படம்: வீரகேசரியிலிருந்து பெறப்பட்டது
மேர்வின், சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் அரசியலுக்குள் நுழைந்தவர். அவருக்குப்
பின்னால் மகிந்தா ராஜபக்ஷேவையும் காக்கா பிடித்து இன்று அமைச்சராக வலம் வருபவர் என்ற முன்னுரையுடன் அவரை கடுப்புடன் ரசிப்போம்!
ஒரு நைட்கிளப்பில் மேர்வினின் மகன் மாலக சில்வா குடித்துவிட்டுத் தகராறு செய்ய... நைட்கிளப்உரிமையாளர்கள் மகனைத் தூக்கி வெளியே கடாசினர். உடனடியாகத் தனது குண்டர் படையுடன் அங்கு வந்த மேர்வின் சில்வா, நைட்கிளப்பை அடித்து நொறுக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு அந்தப் பகுதியையே அதகளப்படுத்திவிட்டுச் சென்றார். அவர் சென்றபிறகு வந்த காவல் துறை, வெடித்துச் சிதறியிருந்த தோட்டாக்களை பொறுக்கியதுதான் மிச்சம். மேர்வினை அசைக்க முடியவில்லை!
ஒரு பொதுக்கூட்டத்தில் தான் உரையாற்றிய காட்சியை ஒளிபரப்பவில்லை என்பதால், இலங்கை அரசுக்குச் சொந்தமான ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குள்ளேயே நுழைந்தார் அமைச்சர். அங்கு இருந்த செய்தி ஆசிரியரைத் தாக்கத் தொடங்க... கடுப்பான ஊழியர்கள்,அமைச்சரை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி நையப் புடைத்தனர். மன்னிப்புக் கேட்கும் வரை அவரை வெளியே விடமுடியாது என்று கூறிவிட்டனர். இந்த களேபரக் காட்சிகள் இலங்கைத் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு வேறு செய்யப்பட்டன! இறுதியாக ஆயுதப்படையினர் வந்து அமைச்சரை அங்கிருந்து மீட்டுச் செல்லவேண்டியதாயிற்று.
எப்போதும் மேர்வினுக்கு ஊடகவியலாளர்களைக் கண்டால் ஆகாது. கண்ணாடி பார்த்த குரங்குபோல் ஆகிவிடுவார். திடீரென்று பாய்ந்து சென்று கேமராக் களைப் பறிப்பது, ஊடகவியலாளரை அடிப்பது என்று இவரது சேட்டைகளுக்குக் குறைவில்லை. ஆனால், ராஜபக்ஷேவின் டேஸ்டே வேறு அல்லவா..? தன் அரசு இரண்டாவது தடவையாகப் பதவியேற்றதும் இந்த 'பராக்கிரமசாலி'யைத்தான் ஊடகத் துறை அமைச்சராக நியமித்தார் மகிந்தா. தனது ஊரான களனியில் திடீரென்று அனைத்து மதுபானச் சாலைகளையும் மூடவேண்டும் என்று உத்தரவு போட்டார் மேர்வின். ஏதோ சட்ட விரோதமாக இயங்குகிற மதுபான சாலைகளைத்தான் மூடச் சொல்கிறார் என்று நினைத்தால்... ஒட்டுமொத்தமாக மது விற்பனையையே தன் பிரதேசத்தில் தடைசெய்வதாக அறிவித்தார். எதிர்த்தவர்களை தன் குண்டர்களை விட்டுத் தாக்கினார்.
இவரிடம் யாராவது, 'ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்டால், 'என் தலைவன் மகிந்தா சொன்னால் மட்டும்தான் நிறுத்துவேன்... இல்லை என்றால் என்னை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!' என்று வசனம் பேசுவார்.
அண்மையில் இலங்கையின் பிரபலமான ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் நுழைந்த மேர்வின் சில்வா, அதிரடியாக விற்பனை நிலையத்தின் கதவுகளை இழுத்துச் சாத்தினார். உள்ளே இருந்த வாடிக்கையாளர்கள் என்ன நடக்கிறது என்று திகைத்து நிற்க... அவர்களிடம், 'உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் பில்லை நான்தான் கொடுப்பேன்' என்று அடம்பிடித்து அன்றைக்கு வாடிக்கையாளர்களின் ரசீதுகளுக்கு எல்லாம் அவரே பணம் கொடுத் தார். 'என்னதான் ஆச்சு?' என்று ஊடகவியலாளர்கள் கேட்க... 'இன்று என் அம்மாவின் பிறந்தநாள். அதனால் உடை களை தானமாகக் கொடுத்தேன்' என்று சிரித்தார்!
இப்படி எல்லாம் காமெடியாக இருக்கிற தங்கள் அமைச்சரை, காசில்லாத பொழுதுபோக்கு சாதனமாகவே நினைத்துக் கலாய்த்துத் திளைக்கின்றனர் சிங்கள இளைஞர்கள். சர்தார்ஜி ஜோக்குகளைப்போல் சிங்களத்தில் மேர்வின் சில்வா ஜோக்குகள் கொட்டிக் கிடக்கின்றன. 'மேர்வின் சில்வாவின் புதிய அதிரடி!' என்று வீடியோ கிளிப்பிங்குகள் நிறைகிறது இணையமெங்கும் ஆனால், எதனாலும் மேர்வினின் அதிரடிகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒரு நாடக நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக இவரை அழைப்பதற்காக நிகழ்ச்சியின் அமைப்பாளர் இவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டார். மேர்வினோ அதிரடியாக, 'நான் நாடகத்தில் நடிப்பேன். எனக்கும் ஒரு பாத்திரம் தரத்தான் வேண்டும்' என்று அடம் பிடித்திருக்கிறார். கடுப்பான நாடக அமைப்பாளர், 'எங்கள் நாடகத்தில் ஒரு குரங்கு வருகிறது. அதற்கு மனைவியாக நடிக்கிறீர்களா?' எனக் கேட்க... இந்த நக்கலில் கொதிப்படைந்த மேர்வின், தனக்குத் தெரிந்த கெட்டவார்த்தைகளை எல்லாம் விடாமல் வரிசையாக ஒப்பித்தாராம். அந்த தொலைபேசி உரையாடல் எப்படியோ ஒலிப்பதிவு ஆகிவிட... அதையே ரிங்டோனாக மாற்றி உலவவிட்டார்கள் சிலர். காது கூசும் அமைச்சரின் அர்ச்சனை சிங்கள இளசுகளின் ஹாட் ஹிட் ரிங்டோனாக மாறியது.
நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாகக் கெட்ட வார்த்தையில் திட்டுவாராம் மேர்வின். தான் அமைச்சராக இருக்கும் பெருந்தெருக்கள் துறை பற்றி யாராவது கேள்விகேட்டால், 'மகிந்தா ராஜபக்ஷே சிறந்த தலைவர். அவரை மிஞ்ச இந்த உலகத்தில் ஆள் கிடையாது' என்று சம்பந்தமில்லாமல் அதிபரைப் புகழ்ந்துவிட்டு அமர்வார். இதை யாராவது கண்டித்தால், உடனடியாக கடுப்பாகி, 'நீ ஒரு மதிகெட்ட குரங்கு' என்று கேள்வி கேட்டவரைத் திட்டுவார். சபாநாயகருக்கு மேர்வின் சில்வாவின் வார்த்தைகளைத் தணிக்கை செய்வதே தனிப் பணியாம்!
கடைசியாகப் போன வாரம் நடந்ததுதான் இந்தச் சம்பவம்..
டெங்கு நோய்த் தடுப்பு பற்றிய விழிப்பு உணர்வு செயலமர்வுக்கு, குறிப்பிட்ட அந்த ஊழியரால் வரமுடியவில்லை. தனது பிள்ளைக்கு உடல்நலமில்லை என்று அந்த ஊழியர் காரணம் சொன்னார். ஆனால் அதை மேர்வின் ஏற்கவில்லை. அந்த ஊழியரை மரத்தில் கட்டச் சொன்னார். இதை மீடியாக்கள் சுற்றியிருந்து படம் பிடித்தார்கள். மா மரத்தில் கட்டிவைத்து புலிகேசி பாணியில் வித்தியாசமாக தண்டனை அளித்து மகிழ்ந்தார் அமைச்சர். இது ஊடகங்களில் பளிச்சிட, கொதித்தெழுந்த ஊழியர்கள் அமைச்சருக்கு எதிராகப் போராட்டங்கள் நிகழ்த்தினர். ஆனாலும், சளைக்காத மேர்வின் சில்வா, 'அந்த ஊழியரைத் தான் கட்டிவைக்கவில்லை' என்றும் அவர் தன்னைத் தானே கட்டிக்கொண்டதாகவும்' விநோத பதிலளித்தார்.
இது எப்படி இருக்கு?
இதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது அண்மையில் மேர்வின் சில்வா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு. 'பத்திரிகையாளர் லசந்தவை கொலை செய்தது நாங்கள்தான். அதைப்போல உங்களையும் செய்வேன். உயிர் பிழைக்க வேண்டுமானால் வாயை மூடிக்கொண்டிருங்கள்' என்று பகிரங்கமாக கொச்சையான மொழியில் சவால் விட்டிருக்கிறார் இந்த காமெடி-கம்-குரூர அமைச்சர்!
அரசன் எவ்வழி... மக்கள் அவ்வழி என்பார்கள்? அமைச்சர்களும் அந்த வழிதானோ?!
-- த. அன்பழகன்
விகடன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக