சனி, 3 ஜூலை, 2010

தென்னிந்திய நடிகை என்பதாலேயே எனக்குப் பெருமை

வன்முறையை விதைப்பதற்கு இங்கு நான் வரவில்லை

அசின் அதிரடி பேட்டி

துருதுரு கண்களும் படபட பேச்சுமாக, ‘எம் குமரன் சன் ஒப் மகாலஷ்மி’ திரைப்படத்தினூடாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் அசின். முதல் திரைப்படமே மெகா ஹிட்டானது. தனது முதல் படத்திலேயே ரசிகர் மனத்தில் இடம்பிடித்த அசின், சிவகாசி, போக்கிரி, மஜா, வரலாறு, கஜினி, தசாவாதாரம் படங்களில் அதே குறும்புப் பெண்ணாக, கனவுக் கன்னியாக நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

கேரளாவைச் சேர்ந்த அசினின் திரையுலகப் பிரவேசம் ‘சத்யம் அந்திக்காட்’ என்ற மலையாளப் படத்தின் மூலமாக அமைந்தது. ‘கஜினி’ திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான ‘தமிழ் பிலிம் பெயார்’ விருது 2005இல் அசினுக்குக் கிடைத்தது. இத்திரைப்படம் ஹிந்தியில் எடுக்கப்பட்ட போது, ‘பில்ம் பெயாரின்’ சிறந்த புதுமுக நடிகைக்கான விருதைத் தட்டிச் சென்றவர்.

அசின், சல்மான் கானுடன் நடிக்கும் ‘Ready’ திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு முழுவதும் இலங்கையிலேயே இடம்பெறுகின்றது. அதற்காக இலங்கை வந்திருந்த அசினை, படப்பிடிப்பின் இடைவேளையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் சந்தித்தோம்.

திரைப்படங்களில் பார்க்கும் குறும்பு அசினா இவர்? சல்வார் கமீஸில் அடக்கமேயுருவாக வணக்கம் கூறி எங்களை வரவேற்றார் அசின். வழக்கமான உபசரிப்புகளைத் தொடர்ந்து இலங்கையைப் பற்றி என்ன நினைக்கிaர்கள் இங்கு உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைக் கூறுங்கள் எனக் கேட்டோம்....

ம்... நான் பத்திரிகையாளர் மாநாட்டில் சொன்னதைப் போல, இலங்கையில் இருப்பது எனக்கு என் வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வையே தருகின்றது. இலங்கையின் சூழல், இங்குள்ள மரங்கள், மலைகள் எல்லாமே எனக்கு கேர ளாவையே ஞாபகப்படுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இங்குள்ளவர்களின் உபசரிப்பு, அவர்களின் பிரியம் எல்லாமே என் தாய் மண்ணில் இருப்பதைப் போன்ற உணர்வையே எனக்கு ஏற் படுத்துகின்றது.

இலங்கையில் இருந்து எனக்குக் கிடைக்கும் ஈமெயில்கள் எல்லாம் இங்குள்ள மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்குச் சான்று பகர்கின்றன. இலங்கைக்கு நான் வருவது இது இரண்டாவது தடவை. முன்னதாக 2004 இல் இலங்கை வந்தேன்.

கர்ஷனா என்ற ‘காக்க காக்க’ திரைப்படத்தின் தெலுங்குப் பதிப்பின் படப்பிடிப்புக்காக இங்கு வந்திருந்தேன். நுவரெலியாவில் படகு வீடொன்றில் படப்பிடிப்பு நடந்தது. ஒருநாள் படப்பிடிப்பின் போது எங்கள் படகு கவிழ்ந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து இங்குள்ள தொழில் நுட்பக் கலைஞர்கள் அப்படகை டைட்டானிக் என்றும் என்னை ‘ரோஸ்’ என்றும் அழைத்து கிண்டலடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தைத் தவிர்த்துப் பார்த்தால், இலங்கை பற்றிய நினைவுகள் பசுமையாக என்னுள் இருக்கின்றன.

நெருக்கடியான சூழ்நிலைகளில் நான் இங்கு வருவதும் துரதிர்ஷ்டமானதுதான் ஆனாலும், அவ்வாறான சூழ்நிலைகளிலும் என் ரசிகர்களின் முகத்தில் ஒரு சிறிய புன்னகையாவது ஏற்படுத்த என்னால் முடிந்தால், அதனை ஒரு பெரிய பாக்கியமாகவே நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தவரை என்னால் முடிவதும் கலைஞர்களால் முடிவதும் அதுதான்.

பத்திரிகையாளர் மாநாட்டில் சல்மான் கான் சொன்னவற்றுடன் நானும் உடன்படுகின்றேன்.

நாங்கள் கலைஞர்கள். அரசியலை அரசியல் வாதிகளுடன் விட்டுவிட வேண்டும். கலைஞர்களாக எங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை நாம் செய்ய வேண்டும். கலையென்பது மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும். அதனை மக்களைப் பிரிக்கப் பயன்படுத்தக் கூடாது. மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவர்கள்தான் கலைஞர்கள். அதனைத் தடுப்பது எந்த விதத்திலும் நியாயமாகாது. அரசியல் செயற்பாடுகள் கலைஞர்களை எந்தவகையிலும் பாதிக்கக் கூடாது. எங்கள் கிரிக்கெட் வீரர்கள் இங்கு வருகிறார்கள். கடற்படைத் தளபதி வருகின்றார். ஆனால் கலைஞர்களுக்கு மட்டும் ஏன் தடை விதிக்க வேண்டும்? இதுதான் புரியவில்லை.

‘ரெடி’ திரைப்படத்தை எடுப்பதற்கு பல்வேறு நாடுகளை தேர்வு செய்தார்கள். ஈற்றில் இலங்கையில் படம் பிடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இத்திரைப் படத்தில் நான் நடிப்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதால் நானும் அவர்களுடன் இங்கு வந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவரை இது கடைசி நேர முடிவு. என்னால் அந்த முடிவுக்கு மறுப்புக் கூற இயலாது. அல்லாவிட்டாலும், நான் இங்கு வர ஏன் தயங்க வேண்டும்? நான் வன்முறையைப் பரப்ப இங்கு வரவில்லை. எனவே நான் இங்கு வருவது குறித்தோ, திரையுலகைச் சேர்ந்த வேறு எவர் வருவதும் குறித்தோ எதிர்ப்புகள் ஏன் கிளம்ப வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை என்றார் அசின்.

இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தது. படப்பிடிப்புக்காக அசினும் இலங்கைக்கு வந்திருக்கிறார். ஏற்கனவே இந்திய ஊடகங்களில் அரசல் புரசலாக வெளிவந்த அசின் - தோனி காதல் கதை பற்றி, தனது ஆவலை அடக்கமுடியாமல் எம்மோடிருந்த ஆங்கிலப் பத்திரிகையாளர் கேட்டபோது,

மற்றுமொரு சிக்கல் என்று சலித்துக் கொண்ட அசின், அந்தக் கேள்விக்கு அத்துடனேயே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

‘கஜினி’ திரைப்படம் ஹிந்தியில் படமாக்கப்பட்டு மாபெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அசினின் கவனம் ஹிந்தித் திரையுலகில்தான் அதிகளவில் இருக்கின்றதோ என்பது பற்றிக் கேட்ட போது, நான் தமிழ்ப் படமொன்றில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறேன். விஜய் கதாநாயகனாக நடிக்கின்றார். நான் விஜய்யுடன் நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னமும் அதற்குப் பெயரிடப்படவில்லை. இப்போதைக்கு அதற்கு ‘காவல் காரன்’ என்று பெய ரிடப்பட்டிருக்கிறது.

வழமையான பாணியில் அல்லாமல் ஒரு புதிய விஜய்யை ரசிகர்கள் இந்தத் திரைப் படத்தில் பார்க்கப் போகின்றார்கள். சித்திக்கின் இயக்கத்திலான படம் அது. நான் தென்னிந்திய திரையுலகைக் கைவிட்டுவிட்டு ஹிந்தித் திரையுலகுக்குச் செல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால், நான் தென்னிந்திய நடிகை என்று சொல்வதில் பெருமைப்படுகின் றேன். பொலிவூட்டுக்கு நான் சென்றது, ஒரு ‘தென்னிந்திய நடிகை’ என்ற என் அடையாளத்தை என்றுமே அழிக்காது. நான் இன்று எப்படி இருக்கின்றேனோ அதற்குக் காரணம் தென்னிந்திய சினிமாதான். தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நிறைய நடிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். நல்ல பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். இன்ன இன்ன மொழிகளில்தான் நடிப்பேன் என்று எந்தக் கட்டுப்பாடும் எனக்கு இல்லை. நானும் விஜய்யும் இணைந்து நடித்த போக்கிரி, சிவகாசி இரண்டுமே வெற்றிப்படங்கள். விஜய் என் நல்ல நண்பர். அதைப் போலவே சித்திக் நல்ல இயக்குனர். எனக்குக் கதை சொல்லப்பட்டபோது நல்ல கதையாகப் படவே நடிக்க ஒப்புக்கொண்டுவிட்டேன். மொழியோ, பணமோ எனக்கு முக்கியமல்ல. எந்தவொரு படத்தைத் தெரிவு செய்யும் போதும் 5 அம்சங்களைக் கவனத்தில் கொள்வேன். ஒன்று கதை, மற்றையது எனக்குத் தரப்படும் பாத்திரம், மூன்றாவது யார் இயக்குகின்றார் என்பது, நான்காவது யார் அத்திரைப்படத்தைத் தயாரிக்கிறார் என்பது, ஐந்தாவது என்னுடன் யார் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது.

மலையாளம் உங்கள் தாய் மொழியாக இருந்தாலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளிலும் நடிக்கிaர்களே, உங்களுக்கு யார் குரல் கொடுக்கிறார்கள் எனக் கேட்டபோது,

எந்த மொழித் திரைப்படமானாலும் எப்போதெல்லாம் திரையில் என் உருவம் தோன்றுகின்றதோ, அப்போதெல்லாம் ஒலிக்கும் குரல் என்னுடையது தான். எனக்கு எவரும் குரல் கொடுப்பதில்லை. தமிழைப் பேச மாத்திரமல்ல, வாசிக்கவும் என்னால் முடியும். ஒரு கலைஞர் தனது திறமையை 100 சதவீதமும் வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவள் நான். அதற்கு மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவே நான் நடிக்கும் மொழிகளைக் கற்றிருக்கிறேன் என்றார்.

‘கஜினி’ ஹிந்தித் திரைப்படத்தில் அமீர்கானுடன் நடித்த அனுபவத்தையும் அசின் பகிர்ந்து கொண்டார்.

அமீர்கான் அபாரமான ஒரு நடிகர். சிறந்த இயக்குனர். சிறந்த தயாரிப்பாளர். இவற்றுக்கெல்லாம் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். எந்தவித பந்தாவும், ஆர்ப்பாட்டமும் இல்லாதவர். அதுதான் அமீர்கானுக்கும், சல்மான் கானுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமையாகக் கூட நான் கூறுவேன். எவ்வளவு பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும் மிகவும் எளிமையானவர்கள். எனது முதல் பொலி வூட் படத்தை அமீர்கானுடன் நடித்திருக்கி றேன் என்பதே எனக்கு மிகுந்த பெருமை சேர்ப்பதாக நான் கருதுகிறேன். என்று நெகிழ்வுடன் அந்த அனுபவங்களை நினைவு கூர்ந்தார் அசின்.

அசினிடம் கேட்பதற்கு எம்மிடம் நிறை யவே கேள்விகள் இருந்தாலும், உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது என்று அசினின் அந்தரங்கச் செயலாளர் தொடர்ச்சியாக கை அசைக்கவே பேட்டி முடிந்து, அசினுக்கு நன்றி கூறி எழுந்து செல்ல வேண்டியதாயிற்று.

வாசுகி சிவகுமார்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல