ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

குடற்புழு

குடல்களைப் பாதிக்கும் குடற்புழு தொற்றுநோய் உலகம் முழுவதும் ஏற்படும் பொதுவான நிகழ்வு. இருப்பினும் வெப்ப நாடுகள் மற்றும் மித வெப்ப நாடுகளில் உள்ள குழந்தைகளிடம் இந்த தொற்று நோய் அதிகம் காணப்படுகிறது. உருளைப் புழு, கொக்கிப் புழு, ஊசிப் புழு, சாட்டைப் புழு, பட்டைப் புழு ஆகியவை பொதுவாகக் காணப்படும் குடற்புழுக்களாகும்.

குடற் புழு தொற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?

சுகாதாரக் குறைவான இடங்கள், திறந்த வெளியில் மலம் கழித்தல் ஆகியவை காரணமாக மலத்துடன் புழுக்கள் மண்ணோடு மண்ணாகக் கலக்கின்றன. இது பயிர்கைளயும், நிலத்தடி நீரையும் பாதிக்கிறது.

இந்தப் புழுக்கள் கலந்த உணவையும், தண்ணீரையும் உட்கொள்ளும் போது புழுக்களும் புழு முட்டைகளும் தானாகவே நம் உடலுக்குள் செல்கின்றன. வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளின் மலங்களிலும் புழுக்கள் கலந்து மண்ணோடு மண்ணாகி மனிதர்களைப் பாதிக்கின்றன. புழுக்கள் உள்ள மண்ணைத் தொடும் குழந்தைகள் கைகளை வாயில் வைத்து சப்பும் போது புழுக்கள் குழந்தைகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மண்ணை உண்ணும் குழந்தைகள் உடலிலும் புழுக்கள் செல்கின்றன. வெறும் காலுடன் நடக்கும் போது கொக்கிப் புழுக்களின் முட்டைகள் கால் சருமம் வழியாக உடலுக்குள் பயணிக்கின்றன. பெண் ஊசிப் புழுக்கள் இரவு நேரத்தில் முட்டை இடும் போது ஆசன வாயில் பகுதியில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் அவற்றைச் சொரியும் போதும் முட்டைகள் கைகளிலும் நகங்களிலும் ஒட்டிக் கொள்கின்றன. வாய் அல்லது சருமம் மூலம் இவை உடலுக்குள் செல்கின்றன நமது உடைகளிலும் படுக்கைகளிலும் ஊசிப்பு புழு முட்டைகள் ஒட்டிக் கொண்டு அடுத்தவர்களுக்குத் தொற்றுகின்றன. பச்சை பன்றி இறைச்சி அல்லது மாட்டு இறைச்சி உண்ணும் போது பட்டைப் புழுக்கள் உடலுக்குள் தொற்றிக் கொள்கின்றன.

குடற்புழு தொற்று நோய் அறிகுறிகள் என்ன?

குடற்புழு தொற்று நோய் ஏற்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைவு, பசி இன்மை, வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, ரத்த சோகை, ஆசனவாய் அரிப்பு ஆகியவை ஏற்படலாம். குடலில் இருந்து இந்தப் புழுக்கள் ஈரல், நுரையீரல், மூளை ஆகியவற்றிற்கு தொற்றி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

குடற்புழு தொற்றுநோயைக் குறி அறிதல் எப்படி?

மலத்தை நுண்நோக்கி மூலம் ஆய்வு செய்தே குடற்புழுக்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும். சில சமயம் வாந்தியிலும் புழுக்கள் இருக்கலாம்.

குகுடற்புழு தொற்று நோய்க்கான சிகிச்சை என்ன?

குடற்புழு தொற்று நோய் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகள் உள்ளன.
ஒரு முறை எடுத்துக் கொண்டாலே போதுமானது. குழந்தைகள் குடற்புழு தொற்று நோய்க்கான சிகிச்சையை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கவனிக்கும் செவிலியர்கள் குடற்புழு நோய் பரவ முக்கியக் காரணிகளாக இருப்பார்கள். எனவே குடும்ப உறுப்பினர்கள் குடற்புழுக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் போது குழந்தைகளைக் கவனிக்கும் செவிலியர்களுக்கும் சிகிச்சை அளிப்பது நல்லது.

குகுடற்புழு தொற்று நோயைத் தடுப்பது எப்படி?

உணவு சமைப்பதற்கு முன்பும் உண்பதற்கும் முன்பும் கைகளை சோப்பினால் நன்றாகக் கழுவ வேண்டும்.

கழிவறை சென்று வந்த பிறகும் உள்ளாடைகளை மாற்றிய பிறகும் கைகளைச் சோப்பினால் நன்றாகக் கழுவ வேண்டும்.

சமைப்பதற்கு முன்பும் உண்பதற்கு முன்பும் காய்களைத் தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும். வெறும் காலுடன் நடக்கக் கூடாது. காலணிகளுடன் மட்டுமே நடக்க வேண்டும்.

திறந்த இடங்களில் மலம் கழிக்கக் கூடாது.

வெறும் கைகளினால் மண்ணைத் தொடக்கூடாது.

செல்லப் பிராணிகள் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அகற்றப்பட வேண்டும்.

விரல் நகங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீண்ட நகங்கள் வளர்ப்பது கூடாது.

உள்ளாடைகள், இரவு உடைகள், கைக்குட்டைகள், டவல்கள், படுக்கை உறைகள் ஆகியவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும். சுடு நீரில் துவைத்து காய வைத்துப் பயன்படுத்த வேண்டும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல