அவருடைய இலங்கை நிகழ்ச்சி நிரலில் எதிர்பாராமல் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாகவே கடைசி நேரத்தில் அவரால் தமிழ்த் தலைவர்களைச் சந்திக்க முடியாமல் போனதாகத் தெரிகிறது.
ஞாயிறன்று காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தபோதும், கடைசி நேரத்தில் ஹம்பாந்தோட்டை துணைத்தூதரக திறப்பின் பின்னர், அங்கிருந்து நேரடியாகவே கட்டுநாயகா ஊடாக கிருஷ்ணா நாடு திரும்பினார்.
மழையால் வந்த வினை
கிருஷ்ணாவின் இலங்கை நிகழ்ச்சி நிரலின்படி, நவம்பர் 26ம் திகதி இலங்கை வந்ததும், ஹம்பாந்தோட்டையில் இந்தியத் துணைத் தூதரகத்தைத் திறந்து வைப்பதாக இருந்தது.
எனினும், அன்றையதினம் கடுமையான மழை பெய்த காரணத்தினால், ஹெலிகொப்டரில் அங்கு பயணிப்பது பாதுகாப்பானதல்ல கிருஷ்ணாவின் பாதுகாப்பு அதிகாரிகள் அறிவுறுத்தியதாகவும், இதனால், அன்றையதினம் ஹம்பாந்தோட்டை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.
எனினும், திட்டமிட்டபடி 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகத்தைத் திறந்து வைத்த கிருஷ்ணா, தொடர்ந்து இந்திய உதவியுடனான வீடமைப்புத் திட்டத்தையும் அங்குரார்ப்பனம் செய்து வைத்ததுடன், வட பகுதிக்கான புகையிரத ஓடுபாதை அமைக்கும் வேலைத்திட்டத்தையும் ஆரம்பித்து வைத்தார்.
அடுத்தநாள் 28ம் திகதியே ஹம்பாந்தோட்டையில் துணைத் தூதரகத்தை அவர் திறந்து வைத்தார்.
இதனாலேயே, அன்றையதினம் காலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தினரையும் திட்டமிட்டபடி அவரால் சந்திக்க முடியாமல் போனதாகவும், வேண்டுமேன்றே அவர் இந்தச் சந்திப்புகளைத் தவிர்க்கவில்லை என்றும் அறியவந்துள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்திக்காமல் நாடு திரும்பியமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக