சனி, 11 செப்டம்பர், 2010

ஒபாமா "முஸ்லிம்' என்று ஏன் சொன்னார்கள்? ஆய்வில் புதிய தகவல்கள்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, முஸ்லிம் என பெரும்பான்மையான அமெரிக்கர்கள் ஏன் சொன்னார்கள் என்று நடந்த ஆய்வில், பல்வேறு காரணங்கள் தெரியவந்துள்ளன.சமீபத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமா எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்ற ஆய்வு, அமெரிக்காவில் நடத்தப்பட்டது.அதில், 18 சதவீத அமெரிக்கர்கள் அவர் முஸ்லிம் என்று கூறினர். 11 சதவீதம் பேர் அவர் கிறிஸ்தவர் என்று கூறினர்.

இதையடுத்து ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், "நான் கிறிஸ்தவன் என்பதை நிரூபிக்கும் பிறப்புச் சான்றிதழை என் நெற்றியில் ஒட்டிக் கொண்டு திரிய முடியாது' என்று காட்டமாக பதிலளித்தார்.இதற்கிடையில், பெரும்பான்மையான அமெரிக்கர்கள், ஒபாமா முஸ்லிம் என்று எந்த அடிப்படையில் சொன்னார்கள் என்பது குறித்து விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நான்கு தனித்தனி பிரிவுகளாக இந்த ஆய்வு நடந்தது.முதலில், நேரடியான கேள்விகளும், பின், மறைமுகமான கேள்விகளும் கேட்கப்பட்டன.

நேரடியான கேள்விகளுக்குப் பதிலளித்தவர்கள், ஒபாமா முஸ்லிம்தான் என்று தவறாக வாதிடும் இணையதளங்களை ஆதாரங்களாகக் காண்பித்து தங்கள் வாதத்தை நிலை நாட்டினர். அவர்களில் பெரும்பாலானோர் வெள்ளையர்கள்; முஸ்லிம் அல்லாதவர்கள். மறைமுகமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர்களில் பெரும்பாலானோர், ஒபாமாவுக்கு எதிராக போட்டியிட்ட ஜான் மெக்கனை ஆதரித்தவர்கள்.அவர்களில் 56 சதவீதம் பேர் ஒபாமா, முஸ்லிம் என்று கூறினர்.இன அடிப்படையில் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டி வந்த போது அது 77 சதவீதமாக அதிகரித்து விட்டது.

இதுகுறித்து ஆய்வு நடத்தியவர்கள் கூறியதாவது:ஒபாமா, முஸ்லிம் என்பது போன்ற ஆதாரமில்லாத தகவல்களை மக்கள் தெரிந்தோ தெரியாமலோ, அப்படியே நம்பி விடுகின்றனர். இதற்கு ஊடகங்களின் பொறுப்பற்ற பிரசாரமும் ஒரு காரணம்.ஊடகங்கள், அரசியல் நிபுணர்கள் மற்றும் பேச்சாளர்களை வைத்து இதுபோன்ற பொய்களை நிலைநாட்டி வருகின்றன. அதனால் இந்தப் பொய்கள், காட்டுத்தீ போல் பரவி விடுகின்றன.அதே நேரம், அமெரிக்க சமூகத்தில் நிலவும் வேறுபாடுகளும், இது போன்ற பொய்கள் பரவுவதற்கு காரணம்.அமெரிக்க மக்கள் மத்தியில் ஒபாமாவின் ஆட்சி குறித்த ஆதரவுக் கருத்துக்கள் குறைந்து கொண்டே வருகின்றன.

அவர் தங்களைச் சேர்ந்தவர் அல்ல; வேறு இனத்தைச் சேர்ந்தவர். அதனால் அவரது சிந்தனைப் போக்கும் நம்மிடத் தில் இருந்து வேறுபட்டதாகத் தான் இருக்கும் என்று ஆராயாமல் ஒரு முடிவுக்கு பெரும்பாலானோர் வந்து விட்டனர்.அவர் நம்மவர் அல்ல என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். அதனால் தான் அவர் முஸ்லிம் என்று பெரும்பாலானோர் சொல்லி இருக்கின்றனர்.துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் அதிகம் பேர் முஸ்லிம்களை வெறுப்பதாலும், அவரை முஸ்லிம் என்று கூறியுள்ளனர்.இவ்வாறு ஆய்வு நடத்தியவர்கள் தெரிவித்தனர்.ஒபாமாவுக்கு முஸ்லிம்கள், யூதர்கள் தீவிர ஆதரவு:அமெரிக்க அதிபர் ஒபாமா, சிறப்பாக செயல்படுவதாக, முஸ்லிம்களும், யூதர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் செயல்பாடு குறித்து, அமெரிக்காவில் சர்வே நடத்தப் பட்டது. ஜனவரி முதல் ஜூலை வரையிலான சர்வேயில், 78 சதவீத முஸ்லிம்களும், 61 சதவீத யூதர்களும் ஒபாமாவின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதுமான ஒட்டு மொத்த சர்வேயில், 2009ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் 63 சதவீத மக்கள் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் 53 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க மக்கள் தொகையில், முஸ்லிம்களும், யூதர்களும் தலா 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் பெரும்பான்மையாக உள்ள பிராட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள், கடந்த ஆண்டில் 58 சதவீத பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது தற்போது, 43 சதவீதமாக சரிந்துள்ளது.ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், கடந்த முறை 67 சதவீத பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது தற்போது 50 சதவீதமாக சரிந்துள்ளது. மார்மோன்கள் 24 சதவீத பேர் தான் ஒபாமாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சர்வே குழுவினர் கூறியதாவது:கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த சர்வேயில், முதல் அரையாண்டில் இருந்ததை விட, இரண்டாவது அரையாண்டில் ஒபாமாவின் பணி செயல்பாடுகளுக்கு ஆதரவு சரிந்துள்ளது. மதவாரியாக எடுக்கப்பட்ட சர்வேயிலும் இதே நிலை தான் உள்ளது.இவ்வாறு சர்வே குழுவினர் தெரிவித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல