சனி, 29 மே, 2010

இந்திய உறவுகளே எம்மைக் காப்பாற்றுங்கள் மலேஷியாவிலுள்ள இலங்கை அகதிகள் மன்றாட்டம்

இந்திய உறவுகளே! நாங்கள் உங்கள் சகோதரர்கள்தான். எங்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். எங்களை காக்க உங்கள் உயிர்களையே மாய்த்துக் கொண்ட தியாகிகள் நிறைந்த இரத்த சொந்தங்களே! எங்களுக்காக எல்லோரும் ஒரு மணிநேரம் ஒன்றுசேருங்கள் என்று மலேஷிய முகாம்களில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்களின் ஒன்றுசேரும் சூழல் எங்கள் உயிர்களை காப்பாற்றும்; உங்களின் குரலை உங்களின் அரசாங்கம் கேட்கும்.
அதற்காகப் பாகுபாடு இல்லாமல் ஒன்று சேர்ந்து குரல்கொடுங்கள் என்றும் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெவித்துள்ளனர்.

அதன் விபரம் வருமாறு:

எங்கள் உயிரைக் காக்கும் உரிமையை இந்திய சொந்தங்களே! உங்களிடம் விடுகிறோம். மரண வாயிலில் இருந்து இந்த கோரிக்கையை எழுப்புகிறோம்.

உங்களை நம்பித்தான் உயிரைப் பணயமாக வைத்து பழுதான படகில் புறப்பட்டோம். நடுக்கடலில் சிக்கி தவித்தபோது மனிதாபிமானத்தோடு காப்பாற்றியது மலேஷிய அரசு.

ஆனால் வதைகாம்களில் நாங்கள் பட்ட சித்திரவதையைவிட இப்போது இங்கு அதிகமாகப் பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாட்டுக்கு அனுப்பிவையுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒருமாதம் கடந்த நிலையில் உண்ணா விரதத்தைத் தொடங்கியுள்ளோம்.

எங்களை யார் என்று கூட கேட்க நாதியில்லை. எங்களை பசி என்ற ஆயுதம் கிழித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாழும் நாடுகளில் எங்களுக்காக குரல் எழுப்புங்கள். எங்கள் துன்பங்களையும் துயரங்களையும் சற்றுப்பாருங்கள்.

உங்கள் குரல்கள்தான் எங்களை மீட்கும்.
உங்கள் குரல்களை உங்கள் நாட்டு அரசுகளிடம் மலேஷியத் தூதரகங்களிடம் எழுப்புங்கள். உங்கள் குரல்கள் எங்களை உயிருடன் எழுப்பும்.

உறவுகளே! இரத்த சொந்தங்களே எங்களுக்காகக் குரல் கொடுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் எங்கள் உயிர் போய்க்கொண்டுதான் இருக்கிறது.
தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடம் மரணம் எங்களை நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் வதை பட்டு, துன்பப்பட்டு, பாதிக்கப்பட்டு இப்போது இங்கு பசியின் கொடுமையால் மரணத்தை நோக்கிப் பயணிக்கிறோம். எங்களுக்காக ஒருமணிநேரம் செலவிடுங்கள்.
அந்த ஒரு மணிநேரத்தில் எங்கள் உயிர்களைக் காப்பாற்றக் குரல்கொடுங்கள் அப்போதுதான் எங்கள் உயிர் காக்கப்படும்.
எங்கள் உயிர்களை மீட்கும் பணி உங்களிடம்தான் உள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை மலேஷிய காம்களில் தத்தளிக்கும் 61 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல