அமெரிக்காவில் இருந்து வெளிவரும், "டைம்' பத்திரிகை, கடந்த நூற்றாண்டில் சக்தி வாய்ந்தவர்களாக விளங்கிய 25 பெண்கள் பற்றிய பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்தப் பட்டியலில், நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் முதல் பெண்மணி, ஜேன் ஆடம்ஸ் முதலிடம் பெற்றுள்ளார். அந்நாட்டின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஆறாவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இந்திரா மற்றும் அன்னை தெரசா இருவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இந்திரா ஒன்பதாவது இடத்திலும், தெரசா 22வது இடத்திலும் உள்ளனர். மேலும் இப்பட்டியலில், மேரி கியூரி, மடோனா, கோல்டா மெய்ர், ஏஞ்சலா மெர்க்கெல், எலினார் ரூஸ்வெல்ட், மார்க்ரெட் தாட்சர், ஆப்ரா வின்ப்ரே மற்றும் விர்ஜினியா உல்ப் போன்றோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்திரா பற்றிய தன் புகழுரையில், "உலகில் அதிக காலம் பிரதமர் பதவியில் இருந்த ஒரே பெண் இவர் தான். பொருளாதார நெருக்கடி, பஞ்சம், இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை, ஊழல் புகார்கள் மற்றும் அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர், அதனால் வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது என பல சர்ச்சைகள் அவரது மூன்று ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்தன' என்று "டைம்' பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அன்னை தெரசா பற்றி கூறுகையில், "போதுமான மருத்துவ பயிற்சி மேற்கொள்ளாதது, வறுமையை போக்க பெரியளவில் முயற்சிகள் மேற்கொள்ளாதது, குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை எதிர்த்து, ஆட்சியாளர்களுக்கு அடங்கிப் போவது ஆகியவற்றுக்காக அவர் விமர்சனத்துக்குள்ளானார்' என்று குறிப்பிட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக