செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

எப்.எஸ்.பி தலைவர் குமார் குணரட்னம் இந்திய இராணுவத்துக்கு எதிராக கெரில்லாப் போரை நடத்தியவர் பாகம் - 1

குமார் குணரட்னம் அல்லது குமார மாத்தையா மற்றும் நோயல் முதலிகே என்றும் அழைக்கப்படும்; முன்னணி சோஷலிசக் கட்சியின்(எப்.எஸ்.பி) அரசியற் குழுவின் முன்னணி உறுப்பினரைப் பற்றிய ஊகங்கள் இந்த நாட்களில் செய்திகளில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தற்சமயம் ஒருமாத கால சுற்றுலா விசாவில் ஸ்ரீலங்காவில் தங்கியிருக்கும்; குமாரின்(அவரது முழுப் பெயர் பிரேம்குமார் குணரட்னம்) விசாவுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படாது மற்றும் அவர் நாட்டில் இருந்து வெளியேறியாக வேண்டும் அல்லது நாடுகடத்தப்படலாம். தற்சமயம் நோயல் முதலிகே எனும் பெயரில் ஒரு அவுஸ்திரேலிய கடவுச்சீட்டின் உரிமையாளராக குணரட்னம் உள்ளார். ஒரு மாதத்துக்கு முன்னதாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்திருந்த எப்.எஸ்.பி தலைவர், இங்கு அவர் தங்கியிருந்த காலப்பகுதியில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட காரணத்தால் சுற்றுலா விசாவுக்கான நிபந்தனைகளை மீறியுள்ளார் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.



குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஜனவரி 26ல் பன்னிபிட்டியாவில் உள்ள “பேரேத்துகாமி சமாஜவாத பக்ஸய” (எப்.எஸ்.பி) தலைமையகத்துக்கு விஜயம் செய்து குணரட்னத்தை பற்றி விசாரணை செய்ய முயன்றபோது அந்த நேரத்தில் அவர் அங்கு இருக்கவில்லை. அதனால் குடிவரவு அதிகாரிகள் எப்.எஸ்.பி உத்தியோகத்தர்களிடம் இரண்டு நாட்களுக்குள் தங்கள் திணைக்களத்துக்கு விசாரணைக்காக சமூகமளிக்கம்படி குணரட்னத்திடம் அறிவிக்குமாறு கூறிவிட்டுச் சென்றார்கள். அதற்கமைய தனது சட்டத்தரணிகள் மற்றும் கட்சித் தோழாகளுடன் சேர்ந்து குணரட்னம் குடிவரவு திணைக்களத்துக்கு ஜனவரி 28ல் சென்றார், அங்கு ஒரு சுற்றுலாப் பயணியாக ஸ்ரீலங்காவுக்கு வருகை தந்த அவரது நடத்தைகள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதிகாரிகளுக்கு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து முடிப்பதற்கு வசதியாக, அவரை மீண்டும் ஜனவரி 29 ந்திகதி அங்கு வரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பின்னர் மூன்றாவது முறையாகவும் ஜனவரி 30ல் குடிவரவு திணைக்களத்துக்கு சமூகமளிக்கும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது அது பற்றிய இறுதி விளைவு அறியப்படாததாக உள்ளது.

ஏப்ரல் 2012ல் பலவித சர்ச்சையான சூழ்நிலைகளுக்கு மத்தியில் குமார் குணரட்னம் தான் பிறந்த நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது நினைவுகூரத் தக்கது. அவர் நோயல் முதலிகே என்கிற பெயரில் ஸ்ரீலங்காவுக்குள் சட்ட விரோதமாக வந்து இரகசியமாக அரசியல் வேலைகளில் ஈடுபட்டிருந்தார். தான் முன்பு அங்கம் வகித்த ஜனதா விமுக்தி பெரமுன(ஜேவிபி)வுக்குள் ஒரு பிரிவினைக் குழுவை அமைப்பதற்கு குமார் கருவியாக இருந்தார். ஏப்ரல் 6ல் குமார், எப்.எஸ்.பி தோழர் திமுத்து அட்டிகலவுடன் சேர்த்து அரச முகவர்களால் கடத்தப்பட்ட போது, ஜேவிபி இலிருந்து பிளவுபட்ட பிரிவினர் 2012 ஏப்ரல் 9ல் முன்னணி சோஷலிசக் கட்சி என்கிற அமைப்பை பகிரங்கமாக உருவாக்கவிருந்தார்கள்.

” ஏப்ரல் 6ல் குமார், எப்.எஸ்.பி தோழர் திமுத்து அட்டிகலவுடன் சேர்த்து அரச முகவர்களால் கடத்தப்பட்ட போது, பிளவுபட்ட பிரிவினர் 2012 ஏப்ரல் 9ல் முன்னணி சோஷலிசக் கட்சி என்கிற அமைப்பை பகிரங்கமாக உருவாக்கவிருந்தார்கள்.

அவரது குடும்ப அங்கத்தவர்கள், கட்சித் தோழர்கள், ஊடகவியலkumar gunaratnam motherாளர்கள், பல்கலைக்கழக அறிவுஜீவிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பல தரப்பட்ட வட்டாரங்களிலிருந்தும் அவரது விடுதலைக்கு வேண்டி தன்னிச்சையான அழைப்புகள் விடுக்கப்பட்டிருந்தன. அவரது மனைவி, சகோதரி மற்றும் தாயார் ஆகியோரினால் விடுக்கப்பட்ட உணர்ச்சிகரமான முறையீடுகள் மிகவும் உருக்கமானதாக இருந்தன. அவரது தாயான திருமதி. வி.குணரட்னம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிட்டிருந்த விண்ணப்பமானது அநேகரது இதயத்தை தொடும் விதமாக அமைந்திருந்தது, மற்றும் தங்கள் குழந்தைகள் காணாமற் போயுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையிலிருக்கும் அனைத்து ஸ்ரீலங்காத் தாய்மார்களினதும் மனதிலிருந்து வெடித்துக் கிளம்பும் வேதனையை ஆட்கொள்ளுவதாகவும் இருந்தது” இதன் விளைவாக அவர்களை சிறைவைத்திருந்தவர்கள் குமார் மற்றும் திமுத்து, ஆகிய இருவரையும் விடுவித்தார்கள். அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் றொபின் மூடியின் பாராட்டும்படியான மனிதாபிமான முயற்சிகள் இருந்திருக்காவிட்டால் அவர்களின் விடுதலை சாத்தியமாக இருந்திருக்காது, இந்த விடயத்தில் அவர் தேவைக்குமீறி அதிகமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இந்த தீவில் மனித உரிமைகளை மேலுயுயர்த்துவதற்கு மீண்டும் ஒரு முறை சர்வதேச தலையீடு ஒரு கருவியாக பயன்பட்டிருந்தது.

றொபின் மூடி

அவரது விடுதலைக்குப் பின்னர் குமார் தனக்கு வழங்கப்பட்டிருந்த நோயல் முதலிகே என்கிற கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிச் சென்றார். அவரது பாதுகாப்பான வெளியேறலை உறுதிப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திருமதி. றொபின் மூடி தானே கட்டுநாயக்கா விமானநிலையத்துக்கு சென்றிருந்தார். குமார் உத்தியோகபூர்வமாக நாடு கடத்தப் படாததால் விசா முடிவடைந்தும் ஸ்ரீலங்காவில் மேலதிகமாக தங்கியிருந்த காலத்துக்கான அபராதமான ரூபா, 39,130 ஐ அவர் செலுத்தினால் அவர் ஸ்ரீலங்காவுக்கு மீண்டும் திரும்பி வருவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமாக இருந்தது. அந்த சமயத்தில் கொழும்பு அவரை மீண்டும் ஸ்ரீலங்காவுக்குள் வந்து அரசியலில் ஈடுபட அனுமதிக்காது என்று உணரப்பட்டது. மேலும் மரணம் வரை தொட்டுச்சென்ற அவரது அதிர்ச்சிகரமான அனுபவம், எதிர் வரும் காலங்களில் குமாரைக் கூட தான் பிறந்த நாட்டுக்குத் திரும்பி வர அனுமதிக்குமா என்கிற சந்தேகமும் நிலவியது.

எனினும் சரியாக ஆசியாவின் அதிசயம் என்று சொல்லப்படும் வகையில் அது நடந்தது. இரண்டரை வருடங்களுக்கு முன்பு ஸ்ரீலங்காவில் காணாமற் போக்கடிக்கப் பட்டதினால்; ஏற்படவிருந்த மரணத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய மனிதர், 2015 ஜனவரி 1 ந்திகதி காலை 11.00 மணியளவில் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வந்திறங்கினார். அவர் நாட்டுக்குள் நுழைந்தது நோயல் முதலிகே என்கிற பெயரைப் பயன்படுத்தி, 1016123 என்கிற இலக்கத்தை உடைய அவரது கடவுச்சீட்டு நோயல் முதலிகே என்கிற பெயரையே கொண்டிருந்தது. வெளிப்படையாக அவர் முன்பு ஸ்ரீலங்காவில் மேலதிகமாக தங்கியிருந்த காலத்துக்காக கட்டவேண்டியிருந்த அபராதத் தொகை அவர் சார்பாக செலுத்தப்பட்டு விட்டதால் குமார் தற்போது ஜனவரி 28 வரை ஸ்ரீலங்காவில் தங்கியிருப்பதற்கான சுற்றுலா விசா இப்போது குமாரிடம் உள்ளது. ஸ்ரீலங்காவில் ராஜகிரியாவில் உள்ள லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சொற்பொழிவாற்றும் போது, குணரட்னம் சொன்னது, நாட்டில் தங்கியிருந்து எப்.எஸ்.பி ஜனாதிபதி வேட்பாளர் துமிந்த நாகமுவக்காக ஆதரவு வழங்கும் விதமாக அரசியலில் ஈடுபடுவதே தனது எண்ணம் என்று.

“ அவரைச் சுற்றியுள்ள தற்போதைய சர்ச்சைகள் விளக்குவது 49 வயதான இந்த சோசலிஷ புரட்சியாளருக்கு அவரது எதிராளிகள் மற்றும் போட்டியாளர்களால் எச்சரிக்கை விடப்படுகிறது என்பதையே. இதற்கான ஒரு காரணம் அவரது கடந்தகால அனுபவங்கள் மற்றும் ஆளுமை என்பன காரணமாக இருக்கலாம். குமார் குணரட்னம் வெறுமே ஒரு தத்துவவியலாளரோ அல்லது சித்தாந்தவாதியோ அல்ல. அவர் ஒரு செயல் வீரர். வெறுமே சிந்தனை மட்டும் செய்யாமல் எதையும் செயலில் காட்டுபவர். அவர் மிகச் சிறந்த நிறுவனத் திறனைக் கொண்டுள்ளதுடன், மிகப் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக தோழர்களை எழுச்சியூட்டும் சாமர்த்தியம் மிக்கவர். தனது முன்னைய நிறுவனமான ஜேவிபி, எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளதாக குமார் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துடன் ஒரு மறைமுக புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதன் மூலம் திரும்பவும் ஸ்ரீலங்காவுக்கு வரமுடியும் என்பதையும் அவர் நிராகரித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் சில அரசியல் இடைவெளிகளையும் அதற்கான வழிகளையும் வழங்கியுள்ளது, ஒரு இடதுசாரி என்கிற வகையில் தான் அதைக் கைப்பற்றி பயன்படுத்தி வருவதாக குணரட்னம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மறுப்புகள் விடப்பட்ட போதிலும் குமார் குணரட்னத்தின் ஸ்ரீலங்கா விஜயத்திற்கு ராஜபக்ஸ அரசாங்கமே உதவியதாக பரவலாக சந்தேகிக்கப்படுகிறது, அவர்; மூலம், ஜேவிபி உடன் இரகசிய ஒப்பந்தங்களை சிறசேனவின் முகாமினர் மேற்கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை எழுப்பி அவர்களைச் சங்கடப்படுத்தலாம் என்பது அரசின் திட்டம். இது 1977ல் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா,ஜேவிபி தனது கோபத்தை திருமதி பண்டாரநாயக்கா மற்றும் ஸ்ரீ.லசு.க வுக்கு எதிராக திருப்பும் என்கிற உள்நோக்கோடு, றோகண விஜேவீர மற்றும் அவர்களது சகாக்களை விடுதலை செய்ததை ஒத்ததாக இருந்தது.

சுற்றுலா விசா

இப்போது வாக்களிப்புகள் முடிவடைந்து விட்டன மற்றும் மைத்திரிபால kumar Gunaratnam-1சிறிசேன வெற்றி பெற்றுவிட்டார். குணரட்னத்தின் வருகை ராஜபக்ஸ அரசினால் மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சி என்கிற குற்றச்சாட்டு உண்மையானால், துப்பாக்கிகளின் புதிய பகிர்ந்தளிப்பு எப்.எஸ்.பி தலைவர் மீது பயிற்சி செய்து பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். குடிவரவு திணைக்களத்தின் அதிகாரிகள் குமார் குணரட்னம் மீது கொண்டுள்ள தற்போதைய ஆர்வம் சரியாக அதையே தெரிவிக்கிறது. எந்த நிகழ்விலும் ஒரு சுற்றுலா விசாவின் நிபந்தனைகள், ஒருவர் தீவில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஸ்ரீலங்கா பிரஜையாக இருந்தாலும் கூட அவர் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அந்த அளவு கோலை கொண்டு அளக்கையில் குமார் குணரட்னம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில்; உரையாற்றும்போதே தனது விசா நிபந்னைகளை மீறிவிட்டார்.

ஒரு காலத்தில் ஜேவிபியின் செயற்பாட்டு ஆர்வத்தின் முக்கிய தலைவராக இருந்த பிரேம்குமார் குணரட்னம் அல்லது குமார் அல்லது குமாரமாத்தையா அல்லது நோயல் முதலிகே என்கிற சிறந்த ஆளுமையுள்ள இந்த புரட்சிகர முன்னுதாரணகர்த்தாவின் தலைவிதியை நிர்ணயிப்பதற்கான வாய்ப்பு எப்படியிருக்கப் போகிறதோ தெரியவில்லை. குமார் ஜேவிபியின் பதவிகளை முறித்துக் கொண்டு இப்போது எப்.எஸ்.பியின் பலமான முக்கியஸ்தராக திகழ்ந்த போதிலும், கிட்டத்தட்ட ஒரு 30 வருட காலமாக ஜேவிபிக்கு அவர் வழங்கியுள்ள கணிசமான பங்களிப்பை சுலபமாக அலட்சியப் படுத்தவோ அல்லது இலகுவாக தள்ளிவிடவோ முடியாது. அவரது வாழ்க்கைக் கதை தனித்தன்மையானதும் விபரிப்பதற்கு தகுதியானதும் ஆகும். கடந்த காலங்களில் அவரைப்பற்றி விரிவாக எழுதியிருந்தேன், கால் தசாப்தங்களுக்கு முன்னர் கெமுனு என்ற இயக்கப் பெயருடன் இந்திய இராணுவத்துடன் கெரில்லா யுத்தம் நடத்திய அந்த மனிதரைப்பற்றி எழுதுவதற்கு அந்த எழுத்துக்களையே நான் பெரிதும் சார்ந்துள்ளேன்.

“அவர் கைதாகி காவலில் இருந்த வேளையில்தான் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியதும் மற்றும் இந்திய இராணுவம் வடக்கு மற்றும் கிழக்கிற்கு அனுப்பப்பட்டதும் நடைபெற்றது. இந்திய இராணுவம் மற்றும் புலிகள் இடையே யுத்தம் வெடித்தது. தெற்கில் தடை செய்யப்பட்ட ஜேவிபி இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டு வன்முறைப் பிரச்சாரத்தையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இந்த மாற்றமான சூழலில் ஜேவிபி தலைவர்களால் குமாருக்கு புதிய கட்டளைகள் பிறப்பிக்கப் பட்டன”.

பிரேம்குமார் மற்றும் அவரது மூத்த சகோதரரான ரஞ்சிதன் குணரட்னம் ஆகியோர் 20ம் நூற்றாண்டின் நடுப் பகுதி மற்றும் எண்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதிகளில் ஜேவிபியின் முன்னணிப் படையினராக இருந்தார்கள். ரஞ்சிதன் இப்போது உயிருடன் இல்லை, ஆனால் குமார் இப்போதும் தீவிரமாக இருந்து தொடர்ந்து அலைகளை எழுப்பி வருகிறார். ஒரு ஜேவிபி செயற்பாட்டாளராக இருந்த நாட்களில் குணரட்னம், குமார் மாத்தையா மற்றும் குமார மாத்தையா ஆகிய இரண்டு பெயர்களாலும் அழைக்கப்பட்டு வந்தார். அவர் தன்னை வெறுமே குமார் அல்லது குமார என்று அழைப்பதையே விரும்பினார். அவர் இப்போது ஒரு புதிய அடையாளத்தை பொறுப்பேற்றிருக்கிறார், ஆனால் ஸ்ரீலங்காவை ஒரு உண்மையான சோஷலிச நாடாக மாற்றும் இலட்சியத்துடன் முன்னேறுவதற்காக அதற்கான பாதைய நோக்கி தொடர்ந்தும் நடைபோட்டு வருகிறார். தற்போது அவரைச் சற்றியுள்ள சர்ச்சைகள், இந்த 49 வயதான புரட்சிகர சோஷலிசவாதி தனது எதிரிகளுக்கும் மற்றும் போட்டியாளர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் ஒருவராகவே இருக்கிறார் என்பதையே விளக்குகின்றன. இதற்கான ஒரு காரணம் அவரது ஆளுமை மற்றும் கடந்தகால அனுபவங்கள் ஆகும்.

குமார் குணரட்னம் வெறுமே ஒரு தத்துவவியலாளரோ அல்லது சித்தாந்தவாதியோ அல்ல. அவர் ஒரு செயல் வீரர். வெறுமே சிந்தனை மட்டும் செய்யாமல் எதையும் செயலில் காட்டுபவர். அவர் மிகச் சிறந்த நிறுவனத் திறனைக் கொண்டுள்ளதுடன், மிகப் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக தோழர்களை எழுச்சியூட்டும் சாமர்த்தியம் மிக்கவர். அவர் வெறும் ஒரு மேடைப் பேச்சாளராகத் தென்படவில்லை, ஆனால் ஒரு தனிப்பட்ட அடிப்படையில் பரஸ்பர நிறுவுதல்கள் கொண்டவராகவும் மற்றும் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலமாக மற்றவர்களை தான் சிந்திக்கும் வழிக்கு கொண்டுவரக்கூடிய திறமைகள் உள்ளவராகவும் கருதப்பட்டார். மேலும் ஜேவிபி உற்பத்தி செய்தவர்களிலேயே மிகச் சிறந்த தகுதியான இராணுவத் தலைவர் குமார்தான் என்று வாதிட முடியும். 1989ல் இருந்து அவர் கைது செய்யப்படும் வரை திருகோணமலை மாவட்டத்தில் இந்திய இராணுவத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அவர் ஜேவிபியை வழி நடத்தினார். திருகோணமலையில் இடம்பெற்ற சில சிறு சிறு மோதல்கள் ஜேவிபியின் பார்வையில் அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளாகக் கருதப்பட்டன.

இந்திய இராணுவம்

1987 – 1990 களில் இந்தியாவுக்கு எதிரான ஜேவிபி பிரச்சாரம், ‘செஞ் சகோதரர்கள்’ இந்திய ஆக்கிரமிப்புக்கு துணை செய்தார்கள் என்று தெற்கில் உள்ள மக்களை கொன்றதுடன், மைசூர் பருப்பு மற்றும் பம்பாய் வெங்காயம் உட்பட்ட இந்திய உற்பத்திகளை புறக்கணிக்கும்படி வற்புறுத்தினார்கள், ஆனால் ஒருபோதும் இந்திய இராணுவத்தை நேரடியாக எதிர்கொள்ளவில்லை என்கிற விதத்தில் திரிக்கப்பட்ட ஒரு கருத்து பரவலாக நம்பப்பட்டு வந்தது. இதற்காக பெரும்பாலும் ஜேவிபியை, கோழைகள் இவர்களால் தெற்கிலுள்ள நிராயுதபாணியான மக்களை மட்டுமே கொல்ல முடியும் ஆனால் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள இந்திய வீரர்களுக்கு எதிராக இவர்களால் விரலசைக்கக் கூட முடியாது என்று கேலி செய்தார்கள். இந்தக் குற்றச்சாட்டு ஒரு பெரிய அளவுக்கு சரியாக இருந்தது, ஆயினும் இதற்கு குறிப்பிடத் தக்க விதிவிலக்கும் இருந்தது. அது திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது, அங்கு இந்திய இராணுவத்துக்கு எதிராக ஜேவிபி ஆயுத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததுடன் சில சந்தர்ப்பங்களில் இரத்தமும் சிந்தப்பட்டது.

“அந்த வாய்ப்பு 25 ஜூலை 1989ல் வந்தது. அன்றைய தினம் தம்பலகாமத்துக்கு மேற்கேயுள்ள தமிழ் கிராமமான முள்ளிப்பொத்தானையில் ஜேவிபி ஒரு கண்ணிவெடியை நிறுவியது. இந்திய இராணுவத்தின் டிரக் வண்டி ஒன்று ஜேவிபியின் கண்ணிவெடியால் தாக்கப்பட்டது. பின்னர் ஜேவிபி அங்கத்தவர்கள் அந்த வாகனத்தை சுற்றி வளைத்து எல்.ரீ.ரீ.ஈ யின் அதே பாணியில் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். 14 இந்திய துருப்புகள் கொல்லப்பட்டதுடன் மூன்றுபேர் காயமடைந்தார்கள்.”

இந்திய இராணுவத்துக்கு எதிரான ஜேவிபியின் இராணுவப் பிரிவு “தேசப்பரேமி ஜனதா வியாபாரய”(தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் - டி. ஜே.வி) என்ற பெயருடன் கீர்த்தி விஜயபாகு தலைமையில் இயங்கி வந்தது. 1989ல் அதன் திருகோணமலை பிரதேச தலைவராக இருந்தவர் வேறு யாருமல்ல கெமுனு என்கிற இயக்கப் பெயருடன் இயங்கிவந்த பிரேம்குமார் குணரட்னம்தான். அவர் திருகோணமலை மாவட்டத்தில் இந்திய இராணுவத்துக்கு எதிராக ஜேவிபி ஃ டி.ஜே.வி இயக்கங்களுக்கு தலைமை தாங்கினார்.

கெமுனுவின் தலைமையின் கீழ் ஜேவிபி ஃ டி.ஜே.வி சில இராணுவத் தாக்குதல்களை இந்திய இராணுவத்துக்கு எதிராக நிறைவேற்றியிருந்தது, ஆனால் இந்த சம்பவங்கள் கூட்டு முயற்சியாக ஸ்ரீலங்கா மற்றும் இந்திய அதிகாரிகளினால் வேண்டுமென்றே இருட்டடிப்புச் செய்யப்பட்டதால் இந்தச் சம்பவங்கள் அதிகம் விளம்பரத்தைப் பெறவில்லை. இந்தச் செயற்பாடுகளினால் ஜேவிபி விளம்பரம் மற்றும் அரசியல் ஆதாயம் அடைவதை அவர்கள் விரும்பவில்லை. தவிரவும் திருகோணமலையில் நடைபெற்ற அத்தகைய பெரும்பாலான சம்பவங்களின் தன்மை காரணமாக அவை புலிகளால் நடத்தப்பட்டவையாகவே விசுவசிக்கப்பட்டன. பின்னாளில் ஜேவிபி மற்றும் இந்திய அதிகாரிகள் இடையே ஒரு சந்தர்ப்பவாத திருப்பம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகளின் கைகளில் அகப்பட்டு ஜேவிபி இறுகியபோது, சிவப்பு தோழர்கள் மத்தியில் இருந்த சிலர் இந்தியர்களுடன் தந்திரோபயமான ஒரு உடன்பாட்டை மேற்கொண்டனர், இது, புலிகள் இந்திய இராணுவத்தின் கைகளில் மாட்டிக்கொண்டு மூச்சுவிட ஒட்சிசனுக்கு வேண்டித் திணறியபோது, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வை ஒத்ததாகும்.
  
-  டி.பி.எஸ்.ஜெயராஜ்

(தொடரும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல