வியாழன், 15 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-2

இந்தப் பதவி நிலைகளை வழங்குகின்ற பொழுது விடுதலைப் புலிகளின் தலைவரிற்கும், தளபதிகளுக்கும் இடையில் கருத்து மோதல்கள் உருவாகி வருவதுமுண்டு. இருந்தபோதிலும் தாங்கள் கூடுதலாக கதைத்தால்ஆபத்களைச் சந்திக்க வேண்டிவரும் என்பது தெரிந்ததால் தளபதிகள் மௌனமாக இருப்பதுண்டு. ஆனால் விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு கட்டமைப்பிலும் இருந்த தளபதிகள் தமது பிரிவுப் போராளிகள் இறக்கின்றபோது அவர்களுக்கு ஏனைய பிரிவுப் போராளிகளை விட கூடுதல் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டுமென எதிர்பார்த்தனர். சில தளபதிகளின் எதிர் பார்ப்புகள் ஈடேறாமல் போவதால் அவர்கள் உள ரீதியான பாதிப்புகளையும் எதிர் கொண்டு வந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வழங்கப்படும் பதவிநிலைகள் அவர்களது இறப்பிற்குப் பின்னர்வழங்கப்பட்டு வந்த காலங்களில் அவர்கள் கூடுதல் பணிகளை ஆற்றியதாக முன்பு சில தளபதிகள் குறிப்பிட்டிருந்தனர். தற்போது அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே பிரிகேடியர், கேணல், லெப்டினன்ட் கேணல் போன்ற பதவிகளை புலிகள் இயக்கத் தலைமைப்பீடம் வழங்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து பதவி மோகம்தான் கூடியது. அவர்கள் தமக்கு கிடைத்த பதவியைதக்க வைப்பதில் குறியாக இருந்தனரே தவிர செயற்பாட்டில் அவர்கள் பிரிகேடியர்களாகவும், கேணல்களாகவும் செயற்படவில்லை’’ என விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் கிளிநொச்சியில் பொது நிகழ்வொன்றில் பகிரங்கமாக குறிப்பிட்டார். இதையடுத்து பாலகுமாரன் மீது விடுதலைப் புலிகளின் தளபதிகள் குறிப்பாக புலனாய்வுத் துறையினர் கண்வைக்கத் தொடங்கினர்.பாலகுமாரன் கிளிநொச்சியில் மேலும் ஒரு பொது நிகழ்வில், திரு மாஸ்டர் எனப்படும் அரசியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வந்த ஒருவருடன் இணைந்து, உலக அரசியல் நீரோட்டங்களை தமிழர் தரப்பு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து உலகம் எந்தப்போக்கில் போகின்றது என்பதை கணிப்பிடத் தவறினால் நாம் அழிவது நிச்சயம் என ஆற்றிய உரை பல முனைகளில் திரிபுபடுத்தப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவரிற்கும், பொட்டம்மானிற்கும் முறைப்பாடுகளாக செல்லத்தொடங்கியது.

இதனை அடுத்து பாலகுமாரன் விசாரிக்கப்பட்டதுடன் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் மாற்றப்பட்டு, புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கிரிதரன் மற்றும் சுகு ஆகிய இருவர் மெய்ப்பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டனர். வழங்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மோட்டார் சைக்கிளும் சாதாரண வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து மனம் குழம்பியிருந்த பாலகுமாரன் அன்ரன் பாலசிங்கத்துடன் கதைத்து சுமுகநிலையை ஏற்படுத்தலாம் என எண்ணி பாலசிங்கத்துடன் தொடர்பு கொண்டபோது பாலசிங்கம் தானும் குழம்பிய நிலையில் இருப் பதைத் தெரிவித்திருக்கிறார். தலைவர்

தன்னுடைய தொடர்புகளைத் துண்டித்து விட்டதாகவும் தமிழ்ச்செல்வன் கூட தன்னுடன் கதைப்பதற்கு கஷ்டப்படுவதாகவும் நானே இக்கட்டில் இருக்கின்றேன் உமக்கு எப்படி என்னால் உதவ முடியும்? எனக் கேட்டுவிட்டு தொடர்பைத் துண்டித்து விட்டதாகவும் பாலசிங்கம் இறந்தபின்னர் பாலகுமாரன் தனது சகாக்களிடம் கூறி கவலைப்பட்டுள்ளார். இதுவே பாலசிங்கம் தன்னுடன் இறுதியாக கதைத்த கதையெனக் கூறி கவலையடைந் துள்ளார்.

உண்மையில் பாலசிங்கத்தை இக்கட்டில் மாட்டிய சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பானது பல முனைகளில் புலிகள் இயக்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கின்ற ஒரு நிகழ்வாகவே அந்த நாட்களில் பார்க்கப்பட்டது. வெளிப்பார்வைக்கு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்கான ஒரு சந்திப்பாக ஊடகங்கள் பிரசாரங்களை மேற்கொண்ட போதிலும், பிரபாகரன் தன்னை சிக்கலில் மாட்டுவதற்கான ஒரு சந்திப்பாகவே இதனைக் கருதியிருந்தார். பாலசிங்கத்திற்கு வழங்கப்பட் டிருந்த வெளிவிவகார பொறுப்பு உடனடியாக கிளிநொச்சியிலிருந்த கஸ்ரோ என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர் கிளிநொச்சியில் இருந்தவாறே வெளிநாடுகளில் உள்ள புலி உறுப்பினர்கள் ஊடாக நகர்வுகளை மேற்கொண்டு வந்தபோதிலும், கஸ்ரோவின் நடவடிக்கைகள் பெரிய அளவில் எடுபட வில்லை என்பதை பின்னைய நாட் களில் பிரபாகரன் உணர்ந்து கவலை அடைந்ததாக கூறப்படுகிறது. உள் ஊரில் பொறுப்புக்களை மாற்றி நடவடிக்கைகளை பிரபாகரன் மேற்கொண்ட போதிலும் ராஜீவ்காந்தி விவகாரத்தை இந்திய ஊடகங்கள் தொடர்ச்சியாக பெரிதுபடுத்தி வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் இந்தியாவின் ராஜதந்திர ரீதியிலான நெருக்கடிகளும் அதன் நடவடிக்கைகளும் விடுதலைப் புலிகளிற்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது. இதற்கு மாற்றீடாக என்னசெய்யலாம் என்பது தொடர்பில் ஆலோசித்து முடிவெடுப்பதற்காக நான் நேரடியாக தலைவரைச் சந்திக்க வேண்டும். இதைப் போய் தலைவரிடம் சொல்லும் தலைவர் கட்டாயம் தன்னைச் சந்திப்பாரென பாலசிங்கம் தமிழ்ச் செல்வனைத் தொடர்புகொண்டு தெரிவித்தார். தமிழ்ச்செல்வன் தலைவரிடம் சென்று இந்த விடயத்தை தெரியப்படுத்திய போது பாலசிங்கத்தின்

கதையை நீர் இனிக் கதைத்தால் நீரும் என்னைச் சந்திக்கமுடியாது எனக் கூறி பிரபாகரன் தமிழ்ச்செல்வனை திருப்பி அனுப்பினார். உடனடியாக கிளிநொச்சியிலுள்ள நடுவப் பணியகத்திற்கு வந்த தமிழ்ச்செல்வன் பாலசிங்கத்திடம் விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து பாலசிங்கம் அன்றுமுதல் கூடுதலான விஸ்கிப் போத்தல்களை காலி செய்யத் தொடங்கினார்.

தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் விரக்தியுடனும் விஸ்கிப் போத்தலுடனும் பொழுதைக் கழித்த பாலசிங்கம் ஏற்கனவே அவருக்கிருந்த நோய்கள் காரணமாக உடனேயே கோமா நிலைக்குச் சென்றார். பாலசிங்கம் கோமா நிலைக்கு சென்ற விடயத்தை லண்டனிலிருந்து அடேல் பாலசிங்கம் தமிழ்ச் செல்வனுக்குத் தெரியப்படுத்தினார். தமிழ்ச்செல்வன் செய்வதறியாது பதற்றத்துடன் இதை எப்படி பிரபாகரனிடம் தெரியப்படுத்துவது எனத் திண்டாடி பின்னர். புலிகள் இயக்கத்தின் கல்விக் கழகத்திற்கு பொறுப்பாக இருந்த பேபி என்று அழைக்கப்படும் அருட்குமரன் ஊடாக தலைவரிற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து பிரபாகரன் பதறி அடித்துக் கொண்டு பாலசிங்கத்திடம் தொடர்பை ஏற்படுத்த முற்பட்ட பொழுது பாலசிங்கம் கோமாவின் உச்சத்திற்குச் சென்றுவிட் டார். பிரபாகரன் தொடர்பு கொள்ள முற்பட்ட மறுநாள் பாலசிங்கம் இறந்துவிட்டார்.

பாலசிங்கம் இறந்ததின் பின்னர் வழமைபோன்று புலிகள் தங்களது புலனாய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அப்பொழுது பாலசிங்கத் திற்கும் யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர் ஒருவரிற்கும் இடையிலிருந்த நெருங்கிய உறவு பற்றி தீவிரமாக அலசப்பட்டது. இந்த ஊடகவியலாளரைப் பயன்படுத்தியே வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு பாலசிங்கத்தை கொன்றுள்ளதாக புலிகள் தகவலை வெளியிட்டனர். பாலசிங்கத்திற்கும் குறித்த ஊடக வியலாளரிற்கும் இடையில் இருந்த நெருக்கமான உறவு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றோரே புலனாய்வு அமைப்பிற்குத் தெரியப்படுத்தியதாகவும் புலிகளின் புலனாய்வு அறிக்கை கூறியது. பாலசிங்கத்திடமிருந்த பல வீனங்களை எவ்வாறு கையாளலாம் என்பது தொடர்பில் ஒரு மதிப்பீட்டினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் ஏற்கனவே புலனாய்வு அமைப்புகளமிறங்கியிருந்தாலும் அது பயனளிக்காமலே இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் குறித்த ஊடக வியலாளரை தனது வலையில் விழுத்தி காரியத்தை சாதித்தது. இந்த விடயம் பின் நாட்களில் விடுதலைப்புலிகளின் தலைமைக்கு தெரிந்தபோதும் குறித்த ஊடகம் மீது உடனடியாக கைவைத்தால் தமக்கு நஷ்டம் அதிகம் என்பதால், குறித்த ஊடகவியலாளர் மீது ஒரு கண்வைக்குமாறும் அவரை வன்னிக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது என்ற உத்தரவு புலிகள் இயக்கத் தலைவரால் உடன் பிறப்பிக்கப்பட்டது.

இவ் விடயம் குறித்த ஊடகவியலாளரிற்கு தெரிந்த போதிலும், அவர் தொடர்ந்தும் புலிகள் இயக்கம் தொடர்பான செய்திகளை மிகைப்படுத்தி எழுதி வந்ததுடன், அவர்களை தனது எண்ணம்போல் தொடர்ந்தும் கையாளலாம் என்றே எண்ணியிருந்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் முத்தரப்பு உறவை பேணும் ஒருவராக தன்னை வெளிக்காட்ட முற்பட்டார்.

அதாவது இந்திய – இலங்கை மற்றும் புலிகள் இயக்கத்துடனான உறவை தான் மட்டுமே வைத்திருப்பதாக காட்ட முற்பட்டார். இவரதும் இவர் போன்ற ஊடகவியலாளர்களது செயற்பாடுகளுமே பின் நாட்களில் புலிகள் இயக்கம் தனது முடிவை எட்டுவதற்கு வழியமைத்தது. சாவைத் தழுவிக்கொண்ட பாலசிங்கத்திற்கு ஏன் தேசத்தின் குரல் என்ற பட்டம் வழங்கப்பட்டது? குறித்த ஊடகங்கள் எவ்வாறு புலிகளை அழித்தனர் என்பவை பற்றி தொடர்ந்து பார்ப்போம்…

வே.அர்ச்சுணன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல