ஷக்கினா அஷ்டியானி
இரானில் கல்லால் எறிந்து கொல்லப்படும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்ணின் விவகாரத்தில் அடுத்த திருப்பமாக இரான் அரச தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.இரானில் ஷக்கினா அஷ்டியானி விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை பெரும்பாலும் இரான் பக்கம் குவியச் செய்துள்ளது.
பல நாடுகளையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள், இரான் கல்லால் எறிந்து மரண தண்டனை வழங்கும் முறையை கைவிட வேண்டும் என கடுமையாக போராடி வருகின்றார்கள்.
தற்போது இந்த சர்வதேச பிரச்சாரங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இரான் அரசு, 25 நிமிடங்கள் நீளமான ஆவணப்படம் ஒன்றை, அதன் ஆங்கிலத் தொலைக்காட்சியான பிரஸ் டீவீயினூடாக வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தில், ஷக்கினா அஷ்டியானி திருமண உறவுக்கு வெளியில் வேறொருவருடன் உறவுவைத்திருந்த குற்றத்தை ஒப்புக்கொள்வதாக காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு அவரது கணவரைக் கொல்வதற்கு ஷக்கினா எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கினார் என்பதும் மீளப்பதிவு செய்து காட்டப்பட்டுள்ளது.
ஊசியொன்றை வெளியிலெடுத்து, அவரது கணவருக்கு எந்த இடத்தில் எவ்வாறு மருந்தேற்றினார் என்பதையும் ஷக்கினா காட்டுகின்றார்.
ஷக்கினா மீது 2006 இல் வழக்குத் தொடரப்பட்டது
ஷக்கினா அஷ்டியானி குற்றவாளி என்பதை உறுதிப்படுத்திக் காட்டும் நோக்கத்துடனேயே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
ஆனால், இரானின் இந்தக் குற்றச்சாட்டு மனித உரிமை அமைப்புகளின் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.
ஷக்கினா அஷ்டியானிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுமா இல்லையா என்ற மிக முக்கியமான கேள்வியொன்றுக்கு பதிலளிக்காமலேயே இந்த படம் முடிக்கப்பட்டுள்ளது.
ஷக்கினாவுக்கு கடந்த 2006 ஆம் ஆண்டில் மரண தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்தும் சிறையிலிருக்கும் ஷக்கீனா அஸ்டியானியி்ன் கதி என்னவாகும் என்பது இன்னும் தெரியாமலேயே இருப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
BBC Tamil




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக