம் குழந்தையொன்றின் உயிரைப் பறிக்குமளவுக்கு அவள் இரக்கமில்லாதவளில்லை என்று சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இல ங்கை யுவதியான ரிஸானா நபீக்கின் தாயாரான செய்யது அபூபக்கர் ரஸீனா தெரிவித்தார். முஸ்லிம் நாடென்ற நம்பிக்கையில்தான் ரிஸானாவை சவூதிக்கு அனுப்பிவைத்தோம். இன்று வரை ஐந்து வருடங்களுக்கும் மேலாக சிறையில் படாதபாடுபட்டு விட்டாள். அவள் அனுபவித்த கொடுமைகள் போதும்; மேலும் தண்டனை வழங்காமல் பொது மன்னிப்பு வழங்குவதன் மூலம் எனது பிள்ளைக்கு மறுவாழ்வளிக்குமாறு அனைத்து தரப்பினடம் மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது மகளுக்கெதிரான சவூதி அரேபிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் ஏதாவது அறிந்துள்ளீர்களா? எனக் கேட்ட போதே ரிஸானாவின் தாயாரான செய்யது அபூபக்கர் ரஸீனா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சவூதி அரேபியாவுக்கு 2005ஆம் ஆண்டில் பணிப்பெண்ணாக சென்றிருந்த மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக், தமது எஜமானன் குழந்தைக்கு புட்டிப்பாலூட்டுகையில் அக்குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது. இக் குழந்தையை ரிஸானா உள்நோக்கத்துடன் கொலைசெய்து விட்டதாக தெரிவித்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் ரிஸானாவை குற்றவாளியாக அடையாளம் கண்ட தவாமி மேல் நீதிமன்றம் ரிஸானா வுக்கு மரணதண்டனை வழங்கி 2007ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது. இருந்தபோதும் ரிஸானா, அக்குழந்தையை கொலை செய்யவில்லை எனவும் பாலூட்டுதலில் முன் அனுபவமோ அல்லது பயிற்சியோ இல்லாத அவர் பாலூட்டிய வேளையில் மூச்சுத்திணறியே அக்குழந்தை உயிழந்துள்ளது எனவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டின.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு முகவர் நிறுவனம் ஒன்றினால் கடவுச்சீட்டில் வயதைக் கூடுதலாகக் காட்டி சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரிஸானா, சம்பவம் நடந்த போது உண்மையில் ஒரு சிறுமியாகவே இருந்தார் என்பதைக் கருத்திற்கொண்டு அவருக்கு மன்னிப்பளிக்க வேண்டுமெனவும் அவ்வமைப்புகள் குரல் கொடுத்தன. இந்நிலையில், தவாமி மேல்நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு தொடர்பில் மேன்றையீட்டு மனு ஒன்று ரியாத் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.


மேன்முறையீடு

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சவூதியைச் சேர்ந்த கதீப் அல் சமா சட்ட நிறுவனம் இந்த மேன் முறையீ ட்டு மனுவை தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணைகள் சுமார் 3 வருடங்களாக ரியாத் உயர்நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், இம்மேன்றையீட்டு மனு தொடர்பான தீர்ப்பை உயர் நீதி மன்றம் நேற்று முன்தினம் வழங்கியுள்ளது.

ரிஸானா நபீக் செய்தது குற்றமே எனக் குறிப்பிட்டுள்ள வரடங்கிய உயர்நீதி மன்ற நீதியரசர்கள் குழு, தவாமி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அங்கீகரித்து தீர்ப்பளித்துள்ளது. இதற்கமைய, மேற்கொண்டு சட்ட ரீதியாக மேன்றையீடு செய்யும் வாய்ப்பு இல்லாது போயுள்ளது.

எவ்வாறிருந்தபோதிலும் மனிதாபிமான அடிப்படையில் ரிஸானாவுக்கு எவ்வகையிலேனும் பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக ஆசிய மனிதஉரிமைகள் ஆனைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.
இது விடயத்தில் மனித உமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகரின் உதவியைப் பெற்றுக் கொள்ளவும் அவ் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அரப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வறுமையின் கொடுமை

இந்நிலையில், இது குறித்து ரிஸானாவின் தாயார் கேசடிக்கு நேற்று மேலும் தெரிவிக்கையில், எனது குடும்பம் மிகவும் வறுமையான பின்னணியைக் கொண்டது. எமது குடும்பத்தை கொண்டு நடாத்த வருமானம் போதாமையாலேயே நாம் எமது மூத்த மகளான ரிஸானாவை சவூதிக்கு அனுப்ப தீர்மானித்தோம். இஸ்லாமிய நாட்டுக்கு அதுவும் இஸ்லாமியர் ஒருவரின் வீட்டுக்கு வேலைக்குச் செல்கிறாள் என்பதால் எனது பிள்ளை பாதுகாப்பாக இருப்பாள் என நம்பித்தான் அவளை அனுப்ப தீர்மானித்தோம். சிறு பிள்ளையான அவளது வயதைக் கூட்டிக் காட்டியது தொடர்பில் எமக்கு அவ்வளவாக தெரியவில்லை. வாழ வழியில்லாத ஒரு இக்கட்டான நிலைமை வந்தபோது எமக்கு வேறு வழியிருக்கவுமில்லை.

எக்காலத்திலும் எமது பெண் பிள்ளையை கண்ணுக்கு தெரியாத தேசமொன்றுக்கு தொழிலுக்கு அனுப்ப நாம் கனவிலும் நினைத்திருந்ததில்லை.

இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை விட எமது பிள்ளை சவூதி சென்று உழைத்தால் எமது கஷ்டமெல்லாம் சில வருடங்களுக்குள் தீர்ந்து விடும் என நம்பினோம். ஏழைப் பெற்றோரான எமக்கு அதைத் தவிர வேறென்ன வழிதான் இருக்கிறது? படாத பாடுபட்டு அவளை அனுப்பி வைத்தோம்.

ரிஸானா சென்று சில நாட்களில், வீட்டு எஜமானின் குழந்தைக்கு பால்கொடுத்துக் கொண்டிருந்த போது அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் அக்குழந்தையை கொலை செய்து விட்டதாக எனது பிள்ளை மேல் பழிபோடப்பட்டு, பொலிஸில் பிடித்துக்கொடுத்துள்ளதாகவும் யாரோ எமக்கு அறிவித்தார்கள். எமக்கு இடி விழுந்தது போலானது!

அடிக்கொரு தடவை உம்மா... உம்மா என்று என்னை அழைப்பவள்; சின்னப் பிள்ளைகளிடத்தில் அன்பு காட்டுபவள், தானாக அறிந்து அக்குழந்தையின் இறப்புக்கு காரணமாக இருந்திருக்கமாட்டாள் என்று பெற்றமனம் சொல்லியது. ஆனாலும், மனச்சாட்சியெல்லாம் வெளியுலகில் எடுபடாதுதானே.

ஆதரவுக் குரல்கள்

அதன்பின்னர்தான் எவ்வளவு விடயங்கள் நடந்து முடிந்துவிட்டன. ரிஸானா செய்தது குற்றமென்று குறிப்பிட்ட அந்நாட்டு மேல் நீதிமன்றம் அவளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இருந்தபோதும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் அரசாங்கம் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் இன்னும் பல பெயர் தெரியாத தரப்பினரும் எமக்கு உதவினார்கள், நம்பிக்கையூட்டினார்கள்.
ஒரு தடவை எம்மைக் கூட சவூதிக்கு கூட்டிச் சென்றார்கள்.

அங்கு சென்ற நானும் எனது கணவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எமது மகளைப் பார்த்தோம். எம்மைக் கண்டதும் அவள் அழுதுவிட்டாள். ஆனாலும் உடல் நலத்துடன் அவள் இருப்பதாகவே தோன்றியது. ரிஸானாவின் எஜமானை சந்தித்து பொதுமன்னிப்பொன்றை பெற்றுக் கொள்ள நாம் எடுத்த முயற்சிகளும் பயனற்றுப் போயின. அவர்களின் மனம் கரையவில்லை.

அதன்பின்னர், எனது மகளுக்காக எழுந்த குரல்களெல்லாம் மெது மெதுவாக ஓய்ந்து போய்விட்டன. நம்பிக்கையூட்டியவர்களே நம்பிக்கையற்றுப் போனார்கள். எமது மகளுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட கடந்த ஒரு வருடகாலமாக அறிந்துகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையே எமக்கு ஏற்பட்டது.

இந்நிலையில்தான், ரிஸானா என்ற இலங்கைப் பெண்ணுக்கு சவூதியில் மரண தண்டனை நிரூபணமாகியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை எமது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் வந்து என்னிடம் சொன்னார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. உடனே கொழும்பில் இருக்கும் க்கியஸ்தர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது விடயமாக ஏதாவது தெரியுமா? என்று கேட்டோம். அவடமிருந்தும், சரியான தகவல் இல்லை.

இது விடயத்தில் அதிகாரம் பெற்ற தரப்புகளுடனான தொடர்புகள் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில் மகளுக்கு எதிரான தீர்ப்பு செய்தி உண்மைதானா என்பதைக் கூட இதுவரைக்கும் எம்மால் உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

நம்பிக்கை

இதற்கிடையில், ரிஸானாவை சிறைக்குச் சென்று சந்திக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு சகோதரியின் உதவியால், தொலைபேசியூடாக கடந்த சனிக்கிழமை என்னுடன் ரிஸானா கதைத்தார். எனது பிள்ளை இன்னும் நம்பிக்கையுடன்தான் இருக்கிறாள். ஒரு வேளை நீதிமன்றில் நடப்பதை அவளுக்கு யாரும் சொல்லாமல் இருப்பார்களோ என்னவோ! இறைவா (அல்லாஹ்)! இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

எனது மகள் இரக்கமில்லாதவள் அல்ல.

இறைவன் மீது ஆணையாக அந்தப் பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு அவள் காரணமாக இருந்திருக்கமாட்டாள். சரி, அதையும் விடுங்கள். கடந்த 5 வருடங்களுக்கு மேலாக எனது பெண் பிள்ளை இந்த சிறையில் படாதபாடுபட்டுவிட்டாள். எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருப்பாள்?
இதற்குப் பிறகும் அவளுக்கு தண்டனை வழங்க வேண்டுமா என மனிதாபிமானத்தின் பெயரால் கேட்க விரும்புகிறேன்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைக் கூட மன்னித்துவிட்ட வரலாறு இருக்கின்றது. அப்படிப்பட்ட இஸ்லாமியக் கொள்கைகளை பின்பற்றும் சவூதி மன்னரோ அல்லது அந்த எஜமானரோ எனது பிள்ளைக்கு பொதுமன்னிப்பொன்றை வழங்கி மறுவாழ்வளிக்க வேண்டும். எமது குடும்பத்தின் தொலைந்து போன எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் வேறு எதனையும் கேட்கவில்லை. எனது பிள்ளையை உயிருடன் மீட்டுத் தருமாறே கேட்கிறோம். முஸ்லிம் அமைச்சர்களோ, இலங்கை அரசாங்கமோ யாராவது முயற்சி செய்து எனது பிள்ளைக்கு பொதுமன்னிப்பைப் பெற்றுத் தாருங்கள்.
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் என கண்ணீர் மல்கக் கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல