ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

உருகும் இரும்புத் தலைவர்...

ரஷியாவில் ஜோசப் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, அசைக்க முடியாத தலைவராக உருவெடுத்தவர் விளாதிமிர் புதின். 1999-ம் ஆண்டில் முதல்முறையாக பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து இப்போது வரை சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர், அதிபர் என பதவியை மாற்றி, அதிகாரத்தைத் தொடர்ந்து தன் கையில் வைத்துள்ளார்.

ரஷிய உளவுத்துறையான கேஜிபி-யில் 16 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும், அப்போது கிடைத்த அரசியல் தொடர்புகளுமே புதினின் இப்போதைய அரசியல் பலம். கேஜிபி-யில் தன்னுடன் பணியாற்றிய மெத்வதேவ் உள்ளிட்டோரைத்தான் தனது நம்பிக்கைக்குரியவர்களாக அரசியலில் வைத்துள்ளார் புதின்.

எப்போதும் மக்களிடம் நேரடியாகத் தொடர்பில் இருக்க விரும்பும் புதின், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, பொதுமக்களின் கேள்விகளுக்கு மட்டுமின்றி தொலைபேசி மூலம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் எவ்விதத் தயக்கமுமின்றி நேரடியாக உடனுக்குடன் பதிலளித்து "புதினிஸம்' என்ற புதிய வழிமுறையை உருவாக்கினார்.

1991-ல் அரசியலில் நுழைந்தது முதல் சுமார் 20 ஆண்டுகளாக ரஷியாவில் மக்கள் செல்வாக்குள்ள தலைவராக இருந்தார். சர்வதேச அளவில் பிரபலமான ரஷியத் தலைவராகவும் விளங்கினார். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, மக்கள் மத்தியில் அவருக்கு எதிரான அதிருப்தி அப்பட்டமாக வெளிப்பட்டது. அதிபர், பிரதமர் நாற்காலிகளில் புதினும், அவருக்கு நெருக்கமான திமித்ரி மெத்வதேவும் மாறிமாறி அமர்ந்து விளையாடியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. நாட்டில் தலைவிரித்தாடும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவற்றைப் போக்க புதின் எதுவுமே செய்யவில்லை என்பதே மக்களின் அதிருப்திக்கு முக்கிய காரணம்.

ரஷிய சட்டப்படி ஒருவர் இருமுறைக்கு மேல் தொடர்ந்து அதிபராகத் தொடரக் கூடாது. 2000-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டுவரை அதிபராக இருந்த புதின், அடுத்த 4 ஆண்டுகளுக்கு தனது நம்பிக்கைக்குரிய மெத்வதேவை அதிபராக்கினார்.

மெத்வதேவ் வகித்து வந்த பிரதமர் பதவியை, தான் பெற்றுக் கொண்டார். 2012-ல் மீண்டும் புதின் அதிபராகிவிட்டு, மெத்வதேவைப் பிரதமராக்கினார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கு முன்னரே புதின் மீதான மக்களின் அதிருப்தி அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கியது. கருத்துக் கணிப்புகளும் புதினுக்கு எதிராக அமைந்தன.

இதனால் ரஷிய அதிபர் தேர்தல் சர்வதேச அளவில் பெரிய எதிர்பார்ப்புக்குள்ளானது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக 63 சதவீத வாக்குகளைப் பெற்று புதின் வென்றார். புதினும், மெத்வதேவும் இணைந்து முறைகேடு செய்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் புதினுக்கு எதிராகப் போராட்டக் களத்தில் குதித்தனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கிப் போராடினாலும் சிறிதும் அசைந்து கொடுக்காத புதின், 4 ஆண்டு இடைவெளிக்குப்பின் மீண்டும் கிரெம்ளின் மாளிகைவாசியானார்.

அதே நேரத்தில் தலைநகர் மாஸ்கோவில் போராட்டத்தில் ஈடுபட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீஸப்ர் விரட்டியடித்தனர். அடுத்த சில நாள்கள் எதிர்க்கட்சியினர் கைது, போராட்டத்தில் தடியடி என அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் புதின். எனினும் 2000-ம் ஆண்டில் முதல்முறையாக அதிபராகத் தேர்வு செய்யப்பட்டபோது ரஷியாவின நம்பிக்கை நாயகனாக அறியப்பட்ட புதின், செல்வாக்கு சரிந்த தலைவராகிவிட்டார்.

அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொண்டாலும், மக்கள் மனதில் உள்ள அதிருப்தியை நீக்கும் சந்தர்ப்பம் புதினுக்கு இப்போதுவரை கிடைக்காதது அவரது துரதிருஷ்டம்.

அதே நேரத்தில் இப்போது புரட்சிகர இசைக்குழு ஒன்றாலும் மீண்டும் பிரச்னையில் சிக்கியுள்ளார் புதின். மாஸ்கோவில் உள்ள தேவாலயத்தில் "புஸ்ஸி ரயட்' என்ற இசைக்குழுவைச் சேர்ந்த இளம் பெண்கள் மூவர், அதிபர் புதினுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய பாடலைப் பாடினர்.

இதற்காக அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. 5 மாத வழக்கு விசாரணைக்குப்பின் சில நாள்களுக்கு முன்பு வழங்கப்பட்ட தீர்ப்புதான் பூதாகரமான பிரச்னையைக் கிளப்பியுள்ளது.

இளம் பெண்கள் மூவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது ரஷிய நீதிமன்றம். தேவாலயத்தில் வன்முறையைத் தூண்டும் வகையிலான பாடலைப் பாடினார்கள் என்பதற்காகவே இந்தத் தண்டனை என்று நீதிமன்றத்தால் விளக்கமளிக்கப்பட்டது. எனினும் புதினுக்கு எதிராகப் பாடினார்கள் என்பதற்காகவே அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

புதின் மேற்கொண்ட பழிவாங்கும் நடவடிக்கை இது என்று ரஷிய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இத்தீர்ப்பு குறித்து கவலை தெரிவித்த பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரின. எனினும் தண்டனை உறுதி செய்யப்பட்டு, இளம்பெண்கள் மூவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஷியாவில் மட்டுமே புதினுக்கு எதிரான போராட்டம் நடைபெற்றது. இப்போது இசைக்குழுவுக்கு ஆதரவாக, பல்வேறு இசைக்குழுவினர், சமூக அமைப்பினர் என பல்வேறு நாடுகளில் புதினுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. வெளிநாடுகளிலேயே இவ்வளவு எதிர்ப்பு என்றால் ரஷிய எதிர்க்கட்சிகள் சும்மா இருக்குமா? தீர்ப்பு வெளியான உடன் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே போராட்டம் தொடங்கியது.

சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், செஸ் சாம்பியனுமான கேரி காஸ்பரோவ் உள்ளிட்ட ஏராளமான எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தத் தொடர் போராட்டங்களால் அமளிக்காடாகிவிட்டது ரஷியா.

ரஷியாவின் இரும்பு மனிதராக தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்ட புதின், இப்போது மக்களின் எதிர்ப்பு என்ற வெப்பத்தில் உருகத் தொடங்கியுள்ளார்.


சு. வெங்கடேஸ்வரன்

படம்: இணையத்திலிருந்து


- தினமணி-

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல