ஞாயிறு, 16 மார்ச், 2014

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானிகள் வீட்டில் சோதனை

சோதனை நடந்த விமானி பரிக்கின் வீடு

காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் வீடுகளில் மலேசியப் போலிசார் சோதனைகளை நடத்தியிருக்கின்றனர்.

கடத்தப்பட்டதாக அல்லது விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகளான, ஸஹாரி அஹ்மது ஷா (53) மற்றும் பரிக் அப்துல் ஹமித் (27) ஆகிய இருவரின் கோலாலம்பூர் வீடுகளிலும் மலேசியப் போலிசார் சனிக்கிழமை சோதனைகளை நடத்தினர்.

அந்த விமானிகளின் குடும்ப வாழ்க்கை மற்றும் மனோநிலை ஆகியவைகள் குறித்து ஆராய இந்த சோதனைகள் நடத்தப்பட்டன என்று கூறப்படுகிறது.

இந்தச் சோதனைகள் குறித்த புதிய விவரங்கள் எதையும் போலிசார் தரவில்லை.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொடர்பு சாதனக் கருவிகள் வேண்டுமென்றே முடக்கப்பட்டதாக மலேசியப் பிரதமர் கூறியதை அடுத்து இந்த சோதனைகள் நடந்தன.

விமானம் இதன் பின்னர் நடுவழியில் தனது பாதையை திடீரென்று மாற்றிக்கொண்டது என்று நம்பப்படுகிறது.

இந்த போயிங் 777 ரக விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற் கொண்டிருந்தபோது, பறக்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் ராடார் தொடர்பை இழந்தது.

ஆனால் ராடார் தொடர்பை இழந்த பின்னரும் சுமார் ஏழு மணி நேரத்துக்கு இந்த விமானம் பறந்திருக்கலாம் என்று செய்கோள் ஆதாரங்கள் காட்டுவதாக மலேசியப் பிரதமர் நஜிப் ரஜாக் கூறியிருந்தார்.

இந்த விமானம் கஜக்ஸ்தானிலிருந்து இந்தியப் பெருங்கடல் பரப்பு வரை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இது ஒரு விமானக் கடத்தல் முயற்சி என்று கூறுவதைத் தவிர்த்த மலேசியப் பிரதமர், ஆனால் தாங்கள் " எல்லா சாத்தியக்கூறுகளையும்" விசாரித்து வருவதாகக் கூறினார்.
விமானம் பறந்த பாதையைக் காட்டும் வரை படம்

தேடுதல் வேட்டையை இந்தியா நிறுத்தியது

இதனிடையே, அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகேயும், வங்காள விரிகுடாவிலும், இந்த விமானத்தைத் தேடும் வேலையை இந்தியா இடை நிறுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

மலேசிய அதிகாரிகளின் வேண்டுகோளின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அது கூறியிருக்கிறது.

தேடும் பணி குறித்து மலேசியாவிடமிருந்து மேலும் புதிய வேண்டுகோள்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்திய கடற்படையும், விமானப்படையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பகுதிகளிலும், வங்காள விரிகுடா பகுதியிலும் இந்தத் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுவந்தன.

மலேசியா இப்போது இந்த ஒட்டுமொத்த தேடுதல் நடவடிக்கையையே மீள் பரிசீலனை செய்து வருவதாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர்.

"முழு" விவரங்களைக் கோருகிறது சீனா

இந்த விமானத்தை தேடும் முயற்சிகள் பற்றி தனக்கு " சரியான மற்றும் முழுமையான" தகவல்களைத் தருமாறு, சீனா மலேசியாவைக் கோரியிருக்கிறது.

விமானத்தில் பயணம் செய்த 239 பேரில், 153 பேர் சீனப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் 38 மலேசியர்களும், அமெரிக்கா, கனடா,பிரான்ஸ், இந்தியா ,ஆஸ்திரேலியா உள்ளிட்ட பிற நாட்டவர்களும் பயணம் செய்தனர்.

அனைத்துக் கோணங்களும் பரிசீலனை

இந்த விசாரணையில், பயங்கரவாதம், கடற்கொள்ளை, கூட்டுத் தற்கொலை என அனைத்து கோணங்களும் பரிசீலிக்கப்படுவதாக பிபிசியின் கோலாலம்பூர் செய்தியாளர் கூறுகிறார்.

தலைமை விமானி ஸஹாரீ மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் சேர்ந்தார். அவர் மிக அனுபவம் மிக்க விமானியாகக் கருதப்படுகிறார்.

இணை விமானி, பரிக், சமீபத்தில்தான் போயிங் ரக விமானங்களை ஓட்டும் விமானியாக பணி உயர்வு தரப்பட்டார். அவர் திருமணம் செய்து கொள்வது குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தார் என்று கருதப்படுகிறது.

"காணாமல்போன விமானம் கூடுதலாக ஏழு மணி நேரம் பறந்துள்ளது"

239 பேருடன் ஒருவாரத்துக்கும் மேலாக காணாமல்போயுள்ள மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் தொலைதொடர்புக் கருவிகள் வேண்டுமென்றே செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன என்று மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் கூறியுள்ளார்.

தொலைதொடர்புக் கருவிகள் நிறுத்தப்பட்ட விதம், அவை விமானத்திலிருந்த ஒருவருடைய செயலால் நிறுத்தப்படுவதுபோல அமைந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

பல வழிகளிலும் கிடைக்கப்பட்ட தரவுகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும்போது, இந்த போயிங் 777 ரக விமானம் கடைசியாக ராடாருக்கு தகவல் அனுப்பியதற்கு பின்னர் கூடுதலாக ஏழு மணி நேரம் பறந்திருப்பதைக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

தெற்கு சீனக் கடல் பரப்பில் தேடுதல் பணிகளை இத்தோடு தாம் நிறுத்திக்கொள்வதாகவும், இந்த விமானம் சென்றிருக்க வாய்ப்புள்ள வேறு இரண்டு பாதைகளில் தாம் இனி தேடப்போவதாகவும் பிரதமர் அறிவித்தார்.

மலேசியாவில் இருந்து வட மேற்கு திசையில் கஸக்ஸ்தான் நோக்கியதாக ஒரு பாதையிலும், அல்லது மலேசியாவிலிருந்து தென்மேற்கு திசையாக இந்தியப் பெருங்கடலிலும் இந்த விமானம் சென்றிருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

BBC Tamil 

 தொடர்புடைய பக்கங்கள்



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல