'மாற்று வழிகளிலான, அரசியலின் விரிவாக்கமே யுத்தம்' - இது ஜெர்மனியராகிய வொன் க்ளோஸ்விட்ஸ் என்ற தத்துவமேதையின் உலகப் புகழ்பெற்ற வார்த்தைகளாகும். யுத்தம் என்பது அரசியலின் மற்றுமொரு முகம், முக்கிய அம்சம். அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஆயுத பலத்தைப் பிரயோகித்து, மேற்கொள்ளப்படுகின்ற ஓர் அரசியல் நடவடிக்கையாகவே அது நோக்கப்படுகின்றது.
1780 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி பிறந்த க்ளோஸ்விட்ஸ் இராணுவ தளபதியாக இருந்து 1831 ஆம் ஆண்டு மறைந்தவர். அந்த காலத்தில் யுத்த களத்தில் அவருக்குக் கிடைத்த அனுபவங்களும், சிந்தனைகளும் யுத்தம் பற்றிய உலகப் புகழ்பெற்ற சிந்தனாவாதியாக அவரைப் புடம் போட்டிருந்தன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
யுத்த சிந்தனாவாதியாகத் திகழ்ந்த அவர், யுத்தத்தின் உளவியல் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து வலியுறுத்தி கூறியிருக்கின்றார். இந்த தத்துவங்களை அமெரிக்கர்கள் முதல் உலகில் பெரும்பான்மையானவர்கள் தமது யுத்தம் மற்றும் அதனுடன் இணைந்த அரசியல் செயற்பாடுகளில் கைக்கொள்வதாகக் கூறப்படுகின்றது. இந்த வகையில் இலங்கை இராணுவத்தினரும் அவருடைய கொள்கைகளில் ஈர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ள இலங்கை அரசாங்கம், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற சிந்தனையை நாடு முழுவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற நோக்கத்தை அரசாங்கம் முடிந்த முடிவாக, இறுக்கமான ஒரு தீர்மானமாகக் கொண்டு அதனைச் செயற்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இந்த கைங்கரியத்திற்காக க்ளோஸ்விட்ஸின் கொள்கையை - தத்துவத்தைப் பின்பற்றி அதிகார பலத்துடன் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.
பல்லின மக்களையும் சமூகங்களையும் கொண்ட இலங்கையில் சிறுபான்மையினராகிய தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் ஆளுந்தரப்பினரால் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதன் காரணமாக அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக அஹிம்சை வழி போராட்டங்களும், அதன்பின்னர் ஆயுதமேந்திய போராட்டங்களும் அறுபது வருடங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆயினும் இந்த இரண்டு வழிமுறைகளிலான போராட்டங்களும் ஆடசியாளர்களினால் மிகவும் நேர்த்தியாக முறியடிக்கப்பட்டிருக்கின்றன.
இதனால், சிறுபான்மையினராக இருந்து உரிமைகளுக்காகப் போராடிய தமிழ் சமூகம் முறையான அரசியல் அந்தஸ்து அற்றவர்களாக, தோற்றுப்போன சமூகத்தினராக இன்று மாற்றப்பட்டிருக்கின்றார்கள். பயங்கரவாதமாக சித்திரிக்கப்பட்டு, சர்வதேச மட்டத்தில் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், அரசியல் உரிமைக்கான வலுமிக்க ஆயுதப் போராட்டம் படுதோல்வியடையச் செய்யப்பட்டிருக்கின்றது.
யுத்தத்தில் அடைந்த வெற்றியின் பெருமிதத்தில், இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அவசியத்தை இலகுவாகப் பின்தள்ளி, அத்தகைய தேவையே நாட்டில் கிடையாது என்ற நிலைப்பாட்டை ஓர் அரசியல் தீர்மானமாகவே மேற்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகத்தான் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் நாளொரு நிலைப்பாட்டையும், பொழுதொரு கொள்கையையும் கடைப்பிடித்து வருகின்றது.
யுத்தம் முடிவடைவதற்கு முன்னர், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததும், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்து வந்த அரசாங்கம் இப்போது, இனப்பிரச்சினை என்பதைப் பெரிதுபடுத்தாத ஒரு போக்கைக் கொண்டிருக்கின்றது. நாட்டில் பொருளாதாரப் பிரச்சினையே இருக்கின்றது என சுட்டிக்காட்டி, அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தால் போதும், பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்பட்டுவிடும் என்று அரச தரப்பினர் கூறி வருகின்றார்கள்.
இதற்கு ஆதாரமாக இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது என்ற புதிய கோஷத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ யுத்தம் முடிவடைந்தவுடன் யுத்த வெற்றியைக் கொண்டாடும்போது முடிந்த முடிவாக முன்வைத்திருந்தார். யுத்த காலத்திலும், யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்பும், அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களே பெரும்பான்மையினர் என்றும், யுத்த வெற்றியை சகிக்க முடியாதவர்களே சிறுபான்மையினர் என்றும் அவர் அப்போது இலக்கணம் வகுத்திருந்தார். யுத்த வெற்றியை மதிக்காதவர்கள் - அரசுக்கு ஆதரவளிக்காதவர்கள், சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற ஒன்றிணைந்த நாட்டுக்கான கொள்கையை எதிர்க்கின்ற தேசத்துரோகிகளாகவும் சில நேரங்களில் அரச தரப்பினர் வர்ணிக்கின்ற ஒரு போக்கையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
வர்த்தகம் மற்றும் தொழில்துறை
அபிவிருத்தி நிலைமை
யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம், இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசம் என நாடு இரண்டாகப் பிளவுபட்டு கிடந்தது. ஒரு நாட்டில் இருந்து மற்றுமொரு நாட்டுக்குச் செல்வதைப் போன்ற பிரயாண நடைமுறைகளை, இந்த இரண்டு பிரதேசங்களுக்குமிடையில் போக்குவரத்து செய்தவர்கள் அப்போது பின்பற்ற நேர்ந்திருந்தது. எதிரியின் தரப்பில் இருந்து வருபவர்களைப் போலவே இந்தப் பயணிகள் இருதரப்பினராலும் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டார்கள். இதன்போது, இந்த நாட்டின் குடிமக்களாக இருந்தபோதிலும், அவர்கள், கடுமையான சோதனை நடவடிக்கைகள், கண்காணிப்புச் செயற்பாடுகள் என்பவற்றிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
அது மட்டுமல்லாமல், வீடுகளில் இருந்து அலுவல்களுக்காக வெளியில் செல்பவர்கள் உயிருடன் திரும்பி வருவார்களா என்பது நிச்சயமற்றிருந்த ஒரு சூழல் அப்போது நிலவியது. எந்த நேரத்தில் குண்டுகள் எங்கே வெடிக்கும் என்றும், எந்த நேரத்தில் எங்கே எறிகணைகளும், விமான குண்டுகளும் வந்து தாக்கும் என்பதும் தெரியாதிருந்த நிலைமை அப்போதிருந்தது. யுத்தத்தில் அரச படைகள் வெற்றிபெற்றதையடுத்து, இந்த நிலைமைகள் இல்லாதொழிந்தன. பிரயாணக் கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப்பட்டு, குண்டு வெடிப்புகள் பற்றிய அச்சமும் நீங்கின. பூகோள ரீதியாக இரண்டாகப் பிளவுபட்டு கிடந்த பிரதேசங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. மொத்தத்தில் இரண்டாகப் பிரிந்திருந்த நாடு ஒன்றாக்கப்பட்டது. ஒரே நாடாகியது.
ஆனாலும் பிரிவுபட்டிருந்த நாடு பூகோள ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டதேயல்லாமல், மக்கள் உள ரீதியாக – அரசியல் ரீதியாக, உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கப்படவில்லை. வடக்கும் தெற்கும் முன்னர் இருந்ததைப் போலவே பிரிந்திருக்கின்ற ஓர் உணர்வுக்கே பலரும் இப்போது ஆளாகியிருக்கின்றார்கள்.
யுத்தத்தின் பாதிப்புகளை நேரடியாக எதிர்கொண்டு பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு யுத்த காலத்தில் ஏற்பட்டிருந்த பௌதிக ரீதியான இழப்புகளுக்கும், உளவியல் ரீதியான இழப்புகளுக்கும் சரியான நிவாரணங்கள் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படுகின்ற புனர்வாழ்வுச் செயற்பாடுகளில் சேர்ந்த ஒப்பந்தக்காரர்கள் தொடக்கம் தொழிலாளர்கள் வரையில் பெரும்பான்மை இன மக்களைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. அதேபோன்று வர்த்தக நடவடிக்கைகளிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள சிறிய நகரங்கள் தொடக்கம் பெரிய நகரங்கள் வரையில் அத்தனை இடங்களிலும் தென்பகுதியைச் சேர்ந்த வசதிகளும், வளங்களும், முதலீட்டு வாய்ப்பையும் கொண்டுள்ள வர்த்தகர்களுக்கே முதலிடம் வழங்கப்படுகின்றது. இங்கும் உள்ளூரில் யுத்தம் காரணமாக நலிவடைந்து, தமது வர்த்தக நடவடிக்கைகளைப் புதுப்பிக்க வேண்டிய சொந்தப் பிரதேசங்களில் உள்ள நகர வர்த்தகர்கள் புறந்தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
நாட்டின் தலைநகரம் உள்ளிட்ட யுத்தத்தின்போது நேரடியாகப் பெரிய அளவில் பாதிக்கப்படாத பெரிய முதலீடுகளைக் கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்களும் வர்த்தகர்களுமே, பெரும் வர்த்தக நடவடிக்கைகளில போர்ப்பிரதேச நகரங்களில் நேரடியாக ஈடுபடுவதற்கு அரச நிறுவனங்களினாலும், மற்றும் நிதி நிறுவனங்களினாலும் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். உள்ளூரில் உள்ள வர்த்தகர்கள் பக்கம் திரும்பிப் பார்ப்பார் எவருமில்லாத நிலைமையே தொடர்கின்றது.
அது மட்டுமல்லாமல், யுத்த காலத்திற்கு முன்னர் மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் செயற்பட்டு வந்த தொழிற்சாலைகள், கைத்தொழில் நிலையங்கள் என்பவற்றை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், கைத்தொழில் முயற்சியாளர்களின் கவலையாக இருக்கின்றது.
யாழ். குடாநாட்டில் முன்னர் திக்கத்தில் செயற்பட்டு வந்த வடிசாலை தொழிற்சாலை இலாபகரமாக இயங்கி வந்தது. யுத்த காலத்திலும் இந்த நிறுவனம் செயற்பட்டு நல்ல வருமானத்தை ஈட்டித்தந்தது. இப்போது எவரும் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக அங்குள்ள தொழில் முயற்சியாளர்கள் கூறுகின்றார்கள். இதேபோன்று இயற்கை வளம் நிறைந்த ஆனையிறவு உப்பளம் இன்னும் மீள் நிர்மாணம் செய்யப்படவில்லை. பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையும் இதே நிலையில்தான் இருக்கின்றது என்று யாழ் வணிகர் கழகத் தலைவர் ஜெயசேகரன் சுட்டிக்காட்டுகின்றார்.
விரலுக்கு மிஞ்சிய வீக்கத்தைப் போன்று யுத்தம் முடிவடைந்ததையடுத்து, வீதிகள் புனரமைக்கப்பட்டு வெளியார் அனைவருக்கும் விரிய திறந்துவிடப்பட்டுள்ள வடபகுதியின் வர்த்தகத்துறையில் தென்பகுதியைச் சேர்ந்த பணபலமுள்ள பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இதனால் உள்ளூர் வர்த்தகர்கள். அந்த நிறுவனங்களுடன் போட்டிபோட்டு, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் தமது சொந்த நிறுவனங்களை மூடிவிட்டு வெளிநாடுகளுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் அவலமும், கஷ்டமும் நிறைந்த பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களாகவும் முன்னேற முடியாதவர்களாகவும் இருக்கின்றார்கள் என்று அவர் கவலையோடு குறிப்பிடுகின்றார்.
அரசியல் ரீதியான இராணுவ பிரசன்னம்
யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இருந்து இராணுவத்தினர் இன்னுமே விலக்கிக் கொள்ளப்படவில்லை. மாறாக அவர்கள் அங்கு கேந்திர நிலையங்களிலும், முக்கியமான இடங்களிலும் நவீன வசதிகளுடன், நிரந்தர தளங்களை அமைத்து நிலைகொண்டிருக்கின்றார்கள். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் உள்ளூரில் அழிக்கப்பட்டிருந்தாலும், தேசிய பாதுகாப்புக்கு இன்னும் அச்சுறுத்தல்; இருப்பதாகவும், அதன் காரணமாகவே இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருக்கின்றார்கள் என்று அரசாங்கம் காரணம் கூறி வருகின்றது,
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்ற விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள், இங்கே புலத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளை எழுச்சி பெறச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டிருப்பதற்கான அவசியத்தை அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது. இதற்கு ஆதாரமாக நெடுங்கேணியில் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சித் தலைவர்கள் என குறிப்பிடப்படுகின்ற கோபி உள்ளிட்ட மூவர் இராணுவ சுற்றிவளைப்பின்போது இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்கு முன்னரும், பின்னரும் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களில் பலர் தொடர்ந்து விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் புலிகளின் மீள் எழுச்சிக்காகவே முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தினத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன எனக்கூறி, அவற்றைத் தடுப்பதற்காக முதலில் யாழ். பல்கலைக்கழகம் தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டிருந்தது. யுத்தத்தில் இறந்த தமது உறவுகளையும் பொதுமக்களையும் நினைவுகூர்வதற்கு தங்களுக்கு உரிமை இருக்கின்றது என பல்கலைக்கழக சமூகமும், தமிழ் அரசியல்வாதிகளும் எடுத்துக் கூறிய போதிலும். மே 18 ஆம் திகதி யுத்தகாலத்திலும்பார்க்க மோசமான இராணுவ நெருக்குவாரங்களும், இராணுவ புலனாய்வு கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இவ்வாறு வெளிப்படையான நடவடிக்கைகளுக்கு அப்பால், வெளித்தோற்றத்தில், அளவுக்கு அதிகமான, இராணுவத்தின் பிரசன்னம் தெரியாதிருக்கும் வகையில், பொதுமக்களைப் போன்று சிவிலுடையில் இராணுவத்தினர் கலக்கப்பட்டிருக்கின்றார்கள். முன்னர் சந்திக்குச் சந்தி காப்பரண்களை அமைத்து சீருடையில் கடமையில் நிறுத்தப்பட்டிருந்த முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. அநேகமான காப்பரண்களும் அற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் கடமைபுரிந்த சீருடை இராணுவத்தினரும் இப்போது அகற்றப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் வெளிப்படையாகத் தெரியாத வகையில் எல்லா இடங்களையும் இராணுவத்தினர் சாதாரண மக்களைப் போன்று நடமாடியும், நிலைகொண்டிருந்தும் நிலைமைகளையும், பொதுமக்களின் நடமாட்டங்கள் செயற்பாடுகள் என்பவற்றையும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றார்கள்.
மே மாதத்தில் கொண்டாடப்படுகின்ற பௌத்த பண்டிகையாகிய வெசாக் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு தினமாகிய மே 18 ஆம் திகதிய உள்ளடக்கிய வாரத்தில் வடபகுதியின் நிலைமைகளை நேரில் பார்த்து செய்தி அறிக்கையிடுவதற்காகச் சென்றிருந்த செய்தியாளர்கள், இராணுவத்தினருடைய இந்த நிழல் கண்காணிப்பு நடவடிக்கையின் தீவிரத் தன்மையை நேரடியாக அனுபவித்திருந்தார்கள்.
இறுதி மோதல்கள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் பகுதிக்கு, இந்த செய்தியாளர்கள் சென்றிருந்த போது, அவர்கள் அங்கு சென்ற ஒருசில நிமிடங்களிலேயே அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு சாதாரண உடையில் இருந்த இராணுவத்தினர் வந்து விட்டார்கள். வந்தது மட்டுமன்றி, 'யார் நீங்கள்? இங்கு என்ன செய்கின்றீர்கள்?' என அவர்களைத் துருவித் துருவி விசாரணை செய்யத் தொடங்கிவிட்டார்கள்.
தாங்கள் செய்தியாளர்கள். இந்தப் பகுதியில் இடம்பெறுகின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள், புதிதாக மக்களுக்காக நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகள், மற்றும் பொது வசதிகளைப் பார்த்து அவர்களுடைய கருத்தை அறிவதற்காக வந்திருந்ததாக அவர்கள் கூறினார்கள். அப்படியானால், இங்கு வருவதற்குரிய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் உங்களிடம் இருக்கின்றதா, அதனைக் காட்டுங்கள். அவ்வாறான அனுமதி இல்லாவிட்டால் இங்கெல்லாம் நீங்கள் வரமுடியாது என்று கடும் தொனியில் தெரிவித்துள்ளார்கள்.
வடபகுதியெங்கும்...
யுத்தம் முடிந்துவிட்டது. ஐந்து வருடங்களாகின்றன. செய்தியாளர்கள் வடக்கில் எங்கும் போகலாம். நிலைமைகளைப் பார்வையிடலாம் என்று உயரதிகாரிகள் எங்களுக்குச் சொல்லியிருக்கின்றார்கள். நாட்டின் ஜனாதிபதியும் அதனையே கூறியிருக்கின்றார். ஆகவே எங்களுக்கு அனுமதி கடிதம் பெற வேண்டிய அவசியமில்லை என்று பதிலளித்த போதிலும், அவர்கள் செய்தி சேகரிப்பதற்கோ, அங்குள்ள பொதுமக்களுடன் கதைப்பதற்கோ அவர்கள் செய்தியாளர்களை அனுமதிக்கவில்லை.
அதேநேரம் அங்கு சில நிமிடங்களில் வந்து சேர்ந்த அதிகாரிகள் தரத்திலான இராணுவத்தினரும், இதனையே கூறினர். இதனால் அங்கு இருதரப்பினருக்கும் சிறிது நேரம் தத்தமது தரப்பு நியாயங்கள் குறித்து வாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து மேலதிகாரிகளின் கவனத்திற்கு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விடுத்த அறிவுறுத்தலுக்கமைவாக சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர் செய்தியாளர்கள் தமது பணியைச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், பொது இடம் ஒன்றில் இவ்வாறு செய்தியாளர்களுக்கும், இராணுவ புலனாய்வாளர்கள், இராணுவ அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதத்தைப் பார்த்த பொதுமக்கள் அவிடத்தை விட்டு அகன்றுவிட்டார்கள். அதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் எந்த ஒரு பொதுமகனும் செய்தியாளர்களுடன் பேச்சுக்கொடுப்பதற்கு முன்வரவே இல்லை. இதனால் செய்தியாளர்கள் அங்கிருந்து வெறும் கையுடன் செல்ல நேர்ந்தது.
இவ்வாறான சம்பவங்கள் முள்ளிவாய்க்காலில் இரண்டு தடவைகள் இடம்பெற்றிருந்தன. இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உட்புற கிராமப்பகுதியொன்றிலும் செய்தியாளர்களுக்கு அந்தப் பிரதேசத்தின் அச்ச நிலைமை குறித்த அனுபவம் ஏற்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்தில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருடைய வீட்டில் செய்தியாளர்கள் பேசிக்கொண்டிருந்த போது ஒரு சில நிமிடங்களில் அந்தப் பிரதேசத்தைக் கண்காணிக்கின்ற இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்தவர்கள், வீட்டுக்காரருடன், அயலில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவரின் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு வந்திருப்பவர்கள் யார் என்ற விபரங்களைக் கேட்டறிந்து கொண்டார்கள். அத்துடன் என்னனென்ன விடயம் பற்றி அங்கு பேசப்படுகின்றது என்று விசாரித்திருக்கின்றார்கள்.
இவ்வாறான இராணுவத்தின் நிழல் நடவடிக்கைகள் வடபகுதியெங்கும் வியாபித்து காணப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழகவளாகத்தினுள்ளே பல்கலைக்கழக ஆசிரியர்கள். மாணவர்களை அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்ட நிகழ்வும் இதனோடு தொடர்புடையதாகவே நோக்கப்படுகின்றது. இதனை யார் செய்தது என்று தங்களுக்குத் தெரியாது என்று யாழ். மாவட்ட இராணுவத்தளபதி கூறியிருக்கின்றார். அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ள போதிலும், இராணுவத்திற்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்துவதற்கு முயன்றுள்ள அந்தத் தரப்பினர் யார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமான காரியம் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
அது மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் உள்ள தீவிரவாத அரசியல்வாதிகளே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்றும் யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி குற்றம் சுமத்தியிருக்கின்றார்.
இவ்வாறான கிளர்ச்சி ஏற்படத்தக்க ஒரு சூழலில் இராணுவத்தின் பிரசன்னம் வடபகுதியில் மிகவும் அவசியம் என்ற தேவையை அரசாங்கம் வலிந்து வலியுறுத்தியிருக்கின்றது. அது மட்டுமன்றி, தமிழ்ப்பிரதேசங்களில் பல இடங்களிலும் பெரும் நிலப்பரப்பை இராணுவத்தினருக்காக சுவீகரித்து அங்கு விவசாயம் உள்ளிட்ட பல்வேறு சிவில் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன்மூலம் இந்தப் பிரதேசத்தின் பாரம்பரிய இன சமூகத்திற்கிடையில் பெரும்பான்மை இனத்தவராகிய இராணுவம் சார்ந்த குடிமக்களை இரண்டறக் கலந்து, தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம், தாயகப் பிரதேசம் என்ற தனித்துத்தை இல்லாதொழிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.
இது யுத்தத்தில் மாத்திரமன்றி, யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னரும், சிறுபான்மை இன மக்களின் இன அடையாளத்தையும், தனித்துவத்தையும் படிப்படியாக இல்லாதொழித்து, ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற நிலைமையை உருவாக்குவதற்காக, இராணுவத்தைப் பயன்படுத்துகின்ற, அரசாங்கத்தின் அரசியல் உத்தியாகவே தென்படுகின்றது. எனவே, க்ளோட்ஸ்விட்ஸின் இராணுவ அரசியல் தத்துவத்தை இலங்கை அரசாங்கம் புடம்போட்டு, தனது தேவைக்கேற்ற வகையில் பயன்படுத்துவதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
செல்வரட்னம் சிறிதரன்

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக