ஞாயிறு, 16 மார்ச், 2014

அவர்கள் எங்களுக்காய் பசியிருக்க நாங்கள் பியர் குடித்து ஆடலாமோ?

அன்பு வாசகர்களே! 15.03.2013 அன்று எழுதிய ஆசிரியர் தலையங்கம் உங்கள் ஞாபக மூட்டலுக்காக மீளவும் இங்கு தரப்படுகின்றது. குறித்த ஆசிரியர் தலையங்கம் எழுதப்பட்டு சரியாக ஒருவருட நிறைவு நாளான நேற்று (15.03.2014) கிரிக்கெட் போட்டியின் பெயரால் நம் யாழ்ப்பாண மண்ணில் ஒரு கொலை நடந்து போயுள்ளது என்ற சோகமான செய்தியோடு இதனை வாசித்துக் கொள்ளுங்கள்.



தா.. தா.. தா.. தா.. தா.. தா.. தா.. குறைக்கு என் செய்வேன் என்று ஏழு தடவைகள் ‘தா’ சொல்லி வி.கல்யாணசுந்தரனார் கவி பாடினார். எழுதாக் குறைக்கு என் செய்வேன்... என் பதையே அவர் மேற்கண்டவாறு இயம்பினார். எழுதாக் குறைக்கு என் செய்வேன் என்று வி.கல்யாணசுந்தரனார் பாடியதை ஈழத்தமிழர்களாகிய நாங்கள் நினைந்து நினைந்து வெம்புகின்றோம். அந்தளவுக்கு எங்கள் மண்ணில் வேதனை வாட்டுகிறது. முப்பது ஆண்டு கால போராட்டத்தின் பின் விடிவும் இல்லை விடுதலையும் இல்லை என்றாகிய துன்பத்திற்கு அப்பால், எங்கள் பிள்ளைகள் - எங்கள் மாணவர்கள் நடந்து கொள்ளும் முறைகண்டு மனம் வெம்புகின்றது.

உலகம் முழுவதும் ஈழத் தமிழர்கள் தொடர்பில் ஜெனிவாவில் நடக்கின்ற வாதப் பிரதிவாதங்களில் கண்ணும் கருத்துமாக இருக்க, இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அங்கு நடந்த போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழகத்தின் லொயலா கல்லூரி மாணவர்கள் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னதாக நான்கு நாட்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் இருந்தனர்.

எங்களுக்கு ஆதரவாக அந்த மாணவர்கள் பசி நோன்பு இருக்கையில் எங்கள் மண்ணில் எங்கள் பிள்ளைகள் பியர் போத்தலுடன் வீதிகளில் நின்று கும்மாளம் போடுகின்றனர். இதனைப் பார்க்கின்ற போது இதயம் எரிந்து போகிறது.

ஜெனிவாவில் எடுக்கப்படுகின்ற தீர்மானம் ஒன்று தான் எங்கள் வாழ்வைத் தீர்மானிக்கும் என்று இருக்கும் வேளையில், கிரிக்கெட் போட்டியின் பெயரால் பிரபல்யமான பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்கின்ற ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் பியர் அருந்தி வீதிகளில் நின்று ஆடுகின்றனர்; பாடுகின்றனர்.அந்தோ! இதைவிட அநியாயம் வேறு எதுவும் இருக்க முடியாது.

அன்புக்குரிய மாணவர்களே! வன்னிப் பெரு நிலப்பரப்பில் உயிரிழந்து போனவர்கள் பற்றி உங்கள் இதயம் இம்மியும் நினைக்கவில்லையா? காணாமல்போன பிள்ளைகளுக்காய் தாய்மார்கள் கண்ணீர் விடுகின்ற துன்பியலை நீங்கள் கண்டதே இல்லையா? ஏன் தான் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?

லொயலா கல்லூரி மாணவர்கள் எங்களுக்காக உண்ணா நோன்பிருக்க நாங்கள் கிரிக் கெட் விளையாடுவதா? என்று எழுந்து நின்று கேட்க வேண்டிய நீவிர், பியர் குடித்து வீதியில் அட்டகாசம் செய்வது முறையோ!

உங்களிடம் இரக்கம் என்பதும் ஒப்புரவு ஒழுகல் என்பதும் அடியோடு அறுபட்டு போனதோ? அல்லது ஈழத்தமிழன் பாழாய்ப் போகட்டும் என்று நினைத்த பிரம்மன் அதை உங்களிடம் படைக்காது விட்டானோ? எம் உறவின் உயிர்ப்புகளே! மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்ற கோசத்தின் அதிர்வுகள் இப்போதும் எங்கள் காதுகளில் ஒலிக்கின்றன.அந்த அதிர்வுக்கு களங்கம் கற்பித்து விடாதீர்கள்.

வலம்புரி இணையம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல