ஓரு காய்கறி வண்டிக்காரரின் கோபமும் ஏமாற்றமும்தான் துனீஷியாவில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது. பள்ளிச் சுவரில் சில இளைஞர்கள் எழுதிய வாசகங்களும் அவர்கள் மீதான அடக்குமுறையும்தான் சிரியாவில் ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டியது.
துனீஷிய மக்களின் புரட்சி முன்னோடியானது. தனித்தன்மை கொண்டது. அதனால் அது குறிப்பிடத்தக்க அளவில் வெற்றி பெற்றது. இதைக் காப்பியடித்த எல்லாப் புரட்சிகளும் வெற்றி பெற்றுவிடவில்லை. எகிப்திலும் லிபியாவிலும் புரட்சிகள் முடிவுக்கு வந்திருந்தாலும் முக்கிய இலக்குகள் இன்னும் எட்டப்படாமல் இருக்கின்றன.
"அரபு வசந்தம்' என்று அழைக்கப்படும் இந்தப் புரட்சிகளால் துனீஷியா, எகிப்து, லிபியா, ஏமன் ஆகிய நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் நடந்திருக்கின்றன. இதில் லிபியாவில் நடந்த புரட்சிக்கு முழுமையான மக்கள் ஆதரவு இல்லை.
பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவுடனும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆசியுடனும் நடந்த போர் அது. இதில் வேடிக்கை என்னவென்றால், அடக்குமுறைக்கு எதிராக நடந்த இந்தப் புரட்சிக்குப் பிறகுதான், அங்கு அதிக அளவில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாகக் கூறப்படுகிறது.
எகிப்திலும், ஏமனிலும் புரட்சி முடிந்து ஆட்சியாளர்கள் அகற்றப்பட்டிருக்கிறார்களே தவிர, நிர்வாகத்தில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை.
சிரியாவின் புரட்சியும் காப்பியடிக்கப்பட்டதுதான். நீண்ட காலமாக பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் அதிபர் பஷார் அல் ஆசாத், அவருடைய வெளிப்படைத்தன்மை இல்லாத நிர்வாகம், பயங்கரவாதிகளுக்கு மறைமுகமான ஆதரவு உள்ளிட்ட அரபு வசந்தத்துக்கான எல்லா அடையாளங்களும் சிரியாவிலும் இருக்கின்றன.
பிற புரட்சிகளைப் போலவே இங்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் குறுக்கீடுகளும், ஐ.நா.வின் நெருக்கடியும் உண்டு. ஆனால், லிபியாவுக்கு ஏற்பட்டதைப் போன்ற நிலைமை சிரியாவுக்கு ஏற்படவில்லை. கடாஃபியைக் கொன்றதுபோல ஆசாத்தை கொன்றுவிட முடியாது.
லிபியாவை எல்லோரும் கைவிட்டார்கள்.
சீனாக்காரர்களும் ரஷியர்களும்கூட லிபியா சூறையாடப்படுவதை வேடிக்கை பார்த்தார்கள்.
ஆனால், சிரியா விவகாரத்தில் ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான பாதுகாப்பு அவை தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை.
இதற்கு மிக முக்கியமான காரணம் ஈரானின் நட்புதான். மின்சாரம், சாலை வசதி, ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகள் முதல் ஆயுதங்கள் வழங்குவது வரையிலான ஆழமான நட்பு.
அதிகாரப்பூர்வமாக ஷியா நாடான ஈரான், 74 சதவிகிதம் சன்னி மக்கள் வசிக்கும் சிரியாவை ஆதரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் அதிபர் அல் ஆசாத். அவர் அலாவி எனப்படும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அந்த இனப் பற்றுதான் ஈரான் - சிரியா நட்புக்கும், இராக் - சிரியா கசப்புக்கும் காரணம்.
சன்னி பெரும்பான்மையினர் வசிக்கும் ஒரு நாட்டை 40 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருவது, நாட்டில் பத்துப் பதினைத்து சதவிகிதமே இருக்கும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் ஆச்சரியம்.
தமது அரசியல் ஆதாயத்துக்காகவோ அல்லது உண்மையான அக்கறையின் காரணமாகவோ ஒரு உருப்படியான பணியை நீண்டகாலமாக ஆசாத் செய்து வந்தார். தாம் ஷியா பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக, சன்னி பிரிவினரை அவர் புறக்கணித்துவிடவில்லை. ஷியா நாடு என்கிற எண்ணம் ஏற்படாமலும் பார்த்துக் கொண்டார். ஆனாலும், அரசியல்வாதிகளுக்கே உரிய குடும்பப் பாசத்துக்கு இவரும் தப்பவில்லை.
பெரும்பாலான முக்கியப் பதவிகளில் குடும்பத்தினரையும் நெருக்கமான உறவினர்களையும் நியமித்தார். முக்கிய முடிவு எடுப்பதில் ஆசாத்தின் மனைவி அஸ்மா தலையிடுகிறார் என்றும் கூறப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கும் மேலான அடக்குமுறை ஆட்சி, சன்னி - ஷியா மோதல், பாலஸ்தீனத்துக்கும் ஈரானுக்கும் ஆதரவாக பயங்கரவாத இயக்கங்களை ஊக்குவிப்பது, அரபு நாடுகளின் எதிர்ப்பு என சிரியாவில் ஏற்பட்டிருக்கும் புரட்சி பல்வேறு சிக்கலான பரிமாணங்களைக் கொண்டது.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரான ஆசாத்தை இப்போது எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் சன்னி பிரிவினர். 74 சதவிகிதம் பேர் சன்னி பிரிவினர் என்பதால்தான் புரட்சியும் அதையொட்டிய வன்முறையும் மிகத் தீவிரமாக இருக்கின்றன.
பெரும்பான்மையினரின் புரட்சியை ஆசாத்தால் மிக அனாயாசமாகக் கையாள முடிகிறதென்றால், அதற்கு போராட்டக்காரர்களிடம் ஒற்றுமை இல்லாததுதான் முக்கியமான காரணம்.வெளிநாட்டு உதவி கோருவது, அரசுடன் பேச்சு நடத்துவது, சர்வதேச சமூகத்துக்குப் பிரச்னையை
எடுத்துச்செல்வது உள்ளிட்ட பல பிரச்னைகளில் போராட்டக்காரர்கள் தங்களுக்குள்ளாகவே பிரிந்து கிடக்கிறார்கள்.
ஆசாத்துக்கு எதிரானவர்கள் சேர்ந்து சிரிய தேசிய கவுன்சில் என்கிற கூட்டமைப்பை உருவாக்கினார்கள். பெரும்பாலும் சன்னி பிரிவினரைக் கொண்ட அமைப்பு இது.
ராணுவத்தில் இருந்து பிரிந்தவர்களைக்கொண்டு "சுதந்திர சிரிய ராணுவம்' என்கிற படையையும் அமைத்திருக்கிறார்கள். ஓரளவு ஆயுதம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
50 ஆயிரம் பேரைக் கொண்ட இந்தப் படையால், ஆசாத்தின் ராணுவத்தை எதிர்க்க முடியவில்லை. பல இடங்களில் தோற்றுப் பின்வாங்கிவிட்டது.
வெளிநாட்டிலிருந்து நேரடியான ஆயுத உதவியும் போராட்டக்காரர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதனால், லிபியாவைப்போல ஆசாத்தை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கவோ, ஆட்சியிலிருந்து அகற்றவோ முடியாது என்று போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் கருதுகின்றனர்.
எதிரணியில் ஒற்றுமை இல்லை என்பது ஒருபுறம் இருக்க, நாட்டிலுள்ள பிற சிறுபான்மை இனத்தவரும் ஆசாத்துக்கு எதிராகச் சாய்ந்துவிடத் தயங்குகின்றனர். அரசால் பாதிக்கப்பட்ட இராக்கிய குர்து மக்கள், கிறிஸ்தவர்கள் போன்றோரும் புரட்சிக்கு முழுமையாக ஆதரவளிக்கவில்லை. இதுவும் ஆசாத்துக்கு பலம்.
அரபு வசந்தத்தின் ஒரு அங்கமாக சிரியப் புரட்சி பார்க்கப்பட்டாலும், லிபியாவைப் போல உலக நாடுகளைத் திரட்டிப் போரிடுவதா அல்லது துனீஷியா, எகிப்து ஆகிய நாடுகளைப் போல மக்களைத் திரட்டி நெருக்கடி தருவதா, இந்த இரண்டும் இல்லாமல் சீர்திருத்தங்களை மட்டும் வலியுறுத்துவதா என்று முடிவெடுக்க முடியாத அடையாளச் சிக்கலில் இந்தப் போராட்டம் தவித்துக் கொண்டிருக்கிறது. உலகத்தின் பல போராட்டங்கள் தோற்றுப்போவது இந்தப் புள்ளியில்தான்.
எம். மணிகண்டன்
Dinamani

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக