நம்காதல் தேர்தலுக்கு
பெற்றோர்
வாக்களிக்க மாட்டார்கள்
புறக்கணிப்பே செய்வார்கள்
நிறைவேற்று அதிகாரத்துடன்
நீயும் நானும்
இயங்குவது தவிர
இங்கு வேறு வழியேது
உதிரிக்கட்சிகள் போல
ஊரார் சிலர் எம்மோடு
கூட்டு சேர்ந்தாலும்
வலுமிக்க
எதிர்க்கட்சிகளாய்
நிலைத்திருக்கிறார் பெற்றோர்கள்
காலமின்னும் கடந்தால்
செல்லாத வாக்குகள் போல்
சென்றுவிடும் நம்நிலைமை
எத்தனை வாக்குறுதியை
நானளித்த போதும்
ஏற்கிறார்கள் இல்லை
எம் பெற்றவர்
திருமண பதவி கிடைத்ததும்
கொடுத்த வாக்குறுதியை
குழிதோண்டி புதைத்திடுவேனாம்
காணாமல் போனது
காதல் ஜனநாயகம்
கண்டிப்பு எனும் சாட்டில்
பெற்றோரின் சர்வாதிகாரம்
எம் காதலை
எத்தனை கீழ்த்தரமாய்
பிரசாரம் செய்கிறான்
உன் மாமன்
நாம் செய்திட்ட
இரகசிய சந்திப்புக்கள்
நமக்கு எதிராய்
நாமே ஒட்டும்
சுவரொட்டிகளாய் ஆயிற்றே
கடித பரிமாற்றத்தை
கச்சிதமாய் செய்து தந்த
உன் பாசத்தம்பி
கட்சி மாறி
காட்டிக் கொடுத்துவிட்டானே
எம்மை எதிர்ப்போரை
நிராகக்கப்பட்ட
வாக்குகளாய் ஆக்கி
நிச்சயம் வெல்வோம்
இது
அடிக்கடி இடம்பெறும்
ஆட்சிக்கான தேர்தல் அல்ல
ஆயுளில் ஒருறையே வரும்
காதல் தேர்தல்
யோ. புரட்சி


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக