சனி, 15 டிசம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 12

பரணியைத் தமிழ்ச்செல்வன் இப்பணிக்கென நியமித்ததைத் தொடர்ந்து பரணி இப்பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். இதே வேளை மறுபுறத்தில் பொட்டம்மான் நசீர் என்பவரை இலங்கையிலுள்ள ஊடகங்கள் அனைத்தையும் கையாளுவதற்கான பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறித்த யாழ்ப்பாணப் பத்திரிகை தொடர்பான பல்வேறு இரகசியத்தகவல்கள் மேலதிகமாக நசீருக்கு கிடைத்திருந்தது. குறித்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்த சிவராமை நசீர் அவசரமாக வன்னிக்கு அழைத்திருந்தார். சமாதான சூழ்நிலை நிலவிய காலத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.

உடனடியாகவே வன்னிக்கு வந்த சிவராம் நசீருடன் சந்திப்பை ஏற்படுத்துவதற்குரிய ஒழுங்குகளை கிளிநொச்சியிலிருந்த மறவன் என்ற புலனாய்வுத்துறை போராளி மேற்கொண்டிருந்தார். இவ் ஒழுங்குபடுத்தலுக்கு அமைவாக கிளிநொச்சியில் நசீரை சந்தித்த சிவராம் பல்வேறு தகவல்களையும் குறித்த ஊடகவியலாளர் தொடர்பிலான பல்வேறு அம்பலமாகாத தகவல்களையும் வெளிப்படுத்தியதுடன் குறித்த ஊடகவியலாளரும் அவரது மைத்துனரான தற்போதைய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கொண்டிருந்த நெருக்கம், அந்தக் கட்சியின் மத்திய குழுவில் அங்கத்துவம் வகித்தமை உட்பட பல்வேறு புதிய தகவல்கள் சிவராம் ஊடாக நசீருக்கு கிடைக்கப்பெற்றது.இதனை அடுத்து சிவராமை அன்று இரவு கபிலம்மான் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்ததுடன் படைத்துறை சார்ந்த பல்வேறு சந்தேகங்களையும் சிவராமுடன் கலந்துரையாடி தெளிவுபெற்றுக் கொண்டார். சிவராம் படைத்துறை சார்ந்த ஒரு ஆய்வாளராக கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகைகளில் மிகவும் துல்லியமான தகவல்களுடன் எழுதி வந்த போதிலும் பின்னைய நாட்களில் இவர் பொட்டம்மானின் பொறிக்குள் விழுந்ததன் பின்னர் இவரது அரசியல் ஆய்வுகள் இராணுவ ஆய்வுகள் என்பன முழுமையாக புலிகளுக்கு சார்பானதாக இருந்ததாகவே சர்வதேச விமர்சகர்கள் பலரும் இவரது மரணத்தின் பின்னர் கருத்து வெளியிட்டனர்.

பிரித்தானிய ஊடகவியலாளரான வில்லியம் காபர் என்பவர், சிவராம் ஒரு விவேகமான நல்ல ஊடகவியலாளராக என்னுடன் அறிமுகமாகி இருந்தார். அவரது ஆற்றலை தமிழ்நெற் எனும் இணையத்தளத்தின் வாயிலாக நான் தெரிந்துவந்த போதிலும் அவ் இணையத்தளம் புலிகளுக்கு சார்பான ஒரு இணையத்தளம் என்பதை பின்னைய நாட்களில் தெரிந்துகொண்டேன். இதனால் சிவராம் எந்தத் தளத்தில் நின்று பத்திரிகைப் பணி ஆற்றினார் என்பது எனக்கு சங்கடமாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு சிவராம் பல்துறை சார்ந்த ஒரு ஊடக விமர்சகராக இருந்த போதிலும் சிவராமிற்கு கொழும்பில் இருந்த ஆங்கிலப் பத்திரிகைகளில் இவர் சுதந்திரமாக வெளியிட்ட கருத்துக்கள் காரணமாக பின்னைய நாட்களில் புலிகளால் அச்சுறுத்தப்பட்டு உள்வாங்கப்பட்டாரா? என்ற சந்தேகங்களும் எழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தராக்கி என்ற பெயரில் எழுதிவந்த சிவராம் யாழ்ப்பாணத்திலுள்ள குறித்த பத்திரிகை தொடர்பான தகவல்களை துல்லியமாக நசீருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து இத்தகவல்கள் உடனடியாக பொட்டம்மானின் நேரடி பார்வைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

மறுபுறத்தில் பரணி என்பவர் யாழ்ப்பாண ஊடகங்களை ஆராயும் தனது நடவடிக்கைகளில் முழுமையாக களமிறங்கியிருந்தார். பரணிக்கும் குறித்த பத்திரிகை தொடர்பிலும் அதன் பிரதம ஆசிரியர் மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பிலும் பல்வேறு திருப்தியற்ற பதில்களே மக்களிடமிருந்து கிடைத்தன. பரணி அதிர்ச்சி அடையக்கூடிய விதத்தில் பல்வேறு தகவல்களை மக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறித்த பத்திரிகையில் பணியாற்றி பின்னர் இப் பத்திரிகையை விட்டுச் சென்ற பலரிடமும் நேரடியாகச் சென்று தகவல் சேகரிக்கும் பணியில் பரணி ஈடுபட்ட பொழுது மேலும் அதிர்ச்சியான பல தகவல்கள் பரணிக்குக் கிடைத்தன.

அதாவது குறித்த பத்திரிகை தனது காரியாலயத்தில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்வதாகவும், அந்த விளம்பரத்தின்படி யாழ்ப்பாணத்தில் வேலை தேடிக்கொண்டிருக்கும் பல்லாயிரம் பேரில் பலர் நேர்முகப் பரீட்சைக்கு செல்வதாகவும் அவ்வாறு செல்பவர்களை ஆறுமாத ஒப்பந்தத்தில் பணிக்கு அமர்த்துவதாகவும் குறித்த காலப் பகுதியில் வேலையை தமது நிறுவனம் பழக்குவதால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையுடனேயே வேலைக்கு அமர்த்தி, ஆறுமாதம் முடிந்த பின்னர் ஏதாவது ஒரு காரணம் கூறி அந்தப் பணியாளர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டு விடுவார். பின்னர் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களில் இருந்து புதிதாக சிலர் அழைக்கப்பட்டு ஆறுமாதமோ அல்லது 3மாதமோ வேலைவாங்கிய பின்னர் அவர்களும் ஏதோ ஒரு காரணம் கூறப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்.

பொருளாதாரச்சுமை வாழ்க்கைச் சுமை வேலையில்லாத் திண்டாட்டம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் வாழுகின்ற யாழ்ப்பாண இளைஞர்கள் நம்பி வேலைக்குச் செல்கின்ற பொழுது இவர்களிடம் மனித மணித்தியாலங்களை குறித்த பத்திரிகை நிறுவனம் இலவசமாக சுரண்டி மோசம் செய்துவிட்டு அவர்களை திருப்பி அனுப்பும் மனிதாபிமானமற்ற இந்தச் செயற்பாது குறித்தும் பரணிக்குத் தெரியவந்தது. இவர்களது சப்ரா என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த மக்களினுடைய நிதியைச் சுரண்டி அந்த மக்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து பலரை தற்கொலை செய்ய தூண்டிய பாதகச் செயலையும் பாதிக்கப்பட்ட மக்களில் பலரும் முறைப்பாடு செய்தனர். இவர்களை மனிதர்கள் தண்டிக்காவிட்டாலும் கூட புனிதர்கள் அல்லது இறைவன் என்றைக்கோ ஒருநாள் தண்டிக்கத்தான் போகின்றான் என்றே அந்த அப்பாவி மனிதர்கள் புலம்பினார்கள். இவர்களது பத்திரிகை மோசடி மற்றும் நிதி நிறுவன மோசடி தொடர்பில் பல்வேறு தகவல்களையும் பரணியால் திரட்ட முடிந்தது.

இதைவிட யாழ்ப்பாணத்திலிருந்த ஊடகவியலாளர்கள் படைத்துறையினருடன் எத்தகைய உறவுகளை பேணினார்கள் அந்த உறவுகளின் ஊடாக எந்தெந்த இலக்கை எட்டினார்கள் என்பதையும் புலிகள் தங்கள் புலனாய்வுக் குறிப்புகளில் வைத்திருந்தார்கள். ஆனால் விடுதலைப் புலிகள் தாங்களும் தமது இயக்க ஊடகங்கள் மற்றும் தமக்கு சார்பான போக்குடைய ஊடகவியலாளர்களை படைத்துறையினருடன் பழகுவதற்கும் அவர்களிடம் தகவல்களை சேகரித்து செய்திகளாக வழங்குவதற்கும் அனுமதி அளித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பிரிவு மற்றும் விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு ஆகியன மட்டுமே ஊடகவியலாளர்களுக்கு இந்த அனுமதியை வழங்கி வந்தன. விடுதலைப் புலிகளின் அனுமதியின்றி படைத்துறையினருடன் தொடர்புகளைப் பேணினால் அந்த ஊடகவியலாளர் இலங்கையிலிருந்து அதுவும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து செயற்படுவது என்பது கடினமானதாகும்.

இதற்கு யாழ்ப்பாணத்தில் நல்ல உதாரணம் யாழ்ப்பாணத்திலிருந்து செயற்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த வின்சன்ஜெயன் என்ற ஊடகவியலாளர். சுதந்திரமான ஒரு ஊடகவியலாளராக யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட போதிலும் இவர் புலிகளது குறித்த பிரிவினரது அனுமதியை பெறாமல் படைத்துறையினருடன் கூடுதலான தொடர்புகளை பேணி வந்ததால் புலிகள் இரண்டு தடவைகள் இவரை எச்சரித்துவிட்டு மூன்றாவது தடைவ தண்டனை வழங்குவதற்கு சென்ற பொழுது அந்த ஊடகவியலாளர் படைத்துறையின் உதவியுடன் யாழ்ப்பாணத்தை விட்டு தப்பிச்சென்று தற்போது சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றார். இவர் அன்று தனது வீட்டில் இருந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.
அப்படியானால் யாழ்ப்பாணத்தில் புலிகளின் அனுமதியுடன் இயங்கிய ஊடகவியலாளர்கள் யார்? அவர்கள் தமது ஊடகப் பணியை ஆற்றியவாறு புலிகளை எவ்வாறு அழித்தார்கள் என்பது தொடர்பில் தொடர்ந்து பார்ப்போம்.

(வே. அர்ச்சுணன்)

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல