விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி
லண்டனில் ஜனாதிபதி மகிந்த ரஜாபக்ஷவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக தடுப்பு முகாம்களில் இருக்கும் முன்னாள் போராளிகளின் விடுதலை தாமதமாகும் என வன்னி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.லண்டன் ஆர்ப்பாட்டம் காரணமாக தமது விடுதலை மேலும் தாமதமாகும் என்று தடுப்பு முகாமிலுள்ள முன்னாள் போராளிகள் தம்மிடம் தெரிவித்ததாக அவர்களைப் பார்க்கச் சென்ற உறவினர்கள் கூறுகின்றனர்.
“எப்போது நமது கணவன்மார் விடுவிக்கப்படுவார்கள் என்று நாம் காத்திருக்கிறோம். இந்த நிலையில், இப்போ இந்த லண்டன் போராட்டம் காரணமாக விடுவிப்புத் தாமதமாகும் என்ற தகவல் எங்களுடைய வேதனைகளை அதிகரித்துள்ளது” என்று கூறிய தடுப்பு முகாமில் உள்ள போராளி ஒருவரின் மனைவி,
“போராட்டங்களை நடத்துவோர் எமது நிலைமையைப் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்துக்காக நாம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம். இப்ப இந்தப் போராட்டங்களாலை இருக்கிற நிலைமையும் கெட்டுப்போயிடுமோ என்று பயமாக்கிடக்கு” என்றார் அவர் வேதனையுடன்.
இதற்காகவே காத்திருப்பு
தடுப்பு முகாம்களிலுள்ள முன்னாள் போராளிகள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என்று அரசாங்கம் சொல்லி வருகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைவருமே விடுவிக்கப்பட்டுவிடுவர் என்றும் அண்மையில் அரசாங்கத் தரப்பில் கூறுப்பட்டிருக்கிறது.
எனினும், லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து, தடுப்பு முகாம்களில் இருப்போரின் விடுவிப்புத் தாமதமாகும் என்று பரவியிருக்கும் தகவல்களால் தடுப்பு முகாம்களிலுள்ளவர்களின் குடும்பத்தினர் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.
“இஞ்சை பெரும்பாலான ஆக்கள் எங்களைப்போலைதான் இருக்கினம். ஒண்டில் கணவன்மார், பிள்ளைகள் தடுப்பு முகாமிலை. தங்கட உறவுகள் எங்கை இருக்கினம் எண்டே தெரியாத நிலையிலை கனக்கப்பேர் இருக்கினம். அரசாங்கத்தைச் சீண்டிறதாலை எங்கடை நிலைமை இன்னும் பாதிக்கப்படுமே தவிர வேறொன்றும் நடக்காது” என்றார் தமது கணவர் எங்கிருக்கிறார் என்றே தெரியாமல் குழந்தை ஒன்றுடன் வாழந்துவரும் மற்றுமொரு பெண்.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் உறவினர்களுக்கு உதவும் விடயத்தில் கிராமசேவையாளர்களும் தம்மால் முடிந்ததைச் செய்து வருகின்றனர். அவ்வாறு இவர்களின் நலன்களில் அக்கறை கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமசேவையாளர் ஒருவர் எம்மிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த மக்களுடைய நிலைமையை மாற்றுவதற்கு ஏதாவது செய்வதென்றால், அரசாங்கத்தை அணுகித்தான் செய்யேலும். எங்களாலை செய்யக்கூடியதுகளையும் குழப்பிற விதமாக யாரும் நடந்துகொள்ளக்கூடாது” என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக