வியாழன், 15 நவம்பர், 2012

விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-3

விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் ஊடகங்களைக் கையாள்வதற்கென பல்வேறு பிரிவுகள் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் இயங்கி வந்தன. இவற்றுள் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஊடகப் பிரிவே வெளிப்படையாக செயற்பட்டது. ஆனால் மறை முகமாக விடுதலைப் புலிகளின் ஆதரவான ஊடகப் போக்குடைய பலரை ஒருங்கிணைக்கும் பணியை விடுதலைப் புலிகளின் பல பிரிவுகள் கையாண்டு வந்தன. இவற்றுள் வெளிநாட்டு ஊடகங்களை கையாளும் பொறுப்பு கஸ்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் தனது மேற்பார்வையில் நந்தகோபன் என்பவரை இதற்குப் பொறுப்பாக நியமித்து செயற்படுத்தி வந்தார்.

இதேவேளை விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினரிற்கும் இடையில் இறுதி யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் யாழ். மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களை கையாளும் பொறுப்பு தூயவனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் பின்னர் இப்பொறுப்பு பரணி என்ற தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் நம்பிக்கைக்குரிய ஒரு அரசியல்துறை பொறுப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர் வன்னியில் இருந்தவாறு யாழ்ப்பாணத்திலுள்ள நான்கு ஊடகவியலாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார். குறிப்பாக இந்த பொறுப்பாளரிற்கும், யாழ்ப்பாணத்திலிருந்த ஊடக வியலாளர்களிற்கும் இடையிலான தொடர்புகள் சற்ரலைற் தொலை பேசி ஊடாகவே கூடுதலாக இடம் பெற்றிருக்கிறது.இலங்கைத் தீவு முழுவதும் ஊடகவியலாளர்கள் தீவிரமான கண் காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருந்ததுடன் சிலர் கொல்லப்பட்டிருந் தனர். இந்தநிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளிற்கு சார்பான தகவல்களை வழங்கிக்கொண்டிருந்த சில ஊடகவியலாளர்கள் சுவிஸ்லாந்து நாட்டிற்கு அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க தயாராகிய செய்தி விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த நரேன் மாஸ்ரர் என்பவர் ஊடாக விடுதலைப் புலிகளின் தலைவரிற்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து தமிழ்ச்செல்வனை உடனடியாக தனது மறைவிடமாக இருந்த ஒரு இடத்திற்கு அழைத்த பிரபாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற முற்படும் ஊடக வியலாளர்களை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அவர்கள் வெளியேற முடியாத அளவிற்கு சலுகைகளையும், ஆசைவார்த்தைகளைக் கூறி மடக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

தமிழ்ச்செல்வன் வேல்நம்பி என்ற போராளியை அழைத்து சில ஊடக வியலாளர்களின் பெயர்ப்பட்டியலையும் அவர்களைத் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரிகளையும் கொடுத்து அவர்களது தேவைகளை அறிந்து உதவுமாறு உத்தரவிட்டார். வேல் நம்பி என்ற அந்தப் போராளி கடல் மார்க்கமாக தீவகப் பகுதிக்குள் நுழைந்து பின்னர் யாழ். பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன்போல் நடமாடியவாறு குறித்த ஊடகவியலாளர்களின் வீடுகளைத் தேடி சென்று கண்டுபிடித்து அவர்களுக்குத் தேவையான பண உதவிகளைச் செய்ததோடு உங்களின் பணியை தலைவர் பாராட்டியுள்ளதாகவும் உங்களை இன்னும் சிறிது காலத்திற்காவது இங்கிருந்து பணிபுரியுமாறும் தலைவர் கேட்டுள் ளார் என்பதைக் கூறினார். குறித்த ஐந்து ஊடகவியலாளர்களிற்கும் தனிப்பட்ட முறைகளில் ஐந்து இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டதுடன் கணினி இயந்திரங்கள் உட்பட வேறு சில இலத்திரனியல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக மேலதிக பணமும் வழங்கப்பட்டது.

இவற்றில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற ஒரு பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பொறுப்பாளர் என்று கூறப்படுகின்ற வித்தியாதரனிற்கு இருபது இலட்சம் ரூபா பணமாக வழங்கப்பட்டது. பிரபாகரனின் செய்தியும் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்வானது விடுதலைப்புலி களின் சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பிற்கு முற்பட்ட நிகழ்வாகும். இதன்பின்னரே பத்திரிகையாளர் சந்திப்பும் அதன்பின் பாலசிங்கம் இறந்த நிகழ்வைத் தொடர்ந்து வித்தியாதரன்மீது புலிகளிற்கு வெறுப்பும் விரக்தியும் ஏற்பட்டமை யாவரும் அறிந்ததே. அன்ரன் பாலசிங்கம் இறந்த பின்னர் அவரிற்கு ஏன் தேசத்தின் குரல் என்ற பதவி வழங்கப்பட்டது? அதன் பின்னணியிலும் சுவாரசியமான சம்பவங்கள் இருந்தன.

விடுதலைப் புலிகளின் இயக்க மரபின்படி ஒருவர் சாவைத் தழுவினால் அவரது கடந்த கால போராட்ட செயற்பாடுகள் அவரது தனிப்பட்ட ஒழுக்க நடைமுறைகள் யுத்தகள அனுபவங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே பதவி நிலைகள் தீர்மானிக்கப்பட்டு வந்தன. பாலசிங்கத்திற்கு லெப்டினன்ட் கேணல் பதவி வழங்குவதா? அல்லது கேணல் பதவி வழங்குவதா? அல்லது பிரிகேடியர் பதவி வழங்குவதா என்பது தொடர்பில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், பொட்டம்மானும், சூசையும் இணைந்து ஆராய்ந் தனர். பிரபாகரன் பிரிகேடியர் பதவி வழங்குவதே பொருத்தமானது எனக்கூறியபோது சூசையும் பொட்டம்மானும் இதை எதிர்த்ததுடன் களமுனையையே அறியாத அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரிகேடியர் பதவியை வழங்கினால் தளபதிகள் மத்தியில் குழப்பம் ஏற்படும் எனவே வெளி நாடுகளில் உள்ள தமிழர்களையும், உள்நாட்டில் உள்ள மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு பதவியை வழங்குவதே பொருத்தமானது என்றனர்.

இயக்க மரபுகளை மீறி மது, புகைத்தல் ஆகிய செயற்பாடுகளில் பாலசிங்கம் ஈடுபட்டமையால் இவர் சாதாரண பொதுமக்கள் போன்றே செயற்பட்டுள்ளார். எனவே இவரிற்கு தேசத்தின் குரல் என்ற பொதுவான ஒரு பதவியை மெருகூட்டுவது போன்று வழங்குவதே பொருத்தமானது என மூவரும் எடுத்த முடிவிற்கிணங்க பதவி வழங்கப்பட்டது. இப்பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பில் ஊடகங்கள் கூடுதலான மிகைப்படுத்தலுடன் செய்திகளை வெளியிட்டுவந்தன.

பாலசிங்கத்தின் இறப்பை வைத்துக் கொண்டும் அரசியல் செய்யவேண்டும் என்பதே புலிகளின் எண்ணமாக இருந்தது. ஆனால் பாலசிங்கத்தின் இழப்பைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் புலிகளினுடைய செல்வாக்கு முழுமையாக சரியத்தொடங்கியதுடன் உள்நாட்டிலும் புலிகளினுடையசெயற்பாடுகளில் உளத்தாக்கம் தெரியத் தொடங்கியது. இருந்தபோதிலும் ஊடகங்கள் கூடுதலான மிகைப் படுத்தல்களுடனேயே புலிகளின் பலத்தை மதிப்பீடு செய்து வந்தன. வன்னிப் பகுதியில் புலிகளின் கட்டு மானங்களில் ஒன்றாக இருந்த மக்கள் படைக்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்ற போது அந்த பயிற்சி மையத்தில் இடம்பெற்ற நிறைவு விழாவில் உரையாற்றிய கடற்புலிகளின் தளபதி சூசை விடுதலைப் புலிகள் சகல முனைகளிலும் இனிவரும் நாட்களில் தாக்குதல்களை நடத்துவார்கள் எனத் தெரிவித்தார்.

சூசையின் பேச்சை தமிழ் ஊடகங்கள் தங்களுக்கேயுரித்தான விதத்தில்மெருகுபடுத்தின.குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வரும் உதயன் பத்திரிகை விடுதலைப் புலிகள் கடற்படை, விமானப்படை, தரைப் படை ஆகிய முப்படைகளை ஒருங்கிணைத்து தாக்குதல்களை நடத்த உள்ளதுடன் கரும்புலித் தாக்குதல்களையும் பரவலாக நடத்துவரென தளபதி சூசை தெரிவித்ததாக முன்பக்கத்தில் எழுதியது. இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இலங்கையின் படைத்துறை ஆய்வாளர்கள் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள் இவ்விடயம் தொடர்பில் கூடுதலான கவனத்தையும், ஆய்வையும் மேற்கொள்ள முற்பட்டனர். ஆனால்தான் வெளியிடாத கருத்தை வெளியிட்டுவிட்டதாக குழப்பமடைந்த சூசை உடனடியாக உதயன்பத்திரிகையுடன் தொடர்புகொண்டு எச்சரிக்கையும் விடுத்தார்.

அது மட்டுமல்லாது இச்செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து பிரபாகரனும், பொட்டம்மானும் சூசையை அழைத்து விளக்கம் கேட்டதால் சூசை மேலும் எரிச்சலை அடைந்தார். ஆனால் பின்னய நாட்களில் குறித்த பத்திரிகை வேண்டுமென்றே சிக்கலில் மாட்டுவதற்கென்றே இச் செய்தியை வெளியிட்டது என நடேசனிடம் பிரபாகரன் கூறி மனம் வருந்தியதாக சூசைக்கு நடேசன் தெரிவித்திருந்தார். இறுதியுத்தம் இடம்பெற்றபோது புதுக்குடியிருப்பு பகுதிவரை இராணுவம் முன்னேறிய சமயத்தில் சூசைக்கு பிரபாகரனால் கூட்டுப்படைகளின் தளபதி என்ற பதவி வழங்கப்பட்டது. என்ன பதவிகளை வழங்கிய போதிலும் யுத்தத்தில் வெல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது வேறு விடயம். ஆனால் குறித்த ஊடகத்தின் இச்செய்தியால் புலிகள் குழப்பம் அடைந்தனர் என்பதே உண்மையாகும்.

ஏனெனில் விடுதலைப்புலிகளிடம் இருந்த விமானப்பலம் என்பது சிறிதளவாகவே இருந்தது. நான்கு இலகுரக விமானங்களும் மூன்று உலங்குவானூர்திகளும் மட்டுமே புலிகளிடம் இருந்தது. இவற்றுள் இரண்டு உலங்குவானூர்திகள் ஏற்கனவே செயலிழந்திருந்தன. ஒரு உலங்குவானூர்தி மட்டும் புலிகளால் கிளிநொச்சியில் 6ஆம் வாய்க்கால் பகுதியை அண்டிய காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து புதிய வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது. அதுவும் பின் நாட்களில் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது.

இவ்வாறு வான்படைப் பலம் என்பது சவால்விடும் அளவிற்கு இருக்கவில்லை என்பதை உணர்ந்த புலிகள் தமது வான்படைப்பலம் தொடர்பில் வெளிவந்த செய்திகளால் தங்களிற்கு ஆபத்து என உணர்ந்ததுடன் அண்டைநாடான இந்தியாவின் அவதானிப்புகளும் அதிகரிக்கும் என அச்சம் கொண்டிருந்தனர். உண்மையில் புலிகளின் அச்சம் நியாயமானதாகவே இருந்தது. இந்தியா, இலங்கைவான் பரப்பை அவதானிப்பதற்கு நவீன ராடார் இயந்திரத்தை பயன்படுத்த தொடங்கியதை அடுத்து புலிகளின் வான்புலிகள் அணி எதிர்பார்த்த பயனைப் பெறவில்லையென பிரபாகரன் சினம் கொள்ளத் தொடங்கினார். பிரபாகரனின் இந்தக் கோபம் எதுவரை சென்றது ஊடகங்கள் எவ்வாறு புலிகளை அழித்தனர் என்பவற்றை அடுத்த தொடரில் பார்க்கலாம்.

வே.அர்ச்சுணன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல